Thursday 7 June 2012

ஆட்டுக்கல் மீசை

 a_young_kaiser_wilhelm_clip_art_19590 மலையாளத்தில்- மாலி

தமிழில்- உதயசங்கர்

.கேசவன் வாத்தியாரின் மீசை ரெம்ப வித்தியாசமானது. அவ்வளவு கரு கருவென நீளமும் அடர்த்தியும் வேறு எந்த மீசைக்கும் கிடையாது. எல்லோரும் “மீசைன்னா அது கேசவன் வாத்தியாரின் மீசை தான்..” என்று சொல்லுவார்கள். கேசவன் வாத்தியாருக்கு இதில் கொஞ்சம் கர்வம் தான். அவர் பெரும்பாலான நேரங்களில் கண்ணாடி முன்னாலேயே நிற்பார். மீசையைத் தடவுவார். முறுக்குவார். விரிப்பார். அதுதான் அவர் வேலை.

இயல்பாக கேசவன் வாத்தியாரின் மீசை வளர்ந்தது. ரெண்டு பக்கமும் மேல் நோக்கி வளைந்து நட்டமாய் நின்றது. தேள் கொடுக்கு போல. சாக்கு தைக்கிற ஊசியைப் போல கூராக இருந்தது. கேசவன் வாத்தியாருக்கு ஒரு யோசனை தோன்றியது. மீசையின் நுனியில் ஏதாவது குத்தி வைக்கவேண்டும். அப்போது மீசை கொஞ்சம் கீழே இறங்கி நிற்கும்.ரொம்ப அழகாகவும் இருக்கும்.

ஏதாவது பெரிய காரியம் செய்வதற்கு முன்னால்? கேசவன் வாத்தியாருக்கு தோசை திங்க ஆசை வரும்.தோசை தின்று ஆசை தீர்ப்பார். மீசை தடவுவார். ஒன்றும் மோசமில்லைஎன்று தோன்றும்.இது தான் வழக்கம்.

பெரிய வேலை செய்யப் போறாரில்லையா? கேசவன் வாத்தியாருக்குத் தோசை திங்க ஆசை வந்தது. தோசை தின்று ஆசையைத் தீர்த்துக் கொண்டார். மீசையைத் தடவினார். பரவாயில்லை..மேசையைத் திறந்தார். காசெடுத்து பைக்குள் போட்டார். கோமுவின் கடைக்குப் போனார். ரெண்டு எலுமிச்சம்பழம் வாங்கினார். மீசையின் ஒவ்வொரு நுனியிலும் ஒவ்வொரு எலுமிச்சம்பழத்தைக் குத்தி வைத்தார். அப்படியே வீட்டிற்கு வந்தார். அப்போதும் மீசையின் ரெண்டு நுனிகளும் பொங்கி எழுந்து நின்றன. அன்னிலிருந்து கேசவன் வாத்தியாருடைய மீசைக்கு என்ன பேர் தெரியுமா? எலுமிச்சைமீசை!

எலுமிச்சைமீசை வளர்ந்து கொண்டிருந்தது. எலுமிச்சை ரொம்பச் சின்னது என்று தோன்றியது அவருக்கு. அது மட்டுமா? எலுமிச்சையின் புளிப்புச்சாறு வாய்க்குள் இறங்கிக் கொண்டேயிருந்தது. ஒரு பெரிய காரியம் செய்யவேண்டும். கேசவன் வாத்தியாருக்கு தோசை திங்க ஆசை வந்தது. தோசை தின்று ஆசையைத் தீர்த்தார். மீசையைத் தடவினார். ம்..பரவாயில்லை..மேசையைத் திறந்தார். காசெடுத்தார். பைக்குள் போட்டார். கோமுவின் கடைக்குப் போனார். ரெண்டு பெரிய உருண்டைக் கத்திரிக்காயை வாங்கினார்.மீசையின் ஒவ்வொரு நுனியிலும் ஒவ்வொரு கத்திரிக்காயைக் குத்தி வைத்தார். அப்படியே வீட்டிற்குத் திரும்பினார். அன்னிலிருந்து கேசவன் வாத்தியாருடைய மீசைக்கு என்ன பேர் தெரியுமா? கத்தரிக்காமீசை!

கத்திரிக்காமீசை வளர்ந்து கொண்டிருந்தது. கத்திரிக்காய் ரொம்பச் சின்னது என்று தோன்றியது. அது மட்டுமா? கத்த்ரிக்காமீசையிலிருந்து வடிந்த நீரின் மணம் வயிற்றைப் புரட்டியது. இனி ஒரு பெரிய காரியம் செய்யவேண்டும்.கேசவன் வாத்தியாருக்கு தோசை திங்க ஆசை வந்தது.தோசை தின்று ஆசையைத் தீர்த்துக் கொண்டார். மீசையைத் தடவினார்.. ம்..பரவாயில்லை.மேசையைத் திறந்தார்.காசை எடுத்தார். பைக்குள் போட்டார்.கோமுவின் கடைக்குப் போனார். ரெண்டு பூசணிக்காய் வாங்கினார். மீசையின் ஒவ்வொரு நுனியிலும் ஒவ்வொரு பூசணிக்காயை குத்தி வைத்தார்.அப்படியே வீட்டிற்குத் திரும்பினார். அப்போதும் மீசையின் நுனிகள் பொங்கி எழுந்து நின்றன. அன்று முதல் கேசவன் வாத்தியாரின் மீசைக்கு என்ன பேர் தெரியுமா? பூசணிக்காமீசை!

ஒரு தடவை கேசவன் வாத்தியார் மீசையிலிருந்து பூசணிக்காய்களை உருவி எடுத்தார். அப்போது அவருடைய மருமகன்,” மாமா! உங்க மீசைநுனி எவ்வளவு கூரா இருக்குன்னு பார்க்கட்டா ? “ என்று கேட்டான். உடனே கேசவன் வாத்தியார் ,” வேண்டாம்..அது விபரீதமாகிவிடும்..” என்று எச்சரித்தார். மருமகன் கேட்கவில்லை. அவன் மீசையின் நுனியில் உள்ளங்கையை வைத்தான். வைத்த உடனே கத்திக் கூப்பாடு போட்டான். உள்ளங்கையிலிருந்து ரத்தம் ஒழுகியது. அன்னிலிருந்து என்னாச்சு? கேசவன் வாத்தியாரின் மீசையை யாரும் தொடுவதில்லை.

பூசணிக்காமீசை வளர்ந்து கொண்டிருந்தது.இன்னமும் பெரிய காரியம் செய்ய வேண்டும். கேசவன் வாத்தியாருக்கு தோசை திங்க ஆசை வந்தது. தோசை தின்று ஆசையைத் தீர்த்துக் கொண்டார். மீசையைத் தடவினார். ம்.. மோசமில்லை.. மேசையைத் திறந்தார். காசை எடுத்தார். பைக்குள் போட்டார். கோமுவின் கடைக்குப் போனார். ஊஞ்சல் வாங்கினார்.மீசையில் கட்டினார். அப்படியே வீட்டிற்கு வந்தார்.அப்போதும் மீசையின் நுனிகள் பொங்கி எழுந்து நின்றன. மருமகன் அதில் ஊஞ்சலாடினான்.அன்னிலிருந்து கேசவன் வாத்தியாரின் மீசைக்கு என்னபேர் தெரியுமா? ஊஞ்சல் மீசை!

ஊஞ்சல்மீசை வளர்ந்து கொண்டிருந்தது. இப்படியே வளர்ந்தால் குழப்பமாகி விடுமே! முத்லில் எலுமிச்சம்பழம் குத்தினார். அது போதவில்லை. அப்புறம் கத்திரிக்காய் குத்தினார். கத்திரிக்காயும் போதவில்லை. பூசணிக்காயைக் குத்தினார். பூசணிக்காயும் போதவில்லை. பிறகு ஊஞ்சல் கட்டினார். ஊஞ்சலும் போதவில்லை. இனிமேல் என்ன செய்ய? ரொம்பப் பெரிய காரியம் செய்யவேண்டும். கேசவன் வாத்தியாருக்கு தோசை திங்க ஆசை வந்தது. தோசை தின்று ஆசையைத் தீர்த்தார். மீசையைத் தடவினார்.ம்.. பரவாயில்லை..மேசையைத் திறந்தார். காசை எடுத்தார். பைக்குள் போட்டார். கோமுவின் கடைக்குப் போனார்.இட்லி,தோசைக்கு அரிசி அரைக்கிற ஆட்டுக்கல் ரெண்டு வாங்கினார்.மீசையின் ஒவ்வொரு நுனியிலும் ஒவ்வொரு ஆட்டுக்கல்லைக் குத்தி வைத்தார். ஆட்டுக்கல்லைத் துளை போட்டு மீசையில் சொருகினார். அப்படியே வீட்டிற்குத் திரும்பினார். அப்போதும் மீசையின் நுனிகள் பொங்கி எழுந்து நிற்கின்றன.

அன்னிலிருந்து கேசவன்வாத்தியாரின் மீசைக்கு என்ன பேர் தெரியுமா?

ஆட்டுக்கல்மீசை!

No comments:

Post a Comment