Friday 22 June 2012

எழுத்தாளனின் பிறப்பு

 

வைக்கம் முகமது பஷீர்basheer-the-man-thalani-poil-sreedharan

தமிழில்- உதயசங்கர்

 

நான் எழுத்தாளனாகியது தானாக நடந்த நிகழச்சியல்ல. ஒன்பது பத்து வருடகாலம் லகானில்லாமல் என்று சொல்வார்களே அப்படி இந்திய மகாராஜ்ஜியத்தில் சுற்றியலைந்தேன். ராஜ்யங்கள் முழுவதும் வலை வீசியபடி அலைந்து திரிந்தேன். நிச்சயமில்லாத காலகட்டம். வெயிலையும், மழையையும், சூட்டையும், குளிரையும், சகித்துக் கொண்டு பிரயாணம் செய்தேன்.

முடிவில் சொந்த மண்ணான கேரளத்துக்குத் திரும்பினேன். என்னுடைய மொத்தச்சொத்து ஒரு பேனா மட்டுமே. அடுத்தது என்ன செய்ய? உயிர்வாழ ஆகாரம் வேண்டும். தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும். மற்ற தேவைகளும் இருக்கிறதல்லவா? அதற்கொரு வேலை வேண்டும். என்ன செய்யலாம்? தீவிரமாக யோசித்தேன்.

அரசியல்வாதியாகலாம். அப்படி ஆகியிருந்தால் குறைந்தபட்சம் முதல்மந்திரியாகவாவது ஆகியிருப்பேன். பட்டாளத்தில் சேர்ந்திருந்தால் கேப்டனல்ல கமாண்டர் இன் சீஃப்பாகவே ஆகியிருப்பேன். ஆனால் இதற்காக சாதாரண நடைமுறை வாழ்க்கையை மறக்கவேண்டும். நல்ல விசாலமான அறிவும், ஞாபகசக்தியும் வேண்டும். முதல் மந்திரியானால் சரளமாகப் பேசத் தெரியவேண்டும். ஓடி நடந்து பிரசங்கிக்க வேண்டும். விழாக்கள், நாடாவெட்டல்கள், குத்துவிளக்கேற்றல்கள், இரவு பகலும் இதே வேலை தான். அடங்கியொடுங்கி நன்றாக ஓரிடத்தில் அமைதியாக இருக்கமுடியுமா? சாதாரண வாழ்க்கை வாழமுடியாது. வெயிலில் காயவும், மழையில் நனையவும், சத்தம் போடவும் முடியாது. தோன்றும்போது தோன்றிய மாதிரி வாழ்கிற சோம்பேறி நான். சோம்பேறிகளான படவாக்களுக்கு ஏற்ற வேலை எதுவென்று தலையைப் பிய்த்துக் கொண்டபோது புதையல் கிடைத்தமாதிரி ஒரு சிந்தனை வந்தது. இலக்கியம். எழுத்தாளனாகலாம். பெரிய அறிவு ஒன்றும் வேண்டாம். சும்மா எங்கேயாவது குந்தியிருந்து எழுதினால் போதும் அநுபவங்கள் ஏராளம் இருக்கிறதல்லவா? அவற்றையெல்லாம் காய்ச்சினால் போதும். ஆக எழுதினேன். இப்படித்தான் நான் எழுத்தாளனானேன். அவ்வளவு தான். சொல்லியிருக்கேனில்லையா நான் எழுதுகிறமாதிரி யார் வேண்டுமானாலும் எழுதலாம். அப்படி இப்படி அநுபவங்கள் இல்லாத மனிதனோ, மனுஷியோ யாராவது உண்டா இந்த உலகத்தில்?

நான் எழுத்தாளனான கதையைச் சொல்லியாயிற்று. சோம்பேறியானதால் தான் எழுத்தாளரானேன். அதனால் ஒன்றும் துக்கமில்லை. சந்தோஷம் தான். என்னுடைய புத்தகங்கள் சிறியவை. விலையும் மிகவும் குறைவு. ஆட்களுக்கு வாங்கக் கஷ்டம் ஒன்றுமில்லை. இங்கேயுள்ள இந்துக்களும், கிறித்தவர்களும், முஸ்லீம்களும், வாங்குகிறார்கள். அதனால் பெரிய அளவுக்குக் கஷ்டமில்லாமல் வாழ்கிறேன். புத்தகங்களை யாரும் வாங்கவில்லையென்றால் நான் வேறு வேலைக்குப் போய்விடுவேன். எனக்கு வேலி கட்டத் தெரியும். நிலத்தைக் கொத்திப் பண்படுத்தத் தெரியும். தென்னைமரம் ஏறத் தெரியும். தூண்டில் போட்டு மீன் பிடிக்கத் தெரியும் வீட்டு வேலைகளும் தெரியும். எனவே வீடுகளிலோ, ஹோட்டல்களிலோ குக் ஆகி விடுவேன்.

நன்றி- ஜனபதம் ஆகஸ்ட் 1949.

2 comments:

  1. வாழ்வு வெளி கற்றுத்தருகிற அனுபவம் மிகபெரியதுதான். அப்படியான அன்பவ்ங்களை உள் வாங்கியவரின் வார்த்தைகள்,,,,,,,,,,,இதுவும் நல்லாவே இருக்கிறது.

    ReplyDelete