Sunday, 2 November 2014

குழந்தைகளும் நோய்களும்

உதயசங்கர்

child-obesity

பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் எப்போதும் விளம்பரப்படங்களில் வருகின்ற குழந்தைகளைப் போல புஷ்டியாக, சிரித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குழந்தைகள் அழுதாலே டென்ஷன் ஆகிற அப்பா, அம்மாக்கள் நிறைய. இப்படி இருக்கும்போது ஏதாவது நோய் வந்து விட்டால் என்ன ஆவது? குழந்தைகளின் மூக்கு ஒழுகக்கூடாது. சளி பிடிக்கக்கூடாது, இருமல், தும்மல் வரக்கூடாது, வயிற்றாலை போகக்கூடாது. காய்ச்சல் வரக்கூடாது. கொடுப்பதையெல்லாம் சாப்பிட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டு சிரித்துக் கொண்டு அப்பா, அம்மா தூங்கும்போது தூங்கி அவர்கள் எந்திரிக்கும்போது எழுந்து எல்லாக்கடமைகளையும் ஒழுங்காகச் செய்து முடிக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைக்கிற பெற்றோர்கள் ஒன்றை முக்கியமாக மறந்து விடுகிறார்கள். குழந்தைகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் குட்டி மனிதர்கள். அவர்களுக்கென்று விருப்பு, வெறுப்புகள், வெளிப்பாடுகள்,எல்லாம் அவர்களுக்கென்றே பிரத்யேகமான மொழியில் வெளிப்படுத்தவே செய்வார்கள். வெளிக்காற்றில் சென்று வந்தபிறகு ஜலதோஷம் பிடிக்கிறதா? பெற்றோர்கள் பதட்டப்படக்கூடாது. புதிதாகக் கொடுத்த உணவு பிடிக்காமல் வயிற்றாலை போகிறதா பதறக்கூடாது. காய்ச்சல், சளி, இருமல், தோன்றி விட்டதா. டாக்டரிடம் உடனே ஓடக்கூடாது. அப்புறம் என்ன செய்ய? முதலில் சந்தோஷப்படுங்கள். உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு ராணுவம் வேலை செய்யத் தொடங்கி விட்டது. பாதுகாப்பு படைவீரர்கள் யுத்தம் நடத்தத்தொடங்கி விட்டார்கள். அவர்களுடைய யுத்தத்தின் விளைவே இந்தச் சளி, இருமல், தும்மல், காய்ச்சல், வயிற்றாலை எல்லாம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

யோசித்துப்பாருங்கள். தாயிடமிருந்து பிரிந்து இந்தப்பூவுலகிற்கு வந்ததிலிருந்தே குழந்தைகள் எண்ணற்ற வைரஸ், பாக்டீரியாக்களினால் பாதிக்கப்படத்தான் செய்கிறார்கள். வளர்ந்த மனிதர்களே வாழத்தகுதியானதாகவா நமது ஊர்களும், நகரங்களும் இருக்கின்றன. தூசு, சாக்கடை, கலப்படம், ஒலிமாசு, புகை, குப்பை, கழிவுகள், என்று ஊரே ஒரு குப்பைத்தொட்டி போலத்தானே இருக்கிறது. இதிலிருந்து பிறக்கும் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான வைரஸ்கள் ஊரெங்கும் பரவத்தானே செய்யும். அவை பாஸ்போர்ட், விசா, இல்லாமல் எல்லோர் உடலுக்குள்ளும் சென்றடையத் தான் செய்யும். ஆனாலும் எல்லோரும் நோய்வாய்ப்படுவதில்லை. காரணம் நம்முடைய வலிமையான நோய் எதிர்ப்புசக்தி தான். அதேதான் குழந்தைகளுக்கும் நமது உடலின் இயற்கையான உள்கட்டமைப்பான அந்த நோய் எதிர்ப்பு சக்தி தான் குழந்தைகளை எண்ணற்ற வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கிறது. ஆக நோய் என்பது ஒரு வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதி. ஏனெனில் நோய் வந்தால் தான் நோய் எதிர்ப்பு சக்தியும் வந்திருக்கிற வைரஸ்கள், பாக்டீரியாக்களின் ஆயுதங்களுக்கேற்ப தங்களை அப்டேட் செய்து கொள்ளவும், மீண்டும் வந்தால் அவற்றை அழிப்பதற்கான ஃபார்முலாவை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் முடியும்.

அப்படியில்லாமல் எடுத்ததற்கெல்லாம் டாக்டரிடம் சென்று மாத்திரை, ஊசி, சிரப்புகள், டானிக்குகள், ஆண்டிபயாடிக்குகள் என்று வாங்கிக் குழந்தைக்குக் கொடுக்கிறீர்களா? நீங்கள் முதலில் உங்கள் குழந்தையின் நீண்ட நாள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குழந்தையின் இயற்கையான உள்க்கட்டமைப்பான பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துங்கள். அதற்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகளைக் கொடுங்கள். எடுத்ததற்கெல்லாம் மருந்துகளிடம் சரணாகதி அடையக்கூடாது. அதனால் குழந்தையின் இயற்கையான நோய் எதிர்ப்புசக்தி நிரந்தரமான பாதிப்புக்குள்ளாகும்.நீங்கள் ஒவ்வொரு முறை மருந்துகளைக் கொடுக்கும்போது செயற்கையான அல்லது கடன் வாங்கப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியை குழந்தைக்குக் கொடுக்கிறீர்கள். அந்த செயற்கையான தற்காலிகமான நோயெதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட அந்த நோய்க்குக் காரணமான வைரஸ்களையோ, பாக்டீரியாக்களையோ அழித்தபிறகு உடலிலிருந்து வெளியேறிவிடும். அதனால் குழந்தைகள் மீண்டும் நோயினால் தாக்கப்படும்போது மீண்டும் மருந்துகளையே நாட வேண்டியதிருக்கும். அதற்குப்பதில் இயற்கையான நோயெதிர்ப்பு அமைப்புக்கு நாம் இயற்கையான முறையில் உதவி செய்வதன் மூலம் மீண்டும் அந்த வைரஸ்கள் பாதிக்காமல் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

குழந்தைகள் நோய்வாய்ப்படும் போது மருத்துவரிடம் போகாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவா என்று நீங்கள் ஆவேசப்படுவது தெரிகிறது. அப்படியெல்லாம் இல்லை. குழந்தைகளோ, பெரியவர்களோ, மருந்துகளின் உதவி தேவைப்படும் நோய்களும் வரத்தான் செய்யும். அதற்கு மருத்துவரிடம் கண்டிப்பாகப் போய்த்தான் தீர வேண்டும். ஆனால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவரிடம் செல்வது குழந்தைக்கு ஊறு விளைவிக்கும். ஆங்கில மருத்துவ முறையில் நோய்களை உருவாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மருந்துகளினால் அழிக்கப்படுகின்றன. ஆனால் இயற்கையான பாதுகாப்பு அமைப்புக்கு எந்தப் பலனுமில்லை. ஆனால் மாற்றுமருத்துவ முறைகளில் குழந்தைகளின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பையே பலப்படுத்தவும், அதன் மூலமே வைரஸ்களையும் பாக்டீரியாக்களையும் அழித்து விடலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகழ் பெற்ற சீனப்பழமொழி ஒன்று இப்படிச் சொல்கிறது. பசித்திருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுக்கும்போது அவனுக்கு ஒரு வேளை உணவு தந்தவர் ஆவீர்கள். ஆனால் அதற்குப் பதில் மீன் பிடிப்பது எப்படியென்று அவனுக்குக் கற்றுக் கொடுத்தீர்களானால் அவனுடைய வாழ்நாள் முழுவதும் உணவளித்தவர் ஆவீர்கள். அப்படித்தான் குழந்தைகள் நோய்வாய்ப்படும் போதெல்லாம் மருந்துகளைக் கொடுத்து செயற்கையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தருவதென்பது ஒரு வேளைக்கு உணவளிப்பதைப் போல. ஒவ்வொரு சமயமும் குழந்தைகள் நோய்ப்படும்போதும் மருந்துகளின் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அதே குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பின் சக்தியைப் பலப்படுத்துவது என்பது மீன் பிடிக்கக்கற்றுக் கொடுப்பதைப் போன்றது. அது நிரந்தரமாக குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

நாம் குழந்தைகளுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தரப்போகிறோமா? இல்லையென்றால் ஒரு நாளைக்கு உணவளிக்கப் போகிறோமா?

நன்றி- தீக்கதிர் வண்ணக்கதிர்

1 comment:

  1. அருமையான பதிவு ஐயா
    குழந்தைகளுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்போம்

    ReplyDelete