Friday 16 September 2016

கருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்

கருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்
உதயசங்கர்
கல்லூரிப்படிப்பு முடிந்திருந்த நேரம். அதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் கோவில்பட்டியில் உள்ள இலக்கியவாதிகளின் அறிமுகம், இலக்கியப்புத்தகங்களின் வாசிப்பு என்று எனது இலக்கிய அறிவு குழந்தைப் பருவத்திலிலிருந்தது. புத்தகங்களை வாசிக்க வாசிக்க எழுத்தாளர்களின் மீது பிரமிப்பு ஏற்பட்டது. எழுத்தாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு புதிய வெளிச்சம் தந்தது. கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள். எழுத்தின் மீதான பிரேமை கூடிக்கொண்டிருந்தது. ஆனால் மிகப்பெரிய தயக்கம் என்முன்னால் மலை போல நின்று கொண்டிருந்தது. இயல்பிலேயே மிகுந்த தயக்கமும் கூச்ச சுபாவமும் உடைய நான் எழுத்தாளர்களைச் சந்திக்கும் போதும் சரி, படித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளைக் கேட்கும்போதும் சரி எதுவும் பேசியதில்லை. கருத்துகள் முட்டி மோதிக் கொண்டிருந்தாலும் வாயைத் திறக்க மாட்டேன். அதையும் மீறி ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி, அதைப்பற்றி மீண்டும் யாராவது கேட்டுவிட்டால் வெலவெலத்து போய்விடும். உலகமே என் வார்த்தைகளில் இருண்டுவிடுமோ என்று பயந்துபோய் பேசாமலிருந்து விடுவேன்.
இலக்கியம், அரசியல், தத்துவம், என்று எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இதுவரை இல்லாத புதிய உலகத்திற்கு நான் போய் வருகிற மாதிரி இருக்கும். அந்த உலகத்தின் அழகும் பயங்கரமும், என்னை வசீகரித்தது. அந்த வசீகரத்தின் பின்னால் ஓடித்திரிந்தேன். யாருடைய கைப்பிள்ளையாகவும் இருக்கத்துணிந்தேன். அப்போது என் பள்ளித்தோழனாகவும், கல்லூரித்தோழனாகவும் இருந்த மாரீஸ் மிக லகுவாக எல்லா எழுத்தாளர்களிடமும் பழகுவதையும் அவர் மனதுக்குப் பட்டதை பட்டென்று முகதாட்சண்யமின்றி சொல்வதையும் கண்டு அவர் மீதுபொறாமைப்பட்டிருக்கிறேன்.
இரவுகளில் எங்கள் ஜமா எப்போதும் காந்திமைதானத்தில் கூடிக் கலைய நள்ளிரவு தாண்டிவிடும். அப்படி ஒரு சந்திப்பில் மாரீஸ் என்னிடம் நாளை கி.ராவைப் பார்க்க இடைசெவல் போகலாம் வர்றியா? என்றார். அப்போது தான் படித்து முடித்திருந்ததால் வேலையின்மையின் வெம்மை தாக்காத நேரம். அதோடு இந்தக் கிறுக்கும் சேர்ந்து விட்டதா நான் நடந்து திரிந்ததாக நினைவில்லை. பறந்து கொண்டிருந்தேன். இடைசெவலில் கி.ரா.வைப் பார்க்கப்போகிறோம் என்றதும் சரி என்று சொல்லிவிட்டேன். அதற்குக் கொஞ்சம் முன்னால் அவருடைய கதவு சிறுகதைத்தொகுப்பையும் குறுநாவலையும் படித்திருந்தேன். அதைப் படித்தபோது இலக்கியம் வேறு மாதிரியிருந்தது. அந்த எழுத்து நடையின் மீது ஒரு அந்நியோன்யமான உணர்வு எப்படியோ உணர முடிந்தது. அவரைச் சந்திக்க மறுநாள் காலை நானும் மாரீஸூம், கவிஞர் முருகனும், சென்றிருந்தோம். பேருந்து நிறுத்தத்திலிருந்து இடைசெவல் கிராமத்துக்குள் நுழைவதற்கு எப்படியும் ஒரு முக்கால் கி.மீ தூரம் இருக்கும். பல சமயங்களில் இந்த இடைவழி தூரத்தைக் கடப்பதற்குப் பலமணி நேரம் எடுத்திருக்கிறோம். நின்று பேசி, நின்று பேசி, நடந்து கொண்டேயிருப்போம். ஓரிருமுறை நயினா பேருந்து நிறுத்தம் வரை கூட வந்து வழியனுப்புவார்.
அவருடைய வீட்டில், அறையில் இருந்த ஒழுங்கு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் எழுத்தாலர்கள் நடைமுறை வாழ்க்கையில் அக்கறையற்றவர்கள் என்ற சித்திரம் எனக்குள் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பெருமிதமும் இருந்தது. ஆனால் நயினாவின் அறையில் சுத்தமும் ஒழுங்கும் அப்படி ஆட்சி செய்தன. அப்போது அவர் புகைத்துக் கொண்டிருந்த காலம். பீடிக்கட்டிலிருக்கும் பீடிகளைத்தரம் பிரித்து தனியே அடுக்கி வைத்திருப்பார். புகை பிடிக்கும் எண்ணம் வந்ததும், பீடிகளின் அருகில் வைத்திருக்கும் கத்தரிக்கோலை எடுத்து பீடியின் முனையைக் கத்தரித்த பின்னால் புகைக்கத் தொடங்குவார். அதைப்பார்க்க பார்க்க புகைக்கும் ஆசை யாருக்கும் வரும்.
கரிசல் வட்டாரச்சொல்லகராதிக்கான சொற்களை அகரவரிசைப்படுத்தும் வேலையை நானும், மாரீஸும், முருகனும் செய்தோம். கணவதியம்மா நாங்கள் போனதும் மணக்கும் மோரும், மதியம் சாப்பாடும், சாயங்காலம் கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும், தந்து உபசரித்துக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை இணக்கமான தம்பதிகளை இதுநாள் வரை வேறு யார் வீட்டிலும் நான் பார்த்ததில்லை.
சுரங்கத்தைத் தோண்டியெடுத்த மாதிரி சொற்கள் குவிந்து கொண்டேயிருந்தன. அவ்வப்போது வரும் சந்தேகங்களை நயினாவிடம் கேட்டால் போதும். உரையாடல் தொடங்கிவிடும். உரையாடல் ஒரு கலை. அதில் நயினா வல்லவர். அணுக்கமாக அமர்ந்து நெருங்கிய பாந்தமான குரலில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை விவரங்கள், கதைகள், விவரணைகள், இலக்கியசர்ச்சைகள், என்று பேசிக்கொண்டேயிருப்பார். அப்போது நாங்கள் இருபதுகளில் இருந்தோம். நயினா அறுபதை எட்டிக் கொண்டிருந்தார். வயதின் இடைவெளியை அவருடைய பேச்சு குறைத்துவிடும். சமவயதினர் போலும் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டே சமாச்சாரங்கள் ஏராளம்.
அப்போது கோவில்பட்டியில் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரம். தேவதச்சன், பூமணி, கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், தமிழ்ச்செல்வன், பிரதீபன், ஜோதிவிநாயகம், கோணங்கி, உதயசங்கர், நாறும்பூ நாதன், திடவை பொன்னுச்சாமி, சாரதி, அப்பணசாமி, சோ.தர்மன், முருகன், ராம், என்று நகரத்துக்குள்ளேயே ஒரு பெரிய பட்டாளம் இருந்தது. எந்தத்திசை வழி நடந்து சென்றாலும் இரண்டு இலக்கியவாதிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதும் விவாதம்..விவாதம்… விவாதம்.. கோவில்பட்டி நகரமே கொந்தளித்துக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றும். சதா வெளியூர்களிலிருந்து எழுத்தாளர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களின் வாய்மொழிக்கதைகள் மூலமாகவும் கோவில்பட்டி இலக்கியவட்டாரம் தமிழ் இலக்கிய உலகில் பிரசித்தி பெறத் தொடங்கியது. இதெற்கெல்லாம் பின்புலமாக நயினா இருந்தார். அவர் காரசாரமான விவாதங்களில் பங்கெடுத்ததில்லை. இலக்கியக்கூட்டங்களில் ஆவேசமாக உரையாற்றியதும் இல்லை. இலக்கிய அரசியலில் தன்னை முன்னிறுத்தும் சாணக்கிய வேலைகளைச் செய்ததும் இல்லை. ஆனால் கோவில்பட்டி இலக்கியச்சூழலுக்குப் பின்திரையாக இருந்தார். புதிய இளைஞர் படையைக் கண்டு பெருமிதம் அடைந்தார். அதை எல்லோரிடமும் சொல்லிச் சிலாகித்தார். எங்களின் தார்மீக பலமாக அவர் இருந்தார். இத்தனைக்கும் விமரிசன விவாதங்களில் நாங்கள் அவரை விட்டு வைத்ததும் இல்லை.
அவர் ஆரம்பத்திலிருந்தே வட்டார இலக்கியத்தின் மீதும், குறிப்பாகத் தான் வாழ்ந்த தனித்துவமிக்க கரிசல்மண்ணின் மீதும் தீராத நம்பிக்கை வைத்திருந்தார். வட்டார இலக்கியம் குறித்து எத்தனையோ எதிர்மறையான விமரிசனங்கள் வந்த போதும் அவர் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை.
பெரும்பாலும் உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழிலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாகச் சொன்னவர் நயினா தான். ஒரு வகையில் பிற்படுத்தப்பட்ட,  மக்களின் வாழ்க்கை தமிழிலக்கியத்தில் பிரதிபலிக்க முன்னத்தி ஏர் பிடித்தவரும் நயினா தான். இன்று வட்டாரமொழி இலக்கியம் இத்துணை அங்கீகாரம் பெற்றிருக்கிறதென்றால் அதற்கு நயினாவின் தொடர்ந்த இலக்கியச்செயல்பாடுகளே காரணம். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் தனியாக நின்று செய்தவர். அவர் எங்கேயிருந்தாலும் அங்கே ஒரு இலக்கியச்சூழல் உருவாகிவிடும். கோவில்பட்டியில் அவர் இருந்த காலம் இங்குள்ள இலக்கியவாதிகளின் பொற்காலம் என்று சொல்லலாம். அதை நினைத்து நாங்கள் இப்போதும் பெருமை கொள்கிறோம்.
பலசமயங்களில் நானும் மாரீஸும் பேசிக்கொள்ளும்போது எங்கள் கண்களில் அந்த நாட்களின் ஞாபகங்கள் நிழலாடும். இடைசெவல் சென்று வந்ததைப்பற்றி, நயினாவைப்பற்றி, கோவில்பட்டி நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஞாபகம் கொள்ள வெவ்வேறு ஞாபகங்கள் இருக்கும். எனக்கும் என் துணைவியாருக்கும் மேலும் நெருக்கமான ஒரு நினைவுக்குறிப்பு உண்டு. என் திருமணத்துக்கு ஒரு எழுத்தாளர் தாலி எடுத்துத் தர வேண்டும் என்று தோழர்கள் பேசி முடிவு செய்தார்கள். உடனடியாக எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக நயினாவையும் கணவதியம்மாவையும் கூப்பிடலாம் என்று முடிவு செய்தோம். என் துணைவியாரின் சொல்லாடலில் கை தட்டி கலியாணம் என்று பெயர்பெற்ற என் திருமண புகைப்படத்தொகுப்பில் நயினாவையும் கணவதியம்மாவையும் அடிக்கடி நானும் என் குடும்பத்தாரும் பார்த்துக் கொள்வோம். எழுத்திற்கும் எனக்கும் இன்று வரையிலான உறவுக்கு நயினா ஒரு முக்கியக் காரணம் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
எண்பத்தியைந்து வயதைக்கடந்தும் இன்னும் தமிழிலக்கியத்துக்கு தன்னுடைய பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கும் நயினா புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உத்வேகமளிக்கிறார் என்றால் மிகையில்லை. மாரீஸிடம் நான் சொன்னேன்,
“ நயினாவை அவருடைய நூறாவது வயதில் சென்று பார்க்க வேண்டும்..”
அதற்கு அவர் சொல்கிறார்,
“ அதென்ன பிரமாதம்! அப்பவும் நயினா நமக்கு கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும் கொடுத்து ஏகப்பட்ட சங்கதிகளைச் சொல்லுவார்..”
உண்மை தானே!
( பத்து வருடங்களுக்கு முன்பு முன்னொரு காலத்தில் நூலில்

நான் எழுதிய கட்டுரை.)
 

அய்யாச்சாமித்தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்

குழந்தமையின் மாயாஜாலம்
உதயசங்கர்
பொதுவாகவே குழந்தைகள் எதையும் சுலபமாக நம்பி விடுவார்கள். அதுவும் உண்மையாகவே நம்பி விடுவார்கள். அவர்களுடைய குழந்தமை அவர்களுக்கென்று ஒரு உலகை உருவாக்குகிறது. அந்த உலகத்தில் மரப்பாச்சி பொம்மை அம்மாவாக, மகளாக, உருமாறுகிறது. மரப்பாச்சி பொம்மை பல் தேய்க்கிறது. குளிக்கிறது. பள்ளிக்கூடம் போகிறது. டீச்சரிடம் பாடம் கேட்கிறது. மரப்பாச்சிக்குக் காய்ச்சலோ வயிற்றுவலியோ வருகிறது. டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள் அம்மா. கசப்பு மருந்தைக் குடிக்க கஷ்டப்படுகிறது. டாக்டர் ஊசி போடும்போது அழுகிறது. தூங்க மறுக்கிறது. அப்போது அம்மா பூச்சாண்டி வந்துருவான் என்று பயமுறுத்த்துகிறாள். மரப்பாச்சி சமர்த்தாய் உறங்குகிறது. எல்லாவற்றையும் உயிருள்ள குழந்தையைப் போல மரப்பாச்சி செய்கிறது.
இந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே தன் கற்பனையின் எல்லைகளை விரிப்பதில் குழந்தமைக்கு எந்த தடையுமில்லை. அது தான் குழந்தைமையின் மாயாஜாலம்.
குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. முதலில் இப்படியான கருத்துக்களை பொருட்படுத்தக்கூடிய சூழல் உருவாகியிருப்பது மிக முக்கியம். குழந்தை இலக்கியம் என்றாலே ஃபேண்டசியாகத்தான் இருக்க வேண்டும். ஃபேண்டசி இல்லாத கதைகளை குழந்தைகள் வாசிக்க மாட்டார்கள். குழந்தை இலக்கியம் நம்பமுடியாதவற்றை நம்பச்சொல்கிற மாதிரி இருக்கக்கூடாது. அது அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். அறிவியல் சிந்தனைகளை விதைக்க வேண்டும். குழந்தை இலக்கியத்தில் நன்னெறிகளும், அறநெறிகளும் போதிக்கப்பட வேண்டும். குழந்தை இலக்கியம் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். யதார்த்தமான படைப்புகளின்வழி குழந்தைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்க வேண்டும். இப்படிப் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் உலகச்சிறந்த குழந்தை இலக்கியம் எல்லாம் பெரும்பாலும் ஃபேண்டசி என்று சொல்லப்படுகிற அதிமாயாஜாலக்கதைகளாக இருக்கின்றன. ஃபிரெஞ்ச் செவ்வியல் குழந்தை இலக்கிய நூலான அந்து வான் எக்சுபரியின் குட்டி இளவரசன் ஆக இருக்கட்டும் லூயி கரோலின் ஆலிசின் அற்புத உலகம் ஆக இருக்கட்டும் அல்லது மற்ற நாடுகளின் குழந்தை இலக்கியமாக இருக்கட்டும் பெரும்பாலும் ஃபேண்டசியாகவே இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.
மற்ற பாணி இலக்கியவகைகளும் இருந்தாலும் ஃபேண்டசிவகை இலக்கியத்துக்கு ஒரு தனீ ஈர்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஃபேண்டசியில் குழந்தைகளின் கற்பனையின் எல்லை விரிகிறது. புதிய கற்பனைகள், மாயாஜாலங்கள் முதலில் குழந்தைகளின் படைப்பூக்க நுண்ணுணர்வைத் தூண்டி விடுகின்றன. நம்ப முடியாததை நம்புகிற உணர்வு குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. யதார்த்த உலகத்தில் இல்லாத, நடைமுறைப்படுத்த முடியாத, மாய உலகம் குழந்தைகளின் மன உலகில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆதிமனிதன் தன் குழந்தைப்பருவத்தில் தன்னால் அறியமுடியாததை எல்லாம் தொன்மமாக மாற்றினான். அந்தத் தொன்மங்களின் வழியே யதார்த்தத்தை மாற்றிவிடமுடியும் என்று நம்பினான். மாயமந்திரங்களை தொன்மங்களில் ஏற்றினான். அதன் மூலம் மனிதனின் உற்பத்தித்திறனை அதிகப்படுத்த முடியும் என்று நடைமுறையில் கண்டான். அதில் மகிழ்ச்சியடைந்தான். அவற்றைக் கொண்டாடினான். அந்தக் கொண்டாட்ட மனநிலையே முக்கியம்.

குழந்தை இலக்கியம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் கொண்டாட்டம் இல்லாத, மகிழ்ச்சியளிக்காத, கறாரான ஆசிரியரைப் போன்று, பரீட்சைக்காக மட்டுமே படிக்கிற பாடப்புத்தகங்களைப் போன்று இருக்கக்கூடாது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். மலையாள எழுத்தாளர் மாலி எழுதிய அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை ஃபேண்டசிக்கதைகள் தான். அதனால் தான் அய்யாச்சாமி தாத்தாவின் காதுவழியே முளைத்த பெரிய பலாமரத்தில் அய்யாச்சாமி தாத்தாவே ஊஞ்சல் கட்டி ஆடுகிறார். தன்னுடைய வால் ரோமத்தைப் பிடுங்கிய சங்கரநாராயணனைத் துரத்தும் கிங்கர யானை அவன் குளத்தில் இறங்கினால் இறங்குகிறது. மரத்தில் ஏறினால் ஏறுகிறது. ஊதுகுழலுக்குள் நுழைந்தால் அதுவும் நுழைகிறது. இப்படியான கதைகளே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். வாசிப்பதற்குச் சுவாரசியமான மனித இயல்புகளை சுட்டாமல் சுட்டிச்செல்லும் கதைகள்.
( முன்னுரையிலிருந்து..)