Thursday, 2 July 2026

எங்களுக்கு எஸ்.ஏ.பி.யைப் பிடிக்காது

 

எங்களுக்கு எஸ்..பி.யைப் பிடிக்காது

உதயசங்கர்




1980-களில் கோவில்பட்டியில் ஒரு புதிய இளைஞர்பட்டாளம் இட துசாரித் தோழர்களின் வழியே அரசியல், தத்துவம், இலக்கியம் என்று புதிய களத்துக்குள் நுழைந்த காலம். பெரும்பாலும் எல்லோரும் கீழ்மத்தியதரவர்க்கம், மத்தியதரவர்க்கத்திலிருந்து வந்தவர்கள். கல்லூரிக் காலத்தில் அறிமுகமானாலும் கல்லூரி முடித்ததும் தீவிரமாக வாசிப்பு, எழுத்து, விவாதம், உரையாடல் என்று இருபத்திநான்கு மணிநேரமும் செயல்பட்டுக் கொண்டிருந்த காலம். உலக இலக்கியவாதிகள் அத்தனை பேரையும் கோவில்பட்டிக்கு வரவழைத்து, காந்தி மைதானத்தில் உட்காரவைத்து அவர்களுடைய படைப்புகளை அவர்களுக்கு முன்பாகவே விமரிசனம் செய்த காலம்.

உலக நாடுகளின் அரசியல் போக்குகளை அப்படியே போகிற போக்கில் ஒரு டீயும் சிகரெட்டும் ஊதித்தள்ளுகிற நேரத்தில் அலசிக் கொண்டிருந்த காலம். உலகநாடுகளின் தலைவர்களெல்லாம் எங்கள் கருத்துகளைக் கேட்பதற்காக அப்போது கோவில்பட்டியிலிருந்த ஒவ்வொரு டீக்கடையிலும் நின்று கொண்டிருந்த காலம். அதே போல தத்துவவாதிகளையும் மதத்தலைவர்களையும் அங்குமிங்கும் அலைக்கழித்த காலம். பாவம் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தெருத்தெருவாக அலைந்தார். இயேசு, நபிகள், ஆதிசங்கரர், ராமானுஜர், காண்ட், ஹெகல், மார்க்ஸ், லெனின், மாவோ, ஸ்டாலின், கிராம்சி எல்லோருமே நாங்கள் கடனுக்கு டீ குடிக்கும் பாய் கடைப் பெஞ்சில் எங்களுக்காகக் காத்திருப்பார்கள். எங்களிடமிருந்து யாரும் தப்பித்து ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் எங்களுடன் அவர்களும் டீயும் சிகரெட்டும் குடித்துக் கொண்டு அலைந்து திரிந்தனர்.

உலகை மாற்றும் கனவுகளுடனும் புரட்சியை நடத்திடும் அரசியலுடனும் மனித மனதை மேன்மைப்படுத்தும் இலக்கியப் படைப்புகளைப் படைக்கும் இலட்சியத்துடனும் பீட்டர்ஸ்பர்க் நகரிலோ, பாரீஸின் இரவு வீதிகளிலோ மிதந்து கொண்டிருந்தோம். வீதி நாடகம், சிறுகதை, கவிதை, கண்காட்சி, வாசிப்பு, விவாதம், உரையாடல், பீடி, சிகரெட், டீ என்று ஒவ்வொரு கணமும் கலையும் இலக்கியமுமாக வாழ்ந்த காலங்களை இன்றும் மறக்கமுடியாது.

அந்தக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டமும் கோவில்பட்டி இலக்கியக்குழுவும் கலகக்குழுவாக இருந்த காலம். மு வின் இலக்கியத்தளத்தில் பல மாற்றங்களை உருவாக்கிய முன்னெடுப்புகளைச் செய்து கொண்டிருந்தோம். அப்போது மாநிலம் முழுவதும் ஒரு சில இடங்களில் மட்டும் தான் நவீன கலை இலக்கியம் பற்றிய புரிதலும் பார்வையும் இருந்தது. அவற்றில் நெல்லை மாவட்டம் முக்கியமான இடத்தை வகித்தது. மாற்றுக்குரல்களை எதிர்க்குரல்களாக புரிந்து கொண்டதனால் எங்கள் மீது தலைமைக்கு ஒரு அதிருப்தி இருந்தது. எங்களுடைய பாய்ச்சல் வேகமும் முடிவுகளும் தலைமையில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது.

எங்கள் ஊருக்கு கட்சியின், வெகுசன் அமைப்பின் தலைவர்கள் அடிக்கடி பஞ்சாயத்துக்கு வந்து போவதும் நடந்தது. மழைக்காலக் கொசுக்களைப் போல நாங்கள் எல்லார் காதுகளிலும் ரீங்கரித்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய புரிதலில் போதாமை இருந்ததென்றாலும் நாங்கள் முன்னெடுத்த பல விஷயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் கட்சித்தோழர்களின் வீர தீரச் செயல்கள், அவர்களுடைய தியாகங்கள் என்னால் எங்களுக்கு இலட்சிய வேகத்தைக் கொடுத்த காலம். ஒன்றாக இருந்த திருநெல்வேலி மாவட்ட த்தைப் போல ஒன்றாக இருந்த இராமநாதபுரம் மாவட்ட த்தின் செயலாளராகத்தான் தோழர்.எஸ்..பி. மற்ற தோழர்களின் சொற்களின் வழியே தான் அறிமுகமானார்.

அந்த சொற்களின் கட்டிய எஸ்..பி.யின் ஆகிருதி பிரம்மாண்டமாகத் தெரிந்தது. அவருடைய தைரியம், துணிச்சல், வீரம் எல்லாம் எங்கள் மனதில் சோவியத் நாவல்களில் வரும் புரட்சியின் நாயகர்களைக் கண்ணில் கொண்டு வந்தது. அப்படியொரு கனவுக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் அப்போது சிறியவர்கள். தோழர்கள் எங்களை ஒரு எல்லைக்கு மேல் அனுமதிப்பதில்லை. அதனால் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை.

1983-84 ஆக இருக்கலாம். சென்னை மயிலாப்பூரில் நாடகத்திருவிழா நடந்தது. அப்போது கோவில்பட்டியிலிருந்து சிருஷ்டி வீதி நாடகக்குழுவும் பங்கெடுத்தது.  அங்கு தான் தோழர்.எஸ்..பி.யை முதன்முதலில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. கற்பனை செய்திருந்ததை விட பிரம்மாண்டமான ஆகிருதியுடனும் கம்பீரத்துடனும் இருந்தார் எஸ்..பி.

மேடையில் யாரோ பேசிக் கொண்டிருந்த போது நாங்கள் கோவில்பட்டி இளைஞர்கள் சலசலத்துக் கொண்டிருந்தோம். யாரோ ஏதோ பேசிய பேச்சினைக் கலாய்த்துக் கொண்டிருந்தோம். அப்போது மு வின் தலைவராக இருந்த தோழர். கே.முத்தையா அவர்கள் தோழர். எஸ்..பி.யை அழைத்து ஏதோ சொன்னார். மேடையிலிருந்து இறங்கி நேரே எங்களை நோக்கி வந்த தோழர்.எஸ்..பி. கடுமையான சொற்களால் மிரட்டிவிட்டுச் சென்றார். அப்போது உண்மையில் பயந்து போனோம். அதன்பிறகு அவர் இருந்த திசைப்பக்கமே திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவரைப் பொறுத்தவரை நாங்கள் சின்னப்பையன்கள் அத்துடன் அப்போது அமைப்பில் வளர்ந்து கொண்டிருந்த தோழர்..தமிழ்ச்செல்வனின் நிழல்படையென்ற கருத்து மாநிலத்தலைமையிடம் இருந்தது. அதனால் அவரைச் சரிசெய்தால் எல்லாரும் சரியாகி விடுவார்களென்ற சிந்தனை வெகுகாலத்துக்கு நிலைத்திருந்தது.

அதன்பிறகு தோழர்.எஸ்..பி.யைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தான் கிடைத்தது. இதற்கிடையில் செம்மலரில் எத்தனையோ கதைகள் வெளியாகியிருந்தன. மூன்று சிறுகதை நூல்களும் வெளியாகியிருந்தன. எஸ்..பி. செம்மலர் ஆசிரியர் குழுவிலும் இருந்தார். எப்போதாவது மாநிலக்குழுக் கூட்டங்களில் சந்திக்கும்போது அவர் கதைகளை வாசித்ததாகவோ, நன்றாக இருக்கிறது அல்லது இல்லையென்பதாகவோ எதுவும் சொன்னதில்லை. முதல் அனுபவம் காரணமாக நானோ என்னுடைய மற்ற நண்பர்களோ அவரிடம் நெருங்கிப் பழகவுமில்லை. அவருக்கு எங்களுடைய படைப்புகளைக் குறித்து பெரிய அபிப்ப்ராயங்கள் எதுவுமில்லை அல்லது கண்டுகொள்ளவில்லையென்று சொல்ல லாம்.

கோணங்கி மட்டும் தான் அவரை அடிக்கடிச் சென்று சந்தித்து விட்டு வந்து புகழ்ந்து கொண்டிருப்பான். அதேபோல தோழர்.மணிமாறனும், மாதவராஜும், அடிக்கடி அவரைப் பற்றிப் பேசுவார்கள். பல மாவட்டங்களிலுள்ள தோழர்கள் அவருடைய அரசியல், பண்பாட்டு வரலாறு வகுப்புகளைக் குறித்து பேசுவார்கள். எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணனும் அவருடைய பரந்த இலக்கிய வாசிப்பு குறித்தும் அவர் ஏற்படுத்திய உத்வேகம் குறித்தும் எழுதியிருக்கிறார். பல தோழர்கள் எஸ்..பி.யினால் கட்சிக்கு வந்தேன். அவருடைய வகுப்புகளைக் கேட்டு எனக்கு தெளிவு வந்த து என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய மனிதகுலவரலாறு, பகத்சிங், போன்ற பிரசுரங்களை வாசித்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். எளிய மொழியில் இவ்வளவு அழகாக எப்படி இவரால் எழுத முடிந்தது? என்று தோன்றும். இவையெல்லாம் சேர்ந்து அவர் மீதிருந்த அதிருப்தியான மனப்பதிவை மாற்றியது. அவர் மீது பெரும் மரியாதை தோன்றியது.

மு சவின் கூட்டங்களுக்குச் சென்று திரும்பும்போது ஒரு சில பயணங்களில் உடன் பயணிக்கிற வாய்ப்பும் கிடைத்தது. அப்போது தான் அவர் மிகச்சிறந்த உரையாடல்காரராகவும் இருப்பதை அவதானிப்பேன். மிகச்சிறந்த நகைச்சுவையுணர்வும், குழந்தை மனமும் கொண்டவராக எஸ்..பி.யின் இன்னொரு முகத்தை அறிந்தேன். அப்போதெல்லாம் நான் வெறும் கேட்பாளராக இருந்தேன். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவருடைய அனுபவங்களை எழுதச் சொல்லிக் கேட்டேன். அது எதிர்காலத்தில் கட்சியில் சேரும் புதிய இளைஞர்களை உத்வேகப்படுத்துமென்று சொல்லியிருக்கிறேன். அவரும் எழுத வேண்டும் என்று சொல்லும்போதே எல்லாவற்றையும் எழுத முடியாதென்று சொன்னார்.

 அவருடன் நெருங்காமல் இருந்த காலத்துக்காக உண்மையாகவே வருத்தம் தோன்றியது.

ஆனால் அன்றாடம் அவரைப் பற்றிய ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருக்கும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலுமுள்ள தோழர்களுக்குத் தத்துவத் தெளிவையும், மனிதகுலவரலாற்றையும், சொல்லிக் கொடுத்த ஆசானாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார் எஸ்..பி. புரட்சியாளராகவும், சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும் வாசிப்பாளராகவும் ஆசானாகவும்  இன்னமும் தன்னுடைய புரட்சிகரமான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார் எஸ்..பி.

முதன்முதலில் எஸ்..பி. என்றால் ஆஜானுபாகுவான, உருவத்துடன் மிரட்டும் குரலே எங்கள் நினைவில் பதிந்திருந்தது. ஆனால் இப்போது அவர் அதே ஆகிருதியுடன் அவருக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டுமென்ற தீராத ஆவல் கொண்ட குழந்தையைப் போலத் தோன்றுகிறார். சோசலிச லட்சியத்தைத் தன் மனதில் அணையாநெருப்பாக வளர்த்துக் கொண்டிருக்கும் எஸ்..பி.யின் சாகசங்கள் உண்மையில் இன்றைய இட துசாரி இளைஞர்களுக்கு மிக சிறந்த அனுபவப்பாடமாக அமையும்.

நாங்களும் அவரால் உருவானவர்கள் தான். அவர் எங்களுக்கும் ஆசான் தான். எங்களுக்கும் அன்பானவர் தான். எங்களுக்கும் தோழர் தான். ஆமாம். யாரெல்லாம் புரட்சியின் கனவுகளைச் சுமக்கிறார்களோ அவர்களெல்லாம் எங்கள் தோழர் தான். எங்கள் அன்புக்குரிய தோழர் எஸ்..பி.க்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

நன்றி - மார்க்சிய ஆசான் தோழர்.எஸ்.ஏ.பி. ( தொகுப்பு நூல் )

எம்.ஜே. பிரபாகர்


No comments:

Post a Comment