யானை புகுந்த வகுப்பு
உதயசங்கர்
பிரவீன் காலையில் பள்ளிக்கூடத்துக்குப்
புறப்பட்டான். வீட்டை விட்டு வெளியே வந்தபோது டிங் டாங் என்று மணியோசை கேட்டது. பார்த்தால்
ஒரு குட்டியானை போய்க் கொண்டிருந்தது. பிரவீனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படியே வைத்தகண்ணை
எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். குட்டி யானை.. பார்க்கவே அவ்வளவு அழகு!
குட்டியானையின் முதுகில் அலங்காரத்தையல்
விளிம்பிட்ட சிவப்பு நிறத்துணி போடப்பட்டிருந்தது. அதன்மேல் ஒரு சங்கிலி முதுகில் குறுக்கே
போடப்பட்டிருந்தது. அந்தச் சங்கிலியின் இரண்டு முனைகளிலும் இரண்டு மணிகள் தொங்கின.
குட்டியானை அசைந்து அசைந்து நடக்கும்போது டிங் டாங் என்று ஒலி எழுப்பின. குட்டியானையின் கழுத்துக்கு அருகில் பாகன் உட்கார்ந்திருந்தான்.
அவன் தன்னுடைய கால்களை குட்டியானையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றுக்குள் நுழைத்திருந்தான்.
அவன் கையில் ஒரு அங்குசம் இருந்தது.
கொஞ்ச நேரம்கூட சும்மா இருக்கவில்லை
குட்டியானை. ஆடியது. தும்பிக்கையைச் சுழற்றியது. தூக்கியது. ஒரு காலைத் தூக்கியது.
முன்னும் பின்னும் கால்களை வைத்து அசைந்தது. பிரவீனை அப்படியே வசீகரித்து விட்டது குட்டியானை.
அப்படியே பின்னால் போனான். யானை நகைக்கடை தெரு, அங்காடித்தெரு, காந்தி தெரு, நேரு நகர்
என்று போய்க் கொண்டேயிருந்தது. நேரு நகர் தாண்டும்போது தான் திடுக்கிட்டான். பிரவீனுக்குத்
திடீரென பள்ளிக்கூடத்துக்கு நேரமாகி விட்டதே என்ற நினைவு வந்தது. அவ்வளவு தான் திடு
திடுவென ஓடினான். பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது பள்ளியில் பிரார்த்தனை நேரம்
முடிந்து விட்டது. அவனுக்கு பயம் வந்து உடல் நடுங்கத்தொடங்கியது.
ஐந்தாவது வகுப்பு ஆ பிரிவு வாசலில்
நின்று கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் அவனைப் பார்த்தார்.
“ ஏண்டா லேட்டு? “
அவன் பதில் சொல்லவில்லை. அப்படியே
நின்றான். மறுபடியும் ஆசிரியர்,
“ சொல்லுடா ஏண்டா லேட்டு? “
“ ஐயா.. யானை..”
“ என்னது யானையா? “
என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில்
வந்தார்.
ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவு வாசலில்
ஒரு குட்டியானை நின்று கொண்டிருந்தது. அந்தக் குட்டியானை தன்னுடைய தலையை அங்கும் இங்கும்
ஆட்டியது. தும்பிக்கையினால் தரையைத் துழாவியது. தும்பிக்கையைத் தூக்கி காற்றை முகர்ந்தது.
விசிறியைப் போன்ற தன்னுடைய பெரிய காதுகளை ஆட்டியது. வாயை அசை போட்டது. வகுப்பாசிரியர்
சற்று பின்னால் போனார். உடனே குட்டியானை வகுப்புக்குள் நுழைந்து விட்டது. மாணவர்கள்
எல்லோரும் ஓ வென்று மகிழ்ச்சியில் சத்தம் போட்டனர். தும்பிக்கை நுனியினால் சிறிய சாக்பீசை
எடுத்து கரும்பலகையில் குட்டியானை என்று எழுதியது. மேஜை மேலிருந்த பிரம்பை எடுத்து
கீழே போட்டு மிதித்தது. பின்னர் மெல்ல ஆடி அசைந்து வகுப்பறையைச் சுற்றி வந்தது. அப்படி
அதுவரும்போது டிங் டாங் டிங் டாங் டிங் டாங் என்று சத்தம் கேட்டது. கடைசி வரிசை பெஞ்சில்
உட்கார்ந்திருந்த கார்த்திக்கின் புத்தகத்தை எடுத்து வாசிப்பது போல நடித்தது. வாசித்ததை
பிளிறிக் காட்டியது. அப்படியே ஒவ்வொரு பையனின் தலையிலும் தும்பிக்கையை வைத்துத் தடவியது.
அப்போது ஒரு பையன் குட்டியானைக்கு
ஒரு சாக்லேட் கொடுத்தான். சாக்லேட்டின் பேப்பரைப் பிரித்து வாயில் போட்டது. மகிழ்ச்சியில்
துள்ளிக்குதித்த குட்டியானை வகுப்பறையே அதிரும்படி குரல் கொடுத்தது. அந்த நிமிடம் வகுப்பறையே
காடாக மாறிவிட்டது. குட்டியானை மரங்களிலிருந்து இலைகளை பறித்துத் தின்றது. பழங்களைத்
தின்றது. தென்னை மரத்திலிருந்து பச்சை ஓலைகளை தின்றது. கரும்புத்துண்டுகளைச் சாறு வழிய
வழியச் சாப்பிட்டது. ஓடையில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரைத் தும்பிக்கையினால் சத்தமாக
உறிஞ்சி வாய்க்குள் விட்டது. தும்பிக்கையினால் தண்ணீரை மழைத்துளிகளாக விசிறியது. கீழே
விழுந்து புரண்டது. மண்ணை அள்ளி முதுகில் போட்டுக் கொண்டது.
அப்புறம் பெஞ்சுகளின் இடையில்
ஓடியது. மாணவர்களை முதுகில் சுமந்து கொண்டு நடந்தது. குட்டியானையின் கண்களில் மகிழ்ச்சி
பொங்கியது. மாணவர்கள் எல்லோரும் அந்தக் குட்டியானையின் பின்னால் அதன் வாலைப்பிடித்துக்
கொண்டே ஓடினார்கள். கடைசியில் வகுப்பாசிரியரும் ஓடினார். குட்டியானையின் ஒவ்வொரு சேட்டைக்கும்
எல்லோரும் சிரித்தனர். அப்போது ஒரு பையன் யானையிடம் ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டினான்.
யானை அப்படியே நின்றது. அதன் முகத்திலிருந்த
மகிழ்ச்சி மறைந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ என்னைய பிச்சை எடுக்க வைக்காதீங்க..”
என்று உரத்தகுரலில் பிளிறியது. பின்னர் அப்படியே அமைதியாக பெஞ்சில் போய் உட்கார்ந்து
கொண்டது.
வகுப்பாசிரியர் அருகில் வந்து
யானையின் தலையைத் தடவிக்கொடுத்தார். பிரவீன் மெல்லத்தலையைத் தூக்கிச் சிரித்தான்.
நன்றி - வண்ணக்கதிர்
யானை பெஞ்சில் உட்காரவில்லை நெஞ்சில் உட்கார்ந்தது. வாழ்த்துகள்
ReplyDelete