Wednesday, 12 November 2014

காலவெளியில் நடமிடும் கவிதைகள்

உதயசங்கர்

devathassan

மனித குல வரலாற்றில் ஆதியில் தோன்றிய கலை வடிவம் குகைச்சுவர் ஓவியங்கள் தான் என்றாலும் மனிதர்கள் ஆதிச்சடங்குகளின் போது உச்சரித்த மந்திரச்சொற்களே கவிதைக்கான மூலம் எனலாம். திரும்பத் திரும்ப உச்சரித்த ஒரே மாதிரியான சொற்கள் மனதில் விளைவித்த உளவியல் மாற்றமே மந்திரச்சடங்குகளும் மந்திரப்பாடல்களும் உருவாகக் காரணம். இந்த மந்திரப்பாடல்களிலிருந்து வாழ்வியல் பாடல்களும் பின்னர் கவிதைகளும் தோன்றின என்று மானிடவியலாளர்கள் கருதுகின்றனர். எனவே ஆதியில் தோன்றிய பாடல்களே தற்போது நவீனக்கவிதைகளாக மாறியிருக்கின்றன. பாம்பு தன் சட்டையை உரித்து உரித்து தன்னைப் புதுசாக்கிக் கொள்வதைப் போல கவிதையும் கால,தேச, வர்த்தமானக்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தில் கவிதை மொழியின் ஓசை நயத்துடன் கூடிய சந்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. இடைவெளிகள் நிறைந்த மௌன வாசிப்பின் வழியே காட்சிகளைப் படைத்து நம் புனைவின் எல்லைகளை விரிக்கின்றனர்.இதோ தமிழின் முக்கியமான கவிஞரான தேவதச்சன் தன் கவிதையில் காட்டும் இடைவெளியப் பாருங்கள்.

காற்றில் வாழ்வைப்போல

விநோத நடனங்கள் புரியும்

இலைகளைப் பார்த்திருக்கிறேன்

ஒவ்வொரு முறையும்

இலையைப் பிடிக்கும் போது

நடனம் மட்டும் எங்கோ

ஒளிந்து கொள்கிறது.

அந்த வாழ்வின் நடனங்களைப் புரிந்து கொள்ளவே மீண்டும் மீண்டும் மனிதன் இலைகளைப் பிடிக்கிறான் இல்லையா? நிலக்காட்சிகளும் யதார்த்தமான அன்றாடக் காட்சிச்சித்தரிப்புகளும் தேவதச்சனின் கவிதையை எளிமை போல காட்டும் ஈர்ப்பு விசைகள். அந்த ஈர்ப்பின் வழியே நம்மை ஆழ்கடலின் அதிசயங்களைக் காணச்செய்கிறார்.

கடவுள் விடுகிற மூச்சைப்போல் காற்று வீசும் கரிசல்வெளி

வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம்

கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்

தொலைதூரத்து எந்திரம் ஒன்றின் குது குதுகுது மந்திரம்

பருத்தி பறித்து மடித்துணியில் துருத்திக் கொண்டிருக்கும் பார்வதி

அவளோடு சேர்ந்து குனிந்திருக்கும் அத்துவானவெளி

யாரும் அழைக்காது திரும்பிக் கொண்டிருக்கும் காலம்.

இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் காலம். மாறிக் கொண்டேயிருக்கும் காட்சிகள். வாழ்க்கை ஒரு போதும் பின்னோக்கிப் போவதில்லை. உறைந்து நிற்பதுமில்லை. ஆனால் கவிஞருக்குக் காட்சிப்பிழையாக காலமும் காட்சியும் உறைந்து நின்று வேறொரு காலமும் காட்சியும் தெரிகிறது.

காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை

காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்

காட்டைத்தூக்கிக் கொண்டு அலைகின்றன

வெட்டவெளியில் ஆட்டிடையன் ஒருவன்

மேய்த்துக் கொண்டிருக்கிறான்

தூரத்து மேகங்களை

சாலை வாகனங்களை

மற்றும் சில ஆடுகளை.

கனடா நாட்டு இலக்கிய விருதான விளக்கு விருதையும், இயல் விருதையும் தன் கவிதை நூல்களுக்காகப் பெற்றுள்ள கவிஞர் தேவதச்சன் உலகின் உள்ளார்ந்த உண்மையை உணர்வதற்காக தன் புனைவுகளின் மூலம் சில ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறார். நாம் தினசரி கண்ணாடி பார்க்கிறோம். கண்ணாடி பார்க்காதவர்கள் உண்டா என்று நீங்கள் கேட்க நினைக்கிறீர்கள் இல்லையா? இப்போது கவிஞர் தேவதச்சன் திரும்பவும் கேட்கிறார் உண்மையில் நீங்கள் கண்ணாடியைத் தான் பார்க்கிறீர்களா?

எனக்கு ஏழுகழுதை வயசாகியும்

கண்ணாடியை நான் பார்த்ததில்லை

ஒவ்வொரு முறையும் எதிரில்

நிறகையில் என் முகரக்கட்டை தான் தெரிகிறது.

கண்ணாடியைக் காணோம்

உடைத்தும் பார்த்தேன்

உடைந்த ஒவ்வொரு துண்டிலும்

ஒரு உடையாத கண்ணாடி

லேசான வெட்கம் எனக்கு

பார்க்க முடியாத கண்ணாடியைத் தான்

பார்க்க முடிகிறது.

ஆக யாரும் கண்ணாடியைப் பார்ப்பதில்லை. கண்ணாடியில் தன்னைத்தான் பார்க்கிறார்கள். தன்னைப் பார்க்காமல் வெறுமனே கண்ணாடியைப் பார்க்க முடியுமா? முடிந்தால் உண்மையை உணர முடியும். எல்லாமனிதர்களுக்கும் உள்ள பேராசை என்னவென்றால் தான் நிரந்தரத்துவம் பெற வேண்டுமென்பது தான். முடிவிலாத இந்த உலகத்தில் மனிதன் மட்டுமே தான் ஏதேனும் ஒரு வகையில் என்றென்றும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இந்த உலகத்தின் படைப்புகள் அனைத்தும் இந்த ஆவலின் விளைவாக எழுந்தவை தான்.

சாய்வாக நான் எறிந்த

ஓட்டுச்சில்

நடனமாடுகிறது தண்ணீரில்

அந்தச் சின்ன விநாடியில்

என்னோடு சேர்ந்து

எல்லாக்காடுகளும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தன

தண்ணீரே தண்ணீரே

உன்னைத் தொட்டுத் தொட்டுப்

பறக்கும் கல்பூச்சியின்

கல்லைத்தான்

உன்னால் பிடிக்க முடியும்

அது உன்மேல் தூவிய

எழுத்துகளை

என்ன செய்ய முடியும்

உன்னால் என்ன செய்ய முடியும்?

காலத்தின் ஓட்டத்தில் படைப்பாளி மறைந்து போகலாம் ஆனால் அவனுடைய படைப்புகள் என்றும் மறையாது. அது தான் அவன் காலத்தின் முன் வைக்கும் சவால். அந்தச் சவாலை கவிஞர் தேவதச்சனின் கவிதைகள் எதிர்கொண்டு காலவெளியில் நடமிடுகின்றன.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

1 comment: