Friday, 31 July 2026

மண்டோ’ என்ற பேராளுமை

 

மண்டோ’ என்ற பேராளுமை

 சுகன்யா ராமநாதன் 



உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சதத் ஹாசன் மண்டோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து கதைகள் கொண்ட தொகுப்பு ‘நிர்வாணக் குரல்கள்’. நூல்வனம் வெளியீட்டில் எழுத்தாளர் உதயசங்கர் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஓர் தாக்கம் தரும் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது.

 

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலங்களின் கொடுமைகளை ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தியவர் எழுத்தாளர் மண்டோ. ஒரு மனிதர் தன் சக மனிதரை மதம் கொண்டு பிரித்துப் பார்ப்பதென்பது எப்படி நிகழ்கிறது? உற்ற நண்பர்கள், அண்டை வீட்டார், பழகிய மனிதர்களை, யாரோ பரப்பும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு பலியாகி, சுய சிந்தனையை இழக்க வைப்பது எது?

பிரிவினை என்பது வரலாற்றின் வடு கிடையாது. அது ரத்தமும் சீழும் வழிந்தோடுகிற ஆறாத புண். துள்ளத் துடிக்க இன்றும் உயிர்களைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லி. மனித மனங்களில் வெறுப்பு என்னும் நெருப்பை அணையாமல் காத்து நின்று, அன்பை அண்டவிடாமல் தடுக்கும் எரிபொருள். அரசு அதிகாரம், அறிவுஜீவிகளின் கட்டுக்கதைகள், ஊடகங்களின் பிரச்சாரம், கண்கள் கட்டப்பட்ட நீதிமன்றங்கள், செல்லாகாசான அநேக ஜனநாயகக் கருவிகள் என்று சூழல் அச்சுறுத்துவதாக இருந்த போதிலும், எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தான் செய்கின்றன.

மண்டோவின் குரலை தமிழில் ஒலிக்கச் செய்திருக்கும் எழுத்தாளர் உதயசங்கர் இருண்ட காலத்தில் ஒளி பாய்ச்சி இருக்கிறார். பிரிவினைக் காலத்தின் ஆழம் அகலம் என்று ஒரு பரந்த விரிந்த கால சாட்சியாக அமைந்திருக்கிறது மண்டோவின் எழுத்துகள்.

இந்த கதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பத்து கதைகளும், மனித மனங்களின் உண்மைக் காட்சிச் சித்திரங்கள். மண்டோவின் கதாபாத்திரங்கள், பாசாங்கு இல்லாமல் முரண்களுடன் உலவுகிறார்கள். முக்கால் நூற்றாண்டை கடந்தும் நமது இன்றைய காலத்தின் உடைகளை உடுத்திக்கொண்டு, இன்றைய சூழலுக்கு பொருந்திப் போய்விடுகிறார்கள். நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறார்கள், நம்மை சிரிக்க வைக்கிறார்கள், முகம் சுளிக்கச் செய்கிறார்கள், நம்மை அவர்களின் விசிறிகளாகச் செய்கிறார்கள். இந்த மாயாஜாலத்தை நிகழ்த்துவது மண்டோவின் எழுத்துகள்.

‘பிஸ்மில்லா’ கதையில் வரும் பெண், வினோதமான பெயர் கொண்டவளாகவும், ஒரு ஆழ்ந்த சோகத்தைச் சுமந்த கண்களுக்குச் சொந்தக்காரியாகவும் இருக்கிறாள். அவள் சோகத்தின் காரணம் கதையின்
இறுதியில் வெளிப்படுகிறது. ஒரு பெரும் சமூகக் கோரத்தை நம் மனதில் கடத்திவிடுகிறது ஒரு தனிமனிதப் பார்வையில் விரியும் கதை.

‘மெழுகுவர்த்தியின் கண்ணீர்’ கதை பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை, ஒரு சக்கரத்தைப் போல எப்படி தன் குழந்தைகளின் வாழ்வையும் நசுக்கிச் சுழல்கிறது என்று காட்சிப்படுத்துகிறது.

‘நிர்வாணக் குரல்கள்’ மனதை உலுக்கியெடுக்கும் கதை. ஒரு சமூகம் சிதையுண்டு போகும் போது இறந்தவர்களைப் பற்றியும், நாசம் அடைந்தவர்களின் வாழ்க்கையையும் பேசும் ஆட்களுக்கே குறைவிருக்கும் போது, தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்க்கைப்  பாடுகளைப் பாடுபவராகவும் மண்டோ இருந்திருக்கிறார், எப்படியோ பிழைப்பு நடத்தி, கலியாணம் முடித்து, பிள்ளைகள் பெற்று வாழ்க்கை ஓடாத்தான் செய்கிறது பெரும்பகுதியினருக்கு. கூருணர்வு கொண்ட சிலர் இந்த மனசாட்சி செத்த சமூகத்தில் மனம் பிறழ்கிறார்கள்.

பிரிவினைக்குப் பிந்தைய பகைமையின் காரணமாக சிந்து நதி நீர்வள அரசியலைப் பற்றி பேசும் கதை 'யாசித்'. உள்நாட்டிலும் ஆறுகளை ஆயுதமாக்கும் அரசியல் கேவலங்களை நாம் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். மனித மனங்கள் விரியாதவரை மண்டோவின் எழுத்துகள் சமகாலத்திய எழுத்துகள் தான்.

சமூக அரசியல் சூழ்நிலைகளை பேசும் மண்டோ, மனிதர்களின் மனங்களில் எழும் நுண் உணர்வுகளுக்கும் தன் எழுத்துகள் மூலம் வடிவம் கொடுக்கிறார். சமூகக் கொடுமைகளின் தோற்றுவாய் ஒரு வகையில் பார்த்தால் தனி மனித மனம் தான். அதில் எழும் உணர்வுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டும். மனக் கசடுகளை வடிக்கட்டும் ஒரு வகை வடிகட்டி தான் இலக்கியம்.

‘கோழை’ கதை, காதல் காம உணர்ச்சிக்கு ஆட்பட்ட ஒரு ஆணின் மன சஞ்சலங்களைப் பேசுகிறது. ‘கேள்விக்குறியான கௌரவம்’ என்ற கதையில் வரும் மம்மது பாய் தாதா கருணை உள்ளம் கொண்ட ஒரு ரௌடி. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மீது பொறுப்பேற்றுக் கொள்ளும் பண்புடையவன். கதையின் கடைசியில் தன் மீசையை இழக்க நேர்ந்ததை நினைத்து கதறி அழுகிறான். இந்த கதையில் மண்டோவின் நகைச்சுவை உணர்வை நாம் ரசிக்கலாம். இந்த இரண்டு கதைகளுமே ஆண் பாலினம் என்ற பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கிடக்கும் பலவீனங்களை, அதன் இயல்பான குணாதிசயங்களுடன் காட்டுகிறது.     

‘தோற்றுக்கொண்டே இருப்பவனின்’ கதை நுட்பமான மனித பாசாங்குகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.   

‘ஆறுதல்’ கதை, ஒரு சிறு வயது விதவையின் பன்முக சித்திரவதைகளைப் பேசுகிறது. பெண்கள் கூட தூற்றி ஒதுக்கும் சமூக விலக்கு மற்றும் அவளின் நிலையை சாதகமாக எடுத்துக்கொள்ளும் ஆண்களின் பார்வை ஒருபுறம், இன்னொரு புறம் இளமையின் தனிமை வாட்டியெடுக்கும் கொடுமைக்கு ஆறுதல் தேடும் மனம் என்று ஒரே கதையில் பல பார்வைகளை முன்வைக்கிறார்.  

 

‘ஷாடோலின் எலி’ என்ற கதை மதங்களின் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளுக்கு பலியாகும் குழந்தைகளின் கதை. பட்டறிவு, பகுத்தறிவு, இயற்கை உள்ளுணர்வு இவை அனைத்தும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது தானே! பிறகு எப்படி கட்டுக்கதைகளை நம்பி வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்ற ஆழமான கேள்வியை இந்தக் கதை நம் மீது வீசுகிறது.

ரசிகர் மனநிலை, பிரபலத்தின் மனநிலை, அவ்விரண்டிற்கும் இடையே இழையோடும் தொடர்பையும் சொல்லும் ஒரு இயல்பான கதை ‘நூர்ஜஹான்’.

உண்மைகளின் மேல் கட்டமைக்கப்பட்ட புனைவின் மாளிகையில் அரசனாக அமர்ந்து ஆட்சி செய்கிறார் மண்டோ. அந்த மர்ம மாளிகையில் ஏராளமான காட்சிப் பிழைகளின் பிம்பங்களை வாசகர்கள் தரிசிக்கலாம். தங்களைப் பொருத்திப் பார்த்து தம்தம் மனதின் இருண்ட மூலைகளை கண்டடையலாம்.

இந்த தொகுப்பின் மொழி பெயர்ப்பு மூல மொழியில் வாசிப்பது போன்ற அனுபவத்தை கொடுத்தது. முன்னுரை ‘மண்டோ’ என்ற பேராளுமை பற்றிய ஒரு அருமையான அறிமுகத்தை கொடுத்து, தொகுப்பிற்குள் வழிவிடுகிறது.




 

நூல்: நிர்வாணக் குரல்கள்

எழுத்தாளர்: சதத் ஹாசன் மண்டோ

தமிழில்: உதயசங்கர்

விலை: 220/-

பக்கம்:144

வெளியீடு: நூல்வனம்

தொடர்பு: +91 9751549992

நன்றி - தோழர்.சுகன்யா ராமநாதன்

 

No comments:

Post a Comment