Thursday, 20 November 2014

மழை வரும் பாதையில் மலர்ந்த கவிஞர் கிருஷி

உதயசங்கர்Krishi

மனிதர்கள் தான் இந்த உலகத்தைப் பற்றிய விளக்கம் அளிக்கிறார்கள். அவர்களே இந்தப் புவியில் உள்ள பொருட்களுக்கும் உயிர்களுக்கும் இடையில் உள்ள உறவுகளை இனம் காணுகிறார்கள். இல்லையென்றால் பொதிகையில் தோன்றிய காலத்திலிருந்து எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணிக்கு தான் யார் என்று தெரியாது. ஒரு ஆலமரத்துக்கு தான் ஆலமரம் என்று தெரியாது. ஒரு மல்லிகைப்பூவுக்கு தான் மல்லிகை என்று தெரியாது. வானத்துக்குத் தான் வானம் என்றோ மழைக்கு தான் மழை என்றோ நேற்று பெய்த மழையில் முளைத்த புல்லுக்கு தான் ஒரு சிறிய புல் என்று கூடத் தெரியாது. நாம் வீட்டில் வளர்க்கும் டைகருக்கு தான் ஒரு நாய் என்றும் தெரியாது. ஆக மொத்தத்தில் இந்த உலகத்தில் எல்லாம் அதது பாட்டுக்கு இருக்கின்றன. இணைந்தும் பிரிந்தும் தங்கள் வாழ்வதற்கேற்ற பரிணாமச்சூழலை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதன் தான் இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் இடையில் உள்ள உறவுகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். அவன் தான் மரத்தை மரம் என்று சொல்கிறான். அவன் தான் அதை வேப்பமரம் என்று வகை பிரிக்கிறான். மனிதன் இல்லையேல் உறவுகள் இல்லை.

கலைப்படைப்புகள் இந்த உறவுகளைப் பற்றியே பேசுகின்றன. இந்த உறவுகளை இன்னும் மேன்மையுறச் செய்ய மனித மனதின் அழகையும், சந்தோஷத்தையும், துக்கத்தையும், துன்பத்தையும் அசிங்கத்தையும் குரூரத்தையும், தியாகத்தையும், பேராசையையும் சொல்லிப் புரிய வைக்க முயற்சிக்கின்றன. மனிதர்களை மகான்களாக்கவே சதா கலைப்படைப்புகள் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கவிஞர் கிருஷியும் தன்னுடைய கவிதைகளில் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அவர் புரிந்து கொண்டதை நம்மிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறார்.

நிறை சூலியாய் நிற்கும்

வேம்பின் வாசத்தில்

வயல்வெளிக்கு மேல்

கை வீசி வரும்

நிலவைப் பார்த்தபடி

குத்த வைத்திருக்க வேண்டும்

கொஞ்ச நேரம் முதுகைச்

சாய்த்தபடி மண்சுவற்றில்.

என்று முடிகிற கவிதையிலாகட்டும்,

என்றாலும்

இன்னும் ஒளி

வற்றி விடவில்லை

பனித்துளியில்

காற்றில் அசைகிறது புல்

நிலவை வருடியபடி

சிறகடிக்கிறது

வண்ணத்துப்பூச்சி

இசையின் லயத்துடன்.

இயற்கையை வாசகருக்கு விளம்புகின்ற கவிஞர் கிருஷி தன்னைப்பற்றியும் சொல்கிறார் இப்படி

ரசம்

புழுதியில் கிடக்கும் வெறும்

கண்ணாடிச்சில் என்று தானே

நினைக்கிறாய்

ஒரு துண்டு கண்ணாடி என்றாலும்

முகம் காட்ட

மறுப்பதில்லை ஒருபோதும்

நண்பனே..ரசமற்ற

கண்ணாடி அல்லவே நான்

சிற்றுயிரான எறும்புகளுக்கு உள்ள நேசம் கூட மனிதர்களிடையே இல்லாமல் போனதையும் வாழ்வின் அவசர கதியில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டு போவதைப் பற்றி ஏதேனும் ஒரு கவிதையில் சொல்கிறார். எறும்புகளின் வாழ்நிலை பற்றிச் சொல்லிக் கொண்டே வரும் கவிஞர். கிருஷி,

பனித்துளியின் உயிர்க்கருவோ

இந்த எறும்பின் வெண்முட்டைகள்

மழையை முன்னுணர்ந்து

புலம்பெயரும் ஞானம்

சிற்றெறும்பின் மூளைக்கு

எங்ஙனம் வாய்த்தது

வரிசை தவறுவதில்லை-என்றும்

தனிமைத்துயருமில்லை

ராஜ்யபரிபாலனம்- இதுபோல்

எங்கும் கண்டதில்லை

எவ்வளவு காலப்பழக்கம் நமக்குள்

ஏதேனும் ஒரு புள்ளியில்கூட

சந்திக்க முடிவதில்லையே

இப்போதெல்லாம் நண்பனே.

இவருடைய கவிதைகளில் மழையும் வானும் நட்சத்திரங்களும், பனித்துளியும், நதியும், குழந்தைகளும் பூக்களும் மீண்டும் மீண்டும் வந்து கவிஞரின் பரிசுத்தமான மனதின் ஏக்கங்களைப் பேசுகின்றன.

பொழுதடைந்த பின்

கரிசல் காட்டிலிருந்து திரும்பிய

எங்கம்மா சொன்னாள்

பாம்படம் அசைய

இன்னும் ஒரு மழை

பெஞ்சா போதுமய்யா

மொளச்ச பயிர்

பிழைச்சுரும்

இவருடைய கவிதை மழையில் நனையும்போது காய்ந்து வறண்ட நம் மனசிலும் மொளச்ச பயிர்கள் பிழைச்சிரும். இவருடைய கவிதைகளைப் பற்றி கவிஞர். கல்யாண்ஜி சொல்வது எவ்வளவு அழகாகப் பொருந்தி வருகிறது!

தன்னைத்தானே ஏந்திக் கொண்டு கவிஞர்.கிருஷி அவருடைய கவிதைகளில் வருகிறார். எந்த ஒரு வரியின் மீதும் அவருடைய சாயல் இருக்கிறது. ஒரு எளிய ஆரஞ்சு பட்டுப்பூச்சி போல நம் வீட்டு அந்தி மந்தாரைச் செடிகளின் மீது பறந்து விட்டுச் செல்கிறார். புதுத்தீப்பெட்டியின் முதல் குச்சி உரசலுக்குப் பின் மருந்துப் பட்டியில் தீக்குச்சியின் ஒற்றை உரசல் பதிந்திருப்பது போல ஒரு வரி. அரசுப்பொது மருத்துவமனைப் பக்கத்து வேப்பமர நிழலின் கீழ் கவலையோடு உட்கார்ந்திருக்கிற ஒரு பெரிய மனுஷியின் பக்கத்தில் அவள் கொண்டு வந்திருக்கிற தண்ணீர் பாட்டிலுக்குள் புகுந்து வெளியேறுகிற மாதிரி சில வரிகள். உல்லாசப் பயணத்துக்கு அழைத்துப்போன பள்ளிக்கூடப் பிள்ளைகளில் மற்ற பிள்ளைகள் எல்லாம் ஓடியாடி இரைச்சலுடன் விளையாடிக் கொண்டிருக்க, ஓடுகிற தண்ணீருக்குள் கிடக்கும் கூழாங்கற்களைப் பார்த்து அசையாது அமர்ந்திருக்கும் ஒரே ஒரு பையனின் சிகையைக் கோதி விடுகிற ஆசிரியர் போல நெகிழ்ந்து போன வரிகள் சில. அனறைக்கு நிகழ்ந்த அடையாள வேலை நிறுத்தத்தின் போது எழுப்பிய கோஷங்களை, சாலைத்தெரு திருப்பத்தில் டீ குடித்துக் கொண்டே மீண்டும் வாசித்துப் பார்ப்பது போலச் சில……..

வாழ்க்கையைப் போலவே கவிஞர் கிருஷியின் கவிதைகளும் வசீகரமானவை. சுழித்தோடும் தாமிரபரணியின் வண்ணக்கனவுகள் போல.

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

3 comments:

  1. கவிஞர் கிருஷ் கவிதைகள்அருமை
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. அகில இந்திய வானொலி சார்பில் நாகபுரியில் ஒரு கவி சம்மேளனம் நடந்தது ! அதில் பங்கெடுக்க கிருஷி வந்திருந்தர் 1 அவருடைய துணவியாரும் வந்திருந்தார் ! என் வீட்டில் தான் இறங்கினர் ! அற்புதமன கவிஞர் ! அதைவிட அற்புதமான மனிதர் ! என் துனைவியார் ,மகன்,மறுமகள்,பேரன் அத்துணை பேரையும் கவர்ந்தவர் ! எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து நான் பழகிய கோவில்பட்டி தோழர்களில் முக்கியமானவர் ! வாழ்க அவர் இலக்கியபணி ! ---காஸ்யபன்.

    ReplyDelete
  3. கிருஷியின் கவிதைகளையும்,அவரையும் அறிந்துகொள்ள முடிந்தது.எந்த புள்ளியிலாவது நண்பர்களை தேடித்தேடி சந்திப்போம்.

    ReplyDelete