Tuesday 29 May 2012

நகரம் பார்த்த சின்னக்குருவி

உதயசங்கர்sparrow

முன்பு ஒரு நாள் ஒரு குருவி காட்டிலிருந்து நகரத்துக்குப் பறந்து போய் விட்டது. அங்கேயிருந்து திரும்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. காட்டிற்குத் திரும்பி வந்த பிறகு எல்லாக் குருவிகளிடமும் அது அனுபவித்த கஷ்டங்களைப் பற்றிச் சொல்லியது. அதைக் கேட்ட எல்லாக் குருவிகளும் உச் உச் என்று பரிதாபப்பட்டன. எங்கே சென்றாலும் நகரத்துக்கு மட்டும் போய் விடாதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கீச்சிட்டது. சரி சரி என்று எல்லாக்குருவிகளும் தலையாட்டின. அவைகளில் கொஞ்சம் துடுக்குத்தனம் கொண்ட குருவி ஒன்றும் இருந்தது. அது சேட்டைக்காரக் குருவி. யார் என்ன சொன்னாலும் நம்பாது. ஆபத்தான பல காரியங்களைச் செய்யும். அப்பா அம்மா எத்தனையோ தடவை இப்படி இருக்காதே என்று சொல்லியும் அது கேட்கவில்லை. இப்போது அந்தக் குருவிக்கு நகரத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆசை வந்து விட்டது.

ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் நகரம் இருந்த திசையை நோக்கிப் பறந்தது. தூரத்திலிருந்து பார்க்கும் போது கவர்ச்சியாகத் தான் தெரிந்தது.ஆனால் நகரத்தை நெருங்க நெருங்க அனல் வீசியது. புகை மூட்டமாக இருந்தது.கருப்பாய் கண்களை மறைத்தது. எப்படியோ சமாளித்து நகரத்துக்குள் சென்று விட்டது.

வானம் வரை முட்டுகிற மாதிரி கட்டிடங்கள், காட்டிலுள்ள மரங்களை விட ரெண்டு பங்கு, மூன்று பங்கு, உயரமாய் இருந்தன. வண்ணமயமாய் எல்லாம் ஒளி வீசின. எல்லாக் கட்டிடங்கள் மீதும் வட்டமாகவும், குச்சி குச்சியாகவும் கம்பி வலைகளும், வட்டமான தட்டுகளும் இருந்தன. அவைகளை ஆண்டெனாக்கள் என்று நகர மக்கள் சொன்னார்கள். கார்கள், மோட்டார்சைக்கிள்கள், மொபெட்டுகள், எல்லாம் மின்னல் வேகத்தில் பறந்து சென்றன. எல்லா இயந்திரங்களும் புகையைக் கக்கின. பெரிய பெரிய சாலைகள், பெரிய பெரிய ஆலைகள், கடைகள், இடைவிடாத போக்குவரத்து என்று நகரம் ஒரே இரைச்சலாக இருந்தது. மனிதர்கள் அங்குமிங்கும் பாய்ந்து பாய்ந்து சென்று கொண்டிருந்தனர். ஏதோ அவசரமோ, ஆபத்தோ,என்று நினைக்கும்படி இருந்தது அவர்களுடைய ஓட்டம். தான் ஒரு புது உலகத்துக்குள் வந்துவிட்டது போல எல்லாம் வேடிக்கையாகவும் விநோதமாகவும் தெரிந்தது குருவிக்கு. அது ஒவ்வொரு இடமாக அமர்ந்து அமர்ந்து பறந்து சென்றது.

அப்போது தான் திடீரென்று அது கவனித்தது. நகரத்தில் ஒரு மரம் கூட இல்லை. செடிகளோ கொடிகளோ இல்லை. சின்னக்குருவிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வீடுகளுக்குள் தொட்டிச் செடிகள் இருந்ததை சன்னல் வழியே பார்த்தது. அது காலை நேரம். குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள்.எல்லோர் கைகளிலும் ஒரு பாட்டில் தண்ணீர். குருவிக்கு இன்னொரு அதிசயமும் காத்திருந்தது. நகரத்தில் ஒரு நதியோ, ஓடையோ, குளமோ, குட்டையோ, இல்லை. அட என்னடா இது!

தண்ணீருக்கு எங்கே போவார்கள்? அடுத்த சாலைத் திருப்பத்தில் கடைகளில் தண்ணீரை பைகளிலும், பாட்டில்களிலும், பெரிய பெரிய டப்பாக்களிலும் அடைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். தண்ணீரைப் பார்த்த உடனே குருவிக்குத் தாகம் எடுத்தது. நேரம் ஆக ஆக சூரியன் நெருப்பாக மாறிக் கொண்டிருந்தது. நகரமே அடுப்பு போல சூட்டினால் கணகணத்தது. குருவிக்கு மூக்கு காந்தல் எடுத்தது. சிறகுகளுக்குள் வெக்கைக் காற்று புகுந்து வேதனை அளித்தது. எங்கேயாவது ஒரு மடக்குத் தண்ணீர் கிடைத்தால் பரவாயில்லை என்று நினைத்தது. நகரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. நகரத்தின் ஓரத்தில் கருப்பாய் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்தது. அதன் அருகில் கூடச் செல்லமுடிய வில்லை. அவ்வளவு நாற்றம். ஒரே குப்பையும் கூளமுமாக அந்தத் தண்ணீர் ஓடியது. அதைச் சாக்கடை என்றார்கள். அழுக்கான, கிழிந்த உடைஅணிந்த சில மனிதர்கள் அதில் கூட இறங்கி எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குருவிக்குத் தலை சுற்றியது.

“தண்ணீர்…தண்ணீர்..” என்று கதறியது. கீச் கீச் என்ற அதன் மெல்லிய குரல் ஆரவாரமான போக்குவரத்து சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை. யாரும் குருவியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மனிதர்கள் சாவி கொடுத்த இயந்திரப் பொம்மைகள் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள்.

குருவியினால் சிறகினை அசைக்கக் கூட முடியவில்லை. விர்ரென்று தலை சுற்றியது. பறக்கவும் முடியாமல், கீழே இறங்கவும் முடியாமல் தலைகீழாகக் குருவி சாலையின் ஓரத்திலிருந்த நடைமேடையில் ‘பொத்’ தென்று விழுந்தது. உடம்பை அசைக்க நினைத்தும் முடியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக குருவிக்கு நினைவு தவறிக் கொண்டிருந்தது. தண்ணீரே இல்லாத இந்த நகரம்.வெறும் பாட்டில் தண்ணீரிலும் பாக்கெட் தண்ணீரிலும் உயிர் வாழும் மனிதர்கள். குருவிக்குக் கண்கள் சொருகின. நினைவு மங்கியது. செத்து போய் விடுவோமோ என்று நினைத்தது. இந்த பூமியில் அன்பு, தயை, கருணை, இரக்கம், பச்சாதாபம், எல்லாம் அழிந்து விட்டதா?

அப்போது திடீரென மழைத்துளிகளைப் போல தண்ணீர் அதன் உடலெங்கும் பொழிந்தது. ஒரு கணம் உடல் சிலிர்த்தது. மெல்லக் கண்களைத் திறந்த போது நான்கைந்து குழந்தைகள் முதுகில் புத்தகச் சுமையுடன் தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார்த்தது. அதில் ஒரு குழந்தை தான் தன்னுடைய பாட்டிலில் இருந்து நீரைக் கையில் ஊற்றி குருவியின் மீது தெளித்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னொரு குழந்தை, “போதும்டி..இந்தத் தண்ணி தான் சாயங்காலம் வரைக்கும்.. காலி பண்ணிராதே..அம்மா திட்டுவா..” என்று சொன்னாள். அதைக் கவனிக்காமல் எல்லாக்குழந்தைகளும் குருவி வாயைத் திறப்பதையே பார்த்துக் கொண்டிருந்தனர். “ஐயோ..பாவம்..” என்றாள் ஒரு குழந்தை. உடனே கையைக் குவித்து நீரை ஊற்றி குருவியின் வாய்க்கு அருகில் கொண்டு வந்தாள் இன்னொரு குழந்தை. குருவி ஆசை தீரத் தண்ணீர் குடித்தது. ரொட்டிப் பொறுக்குகளை இன்னொரு குழந்தை கையில் ஏந்தினாள். அதன் சுவை குருவிக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் நாலைந்து வாய் தின்று வயிறை நிரப்பியது. அதற்கு உடனே நகரத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்று தோன்றியது. ‘கீச் கீச்’சென்று கத்திக் கொண்டே எழுந்து பறந்தது.

சிறிது தூரம் பறந்த குருவி திடீரெனத் திரும்பி வந்து குழந்தைகளின் தலைக்கு மேலே சுற்றிச் சுற்றிப் பறந்து ‘கீச் கீச்’ சென்று தனது மொழியில் நன்றி சொல்லி விட்டுப் பறந்தது. குழந்தைகள் ஆரவாரமிட்டனர்.

குருவிக்கு குழந்தைகளின் குதூகலத்தைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி. என்றாவது ஒருநாள் இந்தக் குழந்தைகள் வசம் இந்த நகரம் வரும் போது எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தது. பின்பு நகரத்தை விட்டு வேகவேகமாகக் காட்டை நோக்கிப் பறந்து சென்றது.

dep_2432274-Children-Art

No comments:

Post a Comment