Saturday 12 December 2015

விந்தைவெளியில் சிறகுகள் விரித்த கவிஞன் அப்பாஸ்

 விந்தைவெளியில் சிறகுகள் விரித்த கவிஞன் அப்பாஸ்

உதயசங்கர்

கலை என்னும் மாயத்தை எப்படி புரிந்து கொள்வது?. கலை யதார்த்தத்தைப் பிரதிபலித்தாலும் யதார்த்தமல்ல. கலையில் யதார்த்ததின் சாயல் இருந்தாலும் கலை யதார்த்தத்துக்குப் பதிலியாக முடியாது. கலையினால் யதார்த்த உலகத்தை பொருண்மையாக மாற்றி விட முடியாது. அது அதன் வேலையுமில்லை. ஆனால் கலை மனித மனங்களில் உள்ளார்ந்து ஓடுகின்ற அறம் சார்ந்த உணர்வுகளை மீட்டும் வல்லமை கொண்டது. அந்த மீட்டலுக்காக தனக்கேயுரித்தான பிரத்யேகமான இசைக்கோர்வைகளைக் கொண்டிருக்கிறது. தனக்கேயுரித்தான வண்ணங்களைக் கொணடிருக்கிறது. தனக்கேயுரித்தான குழூஉக்குறிகளைக் கொண்டிருக்கிறது. அந்த இசையின் மீட்டலில் மனித மனம் வசீகரிக்கப் படுகிறது.
வசியப்படுத்தப்படுகிறது. மெய்ம்மை உணர்வுநிலையில் மிதக்கிறது. புதிய அநுபவங்களைப் பெறுகிறது. அந்த அநுபவங்களிலிருந்து தனக்கான அறநிலைபாடுகளை வகுத்துக் கொள்கிறது.
கலையின் வர்ணபேத தீற்றல்களில், மனித மனம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. அந்த வண்ணக்கலவையின் ஒற்றைத்தீற்றல்களில் மனித மனவிகாரங்கள் விகசித்து ஒளிர்கிறது. கலை தன் மாயத்தை மனங்களில் நிகழ்த்துகிறது. மனிதன் மேன்மையுறுகிறான்.
கலையின் மாயலோகத்தில் யதார்த்ததில் உலவும் உயிர்கள், பொருட்கள், அதே அர்த்தத்தில் உலவுவதில்லை. ஆம். ஒரு பறவை கவிதையில் வெறும் பறவையில்லை. ஒரு நட்சத்திரம் வெறும் நட்சத்திரமல்ல. ஒரு மின்னலோ, ஒரு மரமோ, ஒரு மலரோ, ஒரு மலையோ அதே அர்த்தத்தில் கலையில் குறிப்பாகக் கவிதையில் புழங்குவதில்லை. பழக்கமான அநுபவங்களில் இருக்கும் விந்தையையும், விந்தை என்று நான் நினைப்பவற்றிலுள்ள பழக்கமான விஷயங்களையும் தன் கவிதைகளில் அநாயசமாக எழுதிச்செல்கிறார் கவிஞர் அப்பாஸ்.
வெளியில் இருந்து
அறை திரும்பிய நான்
லுங்கி மாற்றி பேனைத் தட்டிவிட்டு
மல்லாந்து சாய்ந்தேன்.
காற்று பரவ
தன் இடைவெளிகளில் விடுதலை கண்டது
மின்விசிறி
இடைவெளி என்பது சிறை. சுற்றிச் சுழலும்போது கிடைக்கும் சேர்ந்திருப்பதான மாயத்தோற்றமே விடுதலை என கவிஞர் சுழற்றிப் போடுகிறார்.
வீட்டிலிருந்து மலைகளை
சுதந்திரமாய் பார்த்தேன்
பின்
பாதை பற்றி மலை ஏறி
இறங்கும் நீர்வீழ்ச்சி என
வீடுகளைச் சுதந்திரமாய் பார்த்தேன்.
பார்த்தது விழித்துக் கொள்ள
இப்பொழுது
என் குழந்தையோடு விளையாடிக்
கொண்டிருக்கிறேன்.
மலையைப் பார்த்து வியத்தலும் இலமே, மடுவைப்பார்த்து பயத்தலும் இலமே. விழிப்புநிலை கிடைத்து விட்டால் நீங்களும் நானும் குழந்தைகளாகி விடுவோம். கவிஞரே அவருடைய முதலில் இறந்தவன் கவிதைத்தொகுதியில் “ கவிதைக் கண்ணாடியின் ரசம் புதுவித வடிவம் கொண்டு தன் பிரபஞ்சக்காட்சிகளின் மர்மங்களை, தத்துவங்களை, வேறு வடிவம் கொண்டு விதவித கோணங்களில் விரித்துக் கொண்டே செல்கிறது. வார்த்தைகளையும், அதன் சமூகத்தள அர்த்தங்களையும் பிளந்து அல்லது ஊடுவது கவிதை மொழியில் மட்டுமே சாத்தியமாக உள்ளது. யதார்த்தத்திலிருந்து விலகும் மனம் சென்றடையும் தத்துவ மனத்தை இயல்பாகவே கவிதை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. கவிதை வெளியின் பிரபஞ்சம் ஒரு புதிரிலிருந்து விடுபடுவதும் மீண்டும் ஒரு புதிருக்குள் நுழைவதுமான ஓர் அற்புதமான விளையாட்டு……” என்று தன் கவிதையியலைப் பற்றிச் சொல்லி விடுகிறார். தமிழில் தனக்கென ஒரு கவிதை மொழியை உருவாக்கியவர் அப்பாஸ். யதார்த்த சம்பவங்களின் வழியே தரிசனங்களை தன் கவிதை மொழியில் கட்டமைத்தவர்.
காகங்களின்
முட்டையத் திருடுவதற்காக
அது வெளியேறும் தருணத்தில்
மரத்தின்
உச்சிக்குச் சென்றேன்
அங்கே
ஒரு
பகல்
அமர்ந்திருந்தது.
கடைசி மூன்று வரிகளில் கவிஞர் கண்ட தரிசனத்தை நமக்கு காட்சியாகத் தருகிறார். நம்மால் வியப்பை அடக்க முடியவில்லை. திருட்டுக்கும் பகலுக்கும் என்ன சம்பந்தம்? பகல் காக்கையின் கூட்டில் இருக்கும்போது எப்படி திருட முடியும்? நம் மனதின் அடுக்குகளில் வேறு வேறு அர்த்தங்களையும் உண்டாக்கி விடுகிறது.
நான்
உன் கதவைத் தட்டுகிறேன்
வாசலின் அந்தப்பக்கம் இருந்து
நீ உன் வாசலின் மறுபக்கம்
திறந்து விட்டாய்
உனது கதவை
ஆனால்
நாம் இன்னும் சந்திக்கவேயில்லை.
இரண்டு பக்கமும் கதவுகள் திறந்தும் சந்திக்க முடியாதது துயரம் தானே எல்லோருக்கும். கவிஞர் அப்பாஸின் கவிதைகள் ஆழமான வாசிப்பைக் கோருபவை அவர் சாதாரணங்களிலிருந்து அசாதாரணங்களைக் கண்டு சொல்வதும், இது வரை யாரும் காணாத கோணத்தில் அநுபவங்களைத் தரிசன உணர்வாக மாற்றுவதும் கவிஞர் அப்பாஸின் கவிதைகளை வேறொரு தளத்திற்கு உயர்த்துகின்றன. நவீன தமிழ்க்கவிஞர்களில் முக்கியமானவராக எழுந்து வந்த அப்பாஸ், விந்தைகளைத் தேடி விந்தை வெளியில் தன் சிறகுகளை விரித்து பறந்து பறந்து மறைந்தே போய்விட்டார்; அவருடைய கவிதைகளைச் சாட்சியாக விட்டு விட்டு.

No comments:

Post a Comment