உதயசங்கர்
மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம் தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று. நம்முடைய ஆதி மருத்துவமுறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவமுறைகளான அக்குபஞ்சர், அக்குப்பிரசர் மருத்துவம் என்று மருத்துவமுறைகள் இருந்தாலும் எல்லோருக்கும் நினைவில் வருவது ஆங்கில மருத்துவமுறை மட்டும் தான். அது மட்டுமல்ல ஆங்கில மருத்துவ முறை தவிர்த்த மற்ற மருத்துவ முறைகள் குறித்து கேலியான சிரிப்புடன் நாட்டு வைத்தியம் என்று பொதுப்படையான பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். எப்படி நம்முடைய தாய்மொழியான தமிழையே வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் பல தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருப்பதோடு, அதைக் கேவலமாகவும் நினைக்கிற மனோபாவமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் என்ன நோய் என்றாலும் ஆங்கிலமருத்துவம் என்ற சிந்தனை பரவியிருப்பதில் ஆச்சரியமில்லை.
முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள், உடைகள், உணவு, நீர், ஆரோக்கியம் எல்லாமே சந்தையில் விற்பனை செய்கிற பொருட்கள் தான். கொசுக்களை ஒழிப்பதை விட கொசுக்களை விரட்டுவதற்கான கொசுக்கொல்லிகளை விற்பனை செய்வது தான் முதலாளித்துவத்துக்கு உகந்தது. எதில் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ அதில் எல்லாம் தன் கை வரிசையைக் காட்டுவதோடு மட்டுமல்ல அதற்கான நுகர்வோராக நம் மனநிலையை வசியப்படுத்தி நம்மைத் தயாரிப்பதிலும் கில்லாடி. அதனால் தான் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மருத்துவத்துக்காக தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது. ஒரு தும்மல் போட்டாலும் சரி, ஒரு நாள் தலைவலி, காய்ச்சல் என்றாலும் சரி, மருத்துவமனையை நோக்கி படையெடுக்கிறோம். அதுவும் குழைந்தைகளுக்கென்றால் கேட்கவே வேண்டாம். அங்கு மருத்துவரும் ரத்தம், மலம், நீர், எக்ஸ்ரே,( இது இப்ப ரெம்பப்பழசு ), ஸ்கேன் என்று ஏராளமான டெஸ்டுகளை எடுக்கச் சொல்கிறார். எல்லா டெஸ்டுகளையும் எடுத்த பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்து மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். அத்துடன் எதிர்காலத்தில் இதனால் ஆபத்திருக்கிறது என்று பயமுறுத்தவும் செய்கிறார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். பெற்றோர்களும் சாதாரண சளித்தொந்தரவை எம் பிள்ளைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதில் தாங்கள் குழந்தை மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள். மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் ( டானிக்குகளின் மீது அப்படி என்ன தான் மோகமோ ! ) ஆனால் உண்மையில் நடப்பதென்ன தெரியுமா?
குழந்தைகளோ, பெரியவர்களோ, நோயினால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் தொடர்ந்து சாப்பிடும் இந்த மருந்து மாத்திரைகளினாலும், டானிக்குகளினாலும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி தேவைக்கு அதிகமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் நம்முடையை உடலின் நோய்/மருந்து ஏற்கும் திறனை வெகுவாகப் பாதிக்கும். அதாவது நம்முடைய உடலின் தற்காப்பு செயல்முறைகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இதயம், ஆகியவற்றையும் பாதிக்கும். நாளாவட்டத்தில் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்புசக்தி குறைந்து எல்லாவற்றுக்கும் மருந்துகளைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படியானால் மருந்துகளே வேண்டாமா?
குழந்தைகளின் நோய்களில் பெரும்பாலானவை ஒவ்வாமையினால் உருவாகிறது. குளிர், அல்லது வெப்பம் ஒவ்வாமை, உணவு ஒவ்வாமை, தூசி ஒவ்வாமை, மலச்சிக்கல், மன அழுத்தம், இவற்றில் பெரும்பாலான ஒவ்வாமைகளை தவிர்த்தாலே நோய் வராது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான உடல், மற்றும் மன அமைப்புடனே பிறக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு குழந்தையும் வெப்பம்தாங்கிகளாகவோ, குளிர்தாங்கிகளாகவோ, இரண்டையும் தாங்க முடியாதவர்களாகவோ, தங்களுக்கென்று தனித்துவமான வெப்பமானியுடன் பிறந்து வளர்கிறார்கள். வெப்பம்தாங்கிகளுக்குக் குளிர் ஒத்துக் கொள்ளாது, குளிர் தாங்கிகளுக்கு வெப்பம் ஒத்துக் கொள்ளாது, இரண்டுமே ஒத்துக் கொள்ளாத குழந்தைகளும் உண்டு. மிதமான வெப்பம் அல்லது குளிர் மட்டுமே ஒத்துக் கொள்ளும். இதற்கு மாறான சீதோஷ்ணநிலைகள் குழந்தையின் உடல்நிலையில் மாறுபாட்டை உண்டுபண்ணும். பெற்றோர்கள் இவற்றையெல்லாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய மருத்துவர்களோ, ஆய்வுகளோ தேவையில்லை. ஒரு குழந்தைக்கு வெயில் காலத்தில் அதிகமான வியர்க்குருக்களோ, வேனல்கட்டிகளோ வருமென்றால் அந்தக் குழந்தை வெப்பம் தாங்க முடியாதவர்களாக அதாவது குளிர்தாங்கிகளாக இருக்கும். அதேபோல ஒரு குழந்தை குளிர் காலத்தில் சளி, இருமல், தும்மல், என்று அதிகமான சளித்தொந்தரவுகளால் சங்கடப்படுமானால் அந்தக் குழந்தை குளிர்தாங்க முடியாததாக அதாவது வெப்பம் தாங்கியாக இருக்கும். இன்னும் சில குழந்தைகள் வெப்பத்தையும் தாங்காது, குளிரையும் தாங்காது, மிதமான சீதோஷ்ணநிலையில் நன்றாக இருக்கும். மற்ற காலங்களில் ஏதாவது தொந்திரவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.
இது எல்லோருக்கும் பொருந்தும். நாம் அனைவருமே தனித்துவமானவர்கள் என்பதால் நம் உடலில் மாறுமை அல்லது நோய் வந்தால் அதுவும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இருக்கும். உதாரணத்துக்கு இருமல் வெளிக்காற்றில் ஒருவருக்கு வராது. ஆனால் வீட்டுக்குள் அதிகமாக வரும். இது அந்த நபரின் தனித்தன்மையான இருமல். சிலருக்கு இரவில் மட்டுமே இருமல் வரும். சிலருக்கு இரவோ, பகலோ, கீழே தலையைச் சாய்த்தவுடன் வரும். நிமிர்ந்து உட்கார்ந்தால் வராது. சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் இருமல் வரும். அதன் பிறகு இருக்காது. ஆனால் நோய் என்னவோ இருமல் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய தனித்தன்மையுடன் அது வெளிப்படுகிறது. நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, மருத்துவமுறைகள் இந்தத் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டே நோய்க்கான மருந்தைத் தெரிவு செய்கின்றன. ஆனால் ஆங்கில மருத்துவ முறைக்கு தனித்துவம் பற்றிக் கவலையில்லை. அது அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கிடையாது. எனவே மேலே சொன்ன அத்தனை வகையான இருமலுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளையே தரும். இப்படி நோயாளிகளை தனித்துவமிக்க மனிதர்களாகப் பார்க்காமல் மந்தைகளாகப் பார்த்து மொத்தமாக ஒரே விதமான மருந்துகளைத் தருகின்றது. இதனால் ஒவ்வொரு உயிரின் தனித்துவமிக்க உடற்செயல்பாட்டியல் மாறுகிறது. அது மட்டுமில்லை. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது.
சேவையாக இருந்த மருத்துவம் இன்று செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளதால் மருத்துவர்களும் மருத்துவ அறவுணர்வின்றி, மனிதாபிமானமின்றி, சக மனிதன் என்ற அநுதாபமின்றி, பணத்தைக் கறப்பதிலேயேக் குறியாக இருக்கின்ற அவலநிலை இருக்கிறது. இதனால் தேவையில்லாத டெஸ்டுகள், தேவையில்லாத மருந்துகள், தேவையில்லாத ஊசிகள், தேவையில்லாத டானிக்குகள், என்று நோயாளியின் உயிரோடு விளையாடுகிறார்கள். தாங்கள் பணம் சம்பாதிக்க நோயாளியின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. மருத்துவக்கல்வி தனியார் கைவசம் போனபிறகு ஒருவர் மருத்துவக்கல்வியை முடிக்க கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவாகிறது. அவர் படித்து முடித்தவுடன் அதைச் சம்பாதிக்க வேண்டும், அதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதன் விளைவாக நோயாளிகளை பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளிடம் பணயம் வைத்து தன் வசூல் வேட்டையை நடத்துகிறார். இது தான் இன்றைய பொதுவான சூழ்நிலை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.
ஆரோக்கியம் பற்றி, நோய்களைப் பற்றி குறிப்பாக எந்தெந்த நோய்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும், எதுஎதற்குத் தேவையில்லை என்று கல்வி கற்கும் போதே கற்பித்திருந்தால் இத்தனை மருந்துக் கடைகளுக்கு வேலையிருக்காது. அதோடு நம்முடைய ஆதி மருத்துவமுறைகளை அரசாங்கம் ஆதரித்து அந்த மருத்துவமுறைகளைப் பரப்புவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும். மக்களும் கடன் வாங்கியாவது ஆங்கில மருத்துவத்தில் தான் சிகிச்சை செய்வேன் என்ற மந்தை மனோபாவத்தை விட்டு நம்முடைய மருத்துவ முறைகளுக்குப் போக வேண்டும். நம்முடைய ஆதி மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் கிடையாது. ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து மருந்துகள் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மீண்டும் அந்த நோய் வருவதில்லை. ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தை விட எளிமையானது. அதிக செலவில்லாதது. இத்தனை சாதகங்கள் நம்முடைய மருத்துவ முறைகளில் இருக்கின்றன.
அதற்காக ஆங்கில மருத்துவ முறையே வேண்டாம் என்று சொல்ல வில்லை. அறுவைச் சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, மாற்று அறுவைச்சிகிச்சை, போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது. ஒருங்கிணைந்த மருத்துவ முறையே இப்போதைய தேவை. நோயின் தன்மைக்கேற்ப அது சித்தா, அல்லது ஆயுர்வேதம்,அல்லது யுனானி அல்லது ஹோமியோ அல்லது அக்குபஞ்சர், அல்லது அக்குபிரஷர், அல்லது ஆங்கில மருத்துவமுறையாக இருக்கலாம். இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவமுறையே எதிர்காலத்தில் ஒரு வலுமிக்க சமுதாயத்தை உருவாக்கும்.
நன்றி – இளைஞர் முழக்கம்
புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா
அறுவைச் சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, மாற்று அறுவைச்சிகிச்சை, போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது./// உண்மைதான்.இந்த காரணங்களே எல்லா பிரச்னைக்கும் அதுவே தீர்வு என்று நினைக்கவைத்துவிட்டது. இன்ஸ்யூரன்ஸ் பணம் இருக்கிறது என்பதனாலேயே எல்லா சிகிச்சைகளையும் நோயாளிக்குத் தருகிற கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருகிவிட்டது. பாதிக்கப்படுவது மக்களே!
ReplyDeleteமறுபடி சித்தா,ஆயுர்வேதா,யுனானி மருத்துவமுறைகள் பிரபலமாக்கப்படவேண்டும். ஆனால் இது வாழ்க்கை முறை அடிப்படையில் ஆனது என்பதனால் இன்றைய ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்துக்கு இவைகள் சரிப்படவேயில்லை. குடும்பங்களில் வயதானவர்கள் சின்ன சின்ன,அல்லது சற்றுப் பெரிய நோய்களுக்கு கூட நல்ல சித்த வைத்தியமுறைகள் தெரிந்தவர்களா இருந்த நிலை மாறி, பள்ளிகளிலும் இவை கிடையாது,வீடுகளிலும் கற்றுக்கொள்ளாமல் அழிந்துவிட்டது.
ஒருவனின் வாழ்நாள் சேமிப்பை சரேலென்று மருத்துவர்கள் கூட்டம் உருவிக்கொள்கிற நிலைமை நிகழ்ந்து வருகிறது.இப்போது எல்லோரும் வணிகர்கள்தான்...வியாபாரம் என்ற ஒற்றைப்பரிமாணத்தில் வாழ்வு போனால் துயரம் வராமல் வேறென்ன வரும்?