Tuesday 29 May 2012

மறுப்பதற்கான உரிமை

உதயசங்கர்mother-and-child-bob-botha

குழந்தைகள் தங்களுக்குப் பிடிக்காதவற்றை மறுக்கிறார்கள். தங்களுடைய செயல்களின் மூலம் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். உடனே பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள். திருத்துவதாகச் சொல்லி வதைக்கிறார்கள். குழந்தையிடமிருந்து வருகிற எதிர்ப்பை பொறுக்க முடியாது. ஏனெனில் குழந்தையைவிட பெரியவன் தான் என்ற அகங்காரம். தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம். பெற்றோர், ஆசிரியர், அண்ணன், அக்கா என்று குழந்தையை விட மேலான வளர்ச்சிப்படி நிலையில் இருப்பதால் தனக்குக் கீழே இருப்பவர்கள் தான் சொல்வதற்குக் கீழப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வு.

“முளைச்சி மூணுஇலை விடலை... அதுக்குள்ளே

வேண்டாம்.. முடியாதுன்னு பிடிவாதத்தைப் பாரு...”

என்ற வார்த்தைகள் பேசப்படாத வீடுகள் இருக்குமா என்பது சந்தேகம். அதோடு மட்டுமல்ல, குழந்தையிடமிருந்து ஏதாவது எதிர்ப்பு வந்தால் உடனே அடங்காமை, கீழ்ப்படியாமை, சொன்னபடி கேட்காமை என்று சொல்லி குழந்தைகளின் மீது விதவிதமான அடக்குமுறைகளைச் செலுத்த முனைகிறோம். இல்லையென்றால், “அடியாதமாடு படியாது” பிள்ளையை அடித்து வளர்க்கணும், கறிவேப்பிலையை ஒடித்து வளர்க்கணும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? போனற சொலவடைகளை, பழமொழியை அதன் அர்த்தம், காலப்பொருத்தம் தெரியாமலே இன்னமும் உளறிக்கொண்டு திரிகிறோம்.

உலகத்திலேயே மிக அதிகமாக எல்லாவிதமான வன்முறைகளுக்கும் இலக்காகிறவர்கள் குழந்தைகளும், பெண்களும் தான். உடல் ரீதியான வன்முறையில் உயிரிழப்பவர்கள் ஏராளம். அதுமட்டுமல்ல, பட்டினி போடுதல், தனிமைப்படுத்துதல், சுதந்திரமாக அலைய விடாமல் தடுத்தல், சுடுசொல், முறைத்தல், அதட்டுதல், பயமுறுத்தல், நேரடியாகவும் அல்லது மறைமுகமாகவும் அச்சுறுத்தல், பின்விளைவுகளைச் சொல்லி மிரட்டுதல், அடிக்க முனைதல் இவைகள் எல்லாமே வன்முறையின் வேறு வேறு வடிவங்கள் தான். சமபலமில்லாத, சார்ந்து வாழ்கிற எதிர்கொள்வதற்கு முடியாத யாரொருவர் மீதும் உடல் மற்றும் மன ரீதியான வன்முறையைப் பிரயோகிப்பது அவமானகரமான குற்றமாகும்.

எல்லாக் குழந்தைகளும் எப்போதும் தங்கள் எதிர்ப்பையோ, மறுப்பையோ காட்டுவதில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகே அவர்களுக்கேயுரிய தனித்துவக்குணங்கள் உருவாகத் தொடங்கும் போதே தங்களுடைய விருப்பு வெறுப்புகளை எதிர்ப்பாக மறுப்பாக வெளிக்காட்ட முனைகிறார்கள். ஒரு மரத்தின் இலைகளைத் தோராயமாகப் பார்க்கும்போது எல்லாம் ஒன்று போலத் தெரியும். ஆனால் கூர்ந்து ஒவ்வொரு இலையாக உற்றுப்பாருங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்திலும், அளவிலும், பருமனிலும் இருப்பதைக் காணலாம். நிறத்தின் அடர்த்தியிலும், உணவு தயாரிக்கிற, நீரை உறிஞ்சுகிற, உட்கொள்கிற கரியமில வாயுவிலிருந்து, வெளிவருகிற பிராணவாயு வரை எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. ஒவ்வொரு சிறிய இலையுமே தனித்துவமிக்கதாகவே திகழ்கின்றன. அது போலத்தான் குழந்தைகளும். வளரும்போதே தனக்கென்று தனிருசி, விருப்புவெறுப்புகள், உறக்கம், விழிப்பு, உணவு, விளையாட்டு என்று தனித்துவமிக்க பழக்கங்களோடு வளர்கின்றனர். குழந்தைகளின் பரம்பரைக் குணாதிசயங்கள், சூழ்நிலை, உள்ளுணர்வு, படைப்பூக்கம், ஆழ்மனப் பிரதிபலிப்புகள் எல்லாமும் சேர்ந்து இவற்றைத் தீர்மானிக்கின்றன. குழந்தைக்கு ஒவ்வாததை பிடிக்காததைச் செய்யும்போது அல்லது செய்யச் செல்லும்போது குழந்தைகள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டுகின்றனர். மறுப்பைப் பதிவு செய்கின்றனர்.

பெரியவர்கள் முதலில் குழந்தைகளின் எதிர்ப்பை மதிக்க வேண்டும். மறுப்பை அங்கீகரிக்க வேண்டும். நாம் அதை அங்கீகரிக்கிறோம் என்பதைக் குழந்தைகள் அறியச் செய்யவேண்டும். சில நேரங்களில் அவர்களுடைய எதிர்ப்பிற்கான காரணங்கள் நமக்கு அற்பமானவையாக இருக்கலாம். மறுப்பிற்கான காரணங்கள் அர்த்தமில்லாதவையாக இருக்கலாம். உண்மையில் குழந்தைகள் காட்டுகிற எதிர்ப்பைக் கண்டு நாம் பெருமகிழ்வு கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தை தனக்கான தேவைகளை விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறது.

அவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கிறது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து குழந்தையின் மீது கோபம் கொள்வது, எரிச்சல் படுவது, அடிப்பது போன்றவற்றை முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழந்தை தன்னுடைய பிரத்யேகமான தேவைகளைத் தெரிந்து கொள்ளவே முடியாது. அது மட்டுமல்ல எந்தச் செயலையும் தனக்குப் பிடிக்கிறது என்றோ, பிடிக்கவில்லை என்றோ தேர்வு செய்ய முடியாமல் போய்விடும். எல்லாவற்றுக்கும் அடிபணிவது, சொன்னபடி கேட்பது, கோழையாக இருப்பது, சிறிய சலுகைகளுக்கு தங்களையே இழக்க நேர்வது போன்ற எதிர்விளைவுகள் உருவாகிவிடும்.

அதிகமாக அடக்குமுறைகளுக்கு உள்ளாகிற பெண் குழந்தைகளின் உணர்வுகளை மதிக்கக்கற்றுக் கொள்ளவேண்டும். அவர்கள் மறுப்பையும், எதிர்ப்பையும் அங்கீகரித்து அனுமதிக்க வேண்டும். அடக்கியே வளர்க்கப்படும் பெண் குழந்தைகளை மிகச்சுலபமாக ஏமாற்றப்படுவதற்கும், இழிவுபடுத்தப்படுவதற்கும் நேரிடும். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பெரும்பாலும் அந்தக் குழந்தைகளுக்கு நன்றாக அறிமுகமானவர்களாலேயே நிகழ்கிறது. குழந்தைகளின் பரிபூரண நம்பிக்கையை தங்களுடைய வக்கிரபுத்தியினால் பயன்படுத்துகிற கொடூரமனம் கொண்டவர்களாக பலர் இருக்கிறார்கள். பல சமங்களில் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாமல் சிறு சிறு சலுகைகளுக்கு தன்னை இழந்து விடுகிற கொடுமையும் நேர்ந்து விடுகிறது. எனவே முதலில் குழந்தைகளுக்கு மறுப்பதற்கான உரிமையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மறுத்துப் பழகும்போது தங்களை ஒரு தனித்துவமான ஆளுமையாகக் குழந்தைகள் உணர்வார்கள். தங்களுடைய சுயமரியாதை குறித்த பெருமிதம் ஏற்படும். அப்போதுதான் பெண் குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு எதிரான எல்லாவித வன்முறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழும் ஆன்மவலிமை உருவாகும்.

குழந்தைகளின் சுயமரியாதையை வளர்ப்பதற்கு பெரியவர்களுக்கு சில குணாதிசயமாற்றங்கள் தேவைப்படுகின்றன. குழந்தைகளின் முன்னால் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் அருவெறுப்பான தன் அதிகாரச் சாட்டையை வீசாமலிருக்க வேண்டும். உண்மையான அன்போடு குழந்தைகளின் செயல்களை உற்றுக் கவனிக்க வேண்டும். குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும். இப்படியான மாற்றங்கள் பெரியவர்களிடம் வரவேண்டும்.

அப்படியென்றால் குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் செய்ய எதுவுமே இல்லையா? குழந்தைகள் செய்கிற காரியங்கள் எல்லாமே சரியானதா? அவர்கள் காட்டுகிற எதிர்ப்போ மறுப்போ, தீய விளைவுகளை ஏற்படுத்துவதாக இருந்தால் என்ன செய்வது? அனுபவச் செறிவில்லாத அவர்களுடைய ஆளுமை தானாக எப்படி வளரும்? இது போன்ற கேள்விகள் எல்லோருக்கும் வரலாம்.

நாம் எல்லோருமே நம்முடைய குழந்தைகள் மிகப்பெரிய ஆளுமையாக வளரவேண்டும் என்று தான் மனப்பூர்வமாக ஆசைப்படுகிறோம். ஆனால் வேடிக்கை என்னவென்றால் நாம் எதற்காக ஆசைப்படுகிறோமோ அதற்கு எதிரான செயல்களைச் செய்கிறோம். அப்படிச் செய்யும்படி இந்த சமூக அமைப்பு அதன் கட்டுப்பாட்டிலுள்ள கல்வித்துறை, நீதித்துறை, காவல்துறை மற்றும் பண்பாட்டு அமைப்புகள், மத நிறுவனங்கள், எல்லாவற்றுக்கும் கீழ்ப்படிதலுள்ள குடிமகன்கள் மட்டுமே தேவை. எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிகிற ஒரு சமூக மனநிலையை உருவாக்க எல்லாவிதமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வருகிற சூழலில் மறுப்பதற்கான உரிமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை யோசித்துப்பாருங்கள்.

2 comments:

  1. குழந்தைகளின் சுயமரியாதையை வளர்ப்பதற்கு பெரியவர்களுக்கு சில குணாதிசயமாற்றங்கள் தேவைப்படுகின்றன. குழந்தைகளின் முன்னால் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் அருவெறுப்பான தன் அதிகாரச் சாட்டையை வீசாமலிருக்க வேண்டும். உண்மையான அன்போடு குழந்தைகளின் செயல்களை உற்றுக் கவனிக்க வேண்டும். குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும். இப்படியான மாற்றங்கள் பெரியவர்களிடம் வரவேண்டும்.// மிகவும் பயனுள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடிய உண்மை வரிகள் .

    ReplyDelete