Wednesday 13 June 2012

என்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு

safdar உதயசங்கர்

ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கோவில்பட்டியில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான் இளம் மொட்டுகளாக நான், நாறும்பூநாதன், முத்துச்சாமி, சாரதி, மொட்டுகள் என்ற கையெழுத்துப் பத்திரிகை மூலமாக கோவில்பட்டி இலக்கிய அரங்கத்துக்குள் பிரவேசித்தோம். பெரிய வாசிப்பனுபவமோ, இலக்கிய அனுபவமோ, எங்களுக்குக் கிடையாது. அப்படி ஏதாவது கொஞ்சநஞ்சம் தெரிந்திருந்தது என்றால் அது நாறும்பூநாதனோடு சேர்ந்திருந்த வாசனையால் தான். நாறும்பூநாதனின் அண்ணன் ஆர்.எஸ். மணி வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருடைய அரசியல், தொழிற்சங்க ஈடுபாட்டினால் வாங்கிச் சேகரித்திருந்த சோவியத் புத்தகங்களை நாறும்பூநாதன் வாசித்துவிட்டு எங்களிடம் விடுகின்ற கதைகளை நாங்கள் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். அவனுடைய முயற்சியினாலேயே அந்தக் கையெழுத்துப்பத்திரிகை சாத்தியமாயிற்று. எங்களுடைய சிந்தனைத்துளிகளும் கவிதைப்பிரவாகங்களும், புரட்சிக்கட்டுரைகளும் அதில் கொட்டிக்கிடந்தன. அதைப் படிப்பதற்காகச் சுற்றுக்கு விட்டோம். அதிலிருந்து பிடித்தது இந்த இலக்கியக்கோட்டி.

ஊரில் இரண்டு இலக்கியக்கோஷ்டிகள் இருந்தது எங்களுக்குத் தெரியாது. ஒரு அணி பலமாக எங்களை வரவேற்க, இன்னொரு அணியோ எங்களை நசுக்கிவிடத் துடித்தது. அப்போது தான் எங்களுக்கு இலக்கியத்திலும் அரசியல் உண்டு என்பது தெரிந்தது. ஆனாலும் நாங்கள் அசரவில்லை. அதுவரை நாங்கள் அறிந்திராத புதியபிரதேசத்தின் கவர்ச்சியில் மயங்கிக் கிடந்தோம். யார் பேசினாலும் கேட்டோம். அவர்கள் சிந்திய ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே பத்திரமாகப் பொறுக்கியெடுத்தோம். அதைச் சுமந்து கொண்டு போய் இன்னொரு கோஷ்டியிடம் இறக்கினோம். அவர்கள் சிந்தியதை எதிர்கோஷ்டியிடம் கொண்டு சேர்த்தோம். இப்படியே எங்களை நாங்களே உரமேற்றிக் கொண்டோம். அப்போது சென்னை சோழமண்டலத்தில் மேற்கு வங்கத்திலிருந்து நாடகாசிரியர், மூன்றாவது அரங்கின் முன்னோடி, பாதல் சர்க்கார் பயிற்சி கொடுக்க ஒரு பயிற்சிப்பட்டறை நடந்தது. அதன் வீச்சில் தமிழகத்தில் பல இடங்களில் புதிய முறையிலான வீதி நாடகக் குழுக்கள் உருவாயின. கோவில்பட்டியிலும் தர்சனா என்ற பெயரில் ஒரு நாடகக்குழு உருவானது. எழுத்தாளர்கள், கௌரிஷங்கர், வித்யாஷங்கர், தேவதச்சன், மனோகர்( திரைக்கலைஞர் சார்லி), மாரீஸ், திடவைப்பொன்னுச்சாமி, உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, ராம், அப்பாஸ், என்று பெரிய கூட்டமே அதில் ஈடுபட்டோம். பேரா.ராமானுஜத்தின் நாடகங்கள், தேவதச்சனின் நாடகங்கள், நாங்களாகக் கூட்டு முயற்சியில் உருவாக்கிய நாடகங்கள் என்று பத்து நிமிடம், இருபது நிமிட நாடகங்களை உருவாக்கினோம்.

நாடகச்செயல்பாட்டில் கோவில்பட்டி பாணி ஒன்று தானாகவே உருவானது. அதாவது நாடக ஸ்கிரிப்டோ, வசனமனப்பாடங்களோ , மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் ஒத்திகைகளோ இன்றி, எல்லோரும் கூடிப் பேசுவதின் மூலம் நாடக ஸ்கிரிப்டை, வசனங்களை சிருஷ்டித்தோம். ஆனாலும் அது மாறிக் கொண்டே யிருக்கும். ஒவ்வொரு இடங்களில் போடப்படும்போது அடிப்படைச் சாராம்சம் மாறாமல் உருமாறி வேறொன்றாக மாறும். இதன் புதுமையில் எங்களுக்கு பெரிய ஈர்ப்பு வந்தது. கோவில்பட்டியைச் சுற்றி ஏராளமான கிராமங்களில் நாங்கள் நாடகம் போட்டோம். இந்திய சோவியத் நட்புறவுக்கழகத்தின் சார்பிலும், தொழிற்சங்கங்களின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களிலும் எங்கள் தர்சனா நாடகக்குழு இருந்தது. கௌரிஷங்கர், வித்யாஷங்கர், மனோகர், வேலை தேடி, வேலை கிடைத்து கோவில்பட்டியை விட்டு இடம் பெயர்ந்து விட்டனர். தர்சனாவின் ஆரக்கால்களில் முக்கியமான ஆரக்கால்கள் அவர்கள். தர்சனா முடங்கியது. இதற்குள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகள் பல்கிப் பெருகியது. இயல்பாகவே எங்கள் மனம் தமுஎச வில் இருந்தது. அங்கே ஒரு புதிய நாடகக்குழு தமிழ்ச்செல்வன் தலைமையில் துவங்கப் பட்டது. சிருஷ்டி என்ற அந்த நாடகக்குழுவில் தான் பால்ராமசுப்புவை நான் சந்தித்தேன்.

பால் என்ற அடைமொழி அவர் ஆவின் பால்பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் வந்து சேர்ந்து கொண்டது. கட்டையான உருவம், முன் வழுக்கை விழுந்த தலை, துறுதுறுவென்ற உடல்மொழி, கொஞ்சமும் யோசிக்காமல் கடகடவென வருகிற பேச்சு, எப்போதும் சிரிப்பு, இயல்பான நகைச்சுவையுணர்வு, எல்லோரிடமும் எந்த கௌரவமோ, வயது வித்தியாசமோ இல்லாமல் பழகுகிற தன்மை, யாருக்குத் தேவையென்றாலும், எந்த உதவியும் செய்கிற தோழமை, இவையெல்லாம் சேர்ந்து எங்கள் ஜமாவிலும், சிருஷ்டி நாடகக்குழுவிலும் முக்கியமான ஒரு ஆளுமையாகவும் எங்கள் அன்புக்குரிய அண்ணனாகவும் மாறி விட்டார் பால்ராமசுப்பு. நாங்கள், தத்துவம், அரசியல், இலக்கியம், என்று புத்தகங்களாகப் படித்து பெரிய அறிவுஜீவிகள் மாதிரி பாவனை செய்து கொண்டு திரிந்தோம். அதனால் நாங்கள் எங்கள் நாடகங்களுக்கு ஒத்திகை தேவையில்லை. ஏனெனில் நாடகநிகழ்வுகளில் எதிர்பாராமல் நேரும் எந்தச் சூழ்நிலையையும் நாங்கள் சமாளித்து விடுவோம் என்று இறுமாப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால் பால்ராமசுப்பு பெரிய படிப்பாளியில்லை. தேவைக்குக் கொறிக்கிறவர். நாடகங்களில் வெளிப்படும் அவருடைய உடல்மொழியும், டைமிங்கான வசனங்களும் மிகத் தேர்ந்த கலைஞன் என்று எங்களுக்கு உணர்த்தியது. அவருடைய லகுவான தொடர்புமொழியால் மிக விரைவில் சிருஷ்டி நாடகக்குழுவின் மேலாளராகவும் விட்டார். நாடக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிற வேலையையும் செய்தார். எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தமிழ்ச்செல்வனிடம் கேட்க முடியாததை அண்ணன் பால்ராமசுப்புவிடம் உரிமையுடன் கேட்போம். அவரும் எங்களுக்கு எந்தக் குறையும் – கேட்ட நேரத்தில் டீ, சிகரெட்,- இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

எப்போதும் போல, எல்லா விஷயங்களிலும் நடப்பது போல தமுஎச இந்த வீதி நாடகச் செயல்பாடுகளை உடனே அங்கீகரிக்க வில்லை. சந்தேகத்தின் கூர்வாளால் வீதி நாடகச்செயல்பாட்டாளர்களான அஸ்வகோஷ், தமிழ்ச்செல்வன், பிரளயன், போன்றோரிடம் சண்டையிட்டது. ஆனால் விடாப்பிடியான முயற்சிகளாலும், நாடகங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பினாலும், இந்த வீதி நாடகச்செயல்பாடுகளை ஏற்றுக் கொண்டது. ஆனாலும் திருப்தியில்லை. எங்களைச் சீர்படுத்த வேண்டும் என்று நினைத்தது. எனவே அப்போது நாடகவிற்பன்னர்களாக இருந்த எஸ்.வி.சகஸ்ரநாமம், கோமல்சுவாமிநாதன், போன்றோரின் தலைமையில் சென்னையில் ஒரு பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்தது. எப்போதும் நாடகங்களில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காகவெல்லாம் சிரமப்படமாட்டார் பால்ராமசுப்பு. அவர் அவராகவே வந்து அந்தக் கதாபாத்திரத்தை அவருக்கான கதாபாத்திரமாக மாற்றி விடுவார். அவருக்குப் பயிற்சி கொடுக்க மிகுந்த சிரமப்பட்டனர். பாரதியின் பாஞ்சாலி சபதத்தை நாடகப்பயிற்சிக்கு எடுத்தவர்கள், பால்ராமசுப்புவை துச்சாதனன் வேடத்துக்குத் தேர்வு செய்தனர். அஞ்சவில்லை பால்ராமசுப்பு. துச்சாதனனை கட்டுடைத்து விட்டார். கொடிய வில்லனான துச்சாதனனை விழுந்து விழுந்து சிரிக்கும்படியாகக் காமெடியனாக்கி விட்டார். அவர் மீது தவறில்லை. அவர் இயல்பு அது. நாடகம் வேறு ஒரு பரிமாணத்துக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அது உவப்பாகயில்லை. உடனே அவரைக் கண்டித்து அந்தக் கதாபாத்திரத்தை அவரிமிருந்து பிடுங்கி விட்டார்கள்.

பணம், புகழ், அங்கீகாரம், இப்படி எதையாவது எதிர்பார்த்துச் செயல்படும்போது தானே அவை கிடைக்காத போது ஏமாற்றமும் சோர்வும் ஏற்படும். நான் பல முறை அப்படி சோர்வும் விரக்தியும் அடைந்திருக்கிறேன். ஆனால் பால்ராமசுப்பு ஒரு நாளும் சோர்வடைந்தோ, உற்சாகமின்றியோ இருந்து பார்த்ததில்லை. எப்போதும் ஒரு இடத்தில் கட்டிப்போட முடியாதபடிக்குத் தன் வாழ்வை உற்சாகமாக வைத்திருந்தார். எல்லோருக்கும் அவர் ஏதோ ஒரு விஷயத்துக்காகத் தேவைப்பட்டார். தோழர் வீட்டு கலியாணங்களை அவரே முன் நின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். மரணவீடாக இருந்தாலும் அவரே எல்லாவற்றையும் சிரமேற்கொண்டு செய்து முடிப்பார். அவர் இருக்கும் இடமே உற்சாகமாகி விடும். நாங்கள் சிருஷ்டி நாடகக்குழுவில் இயங்கிக் கொண்டிருக்கும்போது அடிக்கடி பால்ராமசுப்புவின் வீட்டில் கோழிச்சோறு சாப்பிடுவோம்.அப்போது அவருடைய துணைவியார் கொஞ்சம் கூச்சத்துடனும், மிகுந்த அக்கறையுடனும் எங்களுக்கு உணவு பரிமாறுவதைப் பார்த்திருக்கிறேன்.

நான் வேலை கிடைத்து வெளியூர்களில் அலைந்து திரிந்து வந்தபோது அவருடைய துணைவியார் ஆர்.. மல்லிகா இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகுந்த தன்னம்பிக்கையும், கம்பீரமும் கொண்ட தலைவராக அவருடைய துணைவியார் மாறியிருந்தார். பின்னர் கோவில்பட்டி நகர் மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்தினார். அடிக்கடி அதைச் சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுவார் பால்ராமசுப்பு.

“ எல உங்க அக்காவுக்கு இவ்வளவு திறமை இருக்கும்னு உனக்கு தெரியுமால..”

என்று சொல்லுவார். எனக்கு மிக அபூர்வமான மனிதராகவே தெரிந்தார் பால்ராமசுப்பு.

கோவில்பட்டியை விட்டு போனபிறகு சில வருடங்களிலே நாடகங்களை மறந்து விட்டேன். பின்னர் நாடகங்களைப் பார்க்கிற பார்வையாளனாக மட்டுமே நான் மாறிப் போனேன். ஆனால் பால்ராமசுப்பு அப்படியில்லை. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்தனை நாடகக்குழுக்களோடும், கலைக்குழுக்களோடும் உயிரோட்டமுள்ள தொடர்பை வைத்திருக்கிறார். இப்போதும் எந்த நாடகக்குழுவிலும் நடிகராகி விடுகிறார். கலைக்குழுவினர் வந்தால் பின்பாட்டு பாடுகிறார், அல்லது ஹார்மோனியம் இசைக்கிறார். கலைஞர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்கிறார். இப்போது தான் இங்கே தான் பார்த்த மாதிரி இருக்கும், அங்கே இருப்பார். அறுபதைக் கடந்த பின்னரும் அவருடைய சுறுசுறுப்பின் வேகம் குறைய வில்லை. உற்சாகத்தின் எல்லை சுருங்கவில்லை.

அதோ ஒரு தோழரின் வீட்டுத் திருமண வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பால்ராமசுப்பு. மதியம் இனாம் மணியாச்சி பகுதியில் விவசாயிகள் சங்க உறுப்பினர் பதிவு போடவேண்டும். மாலையில் புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சியை நாலாட்டின்புத்தூரில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது. எப்போதும் பம்பரம் போல சுற்றிக் கொண்டேயிருக்கும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் பிரமிப்பாய் இருக்கும் தன்னலமற்ற இந்தத் தோழர்களின் உழைப்பால் புதிய மாற்றம் நிகழ்ந்திடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

இதோ கிடுகிடுவென என்னை நோக்கிச் சிரித்துக்கொண்டே வந்து கொண்டிருக்கிறார் என்றும் இளைஞன், எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு!

நன்றி- மீடியா வாய்ஸ்

2 comments:

  1. உதயசங்கர் அவர்களே! "சந்தேகத்தின் கூர்வாளால்" த.மு.எ.ச சண்டையிட்டதா? லேசா நிரடுதே ஐயா! ---காஸ்யபன்

    ReplyDelete
  2. 1.என்னுடைய ஜிந்தாபாத் ஜிந்தாபாத் புத்தகத்தில் பெரிதும் மூத்தோர் பற்றியே எழுதிவிட்டேன்.அன்றைய இளையோனான ராமசுப்புவை விட்டுவிட்டேன்.என்றாலும் எழுதியிருக்கணும்.அம்மனக்குறையை இக்கட்டுரை நீக்கி விட்டது.நான் எழுதினால் என்ன நீ எழுதினால் என்ன..நாம் எழுதிவிட்டோம் என்கிற மகிழ்ச்சிதான் எனக்கு.

    2.அன்று தமுஎச தலைமையை நாம் வாயடக்கமில்லாமல் கேலி பேசித் திரிந்ததால் ஏற்பட்ட ஒரு இடைவெளிதான் அது.மற்றபடி நம்முடைய நாடக முயற்சிகளை மனம் நெகிழ்ந்து உச்சி மோந்து பாராட்டுபவராகத்தான் தோழர் கே.எம்.இருந்தார்.

    ReplyDelete