Thursday 14 June 2012

சுறா

shark தால்ஸ்தோய்

தமிழில்-உதயசங்கர்

எங்களுடைய கப்பல் ஆப்பிரிக்காவின் கரையோரம் நங்கூரமிட்டிருந்தது. அந்த நாள் அற்புதமாக இருந்தது. கடலிலிருந்து புதிய காற்று வீசியது. ஆனால் மாலையில் காலநிலை மாறி விட்டது. புழுக்கம் கூடிக் கொண்டே போனது. சகாரா பாலைவனத்தின் சூடான காற்று எங்களை அடுப்பிலிருந்து வரும் வெப்பத்தைப் போல எங்களைத் தாக்கியது.

சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்னால் கப்பல் கேப்டன் மேல்தளத்திற்கு வந்தான். “நீச்சல் குளத்தைத் தயார் செய்யுங்கள்” என்று கத்தினான். ஒரு நொடியில் மாலுமிகள் கடலுக்குள் பாய்ந்தனர். தாழ்ந்து வரும் கப்பல்பாயைக் கீழே கட்டி ஒரு நீச்சல்குளத்தை உள்ளேயே உருவாக்கினார்கள்.

கப்பலில் இரண்டு பையன்கள் எங்களோடு இருந்தார்கள். அவர்கள் முதலில் குதித்தனர்.ஆனால் சிறிது நேரத்திலேயே கூட்டம் அதிகமாகி விட்டது. உடனே அவர்கள் நேரடியாக கடலில் குதிக்க முடிவு செய்தார்கள். முதலைகள் இறங்குவதைப் போலத் தண்ணீருக்குள் நழுவினர். நங்கூரத்தின் மீது மிதக்கும் மிதவையை அடைய முயற்சித்தனர்.

ஒரு பையன் இன்னொரு பையனை விட முந்திச் சென்று விட்டான்.பிறகு அப்படியே பின்னால் சென்று விட்டான். அவனுடைய அப்பா பழைய துப்பாக்கிவீரர் கப்பல்தளத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் பின்தங்கிய போது அவர் அவனைப் பார்த்து,”விடாதே..இன்னும் கொஞ்சம் முயற்சி செய்” என்று கத்தினார்.

ஆனால் அப்போது யாரோ கப்பல்தளத்திலிருந்து,”அதோ..சுறா..” என்று கத்தினார்கள். நாங்கள் தண்ணீருக்குள் மிதந்து வரும் அந்த கொடூரமிருகத்தின் முதுகைப் பார்த்தோம்.

சுறாமீன் அந்த பையன்களை நோக்கியே விரைந்து கொண்டிருந்தது. துப்பாக்கிவீரர்”திரும்பி வா..திரும்பி வா..” என்று முழங்கினார். ஆனால் அது அந்தப் பையன்களுக்குக் கேட்கவில்லை.அவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர்.சிரித்துக் கொண்டும் முன்பை விட சத்தமாகக் கத்திக் கொண்டுமிருந்தனர்.

துப்பாக்கிவீரரால் அசையமுடியவில்லை.அப்படியே வெளுத்துப் போய் விட்டார். மாலுமிகள் ஒரு படகை கடலில் இறக்கி அதில் ஏறிக் கொண்டனர். அவர்களுடைய முழு பலத்தை செலுத்தி துடுப்பை வலித்தனர். ஆனால் பையன்களோ வெகுதூரத்திலிருந்தார்கள்.சுறா அவர்களுக்கு இருபதடி தூரத்திலேயே இருந்தது.

எங்களுடைய எச்சரிக்கை அலறல்களை அந்தப் பையன்கள் கேட்கவில்லை. சுறாமீனையும் பார்க்கவில்லை. திடீரென ஒரு பையன் திரும்பினான்.நாங்கள் அவனுடைய அலறலைக் கேட்டோம். அவனும் அவனுடைய விளையாட்டுத்தோழனும் தனித்தனியே துள்ளிக் குதித்தனர்.

அந்த அலறல் துப்பாக்கிவீரரின் அமைதியைக் குலைத்துவிட்டது. ஒரு நொடியில் அவர் பீரங்கி இருந்த இடத்தை அடைந்தார். பீரங்கிக் குழாயை அசைத்து அதன்மீது கவிழ்ந்து குறி பார்த்தார். பின்னர் திரியை இழுத்து விட்டார்.

கப்பலில் இருந்த அத்தனை பேரும் கற்சிலை மாதிரி அசையாமல் இருந்தனர். என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கக் காத்துக் கொண்டிருந்தனர்.

பீரங்கி முழங்கியது.துப்பாக்கிவீரர் அப்படியே பீரங்கியின் அடியில் முகத்தை மூடிக் கொண்டு விழுந்து கிடப்பதை நாங்கள் பார்த்தோம்.அந்த சுறாவுக்கும் பையன்களுக்கும் என்ன நேர்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை.ஏனெனில் பீரங்கிக் குண்டின் புகை சற்று நேரம் அவர்களை மறைத்து இருந்தது.

தண்ணீருக்கு மேலே புகை கலையத் தொடங்கியபோது முதலில் ஒரு முணுமுணுப்பு தோன்றியது. அது வளர்ந்து சந்தோசக் கூச்சலாக மாறியது.

அந்த பழைய துப்பாக்கிவீரர் தன் முகத்திலிருந்து கைகளை எடுத்துவிட்டு வெளியே கடலைப் பார்த்தார். இறந்து போன சுறாமீனின் மஞ்சள் வயிறு தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்தது. சில நொடிகளுக்குள்ளே எங்கள் படகு அந்த பையன்கள் இருந்த இடத்தை அடைந்தது. அவர்களைக் கப்பலுக்கு அழைத்து வந்தது.

No comments:

Post a Comment