Friday 8 June 2012

இன்னும் மீதமிருக்கும் கிராமியப்பாடல்

உதயசங்கர்therukkoothu

வாழ்வில் சிலசமயம் ஏன் இப்படி நடக்கிறதென்றோ எப்படி இப்படி நடக்கிறதென்றோ புரிந்து கொள்ள முடிவதில்லை. அப்படி பல சம்பவங்கள் என் வாழ்விலும் நடந்தேறின. அதிலும் குறிப்பாக எனக்கு வேலை கிடைத்த சம்பவம். 1983-ஆம் ஆண்டு எழுதிக் கொண்டிருந்த பல போட்டிப்பரீட்சைகளின் நடுவே ரயில்வே தேர்வாணையத்தின் உதவி நிலைய அதிகாரிகளுக்கான பரீட்சை எழுதியிருந்தேன். தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் பரீட்சையும் எழுதியிருந்தேன். இன்னும் பல வங்கித் தேர்வுகளும் எழுதியிருந்தேன். எல்லாப் பரீட்சைகளையும் பாரபட்சமில்லாமல் ஒன்று போலவே எழுதியிருந்தேன். ஒன்றை மிக நன்றாகவும், ஒன்றை மிக மோசமாகவும் எழுதுகிற பழக்கம் எப்போதும் இல்லை. அ தாவது எப்போதும் போல ஏனோதானோவென்று எழுதியிருந்தேன். நாங்கள் அப்போது வேலை கிடைப்பதை லாட்டரிச் சீட்டில் பரிசு விழுவதாக நினைத்துக் கொள்வோம். ஏனெனில் லாட்டரிச் சீட்டில் பரிசு விழுவதற்கு எந்த தர்க்கசாத்தியங்களும் கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் விழலாம். விழுந்ததற்கோ விழாமல் போனதற்கோ எந்தக் காரணமும் இல்லை. யாருக்கு வேண்டுமானலும் விழலாம் என்ற சாத்தியமே அதன் மீது ஒரு சூதின்வசீகரத்தை ஏற்படுத்துகிறது. எப்போது வேண்டுமானாலும் தனக்கு விழலாம் ஆனால் எப்போது விழும் என்று தெரியாத புதிர்த் தன்மையே அதில் மீண்டும் மீண்டும் ஈடுபடத்தூண்டுகிறது. அது தான் இந்தப் போட்டிப் பரீட்சைகளிலும் நிகழ்ந்தது. யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வேலை கிடைக்கலாம் என்ற ஈர்ப்பில் தான் விளக்கைச் சுற்றும் சிறுபூச்சிகளைப் போல இந்தப் போட்டி பரீட்சைகளில் இவ்வளவுபேர் பங்கேற்கிறார்கள். தன்னுடைய குடிமகனுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்ற குறைந்தபட்சப் புரிதல் மக்களிடம் இல்லாததால் அரசே இப்படி வேலைக்கான பந்தயத்தை நடத்துகிறது.

நானும் இப்படிப் பல வேலைப் பந்தயங்களில் கலந்து கொண்டிருந்ததால் எதில் நன்றாக ஓடினோம் எதில் நன்றாக ஓடவில்லை என்று தெரியாமல் போயிற்று. எனவே வழக்கம் போல ரயில்வே பரீட்சையும் எழுதினேன். மூன்று மாதங்களில் நேர்முகத்தேர்விலும் கலந்து கொண்டேன். பரீட்சை என்ற கண்டம் தாண்டினாலும் நேர்முகத்தேர்வில் பல பேர் அவுட்டாகி விடுவார்கள். அதனால் எனக்கு பெரிய நம்பிக்கையெல்லாம் இல்லை. சிறிது நாட்களில் என் அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதற்காக சென்னையை முற்றுகையிட முயற்சித்துக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் கோவில்பட்டியிலிருந்து சி.எஸ்., வெள்ளைத்துரை, டி.மனோகர், போயிருந்தார்கள். நானும் அவர்களை உத்வேகத்துடன் நினைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். அங்கே சும்மா ஒரு மாதம் சுற்றிக் கொண்டிருந்தது தான் மிச்சம். திடீரென்று ஒரு நாள் வீட்டிலிருந்து எனக்கு உதவி நிலைய அதிகாரியாக வேலை நியமன உத்தரவு வந்திருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும் கடிதம் வந்தது. உடனே சென்னை முற்றுகையைக் கை விட்டு கோவில்பட்டி வந்தேன். அதற்கப்புறம் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்துத் தான் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்துக்கு வந்து ஆஜராகும் படி தாக்கல் வந்தது. எனக்கு ஆச்சரியம். நான் பரீட்சை எழுதியது திருநேல்வேலியில். பாஸாகி நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டது மதுரையில். ஆனால் வேலை திருச்சியில். என்ன ஒரு விநோதம்?

திருச்சி நகரத்தைப் பற்றி எதுவும் தெரியாது.கு.ப.ரா. கதைகளில், எம்.வி.வெங்கட்ராம் கதைகளில், கரிச்சான்குஞ்சு எழுதிய பசித்தமானுடம் நாவலில், தி.ஜானகிராமனின் கதைகளில், நாவல்களில், மட்டும் தான் திருச்சி, தஞ்சாவூர், மாயவரம், கும்பகோணம், போன்ற ஊர்களைத் தரிசித்திருக்கிறேன். மற்றபடி எதுவும் தெரியாது. திருச்சி கோட்டத்தில் எனக்கு வேலைக்கான ஆர்டரைக் கொடுத்து அங்கே திருச்சியில் இருந்த மண்டல ரயில்வே பயிற்சி பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள். அப்போது அங்கே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மிகத் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த நேரம். சோலைக்குயில்கள் என்ற பெயரில் மாதந்தோறும் கவியரங்க நிகழச்சி மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி இடத்தைக் கண்டு பிடித்தேன். எண்பதிலிருந்தே நான் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்ததால் தமுஎச தோழர்களுக்கு என் பெயர் அறிமுகமாயிருந்தது. நான் அந்தக் கூட்டத்துக்குப் போன போது என்னைப் போலவே சிறிய உருவத்துடன் மெல்லிய குரலில் கவிதையை பாடல் போன்று ராகத்துடன் பாடிக் கொண்டிருந்தார். ஏனோ அவரைப் பார்த்ததும் எனக்குப் பிடித்து விட்டது. மனதுக்கு மிக நெருக்கமான ஒருவரைச் சந்தித்த ஒரு நிறைவு தொன்றியது. கூட்டம் முடியும் வரை நிகழச்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பின்னர் நின்று கொண்டிருந்த அந்தத் தோழரிடம் என்னை அறிமுகம் செய்தபோது நான் எதிர்பார்த்த மாதிரியே மிக உற்சாகமான உடல்மொழியுடன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டார் அவர்.

“ உறவு கதை எழுதிய உதயசங்கரா? “

என்று திரும்பத் திரும்ப மனம் நிறைந்த சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் தோழர் முகில். பின்னால் நாவலாசிரியராக, கவிஞராக, நாடகச்செயல்பாட்டாளாராக, நாட்டுப்புறகலை ஆய்வாளராக, பாடகராக, பரிணமித்த தோழர் முகில். அவரருகே கவிஞராகத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கி இன்று தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கவிஞர்.நந்தலாலா. நான் திருச்சியில் பயிற்சியில் இருந்த காலம் முழுவதும் இவர்களுடனான என் தோழமையே என்னைத் தக்கவைத்துக் கொள்ள உதவியது. கோவில்பட்டியில் நாங்கள் நடத்திய கலை,இலக்கிய, அரசியல், தத்துவ வாசிப்புகள், உரையாடல்கள், நான் எங்கு போனாலும் என் மதிப்பைக் கூட்டியது. அத்துடன் நாங்கள் சிருஷ்டி என்ற வீதி நாடகக்குழுவும் நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது தான் தமிழகத்தில் வீதி நாடகங்கள் பரவலாக அறியப் பட்டுக்கொண்டிருந்த காலம். அதில் பங்கேற்ற அநுபவமும் எனக்கு மிக உதவியாக இருந்தது.

நான் போகிற இடங்களில் எப்போதும் அங்கே இல்லாத விசயங்களைக் கவனித்து அதை உருவாக்கும் திட்டங்களைத் தீட்டுவேன். அப்படி அங்கே ஒரு நாடகக்குழு உருவாக்கும் திட்டத்தை நான் தோழர் முகிலிடம் பிரஸ்தாபித்தேன். முகில் மிகுந்த உற்சாகத்துடன் அதைச் செய்யும் வழிகளைப் பற்றி யோசித்தார். நான் அன்றாடம் திருவெறும்பூர் சென்று தோழர் முகிலைச் சந்தித்தேன். மிக எளிமையான, உளம் நிறைந்த சிரிப்புடன், ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஆச்சரியமான முகபாவத்துடன், கைகளைப் பிடித்துக் கொண்டு பேசுகிற அவரிடம் நான் தேடிய அந்நியோன்யத்தை உணர்ந்தேன். அதற்காகவே அடிக்கடி அவரைத் தேடிப் போனேன். நான் எப்போது சென்றாலும் அவர் வீட்டில் சாப்பிடாமல் வந்ததில்லை. அவருடைய துணைவியார் ஜோதிமணியின் அன்பு அவருக்கு நிகர்த்தது.

நாங்கள் பி.ஹெச்.இ.எல்லில் இருந்த தோழர்களை ஒருங்கிணைத்து பயிற்சி கொடுத்தோம். வெண்மணி என்ற நாடகக்குழு உதயமானது. அதில் தோழர் முகில், அவருடைய துணைவியார் ஜோதிமணி, கோபால், அவருடைய துணைவியார், என்று ஒரு பெருங்கூட்டமே நடிக்க முன்வந்தார்கள். கோவில்பட்டியில் நாங்கள் போட்டுக் கொண்டிருந்த நாடகங்களை அங்கே நான் சொல்லிக் கொடுத்தேன். இயல்பாகவே கூத்துக்கட்டும் பரம்பரையில் வந்திருந்த முகில் நாடகக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். பின்பு முகிலே சொந்தமாக நாடகங்களை எழுத ஆரம்பித்து விட்டார். அத்தோடு சிறுகதைகளும், பாடல்களும் எழுதிக் கொண்டிருந்தார். தமுஎச மேடைகளில் பாடல்கள் பாடினார். நாட்டுப்புறக்கலையில் தமுஎச கவனம் செலுத்த அவருடைய தொடர்ந்த பங்களிப்பும், விவாதங்களும் முக்கியமான காரணம். அவருடைய குரல் ஓங்கி ஒலிக்கும் ஓங்காரக் குரலல்ல. பெண்மையின் சாயலும் குழைவும் கொண்ட, மனதை உணர்ச்சிகளின் அலைகளில் தத்தளிக்க விடுகிற, காய்ந்து போன மனதில் ஈரம் துளிர்க்க வைக்கிற குரல். ஏக்கமும், இயலாமையும், கோபமும், கொப்பளிக்கும் குரல். எந்தப் பாடல் பாடினாலும் அதன் அடியூற்றாக ஒரு சோக இழை ஊடும் பாவுமாக நெய்யப்பட்டிருக்கும்.

காத்திரமான பல சிறுகதைகளையும், தமிழில் மிக அபூர்வமாகவே எழுதப்பட்டிருக்கும் தொழிற்சங்க நாவல்களில் முகில் எழுதிய நீயாகவும் நானாகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்று. அவர் எழுதிய ராமையாவின் குடிசை என்ற வெண்மணி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகம் மிகவும் புகழ் பெற்றது. முற்போக்கு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக உருவானார் தோழர் முகில். பின்னர் வழக்கம் போல நான் பயிற்சி முடித்து போஸ்டிங் ஆர்டர் கிடைத்து வேளானந்தல் போய் விட்டேன் அதன் பிறகான அவருடைய அறிவொளி இயக்கக் கலைப்பயண ஒருங்கிணைப்பாளராகச் செய்த பணி புதிய உத்வேகம் தந்தது. தொடர்ந்து தமுஎச மேடைகளில் அவருடைய குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது.அவருடைய எளிமையான கள்ளங்கபடமில்லாத சிரிப்பு யாரையும் தொற்றிக் கொள்ளும். அவருடைய அயராத உழைப்பின் மீது நான் காதல் கொண்டேன்.

அவருடைய நாவல், நீயாகவும் நானாகவும் 1994-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த நாவலின் இறுதிப் பத்தியில் அதன் நாயகன் வேலாயுதம் இப்படிச் சொல்கிறான்.

“ இப்பவும் நான் இந்த சங்கத்தை மதிக்கிறேங்..தலைவரா இல்லாட்டியும் ஒரு தொண்டனாகவாவது தொடர்ந்து வேலை செய்வேன்…பிரச்னை சங்கத்தில இல்லை..ஒரு சில ஆட்களோட, ஒருத்தர ஒருத்தர் ஜெயிக்கணுங்குற மன அமைப்புல இருக்கு…அந்த ஆட்கள்லாம் ஒரு காய்ச்சல்ல பொல பொலன்னு உதிர்ந்திருவாங்க…”

ஆனால் இன்னும் இடதுசாரி அமைப்புகளில் அந்தக் காய்ச்சல் வரவில்லை. எனவே எல்லாஇடங்களிலும் இந்தப் போட்டி வேர் பிடித்துக் கொண்டிருக்கிறது. தோழர் முகில் அப்போதே இதை உணர்ந்திருக்கிறார்.ஒரு கலைஞனாலேயே காலத்தை முன்னுணரமுடிகிறது. அதோ கேட்கிறது உணர்ச்சி ததும்பும் கிராமியப்பாடல். வாழ்வின் அர்த்தத்தையும், போராட வேண்டியதின் அவசியத்தை, பேசுகிறது. அதில் மானுடகுலத்தின் மீதான அன்பு பிரவகிக்கிறது. தன் எளிய இசையால், எளிய சந்தத்தால், எளிய பாவத்தால், எளிய பாடல்வரிகளால், நம் மனதை நிறைத்துச் செல்கிறது. அங்கே நின்று கொண்டிருக்கிறார்…தோழர் முகில்… இன்னமும் பாடப்படாத மீதமிருக்கும் பாடலைப் பாட…….

நன்றி- மீடியா வாய்ஸ்

2 comments:

  1. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. தோழர் முகிலின் குரலை அறிந்திராத போதிலும் உங்கள் வார்த்தைகளில் கசிந்திருக்கும் அவரின் மீதான ப்ரியத்தை உணர முடிகிறது.

    ReplyDelete