Tuesday, 18 November 2014

மௌனத்தின் எதிர்ப்பதமாய் மாறிய கவிஞன்

AthavanTheedchanya உதயசங்கர்

அறிவியலும், கலை, இலக்கியமும், தத்துவங்களும் இந்தப் பூமியில் ஏன் பிறந்தன. மனிதகுலம் நோய்நொடி, வறுமை, துயரம், ஏற்றத்தாழ்வுகள் இன்றி எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்கவே இவை பூமியில் பிறந்தன என்றால் மறுப்பாருண்டோ. இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, பேச்சு, என்று பல வடிவங்கள் இருக்கின்றன. எல்லாவடிவங்களிலும் கவிதையே ஆகச் சிறந்ததென்றும் ஆதிக் கலை வடிவமென்றும் சொல்கிறார்கள். கவிதை மொழியின் செறிவும், அழகும், சேர்ந்து இசையின் சாயலோடு பிறக்கும் வடிவம். லயமும் சுதியும் அர்த்தபாவத்துடன் வாழ்வைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி ஆழமாக விளங்க வைக்கும் அதிர்வுச்சுழல். இடைவிடாத வாழ்வலைகளிலிருந்து கவிஞன் தன் உள்ளங்கையில் எடுத்த குட்டி அலையின் இரைச்சல். விரிப்பினும் அகாதமாய் விரியும். குறுக்கினும் கடுகெனவே குறுகும் அதிசய நிழல். வெயிலில் அலைந்துதிரிந்து வந்து சேர்பவர்களுக்கு குளிர்ந்த மண்பானை நீராகும் குளிர்மை. எப்படியோ கவிதையோ, கதையோ, கட்டுரையோ, சக மனிதர்களிடம் உரையாடக் கிடைத்த ஒரு விசேஷமான கருவி. இந்த உரையாடல் வழியே கலைஞனோ, கவிஞனோ, கதைஞனோ, தான் கண்ட வாழ்வநுபங்களின் சாராம்சத்தைச் சொல்ல முயற்சிக்கிறான்.

பலருக்கு கலையோ, கதையோ, கவிதையோ, வேறு வேலையில்லாதவர்களின் பொழுதுபோக்கு. ஆனால் நம் வாழ்வின் அணுகணமும் கலையின்றி இருப்பதில்லை. உண்பது உடுத்துவது உறைவது உடை பழக்கவழக்கம், என்று எல்லாமும் கலாப்பூர்வமானதாகவே இருக்கிறது. இந்த வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத கலை இந்த வாழ்க்கையைப் பற்றித் தானே பேசும். அப்படி பேசுகிற கவிஞனாக ஆதவன் தீட்சண்யா பிரகாசிக்கிறார். அவர் மௌனத்தின் உள்ளே அடர்ந்திருக்கும் வலி, வேதனை, மகிழ்ச்சி, எல்லாவற்றையும் நம்மோடு உரத்த குரலில் பகிர்ந்து கொள்கிறார்.

மடக்கி மடக்கி

மாடி வீடு கட்டினோம்

வாழ்க்கை வற்றி

வராண்டாவில் முடிந்தது

மத்திய தரவர்க்கத்தின் ஆசையின் விளைவை பகிடி செய்கிறார் ஆதவன் தீட்சண்யா.

முற்றுப்பெறாத டைரிக்காகவும்

அத்யந்த சினேகிதர்களுக்காகவும்

வெளுக்கப்போட்ட சட்டையில்

எடுக்கப்படாது நைந்த துண்டுச்சீட்டாக

செய்திகளிருக்கும் இன்னமும்

செத்தவர்களிடத்தில்

……………………………………………………………..

பேசி விட்டுச் சொல்கிறேன்

எப்படி அவர்கள் வாழ்ந்தார்களென்றும்

நாம் எப்படி இறக்கக்கூடாதென்றும்

என்று இறந்தவர்களிடம் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிக் கேட்டு சொல்வதாய் சொல்கிறார் கவிஞர். இயங்கிக் கொண்டிருக்கும் வரை தானே மனம். இயங்காமல் நின்று விட்டால் அது ஜடமல்லவா. இதை குறுங்கவிதையாகச் சொல்கிறார் ஆதவன் தீட்சண்யா.

மனம்

அலையும் பெண்டுலத்திற்கு

அமைதி தேவையாம்

கடிகாரம் நின்று விடுமே.

சமூகத்தின் நிலவும் பெண்குழந்தைகளுக்கு எதிரான மனநிலை கண்டு கொதித்தெழுகிறார் ஆதவன் தீட்சண்யா. அவருடைய வார்த்தைகளில் முரணும், நகையும், கோபமும் கொப்பளிக்கிறது.

ஆத்தா மகமாயி

உம் புண்ணியத்தில பையனாப் பொறந்துட்டா

கெடா வெட்டிப் பொங்க வைக்கிறேன்

இது பக்தனின் குரல். இதற்கு பதில் சொல்கிறாள் ஆத்தா மகமாயி

ஏண்டா கும்பிடறதுக்குப் பொம்பிளசாமி

கொழந்த மட்டும் ஆம்பளயா

எனக்கு உங்கெடாவும் வேண்டாம்

ஒரு மயிரும் வேண்டாம்.

ஆத்தா மகமாயியாலேயே இந்தக் கொடுமையைத் தாங்க முடியவில்லை. அதே போல ஆதவன் தீட்சண்யாவின் எழுதுகோல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும் இக்காலத்தில் விவசாயத்தைப் பற்றி எழுதியுள்ள கவிதையைக் கேளுங்கள்.

ஆறும் குளமும் அலையும் கடலும்

அவிஞ்சு கிடக்குது பாலையா

ஓடும் மேகத்த ஒதைச்சி இழுத்துவா

உலகம் குளிரணும் பெருமழையில்

என்று மேகங்களை அடித்து இழுத்து வந்து வயக்காட்டில் மழை பொழியச் செய்து கரம்பக்காடாக இருக்கும் மண்ணை திமிறும் காளைகளைப் பூட்டி தலைகீழாகப் புரட்டணும் என்கிறார். அதோடு நம்முடைய முப்பாட்டன் வைத்திருந்த பாரம்பரிய விதைநெல்லை எடுத்து காத்தாட்டம் வீசி பயிர் வளர்க்கணும். பூச்சிப்புழு அரிக்கத்துடிக்கும் பயிரைப் போராடித்தான் வளர்க்கணும்.

பயிருக்காகவே வயலிருந்தாலும்

பச்சை நிறத்துல களைங்களூமிருக்கும்

அட எழுந்து வாங்கடா வெள்ளாமக்காட்டுக்கு

களையப் பிடுங்கணும் கவனமா.

அறுவடைக்காலம் நெருங்கி வரும் போது கதிர் அறுக்கும் அருவாளைத் தீட்டிப் பதமாக வைக்க வேண்டும்.களத்து மேட்டில் கதிர்கள் மலையாகக் குவியணும்.

அட அள்ளியெடுங்கடா ஆளாளூக்கு

அவரவர் தேவைக்கு வேண்டியதை

கொண்டு வாங்கடா சாட்டை சவுக்கை

சொடுக்கி முடுக்கணும் காலத்தை.

என்று ஒரு விவசாயக்காலத்தை நம் முன் கொண்டு வந்து காட்டுகிறார். கவிதை ஒன்றை பலவாறாக அர்த்தப்படுத்தும் என்ற நோக்கில் வாசிக்கும்போது இந்தக் கவிதையிலும் அவரவர் வேறு வேறு அர்த்தங்களையும் உணரமுடியும். ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள். ஆம். மௌனங்களை எதிர்ப்பதமாய் மாற்றி உரத்தகுரலில் பேசும் ஒரு கவிஞரையும் அவருடைய கவிதைகளையும் கண்டு விட்டோம் என்று.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

No comments:

Post a Comment