Saturday 11 January 2020

தமிழ்க் குழந்தை இலக்கியமும் புனைவுக்கதையாடலும்


தமிழ்க் குழந்தை இலக்கியமும் புனைவுக்கதையாடலும்

உதயசங்கர்

இன்னமும் தமிழில் குழந்தைகள் இலக்கியம் அவ்வளவாக கவனிக்கப்படவோ, வளர்ச்சியடையவோ இல்லை என்று சொல்லலாம். ஒருவேளை குழந்தைகளைப் பற்றிய சமூகத்தின் பார்வையே கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். குழந்தைகளை திறந்த குப்பைத்தொட்டிகளைப் போல அவர்களுடைய சக்திக்கு மீறிய விஷயங்களை அள்ளியள்ளி கொட்டிச் சேர்ப்பது நடக்கிறது. இதனால் குழந்தைகளை அறிவாளிகளாக்கி விடலாம். அவர்கள் அறிவாளிகளாகி விட்டால் சமூகத்தில் வெற்றியாளர்களாகி விடுவார்கள் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அரசாங்கக்கல்விமுறையின் உண்மையான நோக்கம் பெற்றோர்களுக்குப் புரியவில்லை. எல்லாக்குப்பைகளையும் செரிக்கமுடியாமல் திணறும் குழந்தைகள் முட்டாள்பெட்டிகளின் முன்னால் தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னொருபுறம் காட்டுமிருகங்களைப் பழக்குவதைப் போல பெற்றோர்களும் ஆசிரியர்களும் சமூகச்சூழலும், இணைந்து சமூகத்தின் அத்தனை பிறழ்வுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வசப்படுத்துகிறார்கள். இவற்றுக்கு பழக மறுக்கும் குழந்தைகளைச் “ சொன்னபடிச்சவுக்கு “ கொண்டு அடித்து வன்முறையை ஆழ்மனதில் விதைக்கிறார்கள். வளர்ந்து வரும் இந்தக்குழந்தைகள் தாங்கள் எதிர்கொண்ட அவமானங்கள், ஏச்சுகள், அடி, உதைகள், ஏமாற்றங்கள், எல்லாவற்றையும் வளர்ந்தபிறகு சமூக சாராம்சத்தின் மீது திருப்புகிறார்கள்.
குழந்தைகளின் மெல்லுணர்வுகளை மதிக்கவோ, நல்லுணர்வுகளை வளர்க்கவோ,இந்த சமூகம் கிஞ்சித்தும் முயற்சிக்கவில்லை. ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளை தங்களுடைய எதிர்காலவைப்பு நிதியாகவே நினைத்து வளர்க்கிறார்கள்.
இதுவரை வெளிவந்துள்ள குழந்தைகள் இலக்கியம் என்று சொல்லப்படுகிற படைப்புகளில் பெரும்பாலும் அறவுரைகள், அறிவுரைகள் நிறைந்துள்ளன. பெரியவர்கள் சமூகத்தில் ஒரு நாளும் கடைப்பிடித்திராத ஒழுக்க அறநெறிகளை குழந்தைகளிடம் போதித்து அவர்களை மனப்பாடம், பரீட்சை, மார்க்குகள் என்று மிரட்டி படைப்புகளில் சொல்லப்பட்ட நெறிகளுக்கு எதிராக அவர்களை மாற்றி விடுவதோடு வாசிப்பையும் அந்நியமாக்கி விடுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பாட்டி தாத்தாக்களிடம் கேட்ட மரபார்ந்த வாய்மொழிக்கதைகளின் அற்புத உலகத்திலேயே வாழ்கிறார்கள்.
தமிழ் குழந்தை எழுத்தாளர்களும் புதிய கதையாடல்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தை அலட்சியப்படுத்தியே வருகிறார்கள். அறிவுத்துறை சார்ந்த குழந்தை இலக்கியம் வளர்ந்துள்ள அளவுக்கு புனைகதைகளில் வளர்ச்சியில்லை. புனைகதைகள் என்று சொல்லிக்கொண்டு வருபவை பெரும்பாலும் மலினமாக கூறியது கூறலாக புராண இதிகாசக்கதைகளின் சாதாரணப்பிரதியாகவே இருக்கின்றன. குழந்தைகளின் மனதுக்குகந்த, அவர்களை குதூகலப்படுத்தும் புனைகதைகள் மிகக்குறைவு.
எல்லாக்குழந்தைகளுமே சிறந்த புனைவியலாளர்கள், சிறந்த கதைசொல்லிகள், சிறந்த உரையாடல்காரர்கள், சிறந்த கேள்வியாளர்கள், சிறந்த விளையாட்டுக்காரர்கள், ஆனால் பெரியவர்கள் தங்களுடைய அறியாமையினால் இவற்றை அலட்சியப்படுத்தி அவர்களின் மேதைமையை முளையிலேயே அழித்து விடுகிறார்கள். தாங்கள் வாழ்க்கையைப் புரிந்து கொண்ட விதத்திலேயே குழந்தைகளை வளர்க்க நினைக்கிறார்கள். ஆனால் மாறிக்கொண்டேயிருக்கும் வாழ்க்கை குழந்தைகளுக்கு வேறுமாதிரியான படிமங்களைத் தருகிறது. இதனால் குழந்தைகள் சுதந்திரமானவர்களாக வளரும்போது ஏற்படக்கூடிய முரண்பாடுகளைப் பெரியவர்களும், சமூகமும், அதிகாரம் என்ற போர்வைக்குள் மறைத்து விடுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் ஆளுமை சிதைந்தவர்களாகவே வளர்கிறார்கள்.
குழந்தைகளின் உலகத்தையும் கூட வேகமாக மாறிவரும் அவர்களின் வளர்ச்சிக்கேற்ப பல அடுக்குகளாகப் பிரிக்கவேண்டியுள்ளது. மொழிப்பயிற்சியின் ஆரம்ப காலத்தில் அதாவது இரண்டு முதல் ஏழெட்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு எளிய சந்தப்பாடல்கள், எளிய உண்மைகளைச் சொல்லும் சிறிய கதைகள் என்றும், எட்டு முதல் பதினான்கு வயதுவரை சந்தமும் கவிதையும் கலந்த கருத்தான பாடல் மாதிரியான கவிதைகள், அற்புதங்களும் ஆச்சரியங்களும், விநோதங்களும் நிறைந்த புனைவுலகு நல்லுணர்வுகளை நெய்து பின்னிய வாசிப்புக்குச் சுகமான சாகசக்கதைகள் என்றும் பதினான்கு வயதுக்கு மேல் யதார்த்தமான வாழ்க்கையைச் சித்தரிக்கும் வாழ்க்கை மதிப்பீடுகள் பற்றிய பார்வையைப் பதியவைக்கும், புதிய கேள்விகளை எழுப்பும் படைப்புகள் என்றும் எளிய வரையறைகளைச் சொல்லலாம். இவை மேலும் ஆழ்ந்த சிந்தனைக்கும் விவாதங்களுக்கும் உட்படுத்தப்படவேண்டியவை.

 ( 2004 -ல் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய தயா என்ற சிறார் மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதிய முன்னுரை )