Sunday 23 February 2020

யானை புகுந்த வகுப்பு


யானை புகுந்த வகுப்பு

உதயசங்கர்

பிரவீன் காலையில் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டான். வீட்டை விட்டு வெளியே வந்தபோது டிங் டாங் என்று மணியோசை கேட்டது. பார்த்தால் ஒரு குட்டியானை போய்க் கொண்டிருந்தது. பிரவீனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படியே வைத்தகண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். குட்டி யானை.. பார்க்கவே அவ்வளவு அழகு!
குட்டியானையின் முதுகில் அலங்காரத்தையல் விளிம்பிட்ட சிவப்பு நிறத்துணி போடப்பட்டிருந்தது. அதன்மேல் ஒரு சங்கிலி முதுகில் குறுக்கே போடப்பட்டிருந்தது. அந்தச் சங்கிலியின் இரண்டு முனைகளிலும் இரண்டு மணிகள் தொங்கின. குட்டியானை அசைந்து அசைந்து நடக்கும்போது டிங் டாங் என்று ஒலி எழுப்பின.  குட்டியானையின் கழுத்துக்கு அருகில் பாகன் உட்கார்ந்திருந்தான். அவன் தன்னுடைய கால்களை குட்டியானையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றுக்குள் நுழைத்திருந்தான். அவன் கையில் ஒரு அங்குசம் இருந்தது.
கொஞ்ச நேரம்கூட சும்மா இருக்கவில்லை குட்டியானை. ஆடியது. தும்பிக்கையைச் சுழற்றியது. தூக்கியது. ஒரு காலைத் தூக்கியது. முன்னும் பின்னும் கால்களை வைத்து அசைந்தது. பிரவீனை அப்படியே வசீகரித்து விட்டது குட்டியானை. அப்படியே பின்னால் போனான். யானை நகைக்கடை தெரு, அங்காடித்தெரு, காந்தி தெரு, நேரு நகர் என்று போய்க் கொண்டேயிருந்தது. நேரு நகர் தாண்டும்போது தான் திடுக்கிட்டான். பிரவீனுக்குத் திடீரென பள்ளிக்கூடத்துக்கு நேரமாகி விட்டதே என்ற நினைவு வந்தது. அவ்வளவு தான் திடு திடுவென ஓடினான். பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது பள்ளியில் பிரார்த்தனை நேரம் முடிந்து விட்டது. அவனுக்கு பயம் வந்து உடல் நடுங்கத்தொடங்கியது.
ஐந்தாவது வகுப்பு ஆ பிரிவு வாசலில் நின்று கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் அவனைப் பார்த்தார்.
“ ஏண்டா லேட்டு? “
அவன் பதில் சொல்லவில்லை. அப்படியே நின்றான். மறுபடியும் ஆசிரியர்,
“ சொல்லுடா ஏண்டா லேட்டு? “
“ ஐயா.. யானை..”
“ என்னது யானையா? “
என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் வந்தார்.
ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவு வாசலில் ஒரு குட்டியானை நின்று கொண்டிருந்தது. அந்தக் குட்டியானை தன்னுடைய தலையை அங்கும் இங்கும் ஆட்டியது. தும்பிக்கையினால் தரையைத் துழாவியது. தும்பிக்கையைத் தூக்கி காற்றை முகர்ந்தது. விசிறியைப் போன்ற தன்னுடைய பெரிய காதுகளை ஆட்டியது. வாயை அசை போட்டது. வகுப்பாசிரியர் சற்று பின்னால் போனார். உடனே குட்டியானை வகுப்புக்குள் நுழைந்து விட்டது. மாணவர்கள் எல்லோரும் ஓ வென்று மகிழ்ச்சியில் சத்தம் போட்டனர். தும்பிக்கை நுனியினால் சிறிய சாக்பீசை எடுத்து கரும்பலகையில் குட்டியானை என்று எழுதியது. மேஜை மேலிருந்த பிரம்பை எடுத்து கீழே போட்டு மிதித்தது. பின்னர் மெல்ல ஆடி அசைந்து வகுப்பறையைச் சுற்றி வந்தது. அப்படி அதுவரும்போது டிங் டாங் டிங் டாங் டிங் டாங் என்று சத்தம் கேட்டது. கடைசி வரிசை பெஞ்சில் உட்கார்ந்திருந்த கார்த்திக்கின் புத்தகத்தை எடுத்து வாசிப்பது போல நடித்தது. வாசித்ததை பிளிறிக் காட்டியது. அப்படியே ஒவ்வொரு பையனின் தலையிலும் தும்பிக்கையை வைத்துத் தடவியது.
அப்போது ஒரு பையன் குட்டியானைக்கு ஒரு சாக்லேட் கொடுத்தான். சாக்லேட்டின் பேப்பரைப் பிரித்து வாயில் போட்டது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த குட்டியானை வகுப்பறையே அதிரும்படி குரல் கொடுத்தது. அந்த நிமிடம் வகுப்பறையே காடாக மாறிவிட்டது. குட்டியானை மரங்களிலிருந்து இலைகளை பறித்துத் தின்றது. பழங்களைத் தின்றது. தென்னை மரத்திலிருந்து பச்சை ஓலைகளை தின்றது. கரும்புத்துண்டுகளைச் சாறு வழிய வழியச் சாப்பிட்டது. ஓடையில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரைத் தும்பிக்கையினால் சத்தமாக உறிஞ்சி வாய்க்குள் விட்டது. தும்பிக்கையினால் தண்ணீரை மழைத்துளிகளாக விசிறியது. கீழே விழுந்து புரண்டது. மண்ணை அள்ளி முதுகில் போட்டுக் கொண்டது.
அப்புறம் பெஞ்சுகளின் இடையில் ஓடியது. மாணவர்களை முதுகில் சுமந்து கொண்டு நடந்தது. குட்டியானையின் கண்களில் மகிழ்ச்சி பொங்கியது. மாணவர்கள் எல்லோரும் அந்தக் குட்டியானையின் பின்னால் அதன் வாலைப்பிடித்துக் கொண்டே ஓடினார்கள். கடைசியில் வகுப்பாசிரியரும் ஓடினார். குட்டியானையின் ஒவ்வொரு சேட்டைக்கும் எல்லோரும் சிரித்தனர். அப்போது ஒரு பையன் யானையிடம் ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டினான்.
யானை அப்படியே நின்றது. அதன் முகத்திலிருந்த மகிழ்ச்சி மறைந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ என்னைய பிச்சை எடுக்க வைக்காதீங்க..” என்று உரத்தகுரலில் பிளிறியது. பின்னர் அப்படியே அமைதியாக பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டது.
வகுப்பாசிரியர் அருகில் வந்து யானையின் தலையைத் தடவிக்கொடுத்தார். பிரவீன் மெல்லத்தலையைத் தூக்கிச் சிரித்தான்.
நன்றி - வண்ணக்கதிர்


Sunday 16 February 2020

துப்பறியும் துர்கா


துப்பறியும் துர்கா

உதயசங்கர்

துர்கா எப்படி துப்பறியும் துர்கா ஆனாள் தெரியுமா? என்னது நம்ம பக்கத்து வீட்டுக்குட்டிப்பொண்ணு துர்கா துப்பறியும் நிபுணரா என்று ஆச்சரியப்படுகிறீர்கள் இல்லையா! அப்படி அவளுடைய அம்மா மீனாட்சி தான் கூப்பிடுகிறாள். ஆனால் அவளுக்கு இன்னும் அப்படி ஒரு பெயரை அவளுக்கு அம்மா சூட்டியிருப்பது தெரியாது.. அவளுடைய அம்மா துப்பறியும் கதைகளை சின்னவயதில் படிப்பாள். துப்பறியும் சங்கர்லால், துப்பறியும் சாம்பு, இவர்களை எல்லாம் அவளுக்கு ரொம்பப்பிடிக்கும். ஏன் எல்லாக்கதைகளிலும் ஆம்பிளைப் பசங்களே துப்பறிவாளராக இருக்கிறாங்க என்று கேள்வி அவளுக்கு வரும். அவளும் துப்பறிந்து பார்த்தாள். வகுப்பில் காணாமல் போன கோமதியின் பென்சிலைக் கண்டுபிடித்தாள். அது சிவகாமியின் பைக்குள் போய் ஒளிந்து கொண்டதைக் கண்டு பிடித்தாள். பென்சிலிடம் “ நீ ஏன் ஓடிப்போனாய் ? “ என்று கேட்டதுக்கு பென்சில்
 ” கோமதி தினம் பென்சிலைச் சீவிச் சீவிக் கரைக்கிறா.. அப்புறம் நான் குட்டியாயிருவேன்ல..” என்றது. கோமதியிடம் பென்சிலின் வருத்தத்தைச் சொல்லி இனிமேல் அவசியமில்லாமல் பென்சிலைச் சீவக்கூடாது என்று அறிவுரை சொன்னாள். மீனாட்சிக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. இது தான் அவள் முதலும் கடைசியுமாக கண்டுபிடித்தது. அவள் எப்போதும் கண்களை உருட்டிக்கொண்டு அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டே திரிந்ததைப் பார்த்த அவளுடைய அம்மா
“ என்னாச்சி.. ஏன் கண்ணைத் தரையிலேயே நட்டுக்கிட்டே திரியிறே.. முழி பிதுங்கி வெளியே வந்துரும் “ என்று கத்தினாள். மீனாட்சி பயந்து விட்டாள். ஆனால் துப்பறிவதை அவள் விடவில்லை. வீட்டில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் மீனாட்சி தான் கண்டுபிடித்தாள். பெரியவளானதும் எல்லாம் மறந்து போய் விட்டது.
துர்கா தவழ ஆரம்பித்ததுமே துப்பறிகிற வேலையைத் தொடங்கி விட்டாள். தரையில் கண்ணுக்கே தெரியாமல் வரிசையாகப் போய்க் கொண்டிருந்த சித்தெறும்புகளின் பின்னால் தவழ்ந்து போனாள். எறும்பு வரிசையில் கடைசியாகப் போய்க் கொண்டிருந்த எறும்பு திரும்பி துப்பறியும் துர்காவிடம் வந்து தன் முன்கால்களைத் தூக்கி,
“ பாப்பா எங்க பின்னாடி வராதே.. பீ கேர்ஃபுல்..” என்று எச்சரித்தது. துப்பறியும் துர்கா உடனே நின்று விட்டாள். அப்படியே வேறு எங்கோ பராக்கு பார்ப்பதைப் போல தலையை அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பினாள். எறும்பு வேகவேகமாக திரும்பிப் போனபோது துப்பறியும் துர்காவும் பின்னாலேயே போனாள். எறும்புகளின் வரிசை எங்கே போச்சு தெரியுமா? அப்படியே அடுக்களைக்குள் போனது. துப்பறியும் துர்காவும் அடுக்களைக்குள் போனாள். எறும்பு வரிசை அடுக்களையில் இருந்த அலமாரி மீது ஏறியது. துப்பறியும் துர்காவும் அலமாரி வரை போய் முட்டி நின்றாள். அண்ணாந்து பார்த்தாள். மேலே பார்த்தால் துர்காவின் பால் டப்பா இருந்தது. எறும்பு வரிசை அந்த டப்பாவின் மீது ஏறிக் கொண்டிருந்தது. துர்கா அலமாரியின் கதவுகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து நின்றாள். எறும்புகளைப் போல அலமாரியில் ஏறமுடியுமா என்று காலைத் தூக்கினாள். அப்படியே சப்பென உட்கார்ந்தாள். லேசாக வலித்தது. சுற்றும் முற்றும் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தாள். பால் டப்பாவைப் பார்த்ததும் வயிறு பசித்தது. அருகில் அம்மாவும் இல்லை. உடனே அழ ஆரம்பித்து விட்டாள்.
அழுகைச் சத்தம் கேட்டதும் எங்கிருந்தோ அம்மா ஓடி வந்தாள். துப்பறியும் துர்காவைத் தூக்கி,
“ என்னடா செல்லம்? இங்கே என்ன பண்றே? என்ன வேணும் செல்லத்துக்கு? “ என்று கேட்டாள். துப்பறியும் துர்கா அலமாரியில் இருந்த பால்டப்பாவைக் காட்டினாள்.
“ செல்லத்துக்குப் பசிக்கிதா? “
அம்மா பால் டப்பாவை எடுத்தாள். அதில் எறும்புகள் அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. எறும்புகளைப் பார்த்த அம்மா அவற்றைக் கீழே தட்டி விட்டாள்.
“ ஆகா! எறும்புக்குப் பின்னாடி துப்பறிய வந்தியா செல்லம்! துப்பறியும் துர்கா! துப்பறியும் துர்கா! “ என்று துப்பறியும் துர்காவைத் தூக்கிக் கொஞ்சினாள். துர்காவுக்கு கூச்சமாக இருந்தது.
“ அப்படி என்ன பெரிசா செய்ஞ்சிட்டேன்! இன்னும் இருக்கு.. “ என்கிற மாதிரி சுற்றிலும் பார்த்தாள். கீழே எறும்புகள் துப்பறியும் துர்காவைப் பார்த்து,
“ இரு உன்னைக் கவனிச்சிக்கிறோம்..” என்று முன்காலைத் தூக்கி சபதம் போட்டுக் கொண்டே ஓடி ஒளிந்தன. எறும்புகள் ஓடுவதைப் பார்த்து துர்கா கெக்கேக்கே என்று சிரித்தாள். அம்மாவும் துப்பறியும் துர்காவைப் பார்த்துச் சிரித்தாள்.
நன்றி - வண்ணக்கதிர்

Friday 14 February 2020

இது யாருடைய முட்டை?


இது யாருடைய முட்டை?

உதயசங்கர்

வயலூரில் இந்த ஆண்டு நல்ல மழை. அதனால் நெல்வயலில் நல்ல விளைச்சல். அந்த ஊரில் இயற்கை விவசாயம் தான் நடக்கிறது. ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதில்லை. அதே போல பாரம்பரியமான நெல் வகைகளை அவர்கள் பயிர் செய்தார்கள். மாப்பிள்ளை சம்பா, கட்டிச்சம்பா, சீரகச்சம்பா, கம்பஞ்சம்பா, காட்டுச்சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, புழுதிச்சம்பா, இலுப்பைப்பூ சம்பா, துளசிச்சம்பா, கொட்டாரச்சம்பா,சன்னச்சம்பா, கிச்சலி சம்பா, நீலச்சம்பா, கருடன் சம்பா, கட்டைச்சம்பா, மிளகுச்சம்பா, என்று நெல்வகைகளை விதைத்து நல்ல மகசூல் வந்தது.
அறுவடை முடிந்த வயலில் பறவைகளும், எலிகளும், எறும்புகளும் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருந்தன. எறும்புகள் எல்லாம் அறுவடையின்போது கீழே சிந்திய நெல்மணிகளை முதுகில் சுமந்து கொண்டு வரப்புகளில் இருந்த அவர்களுடைய புற்றுக்குள் கொண்டு போய் சேமித்து வைத்தனர். அப்போது சுள்ளான் எறும்பு தலையைக் குனிந்து கொண்டே போய் ஒரு பெரிய பாறை மீது மோதியது. முன்கால்களால் தலையைத் தடவிக் கொண்டது. அந்தப் பாறையின் மீது ஏறி மேலும் கீழும் அலைந்தது. அது பாறை கிடையாது. அந்தப்பொருளின் மீது ஒரு பறவையின் வாசனை வீசியது. உடனே சுள்ளான் கீழே இறங்கி அவர்களுடைய கூட்டத்தில் பெரியவரான குண்டுத்தாத்தாவை அழைத்து வந்தது. குண்டுத்தாத்தா அதைப் பார்த்தவுடன்,
அட கோட்டிக்காரா.. இது ஒரு பறவையின் முட்டை.. அறுவடை நடக்கும்போது அந்தப்பறவை இந்த முட்டையை விட்டு விட்டுப் போயிருக்கும்சரி வா.. நம்ம வேலையைப் பார்ப்போம்.. “ என்று சொல்லி விட்டு முன்னால் நடந்தது. ஒரு கணம் யோசித்த சுள்ளான்,
தாத்தா இந்த முட்டையை அதனுடைய அம்மாவிடம் சேர்த்தால் என்ன? பாவமில்லையா அந்தப்பறவை! “
யாருடைய முட்டைன்னு தெரியாமல் எப்படி சேர்ப்பாய்? “
பறக்கிற எல்லோரிடமும் கேட்போம்..”
குண்டுத்தாத்தாவுக்கு மனசில்லை. ஆனால் சுள்ளான் பேச்சைத் தட்டமுடியவில்லை. சுள்ளானைப்போல அறிவாளி எறும்பு அவர்களுடைய கூட்டத்தில் இல்லை. உடனே செய்தி பறந்தது. எறும்புகள் எல்லாம் சேர்ந்து அந்த முட்டையைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். முன்னால் சுள்ளான்
கொண்டு சேர்ப்போம் அண்ணே
கொண்டு சேர்ப்போம்
முட்டையை அம்மாவிடம்
கொண்டு சேர்ப்போம்..”
என்று பாடிக் கொண்டே போனது. அப்போது எதிரே ஒரு காகம் ஒரு வயல் எலியைப் பிடிப்பதற்காக பறந்து வந்தது. அது பிடிப்பதற்குள் அந்த எலி ஓடி வரப்பில் இருந்த வளைக்குள் ஒளிந்து கொண்டது. ஏமாந்து திரும்பிய காகத்திடம்,
அக்கா அக்கா காக்காக்கா
உங்க முட்டையா பாருக்கா..” என்று கேட்டது சுள்ளான். காகம் அந்த முட்டையைப் பார்த்தது.
கா கா காக்காஇல்லை தம்பிகளா.. என்னோட முட்டையில இளநீல நிறத்தில புள்ளி போட்டிருக்கும்..  ரொம்பப்பெரிசு.. நான் மரத்தில கூடு கட்டி முட்டையிடுவேன்.. இது என்னோட முட்டையில்லை தம்பிகளா?..கா காகா காஎன்று சொல்லிவிட்டு பறந்து விட்டது. எறும்புகள் மறுபடியும் முட்டையைச் சுமந்து கொண்டு முட்டையின் அம்மாவைத் தேடிப் போனார்கள். வயல் வரப்பில் ஒரு ஓணான் கண்களை உருட்டி ஆசையோடு எறும்புகளைப் பார்த்தது. நாக்கைச் சப்புக் கொட்டி, முதுகைத் தூக்கிக் கொண்டு தலையை ஆட்டியது. சுள்ளான் அதற்கு பக்கத்தில் போகாமல் தூரமாய் நின்று கொண்டு,
முட்டைக்கண்ணு ஓணானே
நாக்கு நீண்ட ஓணானே
முட்டையைப் பாரு ஓணானே
உன்னோடதா ஓணானே
என்று கேட்டது. உடனே ஓணான் திரும்பி முட்டையை ஒரு கண்ணாலும், எறும்புகளை இன்னொரு கண்ணாலும் பார்த்தது. வாலை ஆட்டிக் கொண்டு எங்கோ பார்ப்பது போல பார்த்துக் கொண்டு,
என்னோட முட்டை ரொம்பச்சிறுசுவெள்ளையா இருக்கும்.. பல்லிமுட்டையை விட கொஞ்சம் பெரிசா இருக்கும்இது என்னோட முட்டையில்லை… “ என்று சொல்லிக் கொண்டே எறும்புகளைப் பிடிக்க நாக்கை நீட்டியது. ஆனால் அதற்குள் எறும்புகள் வெகுதூரம் போய் விட்டன. நல்லவேளை பிழைத்தோம் என்று சுள்ளான் நினைத்தது. அப்போது எங்கிருந்தோ சர்ரென காட்டுப்புறாக்கள் கூட்டமாய் வயலில் வந்திறங்கின.
உயரே பறக்கும் புறாக்கா
உன்னைத் தானே பாருக்கா
உன்னோட முட்டையா பாருக்கா
உடனே தாரோம் சொல்லுக்கா..”
என்று சுள்ளான் பாடியது. புறாக்கள் குனிந்து நெல்லைக் கொத்துவதிலே  மும்முரமாக இருந்தன. சுள்ளான் காத்திருந்தது. தலை நிமிர்ந்த ஒரு புறா,
இல்லையில்லை தம்பிகளா
எங்க முட்டையில்லை..
அவ்வளவு பெரிசுமில்லை
இவ்வளவு சிறுசுமில்லை
இவ்வளவு அழுக்குமில்லை
அவ்வளவு வெள்ளையுமில்லை
எங்க முட்டையில்லை
இல்லையில்லை தம்பிகளா
என்று சொல்லி விட்டு மறுபடியும் நெல்லைக் கொத்தத்தொடங்கியது. எறும்புகள் மறுபடியும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. வரப்பில் ஒரு கௌதாரி தன் குஞ்சுகளுடன் கரையான் புற்றைக் கிளைத்து, கெ கெ கெ என்று குஞ்சுகளை அழைத்து இரை எடுக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அம்மா அம்மா கௌதாரி
சும்மா கொஞ்சம் பாரும்மா
உன்னோட முட்டையா சொல்லும்மா
சொன்னா தாரோம் செல்லம்மா
என்று சுள்ளான் கேட்க, கௌதாரி நிமிர்ந்து பார்த்து,
முட்டையின் அம்மா நானில்லை
என் முட்டையில் புள்ளிகள் இருக்காது..
நான் இட்ட முட்டைகள் அஞ்சு
பொரிச்ச குஞ்சுகளும் அஞ்சு
முட்டையின் அம்மா நானில்லை..”
என்று சொல்லி விட்டு கரையானைப் பிடித்து குஞ்சுகள் அருகில் போட்டது. எறும்புகள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. அப்போது குண்டுத்தாத்தா சுள்ளானுக்கு முன்னால் போய்,
டேய் துடுக்குப்பயலே! நீ வேண்டாதவேலை பார்க்கிறாய்.. இப்படியே முட்டையை போட்டுட்டு போவோம்.. சொன்னாக்கேளு..”
என்று கத்தியது. அப்போது தான் ஒரு பறவையின் அழுகைக்குரல் கேட்டது.
நான் போட்ட தங்கமுட்டை காணலியே
நான் போட்ட வைரமுட்டை காணலியே
நான் போட்ட பட்டுமுட்டை காணலியே
எங்கதைய யார் கேப்பா
எங்கண்ணீரை யார் துடைப்பா
அந்தப் பாட்டைக்கேட்ட சுள்ளான் அழுது கொண்டிருக்கிற அந்தப்பறவையைத் தேடியது. ஒரு புதர்ச்செடிக்குள் தலையை புதைத்துக் கொண்டு ஒரு காடை தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தது. சுள்ளான் அதற்கு முன்னால் போய்,
அழாதே காடையக்கா
தேம்பாதே காடையக்கா
முட்டையைப் பாருக்கா
கண்ணீரை துடையக்கா
என்று சொன்னதைக் கேட்டதும் காடை உடனே தலையைத் திருப்பி அந்த முட்டையைப் பார்த்தது. புள்ளிபோட்ட அரக்கு கலர் முட்டையைப் பார்த்ததும் அதன் கண்கள் மின்னின. கீச் கீச் கீச் என்று கத்திக்கொண்டு அந்த முட்டையைச் சுற்றிச் சுற்றி வந்தது. சுள்ளானுக்கும், குண்டுத்தாத்தாவுக்கும் முட்டையைச் சுமந்து கொண்டு வந்த எறும்புகளுக்கும் நன்றி சொன்னது.
என்னோட தங்க முட்டை
என்னோட வைரமுட்டை
கொண்டு வந்த எறும்புகளே
உங்களுக்கு கோடி நன்றி
என்று மகிழ்ச்சியில் கூத்தாடியது. சுள்ளான் மற்ற எறும்புகளிடம்
இது காக்காமுட்டையில்லை.. ஓணான் முட்டையில்லை, புறா முட்டையில்லை, கௌதாரி முட்டையில்லை  இது ஒரு காடை முட்டை.. “ என்று சொல்லிக் கொண்டிருந்ததைப் பெருமையுடன் குண்டுத்தாத்தா பார்த்துக் கொண்டிருந்தது.

நன்றி - மாயாபஜார்