Monday 18 June 2012

குழந்தைகளும் கதைகளும்

உதயசங்கர்

mother-and-child-bob-botha

பொதுவாகவே கதை கேட்பது எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கதைகள் என்ன செய்கின்றன?கதைகளைக் கேட்கும்போது மனம் அந்தக் கதையில் வருகிற சம்பவங்கள், பாத்திரங்கள், இவைகளைச் சுற்றியே யோசித்துக் கொண்டிருக்கும். அந்த சம்பவங்களோ நாம் நம்முடைய வாழ்வில் பார்த்திராதது. ஆனால் மனம் அதைச் சுலபமாகக் கற்பனை செய்கிறது. அதேபோல அந்தக் கதாபாத்திரங்களும் நாம் முன்பின் கேள்விப்பட்டிராததாக இருந்தாலும் மனம் அதற்கு ஒரு உருவத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் நாம் முன் பின் அறிந்திராத சம்பவங்களும் நம் வாழ்வின் அநுபவஎல்லைக்குள் சேகரமாகி நம் அறிவின் எல்லையை விரித்துச் செல்கிறது. மீண்டும் மீண்டும் இந்த கதைகளைப் பற்றிப்பேச அவை நம் வாழ்வின் ஒரு அங்கமாகி விடுகிறது.

கதைகளைக் கேட்கும் போது கதையின் சம்பவங்களுக்கு ஏற்ப, கதாபாத்திரங்களுக்கு ஏற்ப, எதிர்வினை புரிகிறோம். அதுவே நாம் அந்தக் கதையைச் சொல்லும்போது, விசயங்களைக் கற்பனையில் பெரிதாக்கி, அதற்கு வண்ணம் சேர்த்து, நம் வசதிக்கு ஏற்ப கதை நிகழ்வுகளை மாற்றிச் சொல்கிறோம். நாம் எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அதில் கூடுதல் கவனம் செலுத்தி கதையைச் சொல்ல முயற்சிக்கிறோம். இதனால் கதை சொல்கிறவர் ஒரு நிகழ்கலைக்கலைஞரைப்போல மாறிக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை உருவாக்கவும் அதை அந்தக் கதை வழியே நடத்திச் செல்லவும் செய்கிறார். இதன் மூலம் பாவனையான அநுபவங்களில் விதவிதமான குணபாவங்களில் பாவனையாக வாழ்கிற நிலை ஏற்படுகிறது. கோபம், குரோதம், மகிழ்ச்சி, அமைதி, அன்பு, என்று எல்லாக்குணபாவங்களுக்கும் கதைசொல்லி பிரயாணம் செய்வதால் மனதில் ஒரு சமநிலை கிடைக்கிறது. இந்தச் சமநிலை யதார்த்த வாழ்வில் அவர்கள் சந்திக்கின்ற அநுபவங்களை அவர்கள் எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம் என்று கற்பிக்கிறது. அதன் மூலம் அவர்கள் நல்லுணர்வை வளர்க்கிறது.

அதே போல கதைசொல்லியின் உளவியலில் தன்னை முன்னிலைப் படுத்தி,தன் குரல் வழியே அந்தக் கதை சொல்லப்படும் போது மிக அபூர்வமான நிறைவு ஏற்படுகிறது. அத்துடன் தன்னுடைய பாணியில் தானே தேர்வு செய்த மொழியில்( அது எத்தனை பழைய கதையாக இருந்தாலும்) சொல்லும்போது அது ஒரு புதிய வடிவம் பெறுகிறது. புதிய படைப்பு ஒன்றைப் படைத்த பூரண திருப்தி கிடைக்கிறது. மற்றவர்களின் கவனம் முழுவதையும் கதைசொல்லி தன் பக்கம் இழுப்பதால் தலைமைப்பண்பு உருவாகிறது. கதையை நடத்திச் செல்லும்போது கதாபாத்திரங்களின் வழியே தானும் பேசுவதால் தன் சிந்தனைகளை, தன் எண்ணங்களை, தன் கற்பனையைத் தெளிவாக வெளியிடுகிற திறமை வளர்கிறது. கதைகளில் வரும் நெருக்கடிகளைக் கதாபாத்திரங்கள் சந்தித்து அதைச் சாமர்த்தியமாக வெற்றி கொள்கிறபோது கதைசொல்லிக்கும் அது தன்னம்பிக்கையைத் தருகிறது.

கதை கேட்கும் போது என்ன நேர்கிறது? ஈர்ப்பான கதைகளைக் கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம் கூடுகிறது. ஆர்வம் கூடுவதால் ஒருமுகத்தன்மை வளர்கிறது. கதைஉலகத்தில் கதைசொல்பவருடனே பிரயாணம் செய்ய கற்பனைத் திறன் வளர்கிறது. கதாபாத்திரங்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது பாவனையான நெருக்கடிக்கு கதைகேட்பவரும் ஆளாகிறார். அந்த நெருக்கடியிலிருந்து கதாபாத்திரம் மீள்வதற்கான சாத்தியங்களை தானும் யோசிக்கிறார். அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பாவனையான திறன் வளர்கிறது. அந்த நெருக்கடிகளிலிருந்து கதாபாத்திரங்கள் மீளும்போது கதாபாத்திரங்களுக்கு ஏற்படுவதைப்போலவே மகிழ்ச்சியும் விடுதலையுணர்வும் கதைகேட்பவருக்கும் ஏற்படுகிறது. இதனால் யதார்த்தவாழ்வில் குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளின் போது திகைப்பு ஏற்படுவதில்லை. அதிர்ச்சி அடைவதில்லை. என்ன செய்யப்போகிறோமோ என்ற பதைபதைப்பு உண்டாவதில்லை. மன அழுத்தத்தில் சிக்குவதில்லை. அதற்குப் பதில் கதைகளைக் கேட்டபோது பாவனையாக ஏற்பட்ட உணர்வு நிலைகள் இப்போது மனதை ஆறுதல் படுத்துகின்றன. இப்போது எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடிகளுக்கான தீர்வை நிதானமாக யோசிக்கவைக்கின்றன.

அதோடு குழந்தைகளிடம் நன்மை, தீமை, குறித்த அறவுணர்வை கதைகள் வளர்க்கின்றன. இதற்கு குழந்தைகள் ஈடுபாடு கொள்ளும்படியான கதைகளைச் சொல்லவேண்டும். அவர்கள் கதையோடு ஏதோ ஒருவிதத்தில் தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ளும் படியாக கதை சொல்லுதல் இருக்கவேண்டும். எப்படியானாலும் ஒவ்வொரு குழந்தையும் கதையைக் கேட்கும்போது தன்னுடைய பாணியில் கதையோடு தொடர்பு படுத்திக் கொள்ளவே செய்கிறார்கள். கதையில் நிகழும் நிகழ்வுகளில் ஏதோ ஒரு நிகழ்வு மற்ற நிகழ்வுகளை விட மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கதையையும் அதன் கதாபாத்திரங்களையும் தங்களுக்கே உரிய முறையில் விளங்கிக்கொள்ளவும், அதை மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். இதன் மூலம் சுதந்திரமான கற்பனைத் திறனும், சிந்திக்கும் ஆற்றலும், மொழிப்புலமையும் வளர்கிறது.

எல்லாவயது குழந்தைகளுக்கும் பொதுவான கதைகள் என்று ஒன்றில்லை. குழந்தைகளின் உளவியல் வளர்ச்சியும், வாசிப்புத் திறனும், புறவுலக அநுபவங்களும் , மொழியறிவும் வளர வளர குழந்தைகள் ஈடுபாடு கொள்ளும்கதைகளும் வேறு படுகின்றன. குழந்தைகள் ஆரம்பத்தில் ஓசை நயம் மிக்க பாடல்களைப் பாடச் சிரமப்படும் குழந்தைகள் பின்னர் இரட்டை அர்த்தமும் மறைபொருள் அர்த்தமும் கொண்ட விடுகதைகளை விடுவிக்கிறார்கள். எனவே குழந்தைகளின் வளர்ச்சிநிலைகளுக்கு ஏற்ப அவர்களுக்கான படைப்புகளும் மாற வேண்டியுள்ளது.

மொழிப்பயிற்சியின் ஆரம்பகாலத்தில் சைகை மொழியுடன் கூடிய எளிய கதைகள், ஓசை நயமிக்க கதைப்பாடல்கள் திரும்பத் திரும்பச் சொல்லுதல் வேண்டும். ஐந்து வயது முதல் ஏழெட்டு வயது வரை எளிய அறிவியல் உண்மைகளைச் சொல்லும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பூக்கள் பேசுகிற மாதிரியான குட்டிக் கதைகள். எட்டு வயதுக்கு மேல் அற்புதங்களும், ஆச்சரியங்களும், விநோதங்களும் நிறைந்த புனைவுக்கதைகள், நல்லுணர்வுகளை அடிநாதமாகக் கொண்டு நெய்து பின்னிய கேட்பதற்க்குச் சுகமான சாகசக் கதைகள். அறிவியல் கதைகள், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளைப் பற்றியக் கதைகள், பதினான்கு வயதுக்கு மேல் யதார்த்தமான வாழ்க்கைச் சித்தரிப்புகளைக் கொண்ட கதைகளும், வாழ்க்கை மதிப்பீடுகள் பற்றிய புதிய பார்வையை உருவாக்கும் கதைகளும், சமகால வாழ்க்கை, பண்பாடு, மீதான புதிய கேள்விகளை மனதில் எழுப்பும் கதைகளும், மதம், சாதி, மூடப்பழக்கவழக்கங்கள் குறித்த விவாதங்களைத் தூண்டும் கதைகளும் சொல்லப்பட வேண்டும். இது ஒரு மிக எளிய வரையறையே. இவற்றைக் குறித்த ஆழ்ந்த விவாதங்கள், உரையாடல்கள் நடைபெற வேண்டும்.

தமிழில் குழந்தை இலக்கியம் என்பது குறிப்பிடத் தகுந்ததாக இல்லை. தமிழில் குழந்தை இலக்கியம் என்றபெயரில் ஏராளமான நூல்கள் வந்து கொண்டிருந்தாலும் ,அவற்ரில் மிகச் சில நூல்களைத் தவிர மற்றவை குழந்தை இலக்கியத்துக்கு எந்த வகையில் நியாயம் செய்யக் கூடியவை என்பது கேள்விக்குறியே. கடந்த காலத்தில் பாரதி, பாரதிதாசன், கவிமணி,தொடங்கி அழ. வள்ளியப்பா பெ.தூரன், வாண்டுமாமா, கிருஷ்ணன்நம்பி, வரையில் குறிப்பிடத்தகுந்த குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் இருந்திருக்கின்றனர். தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு.

மற்றெல்லாத் துறைகளிலும் இருப்பதைப் போல குழந்தைகள் இலக்கியத்திலும் சில உட்பிரிவுகள் இருக்கின்றன. அது பற்றிய உரையாடல்கள் தேவை. பொதுவாக இதுவரை வெளி வந்துள்ள குழந்தை இலக்கிய நூல்களை வைத்து குழந்தைகள் இலக்கியத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. குழந்தைகள் எழுதும் குழந்தைகள் இலக்கியப்புத்தகங்கள்.

2. குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் புத்தகங்கள்

3. குழந்தைகளைப் பற்றிப் பெரியவர்கள் அறிந்து கொள்ள பெரியவர்கள் எழுதும் புத்தகம்.

இது குறித்தும் நிறைய விவாதிக்க இடமுண்டு. பெரும்பாலான குழந்தைகள் இலக்கிய நூல்களை அதன் சாராம்சத்தை வைத்து கீழ்க்கண்ட வகைகளில் அடக்கி விடலாம்.

1. அறிவுரை, நீதிபோதனைக் கதைகள்

2. பழங்கதைகளின் மறுகூறல்

3. மலிவான துப்பறியும் கதைகள்

4. புராண இதிகாசக் கதைகளின் மறுகூறல்

5. கடவுள்பக்தி, சநாதன வாழ்க்கைமுறை குறித்த கதைகள்

6. அறிவியல்கதைகள்

உத்தேசமாக இந்தப் புத்தகங்கள் எப்படி இருக்கின்றன. எந்தப் பருவத்துக் குழந்தைகளுக்கானது என்ற தெளிவின்றி கைக்கு வந்த மொழியில் எழுதப்பட்டு பொது நூலகங்களிலும் பள்ளி நூலகங்களிலும்,புத்தக அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஏன் இந்த நிலைமை?

பொது வாசிப்புத் தளத்திலும் படைப்புத் தளத்திலும் குழந்தைகளின் பங்கேற்பை அலட்சியப்படுத்துகிற சமூகமனோபாவம் கல்வி முறைமையிலும், பள்ளியின் செயல்முறைத் திட்டத்திலும்,குழந்தைகளின் படைப்பூக்கவுணர்வை, பொது வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க எந்தத் திட்டங்களோ பொறுப்புணர்வோ இல்லாமை. இவையும் இவை தாண்டியும் காரணங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் காரணங்களை மாற்றும் வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய காலம் இது. யோசிப்போமா?

No comments:

Post a Comment