Saturday, 14 July 2018
கி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...
Friday, 16 September 2016
கருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்
Monday, 1 September 2014
இன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு
அன்று மழை பெய்து கொண்டிருந்தது
மாரிஸும் நானும்
இடைசெவல் பேருந்து நிறுத்தத்திலிருந்து
நடந்து வந்து கொண்டிருந்தோம்
உங்கள் வீட்டிற்கு நயினா..
கந்தகபூமியின்
கரிசல்காட்டு மக்களின்
மனசின் ஈரம் போல
வரவேற்றீர்கள் உங்கள் இசைக்குரலால்
ஓலைப்பாயில் மோளும்
ஓசையுடன் இலக்கிய சர்ச்சைகள்
ஆரவாரமான கூப்பாடுகள்
வசியம் செய்து
வசத்துக்கு கொண்டு வந்தீர்கள்
உங்கள் இனிய குரலால்
உங்களிடமிருந்து
புதிய தகவலோ வாழ்வநுபவமோ
முன்கூட்டியே
ஒரு மெலிதான செருமலை
அனுப்பி வைக்கும் எங்களுக்கு
இலக்கியத்தை மட்டுமில்லை
வாழ்க்கையையும் பார்ப்பது எப்படியென்று
வலிமையாகக் கற்றுக்கொடுத்தீர்கள்
உங்கள் மென்மையான குரலில்
2
இருளும் ஒளிரும்
விருவோடிய மண்ணை
வெறித்தபடி திரிந்தோம்
விரக்தியுடன் நாங்கள்
மெலிந்துயர்ந்த உருவத்தில்
அதிராத நடையில்
ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப்பெருமாள் ராமனுஜன்
என்று எல்லோருக்கும் அன்பான
எங்கள் நயினா நீங்கள் வந்தீர்கள்
கீற்றாய் சிந்திய புன்ன்கையுடன்
நீங்கள் கரிசல்க்காட்டை
உழுது வைக்கச் சொன்னீர்கள்
மழை வருமா என்றோம்
நீங்கள் எங்களிடம்
விதை விதைக்கச் சொன்னீர்கள்
முளைக்குமா என்றோம்
எங்களை வெள்ளாமைக்குத்
தயாராகச் சொன்னீர்கள்
வீடு வந்து சேருமா என்று சந்தேகப்பட்டோம்
தீர்க்கதரிசி நீங்கள்
மழை பொழிந்தது
விதை முளைத்தது
வெள்ளாமை வீடு சேர்ந்தது
வாய்மொழி இலக்கியமாம்
வட்டார இலக்கியமாம்
கரிசல் இலக்கியமாம்
என்று ஏகடியம் பேசிச் சிரித்தவர்கள்
இன்று தமிழுக்குப் பெருங்கொடையென்று
புல்லரித்து அலைகிறார்கள்
பிராமண வெள்ளாள மேலாண்மை
இலக்கியக் கரம்பைக்கட்டிகளை
உடைத்தது உங்கள் முன்னத்தி ஏர்
தமிழிலக்கியத்திற்கு
புதிய திசை காட்டினீர்கள்
தமிழையும் புதிதாக மாற்றினீர்கள்
புதிய காற்று வீசிக்கொண்டிருக்கிறது
இப்போது
3
மடிசஞ்சியான
மத்தியதர வர்க்க தமிழிலக்கியத்தில்
உழைக்கும் கிராமத்தான்களும்
உரிமை கோர வைத்தவர் நீங்கள்
விதவிதமான பசியை மட்டுமல்ல
கரிசல்க்காட்டு பண்டங்களின்
விதவிதமான ருசிகளையும்
சொன்னீர்கள்
கரிசல்ச்சீமையின்
புதிய எழுத்தாளர் படையை
அணி திரட்டியவர் நீங்கள்
கரிசல் இலக்கியத்தின்
மூலவர் நீங்கள்
உற்சவ மூர்த்தியும் நீங்களே
இப்போது வெக்கையும்
வியர்வையும் பொங்கும்
புதிய மனிதர்கள்
புதிய இலக்கியத்துக்குள்
நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்
4
தேசிய நெடுஞ்சாலையில்
கடக்கும்போதெல்லாம்
ஒரு குழந்தையின்
குதூகலம் பொங்கிவரும்
இடைசெவலைப் பார்க்கும்போது
எங்கள் ஞானத்தந்தை
சுற்றித் திரிந்த பூமியல்லவா
5
இன்னும்
ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு
இதோ இடைசெவல் பஸ் நிறுத்தம்
உங்கள் வீட்டிற்கு
நடந்து கொண்டிருக்கிறோம்
நானும் மாரீஸும்
ஒரு நூற்றாண்டாய் மழை
பெய்து கொண்டிருக்கிறது
கனிவான சிரிப்புடனும்
கருப்பட்டிக் காப்பியுடனும் நீங்கள்…
Wednesday, 9 May 2012
கருப்பட்டிக் காப்பியும் காரச்சேவும் இடைசெவல் நயினாவும்
கல்லூரிப்படிப்பு முடிந்திருந்த நேரம். அதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள இலக்கியவாதிகளின் அறிமுகம். இலக்கிய புத்தகங்களின் வாசிப்பு என்று எனது இலக்கிய அறிவு குழந்தைப் பருவத்திலிருந்தது. புத்தங்களை வாசிக்க வாசிக்க எழுத்தாளர்கள் மீது பிரமிப்பு ஏற்பட்டது. அவர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம் அவர்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு புதிய வெளிச்சம் தந்தது. கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள். எழுத்தின் மீதான பிரேமை கூடிக்கொண்டிருந்தது. ஆனால் மிகப்பெரிய தயக்கம் என்முன்னால் மலைபோல நின்று கொண்டிருந்தது. இயல்பிலேயே மிகுந்த தயக்கமும் கூச்ச சுபாவமுடைய நான் எழுத்தாளர்களைச் சந்திக்கும் போதும் சரி, படித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளைக் கேட்கும்போதும் சரி எதுவும் பேசியதில்லை. கருத்துகள் முட்டிமோதிக் கொண்டிருந்தாலும் வாயைத் திறக்க மாட்டேன். அதையும் மீறி ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி, அதைப்பற்றி மீண்டும் யாராவது கேட்டுவிட்டால் வெலவெலத்து போய்விடும் உலகமே என் வார்த்தைகளில் இருண்டு விடுமோ என்று பயந்து போய் பேசாமலிருந்து விடுவேன்.
இலக்கியம், அரசியல், தத்துவம், என்று எழுத்தாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இதுவரை இல்லாத புதிய உலகத்திற்கு நான் போய் வருகிற மாதிரி இருக்கும். அந்த உலகத்தின் அழகும் பயங்கரமும் என்னை வசீகரித்தது. அந்த வசீகரத்தின் பின்னால் ஒடி ஓடித் திரிந்தேன். யாருடைய கைப்பிள்ளையாகவும் இருக்கத் துணிந்தேன். அப்போது என் பள்ளித் தோழனாகவும் கல்லூரித் தோழனாகவும் இருந்த மாரீஸ் மிக லகுவாக எல்லா எழுத்தாளர்களிடமும் பழகுவதையும், அவர் மனதுக்குப் பட்டதை பட்டென்று முகதாட்சண்யமின்றி சொல்வதையும் கண்டு அவர் மீது பொறாமைப்பட்டிருக்கிறேன்.
இரவுகளில் எங்கள் ஜமா எப்போதும் காந்திமைதானத்தில் கூடிக் கலைய நள்ளிரவு தாண்டிவிடும். அப்படி ஒரு சந்திப்பில் மாரீஸ் என்னிடம் நாளை கி.ராவைப்பார்க்க இடை செவல் போகலாம் வர்றியா ? என்றார். அப்போது தான் படித்து முடித்திருந்ததால் வேலையின்மையின் வெம்மை தாக்காத நேரம், அதோடு இந்தக் கிறுக்கும் சேர்ந்துவிட்டதால் நான் நடந்து திரிந்ததாக நினைவில்லை. பறந்து கொண்டிருந்தேன். இடைசெவலில் கி.ராஜநாராயணனைப் பார்க்கப் போகிறோம் என்றதும் சரி என்று சொல்லிவிட்டேன். அப்போது தான் அவருடைய கதவு சிறுகதைத் தொகுப்பும் கிடை குறுநாவலும் படித்திருந்தேன். அதை படித்த போது இலக்கியம் வேறு மாதிரியிருந்தது. அந்த எழுத்து நடையின் மீது ஒரு அந்நியோன்யமான உணர்வு எப்படியோ தோன்றியதை உணர முடிந்தது. அவரைச் சந்திக்க மறுநாள் காலை நானும், மாரீஸும், கவிஞர் முருகனும் சென்றோம். பேருந்து நிறுத்தத்திலிருந்து இடைசெவல் கிராமத்திற்குள் நுழைவதற்கு எப்படியும் ஒரு முக்கால் கி.மீ தூரம் இருக்கும். பலமுறை இந்த இடைவழி தூரத்தைக் கடப்பதற்கு பல மணி நேரம் எடுத்திருக்கிறோம். நின்று பேசி, நின்று பேசி, நடந்து கொண்டேயிருப்போம். சில தடவை நயினா பேருந்து நிறுத்தம் வரை கூட வந்து வழியனுப்புவார்.
அவருடைய வீட்டில் அறையில் இருந்த ஒழுங்கு எங்களை ஆச்சரியப்படுத்தியது ஏனென்றால் எழுத்தாளர்கள் நடைமுறை வாழ்க்கையில் அக்கறையற்றவர்கள் என்கிற சித்திரம் எனக்குள் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பெருமிதமும் இருந்தது. ஆனால் நயினாவின் அறையில் சுத்தமும் ஒழுங்கும் அப்படி ஆட்சிசெய்தன. அப்போது அவர் புகைத்துக் கொண்டிருந்த காலம் பீடிக்கட்டிலிருக்கும் பீடிகளைத் தரம் பிரித்து தனியே அடுக்கி வைத்திருப்பார். புகை பிடிக்கும் எண்ணம் வந்ததும் பீடிகளின் அருகிலேயே இருக்கும் கத்தரிக்கோலை எடுத்து பீடியின் முனையை வெட்டி விட்டு புகைக்கத் துவங்குவார். அதைப் பார்க்கப் பார்க்க புகைக்கும் ஆசை யாருக்கும் வரும்.
கரிசல் வட்டாரச் சொல் அகராதிக்கான சொற்களை அகர வரிசைப்படுத்தும் வேலையினைத்தான் நானும், மாரீஸீம், முருகனும் செய்தோம். கணவதியம்மா மணக்கும் மோரும், மதியச்சாப்பாடும், கருப்பட்டிக் காப்பியும், சேவும் தந்து உபசரித்துக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை இணக்கமான தம்பதிகளை இதுநாள் வரை வேறெந்த எழுத்தாளர் வீட்டிலும் நான் பார்த்ததில்லை. சுரங்கத்தைத் தோண்டியயடுத்த மாதிரி சொற்கள் குவிந்து கொண்டேயிருந்தன. அவ்வப்போது வரும் சந்தேகங்களை நயினாவிடம் கேட்டால் போதும் உரையாடல் தொடங்கிவிடும் உரையாடல் என்பது ஒருகலை. அதில் நயினா வல்லவர். அணுக்கமாக அமர்ந்து நெருங்கிய பாந்தமான குரலில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை விவரங்கள், கதைகள், விவரணைகள், இலக்கிய சர்ச்சைகள் என்று பேசிக் கொண்டேயிருப்போம். அப்போது நாங்கள் இருபதுகளில் இருந்தோம். நயினா அறுபதை எட்டிக் கொண்டிருந்தார். வயதின் இடைவெளியை அவருடைய பேச்சு குறைத்துவிடும். சம வயதினர் போலும் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டே சமாச்சாரங்கள் ஏராளம் அப்போது கோவில்பட்டியில் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரம். தேவதச்சன், கெளரிஷங்கர், வித்யாஷங்கர், பூமணி, அப்பாஸ், தமிழ்ச்செல்வன், பிரதீபன், ஜோதிவிநாயகம், உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, திடவை பொன்னுச்சாமி, முருகன், அப்பணசாமி, கோணங்கி என்று நகரத்துக்குள்ளேயே ஒரு பெரிய பட்டாளம் இருந்தது. எந்தத் திசைவழி நடந்து சென்றாலும் இரண்டு இலக்கிய வாதிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதும் விவாதம் ... விவாதம் ... விவாதம் ... கோவில்பட்டி நகரமே கொந்தளித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றும் சதா வெளியூர்களிலிருந்து எழுத்தாளர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களின் வாய்மொழிக் கதைகள் மூலமாகவும் கோவில்பட்டி இலக்கிய வட்டாரம் தமிழ் இலக்கிய உலகில் பிரசித்தி பெறத் தொடங்கிறது. இதற்கெல்லாம் பின்புலமாக நயினா இருந்தார். அவர் காரசாரமான விவாதங்களின் பங்கெடுத்ததில்லை. இலக்கியக் கூட்டங்களில் ஆவேசமாக உரையாற்றியதுமில்லை. இலக்கிய அரசியலில் தன்னை முன்னிறுத்தும் சாணக்கிய வேலைகளைச் செய்ததுமில்லை. ஆனால் கோவில்பட்டி இலக்கியச் சூழலுக்குப் பின் திரையாக இருந்தார். புதிய இளைஞர் படையைக் கண்டு பெருமிதம் அடைந்தார். அதை பலபேரிடம் சிலாகிக்கவும் செய்தார். இத்தனைக்கும் இலக்கிய விமரிசனவிவாதங்களில் அவரையும் நாங்கள் விட்டுவைத்ததில்லை.
அவர் ஆரம்பத்திலிருந்தே வட்டார இலக்கியத்தின் மீதும், குறிப்பாக தான் வாழ்ந்த தனித்துவமிக்க கரிசல் மண்ணின் மீதும் தீராத நம்பிக்கை வைத்திருந்தார். வட்டாரமொழி இலக்கியம் குறித்து எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் வந்தபோதும் அவர் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கைவீண் போகவில்லை.
பெரும்பாலும் உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழிலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாகச் சொன்னவர் நயினா தான். ஒரு வகையில் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வாழ்க்கை தமிழிலக்கியத்தில் பிரதிபலிக்க முன்னத்தி ஏர் பிடித்தவரும் நயினாதான். இன்று வட்டாரமொழி இலக்கியம், இத்துணை அங்கீகாரம் பெற்றிருக்கிற தென்றால் அதற்கு நயினாவின் தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளே காரணம். அவர் எங்கேயிருந்தாலும் அங்கே ஒரு இலக்கியச் சூழல் உருவாகிவிடும். கோவில்பட்டியில் அவர் எங்கள் பின்புலமாக இருந்த காலம் இங்குள்ள இலக்கியவாதிகளின் பொற்காலம் என்று சொல்லாம். அதை நினைத்து நாங்கள் இப்போதும் பெருமை கொள்கிறோம்.
பல சமயங்களில் நானும் மாரீஸீம் பேசிக் கொள்ளும் போது எங்கள் கண்களில் அந்த நாட்களின் ஞாபகங்கள் நிழலாடும்; இடைசெவல் சென்று வந்ததைப் பற்றி கோவில்பட்டி நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஞாபகம் கொள்ள வேறுவேறு ஞாபகங்கள் இருக்கும். எனக்கும் என் துணைவியாருக்கும் மேலும் நெருக்கமான நினைவுக்குறிப்பு உண்டு. என் திருமணத்திற்கு ஒரு எழுத்தாளர் திருமாங்கல்யம் எடுத்து தர வேண்டும் என்று நாங்கள் பேசும் போது உடனடியாக எங்கள் ஒருமித்த கருத்தாக நயினாவையும் கணவதியம்மாவையும் கூப்பிடலாம் என்று முடிவுசெய்தோம். என் துணைவியாரின் சொல்லாடலில் கைதட்டி கலியாணம் என்ற பெயர் பெற்ற என் திருமணத்தின் புகைப்படத்தொகுப்பில் நயினாவையும் கணவதியம்மாவையும் அடிக்கடி நானும் என் குடும்பத்தாரும் பார்த்துக் கொள்வோம். இன்று வரையான எழுத்திற்கும் எனக்கும் உள்ள உறவுக்கு நயினா ஒரு முக்கியக் காரணம் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
எண்பத்திஐந்து வயதைக் கடந்தும் இன்னும் தமிழிலக்கியத்திற்கு தன்னுடைய பங்களிப்பை செய்து கொண்டிருக்கும் நயினா புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உத்வேகமளிக்கிறார் என்பது மிகையில்லை. மாரீஸிடம் நான் சொல்கிறேன். நயினாவை அவரது நூறாவது வயதில் பார்க்க வேண்டும். அதற்கு அவர் சொல்கிறார். “அதென்ன பிரமாதம் அப்பவும் நயினா நமக்கு கருப்பட்டிக் காப்பியும் காரச்சேவும் கொடுத்து ஏகப்பட்ட சங்கதிகளைச் சொல்லுவார்”. உண்மை தானே.

