Tuesday 1 May 2012

அன்பின் வழியது

 

அழும் பொம்மைகளை

குழந்தைகளுக்குப் பிடிக்காது

அழும் குழந்தைகளுக்கு

பிடித்து விடுகின்றன

பொம்மைகளை

- அ. வெண்ணிலா

குழந்தைகள் பெரியவர்களின் உதவிகளை நாடாது தன் காரியங்களைத் தானாகவே செய்வதற்கு முயற்சிகள் செய்யும்போது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. குழந்தைகள் இப்பூவுலகில் பிறந்ததிலிருந்து தன்னுடைய உடல், மனம் இரண்டின் இடையறாத உழைப்பின் வழியாகவே தன்னை மனிதனாக உருமாற்றும் ரசவாதத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவன் சுற்றிலுமுள்ள சூழ்நிலையைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறான். அதற்கு முதலில் பெரியவர்களின் உதவிகள் தேவைப்படுகிறது. அதனால் பெரிதும் பெரியவர்களைச் சார்ந்தே அவன் வாழ்கிறான். அவர்களைப் போல் செய்கிறான். ஆனால் மனமும் உடலும் வளர வளர பெரியவர்களைப் போல் செய்யாமல் தானாகவே எல்லாவற்றையும் செய்து பார்க்க ஆவல் அவனுக்குள் கிளர்ந்து எழுகிறது. அது எத்தனை அழகற்றதாக இருந்தாலும் எத்தனை ஒழுங்கற்று இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அந்த செயல் அவனாகவே தன் முழு மனதையும் உடலியக்கத்தையும் ஒன்றிணைத்து செய்த செயலல்லவா? மனிதப் பிறவியான உள்ளுணர்வு அவனை வழிநடத்துகிறது.

பெரியவர்களைப் பின்பற்றித் தானாகவே சீப்பை எடுத்து தலைமுடியை வாருகிறான். தன் சட்டையைத் தானே போட முயல்கிறான். முகப்பவுடரை மேலும் கீழும் சிந்தி கொஞ்சம் முகத்திலும் போட்டுக்கொள்கிறான். இப்படி ஒவ்வொரு செயலை ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் அவனுக்குள் ஒரு பெருமித உணர்வு பொங்குகிறது. பெரிய சாதனை புரிந்து விட்ட மகிழ்ச்சியில் கைகளைத் தட்டுகிறான். குதித்தாடுகிறான். சிரிப்பு பொங்குகிறது. அவனைப் பொறுத்தமட்டில் அது மிகப்பெரிய சாதனை தான். தலைமுடி நட்டக்குத்தலாக நிற்கிறது. முகத்தில் பவுடர் திட்டுத்திட்டாக இருக்கிறது. சட்டையின் ஒரு கை போடப்படவேயில்லை. டவுசரை ஒரே காலில் நுழைத்திருக்கிறான். அதனால் என்ன? இதெல்லாம் யாருடைய உதவியுமின்றி அவனாகவே செய்த காரியங்களல்லவா?

இங்கே தான் பெரியவர்கள் வந்து குழந்தைகளிடம் தகராறு செய்கிறார்கள். எல்லாவற்றையும் செய்து முடித்த அவனுடைய பெருமிதஉணர்வில் அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள். அவன் செய்த அலங்காரத்தைக் குலைத்து அலங்கோலம்(!) செய்கிறார்கள். தலைமுடி வாருதல், பவுடர் போடுதல், உடை உடுத்தல் எல்லாவற்றையும் கச்சிதமாகச் செய்து விடுகிறார்கள். குழந்தையின் மனம் எதிர்க்கிறது. முரண்டு பிடிக்கிறது. எதிர்ப்புணர்வை வளர்க்கிறது.

அதேபோல் குழந்தைகள் யதார்த்த உலகத்தை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்? தொடு உணர்வின் மூலமே தங்கள் புலனுணர்வினை கூர்மைப்படுத்திக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு மனம் என்ற ஒன்றில் அனுபவங்கள் சேகரமாகி அறிவின் கிரணங்கள் ஒளிவீசத் தொடங்குகின்றன. எனவே எல்லாப் பொருட்களையும் தொட்டுத்தடவி, உணர்கிறார்கள். ஆனால் பெரியவர்களோ, குழந்தைதான் என் உயிர், குழந்தைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கிறார்களேயொழிய, குழந்தை வீட்டில் ஒரு பொருளைத் தொட்டு விட்டாலோ, எடுத்துவிட்டாலோ கூப்பாடு போடுகிறார்கள். இந்தச் சத்தத்தைக் குழந்தையால் புரிந்து கொள்ள முடிவதில்லை. எதுக்கு இந்த ஆள் இந்தக் கூப்பாடு போடறான்? நான் தொடத்தானே செஞ்சேன்.. என்று ஆச்சரியப்படுகிறான். இயல்பாகவே பெரியவர்களின் தற்காப்புணர்வு குழந்தை பொருட்களை உடைத்து விடுவானோ, அழுக்காக்கி விடுவானோ, பாழாக்கி விடுவானோ என்று பயம் கொள்கிறது. உடனே என்னதான் நேசம் இருந்தாலும் எஜமான மனோபாவம் தலையெடுத்து விடுகிறது. அவர்கள் சொல்படி குழந்தை கீழ்ப்படியவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கூலி வேலை செய்கிற சாதாரண மக்கள் தங்கள் மழலைகளைத் திட்டி, அறைந்து, வீதிக்கு விரட்டி விடுகிறார்கள். அந்தக் குழந்தையை விட மூத்த குழந்தையிடம் பொறுப்பினை விட்டுவிட்டு தன் வாழ்விற்கான போர்க்களத்தை எதிர்கொள்ளப் போய் விடுகிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கிறவர்களாக இருந்தால் கிரஷ்ஷிலோ, ஆயாக்களிடமோ குழந்தைகளை விட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள். கிரஷ்ஷிலும் சரி, ஆயாக்களும் சரி குழந்தைகள் எப்போதும் உயிர்த்துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதை விட தூங்கிக்கொண்டிருப்பது உத்தமம் என்று நினைத்து விடுகிறார்கள். எனவே குழந்தைக்கு தேவையில்லை என்ற போதிலும் குழந்தையைத் தூங்க வைக்கிறார்கள். பெற்றோர்களுக்குமே இந்த விதமான மனநிலை இருப்பது துரதிர்ஷ்டவசம்தான் குழந்தை அங்கும், இங்கும் ஓடக்கூடாது. சாமான்களைத் தொடக்கூடாது, சத்தம் போடக்கூடாது. எந்த ஒரு காரியத்தையும் திரும்பத் திரும்பச் செய்யக்கூடாது. படியேறி ஏறி இறங்குதல், தாழ்ப்பாளைப்போட்டு போட்டு இழுத்தல், ஓடி ஓடிச் சத்தம் எழுப்புதல், இப்படி எதையும் செய்யக்கூடாது. குழந்தைகள் சாப்பிடவேண்டும். உறங்க வேண்டும், அமைதியாக உட்கார்ந்து விளையாடவேண்டும். டி.வி சத்தம், எப்.எம் சத்தம், பக்கத்துவீட்டுச் சத்தம், தெருச்சத்தம், ரோட்டுச்சத்தம் எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிற பெரியவர்களால் குழந்தைகள் போடுகிற சத்தத்தை மட்டும் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதற்காக அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீது அன்பில்லை என்று சொல்லமுடியாது. அறியாமைதான் காரணம்.

குழந்தை சிறியவனாய் இருக்கும்போது அவனை ஒரு பொருள் மாதிரி போகும் இடங்களுக்கெல்லாம் தூக்கிக் கொண்டு அலைந்து பெருமை பாராட்டுவார்கள் பெரியவர்கள். ஆனால் அவனே நடக்கப்பழகி நடக்க ஆரம்பித்து விட்டால் வெளியே விடுவதில்லை. எதிர்பாரா ஆபத்துகளிலிருந்து அவனைக்காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவனுடைய எல்லா நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதென்பது நல்லதல்ல. அவனது உடல் மன ஆரோக்கியத்திற்கு உகந்ததும் அல்ல. குரங்கிலிருந்து மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியில், கைகளைப் பயன்படுத்தியதும் இரண்டு கால்களால் நிமிர்ந்து நடந்ததும் தீர்மானகரமான பங்கு வகித்துள்ளது. குட்டிமனிதனான குழந்தையும், தன் கைகளையும், கால்களையும் ஓயாது பயன்படுத்தவே விழைகிறான். அதன் மூலமே தனக்குள் மறைந்து கிடக்கும் மனிதனை வளர்த்தெடுக்க முனைகிறான்.

குழந்தையின் இயக்கம் என்பது தானாக அல்லது தற்செயலாக நடப்பதில்லை. அது குழந்தைக்குள் உறைந்திருக்கும் மனிதனின் உள்ளுணர்வின் வழிகாட்டுதலின் படியே நடக்கின்றன. அவை எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. குழந்தை தானாகவே, தனக்குப் பிரியமான வேலையைத் தானே தேர்ந்தெடுத்து நிறைவேற்றுகிறது. சும்மா ஓடவோ, குதிப்பதோ அல்லது காரணமில்லாமல் பொருட்களைக் கையில் எடுப்பதோ, கலைத்துப் போடுவதோ அல்ல. பெரியவர்கள் செய்வதைப் பார்த்து தானாக அந்தச் செயலைப் படைக்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாகவே அப்படி நடந்து கொள்கிறான்.

குழந்தையிடம் தோன்றுகிற உழைக்கும் உணர்வை முதலில் நாம் மதிக்கவேண்டும். பல நேரங்களில் சிறு சிரமங்களை அது ஏற்படுத்தினாலும், குழந்தைகளின் மன வளர்ச்சியினை உத்தேசித்து சில தியாகங்களைப் பெரியவர்கள் செய்யவேண்டும். குழந்தை விரும்பிச் செய்கிற செயலின் சூழ்நிலையை அவனிடமே ஒப்படைத்து விடவேண்டும். அவன் சிரமப்படுவானோ என்று நினைத்துத் தலையிடுகிற பெரியவர்களை அவன் விரும்புவதில்லை. ஏனெனில் அவனுடைய அனுபவ நிகழ்வில் ஏற்படும் எந்தக் குறுக்கீடும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவதில்லை. பெரியவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மீது அன்பு என்பது அவனது தேவைகளைக் கவனித்துக் கொள்வது என்பது மட்டுமல்ல, அவன் மனிதனாக வளர்வதற்கான சூழலை உருவாக்குவதும், அந்தச் சூழலுக்குள் அவசியமின்றி தலையிடாமல் இருக்கவும் வேண்டும். அப்போது குழந்தைக்குள் உறைந்து இருக்கிற மனிதன் மெல்ல முகிழ்ப்பான்

dep_2432274-Children-Art

4 comments:

  1. //குழந்தைகள் மீது அன்பு என்பது அவனது தேவைகளைக் கவனித்துக் கொள்வது என்பது மட்டுமல்ல, அவன் மனிதனாக வளர்வதற்கான சூழலை உருவாக்குவதும், அந்தச் சூழலுக்குள் அவசியமின்றி தலையிடாமல் இருக்கவும் வேண்டும்//

    நல்ல வரிகள்.குழந்தைகளை இன்னும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கு சங்கர்.

    ReplyDelete
  2. கிரஷ்ஷிலும் சரி, ஆயாக்களும் சரி குழந்தைகள் எப்போதும் உயிர்த்துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதை விட தூங்கிக்கொண்டிருப்பது உத்தமம் என்று நினைத்து விடுகிறார்கள்./////

    சார், அந்த குழந்தைகளின் பெற்றோர்களும் அதை விரும்பி தான் அங்க விடறாங்க..

    ReplyDelete
    Replies
    1. பெற்றோர்கள் மனநிலையில் மிகப்பெரும் மாற்றம் வரவேண்டியதிருக்கிறது. உங்கள் கருத்துரைக்கு நன்றி!

      Delete