காணும்போதெல்லாம் அதிசயிக்க வைக்கிற அற்புதம் இயற்கையல்லவா? இந்த பூமியெனும் உயிர்ப்பரப்பை எப்படிப் புரிந்து கொள்வது? எத்தனை புற்கள்! எத்தனை பூக்கள்! எத்தனை செடிகள்! எத்தனை மரங்கள்! எத்தனை மலைகள்! எத்தனை கடல்கள்! எத்தனை புழுக்கள்! எத்தனை பூச்சிகள்! எத்தனை பறவைகள்! எத்தனை மிருகங்கள்! எத்தனை மனிதர்கள்! எத்தனை வாழ்க்கை! எந்த ஒரு மனிதனும் மற்றவரைப் போலில்லையே! எந்த ஒருவருடைய வாழ்க்கையும் மற்றவருடைய வாழ்க்கையைப் போலில்லையே! ஆகா இந்த பூமியில் வாழ்வது பேரானந்தமல்லவா!
வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ருசித்துக் குடிக்க வேண்டாமா? இத்தனை அபூர்வமான இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தால் எத்தனை இன்பம் மனிதா? கவிஞர். தேவதேவன் இயற்கையை வாழ்க்கையின் குறீயீடாக்குகிறார். ஒன்றை மற்றொன்றால் குறிப்பது குறியீடென்றால் இயற்கையின் வழி மனிதவாழ்க்கையை குறியீடாக்கி புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.
ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமியிலொரு பச்சைக் கம்பளம் விரித்தேன்
ஒரு மரக்கிளையின் உதவி கொண்டு
புள்ளினங்கள் கொஞ்சும்
ஒரு பள்ளத்தாக்கை எழுப்பினேன்
ஒரு கூழாங்க்கல்லின் உதவி கொண்டு
மலையடுக்குகளையும் அருவிகளையும் உருவாக்கினேன்
ஒரு தேன்சிட்டின் ஆலோசனை கொண்டு
விண்ணிலோர் மாளிகை அமைத்தேன்
ஒரு கண்ணீர்த்துளி கொண்டு
வானமெங்கும் கார்மேகங்களைப் படரவிட்டேன்.
தேவதேவன் தன்னுடைய கவிதைகளில் உணர்ச்சிகளின் வழியே அநுபவங்களை செவ்வியலும் புனைவும் கலந்து படைக்கும் போது வாசகனுக்கு அது புதிய கவிதாநுபவமாகிறது. அன்றாட வாழ்வின் காட்சிரூபங்களை தத்துவ தரிசனமாக்கிவிட விழையும் கவிஞர், தத்துவ தரிசனங்களை அன்றாட வாழ்வில் கண்டு வாசகனுக்குச் சொல்லுகிறது. மற்ற கவிஞர்களிடமிருந்து தேவதேவனை எது வேறுபடுத்துகிறது? சொல்லாமல் சொல்லிச் செல்லும் பாங்கும், பல பரிமாணங்கள் கொண்ட குறியீட்டுத்தன்மையும் ஆகும். மரங்களைப் பற்றிய இவருடைய கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
அறியாது
ஒரு செடியை மண்ணிலிருந்து பிடுங்கி விட்டேன்
திசைகள் அதிரும் தனது பெருங்குரலால்
அது மரமாகி விட்டது என் கையில்
அந்தரவெளியில் துடிதுடித்து
ஆதரவுக்குத் துழாவின அதன் வேர்கள்
பாய்ந்து போய் அதனை அணைத்துக் கொண்டது பூமி
கொலைக்கரத்தின் பிடிதகர்த்து
மேல் நோக்கி பாய்ந்தது புது ரத்தம்
கழுத்தில் பட்ட தழும்புடனே
பாடின தலைகள்.
என்ற கவிதையில் ஒரு உயிரின் பரிதவிப்பைச் சொல்கிறார் கவிஞர். அதே மாதிரி மனிதர்களின் பார்வையில் இயற்கையைக் காண்பதை விட்டு இயற்கையின் கண்கொண்டு நோக்கும்போது மரத்தின் உருவம் எப்படித்தெரிகிறது தெரியுமா?
மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து
தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்து கொண்டிருந்தது
இதுவரை நான் அதன் காலடி என்று நினைத்திருந்த நிலத்தை
அது தன் கழுத்தென்று சொன்னதும்
கவ்வியது என்னைக் கொல்லும் ஒரு வெட்கம்.
தேவதேவனின் கவிதைகளில் புதுமையும் ஆழ்ந்த அர்த்தமும் இணைந்தே வாசகனை யோசிக்க வைக்கிறது. உதாரணத்துக்கு
அசையும் போது தோணி,
அசையாத போதே தீவு
தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற்பொழுதே தூரம்.
காதலைப் பாடாத கவிஞர்கள் உண்டோ. கவிஞர் தேவதேவனும் காதலைப் பாடுகிறார். மெல்லிய ரீங்காரத்துடன் ஆரம்பிக்கும் இசை தன் உடலை ஒரு நதியென பரப்பிக் கொண்டு தன் ஆழ அகலங்களினால் மனதை நிரப்பி புத்தம் புதிதாய் மணம் வீசி ஒரு ஆழ்ந்த தியானத்தைப் போல கடலில் சென்று சேர்வதைப் போல இவருடைய கவிதையும் சாதாரணமாக ஆரம்பித்து ஆழங்களை நோக்கிப் பாய்கிறது.
காதல் என்பது ஒரு சந்திப்பு
காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல்
காதல் என்பது ஒரு இறையனுபவம்
காதல் ஒரு குதூகலம்
காதலுக்குக் காலம் கிடையாது
எந்தச் சொற்களாலும்
உணர்த்தி விட முடியாதது
காதல் மட்டுமே காதலை அறியும்
காதல் கொண்ட இதயத்தில்
காதல் மட்டுமே இருக்கிறது
காதலின் தனிச்சிறப்பு அது
மரணமறியாதது
அது அதீதப் பேதமையின்
பொங்கும் இன்பம்
பௌர்ணமிப் புன்னகை
வாழ்வு தன்னைத்தானே
கண்டுகொண்டு விட்ட திகைப்புக் கொண்டாட்டம்
ஆனந்தக்கிறக்கம் தணிந்த
ஆழ்ந்த நிதானம்
பேரமைதி
மௌனம்
மீப்பெருஞ் செயல்பாட்டுக் களஞ்சியம்
அளப்பரிய செல்வம்.
இன்று முதல் வாழ்வைக் காதலியுங்கள். கவிதை பிடிக்கும். கவிதை பிடித்தால் தேவதேவனையும் பிடிக்கும்.
நன்றி_ அகில இந்திய வானொலி நிலையம்
கவிஞர் தேவதேவனின் கவிதைகள் மனதை கொள்ளை கொள்கின்றன ஐயா
ReplyDeleteநன்றி
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_61.html
/அசையும் போது தோணி,
ReplyDeleteஅசையாத போதே தீவு/
அற்புதவரிகள்.
கவிஞர் தேவதேவனின் கவிதைகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி உதயசங்கர்.