Saturday, 1 November 2014

மோனோலிசாவும் குடும்பத் தலைவியும்

உதயசங்கர்Balakrishnan

இத்தாலி நாட்டு கலை அறிவியல் மேதையான லியார்னாடோ டாவின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோனோலிசா. அந்த ஓவியப்பெண்ணின் அழியாத புன்னகை இன்றும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. எந்தக் கவலையுமில்லாத அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன? அந்தப் புன்னகையில் தெரிவது இந்த உலகை வென்ற கர்வமா? முன்பின் தெரியாதவர்களிடம் அளந்து சிந்துகிற முறுவலா? உன்னால் என்றுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்ற மர்மமா? உதட்டுச்சுழிப்பில் படைத்தவனையே அதிசயிக்கப்பண்ணிய படைப்பாக மலர்ந்த அகங்காரமா? என்னை விட எளிய பெண்ணை நீங்கள் இப்புவியில் எங்கும் காண முடியாது என்ற அடக்கமா? எது அந்தப் புன்னகையின் அர்த்தம்? ஏன் அந்தப்புன்னகை? மோனோலிசாவின் புன்னகை சிந்தும் ஒப்பற்ற அந்த ஓவியம் குறித்தும் லியார்னாடோ டாவின்சி குறித்தும் இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நமது வீடுகளில் பெரும்பாலும் பெண்கள் தான் வீட்டு நிர்வாகம் செய்கிறார்கள். அலுவலக வேலையென்றால் கூட குறிப்பிட்ட நேரம் மட்டும் தான். அத்துடன் விடுப்புகளும், விசேட அநுமதிகளும் உண்டு. அதற்கு சம்பளமும் உண்டு. ஆனால் வீட்டு நிர்வாகம் இருபத்திநாலுமணி நேரத்தையும் வற்புறுத்தி வாங்கி விடும். வீட்டைத்தவிர வேறு எந்த சிந்தனையும் நமது பெண்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம். எங்கேயும் எப்போதும் வீட்டு ஞாபகம் தான். வீடு என்றால் வெறும் வீடல்லவே. வீட்டில் உள்ள உறவுகள், அவர்களுடைய தேவைகள், அவர்களுடைய விருப்பங்கள், அவர்களுக்கான சேவைகள், என்று நமது குடும்பத்தலைவி செய்யும் வேலைகள் கணக்கிலடங்காதவை. இதில் வேலைக்கும் சென்று விட்டு வீட்டையும் நிர்வாகம் செய்யும் பெண்கள் எவ்வளவு பதற்றத்திலும், அழுத்தத்திலும் இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

உலகப்புகழ் பெற்ற மோனோலிசாவும் நமது குடும்பத்தலைவியும் சந்தித்தால் எப்படி இருக்கும்?

மொட்டைக்கோபுரம் என்ற கவிதை நூல் வழியே தமிழ் கவிதையுலகில் பிரசன்னமாகியிருக்கிற நமது கவிஞர் பிரதீபன் இரண்டு பேரையும் சந்திக்க வைக்கிறார். சந்தித்த வேளையில் தன் புன்னகை உதடு பிரித்து மோனோலிசா பேசும் முன்னரே நமது குடும்பத்தலைவி பேசுகிறாள்,

உனக்கென்னம்மா

எப்போதும் இப்படிச்

சிரித்துக் கொண்டிருப்பாய்

பிள்ளையா குட்டியா

குடும்பமா பிடுங்கலா

கோவில் குளமென்று ஓடவும் வேண்டாம்

ஆஸ்பத்திரி, மார்க்கட்டுக்கு

அலையவும் வேண்டாம்

மாமி, நாத்தி

சீர் செனத்தி என்று

எதிலும் மாட்டிக்கொள்ளாத

மகராசி நீ

மாறாத புன்னகை

இருக்காதா பின்னே.

கவிஞர் பிரதீபனின் கற்பனையில் இரு வேறு உலகங்கள் எப்படி வேறுபட்டு தெரிகிறது பாருங்கள்! எளிய சொற்களால் நமது பெண்களின் நிலையை இத்தனை கிண்டலுடன், ஆற்றாமையுடன் யார் சொல்லியிருக்கிறார்கள்? இப்போது புகழ முடியுமா மோனோலிசாவின் புன்னகைஅதிசயத்தை. இங்கே இதோ நமது பெண்கள் நிற்கிறார்களே பிரமாண்டமாய்…..இல்லையா.

அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவசர அவசரமாய் தூங்கி எழுந்து, அவசர அவசரமாய் பல் விளக்கி, குளித்து, உடை உடுத்தி, அவசர அவசரமாய் அவரவர் வேலைகளுக்குச் சென்று அவசர அவசரமாய் வேலை பார்த்து, அவசர அவசரமாய் வீடு திரும்பி உண்டு முடித்து உறங்கி விடுகிறோம். மீண்டும் அவசர அவசரமாய் ஒரு நாளை எதிர்பார்த்து. ஒரு நாளும் நமது தலைக்கு மேலே ஒரு வானம், குட்டி குட்டியாய் மேகங்கள், சூரியன் வரையும் அற்புத ஓவியங்கள், தென்றல் வீசும் மரங்கள், மலர்ந்து மணம் வீசும் மலர்கள், இரவில் நமது கோடிக்கணக்கான ஆசைகளைப் போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், தெருக்களில் தண்ணொளி வீசி நிலாச்சோறு சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் நிலவு, இப்படி எதையுமே ஆற அமர அநுபவிக்காமல் வாழும் வாழ்க்கை எல்லோரையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. கவிஞர் பிரதீபனுக்கு இந்த நெருக்கடி ஒரு கவிதையை எழுதிச் செல்கிறது.

குறுநிழல் ஒன்று

குறுக்கே ஊர்ந்து செல்கிறது

தலைக்கு மேலே

வண்ணத்துப்பூச்சி பறக்கிறது போலும்

நிமிர்ந்து பார்க்க நேரமில்லை

அலுவலகத்துக்கு

இன்னும் ஐந்தே நிமிஷம்.

நாமே ஏற்படுத்திக் கொண்ட அவசரத்திற்கு நாமே அவசர அவசரமாய் மாட்டிக் கொண்ட பிறகு வாழ்க்கையை நின்று பார்க்க நேரம் கிடைக்குமா? அவசரத்தை அவசர அவசரமாய் விட்டு விட்டு வாழ்க்கையை வாழத் தொடங்குவோம். வாழ்வு இனியது!

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

No comments:

Post a Comment