துப்பறியும் துர்கா
உதயசங்கர்
துர்கா எப்படி துப்பறியும் துர்கா
ஆனாள் தெரியுமா? என்னது நம்ம பக்கத்து வீட்டுக்குட்டிப்பொண்ணு துர்கா துப்பறியும் நிபுணரா
என்று ஆச்சரியப்படுகிறீர்கள் இல்லையா! அப்படி அவளுடைய அம்மா மீனாட்சி தான் கூப்பிடுகிறாள்.
ஆனால் அவளுக்கு இன்னும் அப்படி ஒரு பெயரை அவளுக்கு அம்மா சூட்டியிருப்பது தெரியாது..
அவளுடைய அம்மா துப்பறியும் கதைகளை சின்னவயதில் படிப்பாள். துப்பறியும் சங்கர்லால்,
துப்பறியும் சாம்பு, இவர்களை எல்லாம் அவளுக்கு ரொம்பப்பிடிக்கும். ஏன் எல்லாக்கதைகளிலும்
ஆம்பிளைப் பசங்களே துப்பறிவாளராக இருக்கிறாங்க என்று கேள்வி அவளுக்கு வரும். அவளும்
துப்பறிந்து பார்த்தாள். வகுப்பில் காணாமல் போன கோமதியின் பென்சிலைக் கண்டுபிடித்தாள்.
அது சிவகாமியின் பைக்குள் போய் ஒளிந்து கொண்டதைக் கண்டு பிடித்தாள். பென்சிலிடம் “
நீ ஏன் ஓடிப்போனாய் ? “ என்று கேட்டதுக்கு பென்சில்
” கோமதி தினம் பென்சிலைச் சீவிச் சீவிக் கரைக்கிறா..
அப்புறம் நான் குட்டியாயிருவேன்ல..” என்றது. கோமதியிடம் பென்சிலின் வருத்தத்தைச் சொல்லி
இனிமேல் அவசியமில்லாமல் பென்சிலைச் சீவக்கூடாது என்று அறிவுரை சொன்னாள். மீனாட்சிக்கு
ரொம்பப் பெருமையாக இருந்தது. இது தான் அவள் முதலும் கடைசியுமாக கண்டுபிடித்தது. அவள்
எப்போதும் கண்களை உருட்டிக்கொண்டு அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டே திரிந்ததைப்
பார்த்த அவளுடைய அம்மா
“ என்னாச்சி.. ஏன் கண்ணைத் தரையிலேயே
நட்டுக்கிட்டே திரியிறே.. முழி பிதுங்கி வெளியே வந்துரும் “ என்று கத்தினாள். மீனாட்சி
பயந்து விட்டாள். ஆனால் துப்பறிவதை அவள் விடவில்லை. வீட்டில் எந்தப்பொருள் காணாமல்
போனாலும் மீனாட்சி தான் கண்டுபிடித்தாள். பெரியவளானதும் எல்லாம் மறந்து போய் விட்டது.
துர்கா தவழ ஆரம்பித்ததுமே துப்பறிகிற
வேலையைத் தொடங்கி விட்டாள். தரையில் கண்ணுக்கே தெரியாமல் வரிசையாகப் போய்க் கொண்டிருந்த
சித்தெறும்புகளின் பின்னால் தவழ்ந்து போனாள். எறும்பு வரிசையில் கடைசியாகப் போய்க்
கொண்டிருந்த எறும்பு திரும்பி துப்பறியும் துர்காவிடம் வந்து தன் முன்கால்களைத் தூக்கி,
“ பாப்பா எங்க பின்னாடி வராதே..
பீ கேர்ஃபுல்..” என்று எச்சரித்தது. துப்பறியும் துர்கா உடனே நின்று விட்டாள். அப்படியே
வேறு எங்கோ பராக்கு பார்ப்பதைப் போல தலையை அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பினாள். எறும்பு
வேகவேகமாக திரும்பிப் போனபோது துப்பறியும் துர்காவும் பின்னாலேயே போனாள். எறும்புகளின்
வரிசை எங்கே போச்சு தெரியுமா? அப்படியே அடுக்களைக்குள் போனது. துப்பறியும் துர்காவும்
அடுக்களைக்குள் போனாள். எறும்பு வரிசை அடுக்களையில் இருந்த அலமாரி மீது ஏறியது. துப்பறியும்
துர்காவும் அலமாரி வரை போய் முட்டி நின்றாள். அண்ணாந்து பார்த்தாள். மேலே பார்த்தால்
துர்காவின் பால் டப்பா இருந்தது. எறும்பு வரிசை அந்த டப்பாவின் மீது ஏறிக் கொண்டிருந்தது.
துர்கா அலமாரியின் கதவுகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து நின்றாள். எறும்புகளைப்
போல அலமாரியில் ஏறமுடியுமா என்று காலைத் தூக்கினாள். அப்படியே சப்பென உட்கார்ந்தாள்.
லேசாக வலித்தது. சுற்றும் முற்றும் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தாள். பால்
டப்பாவைப் பார்த்ததும் வயிறு பசித்தது. அருகில் அம்மாவும் இல்லை. உடனே அழ ஆரம்பித்து
விட்டாள்.
அழுகைச் சத்தம் கேட்டதும் எங்கிருந்தோ
அம்மா ஓடி வந்தாள். துப்பறியும் துர்காவைத் தூக்கி,
“ என்னடா செல்லம்? இங்கே என்ன
பண்றே? என்ன வேணும் செல்லத்துக்கு? “ என்று கேட்டாள். துப்பறியும் துர்கா அலமாரியில்
இருந்த பால்டப்பாவைக் காட்டினாள்.
“ செல்லத்துக்குப் பசிக்கிதா?
“
அம்மா பால் டப்பாவை எடுத்தாள்.
அதில் எறும்புகள் அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. எறும்புகளைப் பார்த்த
அம்மா அவற்றைக் கீழே தட்டி விட்டாள்.
“ ஆகா! எறும்புக்குப் பின்னாடி
துப்பறிய வந்தியா செல்லம்! துப்பறியும் துர்கா! துப்பறியும் துர்கா! “ என்று துப்பறியும்
துர்காவைத் தூக்கிக் கொஞ்சினாள். துர்காவுக்கு கூச்சமாக இருந்தது.
“ அப்படி என்ன பெரிசா செய்ஞ்சிட்டேன்!
இன்னும் இருக்கு.. “ என்கிற மாதிரி சுற்றிலும் பார்த்தாள். கீழே எறும்புகள் துப்பறியும்
துர்காவைப் பார்த்து,
“ இரு உன்னைக் கவனிச்சிக்கிறோம்..”
என்று முன்காலைத் தூக்கி சபதம் போட்டுக் கொண்டே ஓடி ஒளிந்தன. எறும்புகள் ஓடுவதைப் பார்த்து
துர்கா கெக்கேக்கே என்று சிரித்தாள். அம்மாவும் துப்பறியும் துர்காவைப் பார்த்துச்
சிரித்தாள்.
நன்றி - வண்ணக்கதிர்
மிக அருமை
ReplyDelete