தற்காலச் சிறார் இலக்கியம் - சில கேள்விகள் - பதில்கள்
1.
தற்காலச் சிறார் இலக்கியம் எப்படி இருக்கிறது?
கிட்டத்தட்ட
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறார் இலக்கியம் இலக்கியவெளியில் பேசுபொருளாகியிருக்கிறது.
இடைப்பட்ட காலங்களில் சிறார் இலக்கியம் ஏதோ துறைசார் இலக்கியம் போல ஒதுக்கப்பட்டிருந்தது.
அதற்குக்காரணங்களும் இருந்தன. அழ.வள்ளியப்பாவின் காலத்தில் மேலோங்கியிருந்த சிறார்
இலக்கியம் அவருடைய காலத்துக்குப் பிறகு தேய்வழக்காக, கூறியது கூறலாக, ஆசிரியத்தனமாக
மாறி மையத்திலிருந்து விளிம்பை நோக்கி தள்ளப்பட்டிருந்தது. மீண்டும் சிறார் இலக்கியம்
தன்னுடைய இடத்தை அடைய எண்ணற்ற முயற்சிகள் நவீன எழுத்தாளர்களாலும் புதிய பதிப்பகங்களாலும்
எடுக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன.
அந்துவான்
எக்ஸுபரியின் குட்டி இளவரசனை ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தார்.
லூயி கரோலின் அற்புத உலகில் ஆலீஸை எஸ்.ராமகிருஷ்ணன் கூட்டிக் கொண்டு வந்தார் மலையாளத்திலிருந்து
பேரன்பின் அடையாளம், மாத்தன் மண்புழு வழக்கு, அழகான அம்மா, கடல் கடந்த பல்லு, அன்பின்
வெற்றி, போன்ற எண்ணற்ற நூல்களை யூமாவாசுகி அறிமுகப்படுத்தினார். உதயசங்கரும் மலையாளத்திலிருந்து
புத்தகப்பூங்கொத்து, புத்தகப்பரிசுப்பெட்டி, மீன் காய்க்கும் மரம், இயற்கையின் அற்புத
உலகில், வாயும் மனிதர்களும், போன்ற பல நூல்களை மலையாளத்திலிருந்து கொண்டு வந்தார்.
கோ.மா.கோ.இளங்கோ, சரவணன் பார்த்தசாரதி, சுகுமாரன், ஜெயந்தி சங்கர், ஆதிவள்ளியப்பன்,
போன்றவர்கள் ஆங்கிலத்திலிருந்து ஏராளமான நூல்களை தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். இந்த
நூல்களின் வருகை தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் சிறந்த பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பல பதிப்பகங்களும்
தங்களுடைய பொருள் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் சிறார் புத்தகங்களைத் தொடர்ச்சியாக
பதிப்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள். குறிப்பாக, புக்ஸ் ஃபோர் சில்ட்ரென், என்.சி.பி.ஹெச்.,
தூளிகா, போன்ற பதிப்பகங்களின் பணி குறிப்பிடத்தக்கது.
இடைப்பட்ட
காலத்தில் நடந்த இவற்றின் விளைவாக சிறார் இலக்கியம் புதிய காற்றாக வீசத் தொடங்கியிருக்கிறது.
ஆயிஷா நடராஜனின் ஆயிஷா மிகப்பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ச்சியாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,
பாவண்ணன், விழியன், உதயசங்கர், மு.முருகேஷ், யெஸ்.பாலபாரதி, கோ.மா.கோ.இளங்கோ, விஷ்ணுபுரம்
சரவணன், விஜயபாஸ்கர்விஜய், கன்னிக்கோவில் ராஜா, சுகுமாரன், ஆதி வள்ளியப்பன், பஞ்சுமிட்டாய்
பிரபு, உமையவன், பூவிதழ் உமேஷ், ரமேஷ் வைத்யா, மதுரை சரவணன், கலகலவகுப்பறை சிவா, என்று குறிப்பிடத்தக்க சிறார் எழுத்தாளர்கள்
பங்களிப்பு செய்து வருகிறார்கள். அத்துடன் சிவஸ்வேதா செல்வி, எஸ்.அபிநயா, ரமணி, போன்ற
குழந்தைப்படைப்பாளிகளும் தங்களுடைய படைப்புகளை புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்கள்.
சென்னைப்புத்தகக்கண்காட்சியிலும்
பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும் என்ற ஆர்வத்துடன் புத்தகங்களைத் தேடித்
தேடி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
உண்மையில்
தற்காலச்சிறார் இலக்கியம் வளர்முகத்தில் இருக்கிறது என்று சொல்லமுடியும்.
2.
தற்காலச்
சிறார் இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?
நிறையச்சவால்கள் இருக்கின்றன.
1. தொலைக்காட்சி,
அலைபேசி, செயலிகள், சூழ்சிறார் உலகத்தில் சிறார் இலக்கியத்தின் வாசகர்களான குழந்தைகளை
எப்படி வாசிக்க வைப்பது?
2. குழந்தை
இலக்கியப்படைப்புகள் மறுபடியும் பழைய சநாதனப்பாதைகளுக்கு போவதை எப்படி எதிர்கொள்வது.
வழக்கொழிந்துபோன
நிலவுடமைச் சமூகத்தில் நிலவி வந்த வெகுளியான நல்ல மன்னர், மதியூக மந்திரி, முனிவர்கள்,
சாமியார்கள், மந்திரவாதிகள், சாபங்கள், வரங்கள், பரிகாரங்கள், இளவரசிகள், இளவரசர்கள்,
போன்ற காலாவதியான விழுமியங்களை மீண்டும் சொல்கிற படைப்புகளை எப்படி எதிர்கொள்வது?
3. ஏற்கனவே
சொல்லப்பட்ட பீர்பால், தெனாலிராமன், முல்லா, கதைகளின் இனப்பெருக்கத்தை எப்படி தடுத்து
நிறுத்துவது?
4. நவீன அறிவியல்பூர்வமான
கல்வி கற்றுக்கொண்டிருக்கும் குழந்தைகளிடம் கடவுள், பூஜை, விரதம், தவம், பக்தி, போன்ற
விழுமியங்களை கிளிப்பிள்ளையாக உருவேற்றுகிற படைப்புகளை எப்படி எதிர்கொள்வது?
5. இலக்கியத்தின்
மிக முக்கியமான சாராம்சமான கலை இன்பத்தை துறந்து வெறும் செய்தியாக, அறிவுரையாக, அறவுரையாக
எழுதப்படும் படைப்புகளை எப்படி எதிர்கொள்வது?
6. கேரளாவில்
அரசு ஒரு தனியான அமைப்பை உருவாக்கி அதில் சிறார் நூல்களைப் பதிப்பித்து பள்ளி நூலகங்களுக்கு
அளிப்பதன் வாயிலாக சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வாசகர்களுக்கும் பெற்றோர்களுக்கும்
உணர்த்துகிறார்கள். அதனால் விரிந்த சந்தையும் உருவாகிறது. தமிழக அரசுக்கு இதன் முக்கியத்துவத்தை
எப்படி உணர்த்துவது?
7. வயது வாரியான
குழந்தை இலக்கிய நூல்களை எழுதுவதற்கும், பதிப்பிப்பதற்கும், வாங்குவதற்குமான பாரதூரமான
இடைவெளிகளை எப்படி எதிர்கொள்வது?
அதிபுனைவு,
யதார்த்தம், சாகசம், மர்மம், அறிவியல், சூழலியல், போன்ற வகைமைகளில் சிலவற்றைத் தவிர
பல வகைமைகளில் படைப்பாளிகள் இல்லையென்பதை எப்படி எதிர்கொள்வது?
8. சிறார்
இலக்கியத்தில், பாடல், கதை, தவிர மற்ற வகைமைகளான, கதைப்பாடல், நாடகம், கட்டுரை, போன்றவற்றில்
படைப்புகளும் அதிகமில்லை. வரவேற்புமில்லை என்பதை எப்படி எதிர்கொள்வது?
9. குழந்தைகளுக்கான
படைப்புகள், குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், குழந்தைகளே எழுதுகிற படைப்புகள், இந்த
வகைப்பாட்டில் இன்னமும் நிறைய வரவில்லை. அதைப் பற்றிய பிரக்ஞாபூர்வமான விழிப்புணர்வு
இல்லாததை எப்படி எதிர்கொள்வது?
10. இன்னும்
காத்திரமான உரையாடல்கள், விவாதங்கள் விமரிசனங்கள்,சமகாலச் சிறார் இலக்கிய உலகில் நடக்கவில்லை.
அவற்றை எங்கிருந்து எப்போது துவங்குவது?
இப்படியும் இன்னமும் சவால்கள் இருக்கின்றன.
3.
இந்த
சவால்களை கடந்து வர எழுத்தாளர்களும் வாசகர்களும் என்ன செய்ய வேண்டும்?
1. குழந்தைகளின்
படைப்பூக்கம் ஒரு கடலென விரிந்து அலையடிக்கும் குழந்தமை நாட்களில் தான் அந்தக்குழந்தையின்
ஆளுமை கட்டமைக்கப்படுகிறது. அந்தக் காலங்களில் குழந்தைகள் மரப்பாச்சியோ, டையர் வண்டியோ,
தீப்பெட்டிகளோ, செப்பு சாமான்களோ, நவீன பிளாக்குகளோ, டிப்பர் லாரியோ, ரயில்வண்டியோ,
ஜே.சி.பி.யோ, விதவிதமான கார்களோ எல்லாவற்றையும் உண்மையென நம்புகிறார்கள். அந்த நாட்களில்
அவர்களுடைய கட்டற்ற கவித்துவமும், கற்பனையும்
அணுகணமும் விந்தையான பூக்களை மலரச்செய்கின்றன.
2. ஆனால்
புத்தக வாசிப்பை வாழ்க்கையின் அடிப்படையான செயல்பாடுகளில் ஒன்றாகக் கொள்ளாமல் ஆடம்பரமான
( பொழுதுபோக்கு ) செயலாகக் கருதுகிற சமூகத்தில் சிறார் இலக்கியத்திற்கான சவால்களை கடந்து
வர அரசு, பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், துணை இன்றியமையாதது.
3. சிறார்கள்
முடிவெடுத்து புத்தகம் வாங்குகிற சூழல் கிடையாது. எனவே பெற்றோர்கள் மனது வைத்தால் தான்
புத்தகம் வாங்கமுடியும் என்பது யதார்த்தம்.
4. சிறார்
இலக்கியத்தின் பன்முகவளர்ச்சி என்பது அதன் சந்தையையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும்போது
மட்டுமே சாத்தியம்.
5. சிறார்
இலக்கியப்படைப்புகளின் மொழி குறித்து சிறார் எழுத்தாளர்கள் மிகக்கவனமாக இருக்கவேண்டும்.
வாசிப்பின் ஆரம்பநிலையில் உள்ள குழந்தைகளை ஈர்க்கிற எளிய தமிழ்ச்சொற்களை பயன்படுத்தி
அவர்களை வசீகரிக்கவேண்டும்.
6. சிறார்
இலக்கியப்படைப்பாளிகளின் பயிற்சிமுகாம்களை நடத்தும் போது புதிய எழுத்தாளர்கள் வருவதற்கான
வாய்ப்பு இருக்கும்
7. சிறார்
கலை இலக்கியக்கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. இனியன், விஷ்ணுபுரம்
சரவணன், பஞ்சு மிட்டாய் பிரபு, வனிதாமணி, சரிதா, கதை சொல்லி சதீஷ், போன்ற குழந்தை நலச்செயற்பாட்டாளர்கள்
குழந்தைகளிடம் இலக்கியத்தையும் கொண்டு செல்லும் பணியைச் செய்கிறார்கள். அனைத்து ஊர்களிலும்
இப்படியான செயற்பாட்டாளர்கள் உருவாக வேண்டும்.
8. எல்லாவகைமைகளிலும் படைப்புகளை எழுதுவதற்கான எழுத்தாளர்கள்
உருவாகவேண்டும்.
9. குழந்தைப்படைப்பாளிகளை
உருவாக்க பயிற்சி முகாம்களை நடத்தவேண்டும்
10. பெற்றோர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் குழந்தைகளின் உளவியலில், கதை என்ன செய்யும்? என்பது போன்ற பயிற்சி
முகாம்களை நடத்த வேண்டும்.
11. உலகக்குழந்தை
இலக்கியத்தை வாசிக்கவும், தமிழில் செவ்வியல் குழந்தை இலக்கிய நூல்களை உருவாக்கவுமான
படைப்பூக்கத்தைப் பெற எழுத்தாளர்கள் தீவிரமாக உழைக்கவேண்டும்.
நன்றி - கனலி இணைய இதழ்
புகைப்படம் - மோகன்தாஸ்வடகரா
No comments:
Post a Comment