உதயசங்கர்
ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. ஆதி இனக்குழுச் சமூகத்தில் கருக்கொண்ட இந்த சடங்கியல் முறைகள் தாங்கள் அறியாத இயற்கையின் மர்மங்களை விளங்கிக் கொள்ளும் முயற்சியாகவும், இயற்கையைச் சாந்தப்படுத்துகிற முயற்சியாகவும், உற்பத்தி, வளமைக்கான வேண்டுதலாகவும், பிரார்த்தனையாகவும், கொண்டாட்டமாகவும் உருவாகி நிலை பெற்றிருக்கின்றன. இந்த முயற்சிகளை வேறு குறியீடுகளினால் பிரதிநிதித்துவம் செய்து மொழியின் மூலம் மந்திரங்களாகவும், சாங்கியம் என்று சொல்லப் படுகிற செய்முறைகளில் உருவாக்கப்படும் விசித்திரமான , குழந்தைத்தனமான, அகவயமான செயல்களே தொன்மங்களாகின்றன. இந்தத் தொன்மங்கள் என்பவை ஆதி மனிதன் இந்த உலகைப் புரிந்து கொண்ட விதத்தைக் குறிக்கும் உருவகங்களே. அதனால் இது கலையோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. இவற்றில் தர்க்கஞானத்தை புகுத்த முடியாது. உணர்வுநிலையில் மட்டுமே இயங்கக் கூடியது. திரும்பத் திரும்ப ஒலிக்கப்படும் ஒரே மாதிரியான ஒலிக்குறிப்புகளும் அதன் விசித்திரமான சூழலும் அதைச் செய்கிறவரின் வித்தியாசமான உடல்மொழியும் அதில் ஈடுபடுகிற சாதாரண மக்களின் மனதில் ஒரு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தங்கள் கோரிக்கைகள், வேண்டுதல்கள், கேட்கப்பட்டு விட்டதாக, அல்லது சாந்தியடைந்து விட்டதாக மனதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. இனி கேடுகள் எதுவும் வராது என்று மனம் நம்புகிறது. அந்த நம்பிக்கையே வாழ்வை மேலே அடுத்தடுத்து கொண்டு செலுத்த உதவுகிறது.
ஆதி மனித உணர்வுகளை சடங்கியல்களை இறுகிய வடிவமாக நிறுவனமயமாக்கப்படும் சமயம் மாற்றுகிறது. அது மட்டுமல்லாமல் அந்தச் சடங்குகளைச் செய்ய உளவியல் ரீதியான நிர்ப்பந்தமும் கொடுக்கிறது. சமயத்தின் நடைமுறைகளையும், தெய்வீகக்கதைகளையும் புகுத்தி மக்கள் மனதை வசப்படுத்துகிறது. மக்களை கட்டாயப்படுத்துகிறது. இந்த நடைமுறைகளிலும், புராணக்கதையாடல்களிலும் சமயத்தின் தத்துவக்கூறுகளை நிலை நிறுத்தி சமூகத்தில் தன்னையும், சமூக உற்பத்தி முறையையும் உறுதிப்படுத்துகிறது. உற்பத்திமுறைகள் மாற, மாற சமயம் அதற்கேற்ப விஞ்ஞான விளக்கங்களையும் கொடுத்துக் கொள்கிறது. இதன் மூலம் மக்கள் மனதில் எந்த விதமான சந்தேகங்களோ, கேள்விகளோ வரவிடாமல் சமயம் பார்த்துக் கொள்கிறது.
இயற்கையில் எல்லாப்பொருட்களும் மாற்றத்துக்குரியது. மாற்றம் ஒன்றே மாறாதது. பிறப்பு, இறப்பு இயற்கையானது. ஆனால் இயற்கையின் மற்ற உயிரினங்களை விட மேலான அறிவை தன் உழைப்பின் மூலம் பெற்ற மனிதனுக்கு பிறப்பும் இறப்பும் புதிராகவே இருந்தது. எப்படி ஒரு உயிர் உருவாகிறது என்று தெரியாமலிருந்ததைப் போலவே எப்படி ஒரு உயிர் இறக்கிறதென்றும் தெரியவில்லை. தன்னுடனே வாழ்ந்து கொண்டிருந்த ஒருவனை இனி எவ்வப்போதும் காணமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் வேறு ஒரு உலகத்தில் வாழப் போகிறான் என்று உருவகிப்பதன் மூலம் மனம் சாந்தியடைந்தது. எனவே சாவுச் சடங்குகளில் இம்மை, மறுமை கருத்தாக்கங்கள் உருவாகின்றன. இந்த பூலோகத்தை விட்டு மேலோகம் செல்வதாக கற்பனை விரிகிறது. எனவே தான் இறந்தவரை நீர்மாலை எடுத்து ( நீர் நிறைந்த கும்பம் செழிப்பின் அடையாளம் ) குளிப்பாட்டி, புத்தாடை உடுத்தி, சந்தனம், குங்குமம், இட்டு உணவு கொடுத்து ( வாய்க்கரிசி ) போகும் வழிச்செலவுக்கு நாணயமும் நெற்றியில் ஒட்டி, பூம்பல்லக்கில் வைத்து அனுப்புகிற விதமாய் சடங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதே போல அந்தக் காலத்தில் நெருப்பைக் காப்பாற்றி சுடுகாடு வரை கொண்டு செல்வது மிகவும் கடினமான காரியமாக இருந்ததனால் கொள்ளிச்சட்டி என்று எப்போதும் நெருப்பெரியும் மண்கலயத்தைத் தூக்கிச் செல்லும் வழக்கம் உருவானது.
சுடுகாட்டில் நீர் நிறைந்த மண்குடத்தைத் தூக்கிக் கொண்டு இறந்தவரின் உடலைச் மூன்று முறை சுற்றி வர ஒவ்வொரு சுற்றுக்கும் நாவிதர் ஒரு ஓட்டையை அந்தக் கலயத்தில் போடுவார். மூன்று சுற்று முடிந்ததும் அந்தக் கலயத்தை உடைத்து விடுவார்கள். பண்டைய காலம் தொட்டே நீர் நிறைந்த கும்பம் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது என்பதினால் இறந்தவர் போய் விட்டாலும் அந்தக் குடும்பத்தில் செழிப்பு தங்கியிருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை ஒரு சிறிய கும்பத்தில் மலர்களிட்டு விளக்கு முன் வைக்கும் பழக்கமும் இந்தச் செழிப்பு நம்பிக்கையில் வந்ததே.
பிராமணசாதியினருக்கு அடுத்து வந்த இடைநிலைச் சாதியினர் எரிக்கும் ( சுடுகாடு ) வழக்கமும், அதற்கடுத்த நிலையில் இருந்த சாதியினர் புதைக்கின்ற ( இடுகாடு ) வழக்கமும் கொண்டிருந்தனர். எரித்த மறுநாள் ஆற்றுகிற சடங்காக தீயாற்றுதல் நடைபெறுகிறது. எரிந்த சாம்பலை எடுத்து, தாம்பாளத்தில் வைத்து சந்தனம், பால், தேன், திருநீறு, நவதானியங்கள் ஆகியவற்றால் அபிசேகம் செய்து இறுதியில் ஒரு குச்சியினால் நிலம் வரைந்து அதில் அந்தக் குச்சியினால் உழுது நவதானியங்களை விதைத்து நீருற்றி உடனே ஒரு கொப்பும் குலையுமாக செடி ஒன்றை அந்த நிலத்தில் நட்டு வைத்து விடுவார்கள். வேளாண்சமூகம் தன்னுடைய குலம் தழைக்க இறந்தவரின் சாம்பலை தங்கள் நிலத்தில் கலந்து விடுவதின் மூலம் வளமை பெறுவதாகவும் உருவகிக்கிற போலச் செய்தல் சடங்கு முறைகள். இதில் ஆதிச் சடங்கியல் முறைகளின் கூறுகள் இருக்கின்றன. சுடுகாட்டில் இறந்தவரின் சடலம் எரிந்து கொண்டிருக்கும்போதே மொட்டை போடுவது இறந்தவரின் ஆண்வாரிசுகள், அல்லது கொள்ளி வைக்கும் பாத்தியதை உள்ள ஆண்களே. இந்தச் சடங்குகள் சாதிக்குச் சாதி சில வித்தியாசங்களுடன் நடக்கிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத சாதிகளில் அவர்களுடைய இனக்குழுவின் சடங்கியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு தெலுங்கு பேசும் சாதியினர் மொட்டை போடுவதில்லை. அதற்குப் பதில் மீசையை அல்லது முன்கையில் சிறிது ரோமத்தை மழித்துக் கொள்கிறார்கள்.
இது வரையான இறப்புச் சடங்குகளில் பிராமணர்கள் தலையீடு இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளவேண்டும். ஐந்தாம் நாள் இறந்தவரின் பெண்பிள்ளைகள் இறந்தவருக்கு செய்யும் படையல் நிகழ்ச்சி ( கிழமை செய்தல்) நடைபெறுகிறது. நவதானியங்களை அவித்து சிறுபண்டங்களைச் செய்து, இறந்தவருக்கு விருப்பமான பண்டத்தையும் செய்து விளக்கு முன் படைத்து கும்பிடுகிறார்கள். அதற்கு முன் வீட்டு வாசலில் நின்று இறந்தவர் கைலாயமும், வைகுந்தமும் போவதற்கு பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டு நெஞ்சிலடித்துக் கொண்டு பாடுகிறார்கள். ஒரு வேளை இறந்தவரின் ஆத்மா பந்தபாசம் காரணமாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தால் அதை வழியனுப்புகிற ஒரு சடங்காகவே இது இருக்கிறது.
” கைலாயம் உங்களுக்கு
கத்தரிக்காய் எங்களுக்கு
வைகுந்தம் உங்களுக்கு
வழுதனங்காய் எங்களுக்கு “
என்கிற மாதிரி இந்த உலக வாழ்க்கையை விட்டு விடைபெறச் சொல்லி பாடுகிறார்கள்.
பிறகு இறந்தவரின் வீடு தீட்டாகக் கருதப்படுகிறது. பதினாறாவது நாள் விஷேசம் நடத்தும்வரை துட்டி கேட்கப்போகிறவர்கள் கேட்டுவிட்டு வந்ததும் தீட்டைக் கழிக்க குளிக்கிறார்கள். பதினாறாவது நாள் விஷேசத்துக்கு பிராமணர் அழைக்கப்பட்டு பிண்டம் வைத்து இறந்தவரின் ஆவியைச் சாந்தி செய்யும் மந்திரங்கள் ஓதி வீடு முழுவதும் மாட்டு மூத்திரத்தைத் தெளித்து தீட்டுக் கழித்து, இறந்தவருக்குப் படைப்பதற்காக வாங்கிப் படையல் வைக்கப்படும் அத்தனை சாமான்களையும் ( அது அவர் எழுதிக் கொடுப்பது தான் ) புது வேட்டி துண்டையும் சடங்குகளை நடத்தியதற்காக ஃபீஸையும் வாங்கிக் கொண்டு பிண்டங்களை அருகாமையில் இருக்கும் நீர்நிலையில் கரைத்து விடச் சொல்கிறார். அன்று அந்த வீட்டிலுள்ளோர் எல்லோரும் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து தீட்டைக் கழிக்கிறார்கள். உடல், உடை, உணவு, இருப்பிடம், எல்லாவற்றிலும் தீட்டு என்கிற தீண்டாமையைக் கற்பித்து அதை மக்கள் மனங்களில் அவர்களின் ஒப்புதலோடு ஏற்றுக் கொள்ள வைத்தது தான் பிராமணியத்தின் வெற்றி.
மேற்சொன்ன சாங்கியங்களில் அறிவியல் பூர்வமானதென்று எதுவும் கிடையாது. இறந்தவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால் அந்த வீட்டை கிருமிநீக்கம் செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் இதில் உள்ள ஒரே அறிவியல் உண்மை. சுடுகாட்டுச் சடங்குகளில் கூட ஒரு இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகள் இருக்கிறதென்று உணரமுடிகிறது. அதுவும் இப்போது காலத்துக்கு ஒவ்வாததாக மாறி விட்டது. ஆனால் பதினாறாவது நாள் விஷேசம் என்ற பெயரில் பிராமணரை அழைத்துச் செய்கிற சடங்குகள் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற விஷேசம். முன்னோர் வழிபாடு என்பது பண்பாட்டு அசைவு. ஆனால் பித்ருக்களாக காக்கா வந்து உணவு எடுக்கவும், திதி என்ற பெயரில் ஆண்டு தோறும் நடக்கும் விஷேசமும், அமாவாசை தோறும் பித்ருக்களுக்காக விரதம் இருந்து அவர்களுக்கு உண்ட பிறகே தாங்கள் உண்ணும் சடங்கு பிராமணிய தந்திரம். இப்படி இனக்குழுவின் சடங்கியல் முறைகளில் அவர்களுக்கே உரித்தான பண்பாட்டு அசைவுகள் இருந்ததென்றால் அதில் தங்களுடைய வேதகாலச்சடங்கியல் முறைகளையும் கலந்து விட்டது பிராமணீயம். இதனால் எவையெல்லாம் அந்த இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகள், எவையெல்லாம் பிராமணமதத்தின் சடங்கியல் கூறுகள் என்று அறிய முடியாமல் போய் விட்டது. பிராமணீயத்தை நோக்கிய மேல்நிலையாக்கத்தில் உள்ள விருப்பமும் மிகச் சுலபமாக பிராமணியம் எல்லாச் சடங்குகளுக்குள்ளும் கலந்து விடுவதற்கு ஏதுவாக இருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இது மனுதர்மசாஸ்திரத்தை அறிந்தோ அறியாமலோ எல்லோரும் கடைப்பிடிக்க வழி வகை செய்கிற ஒரு ஏற்பாடாக அமைந்து விட்டது.
தீட்டு என்கிற ஒன்றை மக்கள் ஏற்று கொண்டிருக்கும் வரை பிராமணியமும், மனுதர்மமும் நிலைத்திருக்கும் என்றே தோன்றுகிறது.
2
ஒவ்வொருவருடைய மரணத்தை அர்த்தப்படுத்துவது அவர்களுடைய வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையில் அவர் தான் வாழும் சமூகத்துக்காக, தன் சகமனிதர்களுக்காக, என்ன செய்திருக்கிறார் என்பதே காலங்காலமாக நினைக்கப்படும். மானுடவிடுதலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கிற தோழர்களும் மரணமடையும் போது நாம் அவரைக் கைவிட்டு விடுகிறோம். அது வரை அவர் எதையெல்லாம் மறுத்தும் எதிர்த்தும் தன் வாழ்நாள் முழுவதும் போரிட்டாரோ பிரச்சாரம் செய்தாரோ இயங்கினாரோ அவரைச் சடங்குகளின் கையில் ஒப்படைத்து விட்டு வாளாவிருக்கிறோம். பல நேரங்களில் அவருடைய சாதி அந்தச் சூழ்நிலையைக் கையாளுகிறது. அதற்கு ஒரு காரணமாக தோழர்களின் குடும்பங்களும் இருக்கின்றன. ஆனால் அதற்கும் நாம் தான் காரணம் என்று தோன்றுகிறது. தோழர்களின் குடும்பங்களுக்குள் நம்முடைய பண்பாட்டுக் கருத்தியல்களைக் கொண்டு போவதற்கான திட்டம் நம்முடைய அமைப்புகளிடம் போதுமானதாக இல்லை.
வாழ்கிற வரை கம்யூனிஸ்ட்டாக மட்டுமே மற்றவர்களால் அடையாளம் காணப்பட்ட தோழர்கள் மரணமடைந்தவுடன் அவருடைய சாதியைச் சேர்ந்தவராக, அவருடைய மதத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப் படுகிறார். அவருடைய சாதியைச் சேர்ந்த இறுதி ஊர்வல வண்டியில் எல்லாச்சாங்கியங்களும் செய்யப்பட்டு நெற்றியில் குங்குமம் சந்தனம் நாணயம் சகிதமாக, சனிக்கிழமை என்றால் கூடவே ஒரு கோழிக்குஞ்சையும் கட்டிக் கொண்டு முன்னால் தன் வாரிசுகள் கொள்ளிச்சட்டி தூக்கிக் கொண்டு நடந்து வர சாதிக்காரர்கள் முன்னால் நடந்து செல்ல பின்னால் தயக்கத்துடன் நம்முடைய தோழர்கள் நடக்கத் தன் இறுதிப் பயணத்தைத் தொடர்கிறார். தான் இது வரை வாழ்ந்த முற்போக்கான வாழ்வின் அர்த்தம் என்ன? என்று தன் தலையை ஆட்டி ஆட்டிக் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறார். எத்தனையோ பேரை தன்னுடைய விசாலமான அறிவுத் திறமையினால் விவாதக்கூர்மையினால் வென்றெடுத்து முற்போக்கு இயக்கங்களுக்குள் கொண்டு வந்த தோழர். தீண்டாமை, சாதிவெறி, மதவெறி, மூடநம்பிக்கை இவற்றுக்கெல்லாம் எதிராக சமரசமற்ற போரைத் தன் வாழ்நாள் முழுவதும் நடத்திய அந்தத் தோழருக்கு தனக்கு நடந்து கொண்டிருக்கும் சடங்குகளைத் தடுக்க முடியவில்லை. துணைக்குத் தன் தோழர்களும் இல்லை. அவர்கள் மிகவும் பின்னால் வருகிறார்கள். அவர்களுக்கு இன்னமும் இதன் முக்கியத்துவம் தெரியவில்லை. எப்போதும் அவருக்கு உடன்பாடில்லாத விஷயங்களுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் அவரது உரத்தகுரல் இப்போது மௌனமாக இருக்கிறது.
பிராமணியமும் மனுதர்மசாஸ்திரமும் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் என்ன செய்யப் போகிறோம்?
நன்றி - தீக்கதிர்
உங்கள் புரிதலில் உண்மை இல்லை
ReplyDelete#/ தீட்டு என்கிற ஒன்றை மக்கள் ஏற்று கொண்டிருக்கும் வரை பிராமணியமும், மனுதர்மமும் நிலைத்திருக்கும் என்றே தோன்றுகிறது./#
ReplyDeleteஉண்மை.....