Showing posts with label தால்ஸ்தோய். Show all posts
Showing posts with label தால்ஸ்தோய். Show all posts

Wednesday, 17 October 2012

அன்னப்பறவைகள்

Fanfare தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

 

அன்னப்பறவைகளின் கூட்டம் ஒன்று குளிர் பிரதேசங்களிருந்து வெப்பப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து பறந்து போய்க் கொண்டிருந்தது.அவர்கள் கடலின் மீது பறந்து கொண்டிருந்தனர்.இரவும் பகலுமாக, பகலும் இரவுமாக, சற்றும் ஓய்வின்றி தண்ணீரின் மீதே பறந்து கொண்டிருந்தனர்.அவர்களுக்கு மேலே முழுநிலவு தொங்கிக் கொண்டிருந்தது.கீழதுநீலக்கடல்.சிறகுகளை அடித்துஅடித்து அவர்களுக்கு களைப்பாக இருந்தது.ஆனாலும் அவர்கள் இடைவெளியின்றி பறந்து கொண்டிருந்தனர். பலமான அன்னப்பறவைகள் அணிவகுப்பைத் தலைமை தாங்கிச் செல்ல,இளையவர்களும் பலவீனமானவர்களும் தொடர்ந்து வந்தனர். ஒரு இளைய பறவை கூட்டத்திற்கு சற்று பின்னால் பறந்துவந்து கொண்டிருந்தது. அதனுடைய சக்தியெல்லாம் வடிந்துவிட்டது.இருந்தாலும் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தாலும் அதற்கு மேல் அதனால் பறக்கமுடிய வில்லை. தன் சிறகுகளை தாழ்த்திக் கொண்டு கீழ் நோக்கி இறங்கியது.தண்ணீருக்கு மிகமிக நெருக்கமாக வந்து விட்டது. அதனுடைய நண்பர்கள் எல்லாம் நிலவின் வெள்ளையொளியில் தொடர்ந்து பறந்து மங்கி மறைந்து புள்ளிகளாக மாறி விட்டனர்

அந்த இளைய அன்னம் தன் சிறகுகளை ஒடுக்கிக் கொண்டு நீருக்குள் மூழ்கியது.கடல் சுற்றிலும் சலசலத்துக் கொண்டிருந்தது.அப்படியே அதை மெதுவாகத் தாலாட்டிக் கொண்டிருந்தது. இப்போது கூட்டம் நிலவொளி வீசிய வானத்தில் மங்கிய ஒரு கோடாகத் தெரிந்தது. நிசப்தமான அந்த நேரத்தில் பறந்து கொண்டிருந்த பறவைக்கூட்டத்தின் சிறகடிப்பின் ஓசை அதற்குக் கேட்டது.

அவர்கள் போய் விட்டார்கள் என்று தெரிந்த பிறகு அது தன் கழுத்தை வளைத்துக் கண்களை மூடித் தூங்கியது. அது நீரில் அளையவில்லை. கடல் அலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தது லேசான காற்று விடியற்காலையில் கடலின் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு வீசியது.

இளைய அன்னத்தின் வெள்ளைமார்பின் மீது கடலின் அலை மோதியது. அது கண்களைத் திறந்து கிழக்கில் வானம் சிவந்திருப்பதைப் பார்த்தது.நிலவும் நட்சத்திரங்களும் மங்கிக் கொண்டிருந்தன.

அந்த அன்னம் பெருமூச்சு விட்டது. கழுத்தை நீட்டி தன் சிறகுகளை அடித்து எழுந்தது.தன் சிறகின் விளிம்பினால் தண்ணீரைத் தொட்ட படியே உயரே உயரே பறக்கத் தொடங்கியது.தண்ணீர் மிகமிக கீழே போய் விட்டது.அது முன்னால் வேகமாக எங்கே வெப்பநிலங்கள் இருக்கிறதோ அதை நோக்கி அமைதியான தண்ணீரின் மீது தன் நண்பர்கள் பறந்த திசை வழியே பறந்து சென்றது.

MN11 trumpeter swan 115_7530

Wednesday, 3 October 2012

குட்டிப்பெண்ணும் காளான்களும்

1242886731968-girl child தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

 

 

இரண்டு குட்டிப் பெண்கள் கூடை நிறையக் காளான்களைப் பறித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.போகிற வழியில் அவர்கள் தண்டவாளங்களைக் கடக்க வேண்டியது இருந்தது. அவர்கள் ரயில்இஞ்சின் வெகு தூரத்தில் வந்து கொண்டிருந்ததாக நினைத்தனர். எனவே அவர்கள் தண்டவாளத்தை கடப்பதற்காக மேட்டின் மீது ஏறினர்.

திடீரென அவர்களுக்கு ரயில் சத்தம் கேட்டது. இருவரில் பெரியவள் திரும்பி ஓடிவந்து விட்டாள்.ஆனால் அதற்குள் சிறியவள் தண்டவாளங்களுக்கு நடுவில் போய் விட்டாள்.

பெரியவள் “திரும்பி ஓடி வராதே” என்று அவளுடைய தங்கையைப் பார்த்து அலறினாள்.

ஆனால் ரயில் வெகு அருகில் வந்து விட்டது. அந்த சத்தத்தில் அக்கா சொல்வதைச் சரியாகக் கேட்க முடியவில்லை. அவள் திரும்ப ஓடிவரச் சொல்வதாகவே தங்கை நினைத்தாள்.அதனால் திரும்பி தண்டவாளங்களைக் கடக்க முயலும் போது, தடுமாறினாள். அதில் அவள் சேகரித்திருந்த காளான்களெல்லாம் கீழே சிதறி விட்டது.அவசர அவசரமாக அவற்றைப் பொறுக்கிக் கூடையில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டிருந்தாள்.

இப்போது ரயில் ரொம்ப பக்கத்தில் வந்து விட்டது.ஓட்டுநர் எவ்வளவு வேகமாக விசில் அடிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக விசில் அடித்தார்.

பெரியவள் “காளான்களைக் கீழே போடு” என்று அலறினாள்.ஆனால் சிறியவள் என்ன நினைத்தாளென்றால் எல்லாவற்றையும் நன்றாகப் பொறுக்கச் சொல்லுகிறாள் என்று நினைத்தாள்.உடனே தண்டவாளங்களுக்கு நடுவில் தவழ்ந்து பொறுக்க ஆரம்பித்தாள்.

ரயில் ஓட்டுநரால் அவருடைய இஞ்சினை நிறுத்தமுடியவில்லை. இஞ்சின் விசிலை மட்டும் அவரால் முடிந்த மட்டும் பலமாக அடித்தார். ஆனால் இஞ்சின் அந்த சின்னப் பெண் மீது ஓடி நின்றது..

பெரியவள் அழுது அரற்றினாள். ரயிலிலிருந்த பயணிகள் சன்னல் வழியே எட்டிப்பார்த்தனர்.கார்டு

அந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன ஆயிற்றோ என்று பார்ப்பதற்கு ரயிலின் கடைசிக்கு ஓடிப் போனார். ரயில் தாண்டிய பிறகு அந்தச் சிறுபெண் தண்டவாளங்களுக்கு நடுவில் முகத்தை மூடிக் கொண்டு குப்புற படுத்துக் கொண்டிருந்தாள்.

ரயில் அவளைத்தாண்டிப் போன பிறகு தலையைத் தூக்கினாள்.முட்டி போட்டு மீதி காளான்களையும் பொறுக்கிக் கொண்டு அவளுடைய அக்காவிடம் ஓடினாள்.

Friday, 28 September 2012

கழுகு

தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

vulture

ஒரு கழுகு முக்கிய சாலையின் அருகில், கடலுக்கு வெகு தூரத்தில் ஒரு மரத்தில் ஒரு கூடு கட்டியிருந்தது. நிறைய குஞ்சுகளைப் பொரித்திருந்தது. ஒரு நாள் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதற்காக ஒரு பெரிய மீனை தன் கால் நகங்களில் பற்றிக் கொண்டு பறந்து வந்து கொண்டிருந்தது. அதன் கூடு இருந்த மரத்தின் அடியில் நிறைய ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கழுகின் கால் கால்களில் இருந்த மீனைப் பார்த்ததும் மரத்தைச் சுற்றி நின்று கொண்டு கத்தினார்கள். கற்களை எறிந்தனர்.

கழுகு மீனைக் கீழே போட்டதும் அதை எடுத்துக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள். கழுகு கூட்டின் விளிம்பில் உட்கார்ந்தது. கழுகைப் பார்த்ததும் அதன் குஞ்சுகள் தங்கள் தலையை உயர்த்தி உணவுக்காகக் கத்தின.

ஆனால் கழுகு சோர்ந்து போயிருந்தது. திரும்ப கடலுக்குப் பறந்து செல்ல முடியாது.அத்ற்குப் பதிலாக அது கூட்டில் இறங்கி தன் குஞ்சுகளை சிறகுகளால் அணைத்துத் தட்டிக் கொடுத்தது.குஞ்சுகளின் மென்மையான இறகுகளைக் கோதிவிட்டது.கொஞ்சநேரம் பொறுத்துக் கொள்ளச் சொல்லியது. ஆனால் அது தட்டிக் கொடுக்க கொடுக்க குஞ்சுகள் இன்னும் சத்தமாகக் கத்திக் கூப்பாடு போட்டன.

கடைசியில் கழுகு தன் கூட்டை விட்டு மேலே உள்ள கிளைக்குத் தாவி அமர்ந்தது.ஆனால் கழுகுக்குஞ்சுகள் இன்னும் பரிதாபமாக கீச்சிட்டன.

அதன் பிறகு கழுகு ஒருபெரிய கத்தலுடன், தன் சிறகுகளை விரித்தது. கடலை நோக்கி வேகமாகப் பறந்து சென்றது.

மிகவும் தாமதமாக மாலையில் கழுகு கூட்டுக்குத் திரும்பியது. மிக மெதுவாக, தாழ்வாக பறந்து வந்தது. அதன் கால்களில் ஒரு பெரிய மீன் இருந்தது.

மரத்தின் அருகில் நெருங்கியதும் ஆட்கள் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்தது. பின்னர் தன் சிறகுகளை சட்டென ஒடுக்கிக் கொண்டு, கூட்டின் விளிம்பில் சென்று அமர்ந்தது.

கழுகுக்குஞ்சுகள் தங்கள் திறந்த அலகுகளை மேலே தூக்கின. தாய்க்கழுகு மீனைக் கிழித்து தன் குஞ்சுகளின் பசியாற்றியது.

Sunday, 23 September 2012

பாய்ச்சல்

தால்ஸ்தோய்leo-tolstoy

தமிழில்- உதயசங்கர்

 

உலகம் முழுதும் சுற்றி வந்த கப்பல் கடைசியில் வீட்டை நோக்கி பயணப் பட்டது. காலநிலை அமைதியாக இருந்தது.எல்லோரும் கப்பலின் மேல்தளத்தில் இருந்தனர்.ஒரு பெரிய குரங்கு குட்டிக் கரணம் அடித்து எல்லோரையும் சந்தோசப் படுத்திக் கொண்டிருந்தது.வளைந்தும் நெளிந்தும் குதித்தும் அது வேடிக்கையாக முகத்தைக் கோணலாக்கவும், மற்றவர்களைப் பரிகாசம் செய்து கொண்டுமிருந்தது.எல்லோரும் தன்னைக் கவனிக்கிறார்கள் என்று தெரிந்ததும் அதனுடைய சேட்டை இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது.

கப்பல் கேப்டனின் பனிரெண்டு வயது மகனை நோக்கிக் குதித்தது.அவன் தலையிலிருந்த தொப்பியைப் பறித்துத் தன் தலையில் மாட்டிக் கொண்டு வேகமாக ஓடி கப்பல் கொடிமரத்தில் ஏறிக் கொண்டது. எல்லோரும் சிரித்தனர். தொப்பியில்லாத அந்தப் பையனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. குரங்கு முதல் கொடிமரத்தூணில் நின்று கொண்டது. தன் தலையிலிருந்து தொப்பியைஎடுத்து அதைத் தன் கோரைப்பற்களாலும் நகங்களாலும் கிழிக்க ஆரம்பித்தது. அது அந்தப் பையனைப் பார்த்துக் கையை நீட்டிப் பரிகாசம் செய்தது. பையன் முஷ்டி உயர்த்திக் கத்தினான். ஆனால் குரங்கு இன்னும் தீவிரமாக கிழிக்க ஆரம்பித்தது.மாலுமிகள் சிரித்தனர்.பையனுக்கு கோபத்தில் முகம் சிவந்து விட்டது. அவனுடைய மேல்கோட்டை கழற்றி எறிந்து விட்டு அந்தக் குரங்கின் பின்னால் பாய்மரத்தூணில் ஏறத் தொடங்கினான்.ஒரு நொடியில் முதல் பாய்மரத்தூணில்த்முயற்சித்த கணத்திலேயே வேகமாக அடுத்த கம்பில் ஏறிவிட்டது.

பையனும் மேலே ஏறிக் கொண்டே”நீ எங்கிட்டருந்து தப்பிக்கமுடியாது!” என்று கத்தினான்.

குரங்கு அவனுக்கு வழி காட்டிக் கொண்டு அதற்கு மேலும் ஏறியது. அந்தவிளையாட்டில் உணர்ச்சி வசப்பட்ட பையன் குரங்கைத் தொடர்ந்தான். ஒரு நிமிடத்தில் இரண்டு பேரும் உச்சிக்குப் போய் விட்டார்கள்.உச்சியில் இருந்த பாய் மரக்கம்பில் தன் முழு உடம்பையும் நீட்டி பின்காலில் தொங்கிய படி கடைசியில் இருந்த நுனிக் கம்பில் தொப்பியைத் தொங்கவிட்டது. பின் அப்படியே ஊர்ந்து சென்று பாய்மர உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டு பல்லிளித்தது. ஒரு அடி தொலைவில் தொப்பி தொங்கினாலும் அதை எடுக்க வேண்டுமானால் கயிறையும் பாய்மரத்தையும் விட்டு அந்தரத்தில் நடக்கவேண்டும்.

ஆனால் பையனுக்கு ஆர்வம் கூடி விட்டது.பாய்மரத்தை விட்டு எந்த ஆதாரமும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தான்.

கப்பல்தளத்தில் கீழே எல்லோரும் நின்று குரங்கும் கேப்டனின் மகனும் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால் பையன் பாய் மரத்திற்கு வெளியே அந்தரத்தில் கைகளை விரித்த படி போவதைப் பார்த்தவர்கள் அப்படியே உறைந்து போனார்கள்.

ஒரு தப்பான அடி அவனை அவ்வளவு உயரத்திலிருந்து மோதிச் சிதறடித்து விடும்.அவன் அப்படியே போய் அவனுடைய தொப்பியை எடுத்து விட்டாலும் அவனால் பாய்மரத்தூணுக்குத் திரும்ப முடியாது.

எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் பெருமூச்சு விட்டனர்.திடீரென அந்தப் பையனுக்கு தன்னுணர்வு வந்தது.கீழே பார்த்தான்.உடனே ஆட ஆரம்பித்து விட்டான்.

அந்த நேரத்தில் கேப்டன் கப்பல் தளத்திற்கு வந்தான்.கடற்புறாக்களைச் சுடுவதற்காக கையில் துப்பாக்கியுடன் வந்தான்.பாய்மரக் கம்பின் நுனியில் தன் மகன் இருப்பதைப் பார்த்தவுடன் அவனைப் பார்த்துத் துப்பாக்கியைக் குறி வைத்தான்.

“குதி! தண்ணீல குதி! இல்லை சுட்டுருவேன்..” என்று கத்தினான்.

பையன் இன்னும் அதிர்ச்சியடைந்தான் அவனால் அப்பா என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை.

”உடனே குதி! இல்லை சுட்டுருவேன்..ஒண்ணு..ரெண்டு..” அவணுடைய அப்பா ”மூணு” சொல்லும்போது பையன் பாய்மரக் கம்பின் நுனியிலிருந்து தலை கீழாகப் பாய்ந்தான்.பீரங்கிக் குண்டைப் போலக் கடலில் விழுந்தான்.அலைகள் அவனை விழுங்குமுன்னே இருபது மாலுமிகள் கடலில் பாய்ந்தனர்.பையன் நாப்பது வினாடிகளுக்குப் பிறகு தண்ணீருக்கு மேலே வந்தான்.கப்பல்தளத்தில் இருந்தவர்களுக்கு அந்த நாப்பது வினாடிகளும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது. மாலுமிகள் உடனே அவனைத் தூக்கிக் கொண்டு கப்பலுக்கு வந்தனர். பல நிமிடங்களுக்கு தண்ணீர் வாயிலிருந்தும் மூக்கிலிருந்து வந்து கொண்டேயிருந்தது. அதன் பிறகு அவன் மூச்சு விட ஆரம்பித்தான்.

தன் மகன் மூச்சு விட ஆரம்பித்ததைப் பார்த்த கேப்டன் விம்மலோடு குலுங்கி அழ ஆரம்பித்தான்.யாரோ அவனைப் பிடித்து வேகவேகமாக கேப்டனின் அறைக்கு கூட்டிச் சென்றார்கள். கேப்டன் அழுவதை யாரும் பார்த்து விடக் கூடாதில்லையா?

Friday, 31 August 2012

சிட்டுக்குருவியும் தூக்கணாங்குருவியும்

thukkanangkuruvi தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

 

என் வீட்டுக் கூரையின் விளிம்பில் கூடு கட்டியிருந்த தூக்கணாங்குருவியின் கூட்டை முற்றத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.நான் கவனித்துக் கொண்டிருக்கும் போதே இரண்டு தூக்கணாங்குருவிகளும் வெளியே பறந்து போய்விட்டன. கூடு காலியாக இருந்தது.

அந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி கூரை மீதிருந்து படபடவென இறக்கைகளை அடித்துக் கொண்டு பறந்து வந்து அந்தக் கூட்டின் மீது உட்கார்ந்தது. கூட்டுக்குள்ளே எட்டிப் பார்த்து விட்டு திரும்பவும் அதன் சிறகுகளை அடித்தது.பின்னர் கூட்டுக்குள் பாய்ந்தது. கூட்டுக்கு வெளியே தலையை மட்டும் நீட்டிக் கொண்டு கீச்சிட்டது.

சீக்கிரமாகவே ஒரு தூக்கணாங்குருவி திரும்பி வந்தது. கூட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்தது.அப்பொது தான் அந்த அழையாவிருந்தாளியைப் பார்த்தது. உடனே, சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு உரக்கக் கீச்சிட்ட.து. கூட்டிற்கு மேலே வட்டமிட்டு சுற்றியது. பின்பு அங்கிருந்து பறந்து போய்விட்டது.

ஆனால் சிட்டுக்குருவி கூட்டிலேயே இருந்து கொண்டு சலசலத்துக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு பெரிய தூக்கணாங்குருவிக்கூட்டமே அந்த கூட்டை நோக்கிப் பறந்து வந்தது.அந்த சிட்டுக்குருவியைப் ஒரு பார்வை பார்த்து விட்டு மறுபடியும் பறந்து போய் விட்டது. சிட்டுக்குருவி எந்தக் கவலையும் இல்லாமல் தலையை வெளியே நீட்டி அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டே பாடிக்கொண்டிருந்தது.

தூக்கணாங்குருவிகள் மறுபடியும் திரும்பி வந்தன.ஏதோ கூட்டில் செய்து விட்டு பறந்து போய்விட்டன. அவர்கள் வந்து செல்வதற்கு காரணம் இருந்தது.ஒவ்வொருவரும் தங்களுடைய அலகில் கொஞ்சம் களிமண்ணைக் கொண்டு வந்தனர். எல்லோரும் சேர்ந்து கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக் கொண்டு வந்தனர்.

அங்கும் இங்கும் பறந்து மேலும் மேலும் களிமண்ணால் கூட்டை மூடிக் கொண்டே வந்தனர். கூட்டின் வாசல் மேலும் மேலும் குறுகிக் கொண்டே வந்தது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்தைப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு தலையை மட்டும் பார்க்க முடிந்தது.பின்னர் அதன் அலகை, அப்புறம் எதையுமே பார்க்க முடியவில்லை. தூக்கணாங்குருவிகள் அதை கூட்டுக்குள் வைத்து பூசி மெழுகி விட்டனர்.பின்னர் அவர்கள் உற்சாகமாக அந்தக் கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கீச்சிட்டன.

Sunday, 12 August 2012

ப்ளம் பழத்தில் கல்

தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

images (2)

அம்மா இரவு உணவுக்குப் பிறகு குழந்தைகள் சாப்பிடுவதற்காக கொஞ்சம் ப்ளம் பழங்களை வாங்கி வைத்திருந்தாள்.எல்லாப் பழங்களையும் ஒரு தட்டில் வைத்து மேஜை மீது வைத்திருந்தாள்.வான்யா இது வரை ப்ளம் பழமே சாப்பிட்டதில்லை.எனவே பழங்களை மோப்பம் பிடித்துக் கொண்டே இருந்தான்.

அவன் அதை மிகவும் விரும்பினான். ஒரு பழத்தையாவது சாப்பிட்டுப் பார்க்க அவனுக்கு அடக்க முடியாத ஆசை வந்தது.பழங்களைச் சுற்றிச் சுற்றியே அலைந்து கொண்டிருந்தான்.சாப்பாட்டுஅறையில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டான்.அம்மா சாப்பிடுவதற்கு முன்பு பழங்களை எண்ணிப் பார்த்தாள்.ஒரு பழம் குறைந்திருப்பதைக் கண்டு பிடித்தாள்.அவள் உடனே அதை அப்பாவிடம் சொன்னாள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பா,”குழந்தைகளே, யாராச்சும் ஒரு ப்ளம் பழத்தைச் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டார்.எல்லோருமே “இல்லை” என்று சொன்னார்கள்.முகம் சிவந்து போன வான்யாவும்,”இல்லை நான் சாப்பிடலை..”என்று சொன்னான்.

அப்பா,”நீங்க யாராச்சும் சாப்பிட்டிருந்தா அது நல்லதில்லை..ஏன்னா ப்ளம் பழத்துக்குள்ளே சின்னக் கல் இருக்கும். அதை எப்படிச் சாப்பிடணும்னு தெரியாம கல்லை முழுங்கிட்டா, கண்டிப்பா அவங்க மறுநாளே செத்துருவாங்க.. அதான் நான் பயப்படறேன்..”என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் வான்யாவின் முகம் வெளுத்து விட்டது.உடனே அவசர அவசரமாக”நான் அந்தக் கல்லை சன்னல் வழியே தூர எறிஞ்சிட்டேனே..” என்று சொன்னான்.

எல்லோரும் சிரித்தனர்.வான்யாவுக்கு அழுகை வந்தது.

Saturday, 21 July 2012

சிங்கமும் நாயும்

lionanddog லியோ தால்ஸ்தோய்

தமிழில் - உதயசங்கர்

லண்டனில் காட்டு மிருகங்களைப் பார்ப்பதற்கு மிருகக் காட்சி சாலை வைத்திருந்தார்கள். அவற்றைப் பார்க்க வேண்டுமானால் மக்கள் பணம் செலுத்த வேண்டும் அல்லது நாய்களையோ பூனைகளையோ கொண்டு வரவேண்டும். காட்டுமிருகங்களுக்கு அவை உணவாக வீசியெறியப் படும்.

காட்டுமிருகங்களைப் பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு ஆள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு குட்டி நாயைப் பிடித்துக் கொண்டு வந்தான்.நிர்வாகத்தினர் அவனை உள்ளே அனுமதித்து விட்டனர். அதே நேரம் அந்த குட்டிநாயை சிங்கத்தின் கூண்டுக்குள் வீசியெறிந்தனர்.

அந்தக் குட்டி நாய் வாலை மடக்கித் தன் கால்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு சிங்கக்கூண்டின் மூலையில் போய் ஒளிந்து கொண்டது.ஆனால் சிங்கம் வந்து மோந்து பார்த்தது.

பிறகு, அந்தக் குட்டி நாய் கால்களை உயரே தூக்கியபடி மல்லாக்கப் படுத்துக் கொண்டு வாலை ஆட்டியது.

சிங்கம் அதைத் தன் காலால் புரட்டி விட்டது.குட்டிநாய் குதித்து எழுந்து தன் பின்கால்களில் உட்கார்ந்து கொண்டது.சிங்கம் அந்தச் சிறிய மிருகத்தைப் பார்த்தது.அதன் தலையை அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பிப் பார்த்தது.அதற்கு மேல் அதைத் தொடவில்லை.

சிங்கத்தின் எஜமானன் அதற்கு கொஞ்சம் இறைச்சி போட்டபோது சிங்கம் அதில் ஒரு துண்டைக் கிழித்து நாய்க்குட்டிக்காக வைத்தது.

மாலையில் சிங்கம் தூங்கும் போது குட்டிநாயும் அதன் அருகில் சிங்கத்தின் கால் மீது தலை வைத்துப் படுத்துக் கொள்ளும்.

அதிலிருந்து நாயும் சிங்கமும் ஒரே கூண்டில் சேர்ந்து வாழத் தொடங்கின.சிங்கம் குட்டிநாயை ஒரு போதும் துன்புறுத்தவில்லை. அதன் உணவைப் பகிர்ந்துகொண்டது. அதனுடன் சேர்ந்து உறங்கியது.ஏன் விளையாடக் கூடச் செய்தது.

ஒரு நாள் மிருகக் காட்சி சாலைக்கு வந்த ஒரு பணக்காரர் அந்தக் குட்டிநாயை அடையாளம் கண்டு கொண்டார்.அவர் மிருகக்காட்சி சாலை முதலாளியிடம் அந்தநாய் தன்னுடையது என்றும் அதைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டார்.முதலாளியும் கொடுத்துவிட முடிவு செய்தார்.ஆனால் அந்த குட்டிநாயைக் கூப்பிட்ட உடனேயே பிடறி மயிர் சிலிர்க்க சிங்கம் உறுமியது.

குட்டிநாயும் சிங்கமும் சேர்ந்து ஒரு வருடம் முழுவதும் ஒன்றாக வாழ்ந்து வந்தன. ஒரு வருடத்திற்குப் பிறகு குட்டிநாய் நோய்வாய்ப் பட்டு இறந்து விட்டது. சிங்கம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது. இறந்து போன நாய்க்குட்டியை மோந்து பார்த்துக் கொண்டும் நக்கிக் கொடுத்துக் கொண்டும் காலை அதன் மீது போட்டபடியே இருந்தது சிங்கம்.

நாய்க்குட்டி இறந்து விட்டது தெரிந்ததும் திடீரென குதித்து எழுந்தது. அதன் பிடறிமயிர் சிலிர்த்தது.வாலால் தன்னை அடித்துக் கொண்டது.கூண்டின்சுவர்களில் மோதியது.கூண்டுக் கம்பிகளையும் தரையையும் கடித்துப் பிறாண்டியது.

கூண்டிற்குள் கர்ச்சித்துக் கொண்டே இறந்து போன குட்டிநாயின் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது.முதலாளி இறந்த நாயை அப்புறப் படுத்த விரும்பினார்.ஆனால் சிங்கம் யாரையும் அருகில் வர விடவில்லை.

இன்னொரு நாய்க்குட்டியை விட்டால் சிங்கத்தின் துயரம் மறைந்து விடும் என்று முதலாளி நினைத்தார்.இரண்டாவது நாய்க்குட்டியைக் கூண்டுக்குள் விட்டார்.ஆனால் சிங்கம் உடனே அதை துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்து விட்டது.பிறகு இறந்துபோன அந்த குட்டிநாயைச் சுற்றி கால்களைப் போட்டுக் கொண்டு எந்த அசைவுமில்லாமல் ஐந்து நாட்களுக்கு அப்படியே கிடந்தது.

ஆறாவது நாள் சிங்கமும் இறந்துவிட்டது.

Thursday, 14 June 2012

சுறா

shark தால்ஸ்தோய்

தமிழில்-உதயசங்கர்

எங்களுடைய கப்பல் ஆப்பிரிக்காவின் கரையோரம் நங்கூரமிட்டிருந்தது. அந்த நாள் அற்புதமாக இருந்தது. கடலிலிருந்து புதிய காற்று வீசியது. ஆனால் மாலையில் காலநிலை மாறி விட்டது. புழுக்கம் கூடிக் கொண்டே போனது. சகாரா பாலைவனத்தின் சூடான காற்று எங்களை அடுப்பிலிருந்து வரும் வெப்பத்தைப் போல எங்களைத் தாக்கியது.

சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்னால் கப்பல் கேப்டன் மேல்தளத்திற்கு வந்தான். “நீச்சல் குளத்தைத் தயார் செய்யுங்கள்” என்று கத்தினான். ஒரு நொடியில் மாலுமிகள் கடலுக்குள் பாய்ந்தனர். தாழ்ந்து வரும் கப்பல்பாயைக் கீழே கட்டி ஒரு நீச்சல்குளத்தை உள்ளேயே உருவாக்கினார்கள்.

கப்பலில் இரண்டு பையன்கள் எங்களோடு இருந்தார்கள். அவர்கள் முதலில் குதித்தனர்.ஆனால் சிறிது நேரத்திலேயே கூட்டம் அதிகமாகி விட்டது. உடனே அவர்கள் நேரடியாக கடலில் குதிக்க முடிவு செய்தார்கள். முதலைகள் இறங்குவதைப் போலத் தண்ணீருக்குள் நழுவினர். நங்கூரத்தின் மீது மிதக்கும் மிதவையை அடைய முயற்சித்தனர்.

ஒரு பையன் இன்னொரு பையனை விட முந்திச் சென்று விட்டான்.பிறகு அப்படியே பின்னால் சென்று விட்டான். அவனுடைய அப்பா பழைய துப்பாக்கிவீரர் கப்பல்தளத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் பின்தங்கிய போது அவர் அவனைப் பார்த்து,”விடாதே..இன்னும் கொஞ்சம் முயற்சி செய்” என்று கத்தினார்.

ஆனால் அப்போது யாரோ கப்பல்தளத்திலிருந்து,”அதோ..சுறா..” என்று கத்தினார்கள். நாங்கள் தண்ணீருக்குள் மிதந்து வரும் அந்த கொடூரமிருகத்தின் முதுகைப் பார்த்தோம்.

சுறாமீன் அந்த பையன்களை நோக்கியே விரைந்து கொண்டிருந்தது. துப்பாக்கிவீரர்”திரும்பி வா..திரும்பி வா..” என்று முழங்கினார். ஆனால் அது அந்தப் பையன்களுக்குக் கேட்கவில்லை.அவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர்.சிரித்துக் கொண்டும் முன்பை விட சத்தமாகக் கத்திக் கொண்டுமிருந்தனர்.

துப்பாக்கிவீரரால் அசையமுடியவில்லை.அப்படியே வெளுத்துப் போய் விட்டார். மாலுமிகள் ஒரு படகை கடலில் இறக்கி அதில் ஏறிக் கொண்டனர். அவர்களுடைய முழு பலத்தை செலுத்தி துடுப்பை வலித்தனர். ஆனால் பையன்களோ வெகுதூரத்திலிருந்தார்கள்.சுறா அவர்களுக்கு இருபதடி தூரத்திலேயே இருந்தது.

எங்களுடைய எச்சரிக்கை அலறல்களை அந்தப் பையன்கள் கேட்கவில்லை. சுறாமீனையும் பார்க்கவில்லை. திடீரென ஒரு பையன் திரும்பினான்.நாங்கள் அவனுடைய அலறலைக் கேட்டோம். அவனும் அவனுடைய விளையாட்டுத்தோழனும் தனித்தனியே துள்ளிக் குதித்தனர்.

அந்த அலறல் துப்பாக்கிவீரரின் அமைதியைக் குலைத்துவிட்டது. ஒரு நொடியில் அவர் பீரங்கி இருந்த இடத்தை அடைந்தார். பீரங்கிக் குழாயை அசைத்து அதன்மீது கவிழ்ந்து குறி பார்த்தார். பின்னர் திரியை இழுத்து விட்டார்.

கப்பலில் இருந்த அத்தனை பேரும் கற்சிலை மாதிரி அசையாமல் இருந்தனர். என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கக் காத்துக் கொண்டிருந்தனர்.

பீரங்கி முழங்கியது.துப்பாக்கிவீரர் அப்படியே பீரங்கியின் அடியில் முகத்தை மூடிக் கொண்டு விழுந்து கிடப்பதை நாங்கள் பார்த்தோம்.அந்த சுறாவுக்கும் பையன்களுக்கும் என்ன நேர்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை.ஏனெனில் பீரங்கிக் குண்டின் புகை சற்று நேரம் அவர்களை மறைத்து இருந்தது.

தண்ணீருக்கு மேலே புகை கலையத் தொடங்கியபோது முதலில் ஒரு முணுமுணுப்பு தோன்றியது. அது வளர்ந்து சந்தோசக் கூச்சலாக மாறியது.

அந்த பழைய துப்பாக்கிவீரர் தன் முகத்திலிருந்து கைகளை எடுத்துவிட்டு வெளியே கடலைப் பார்த்தார். இறந்து போன சுறாமீனின் மஞ்சள் வயிறு தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்தது. சில நொடிகளுக்குள்ளே எங்கள் படகு அந்த பையன்கள் இருந்த இடத்தை அடைந்தது. அவர்களைக் கப்பலுக்கு அழைத்து வந்தது.

Saturday, 26 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்

அப்பணசாமி

நான் ஏன் எழுதுகிறேன்? நான் ஏன் எழுதத் தொடங்கினேன்? நான் எப்படி எழுதத் தொடங்கினேன்? எப்படி யோசித்தாலும் இப்போது எனக்குக் கிடைப்பது ஒரே பதில்தான்!

எழுதுவதுதான் எனக்கு மிக எளிதான தொடர்பு சாதனமாக இருந்திருக்கிறது. மிகவும் கூச்சசுபாவியான எனக்கு எழுதுவதுதான் தனிமையில் மேற்கொள்ளக்கூடிய காரியமாக இருந்திக்கிறது.

ஒவ்வொருவரும் அவரவருக்கான எளிதான சிறந்த தொடர்பு சாதனத்தைத் தேட முற்பட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும். பலருக்குப் பேசுவதே மிக எளிதான தொடர்பு சாதனமாக இருக்கலாம். சிலருக்கு ஓவியம், வேறு சிலருக்குக் கவிதை, இசை, பாடல், கதை சொல்லுவது, பாட்டுக் கட்டுவது என பல வடிவங்களில் ஒன்று அவரவருக்கானதாக இருக்கலாம்.

என்னைப் பொருத்தவரை எனது பதின்மப் பருவத்தில் நான் எனக்குள் சுருங்கிப் போனேன். எனது கருத்துகளைப் பகிரங்கமாகச் சொல்லுவதில் தயங்கும் நிலை ஏற்பட்டது. அப்போது எழுதினால் மட்டுமே எனது எண்ணங்களைச் சிறப்பாகத் தெரிவிக்க முடியும் என்ற நம்பிக்கை - நான் ஏழாவது படிக்கும்போதே ஏனோ எனக்கு ஏற்பட்டிருந்தது.

அநேகமாக எனது முதல் எழுத்து எனது 12ஆவது வயதில் எழுதிய போஸ்ட் கார்டு காகிதம் (கடிதம்)தான் என்று என்று நினைக்கிறேன். அது எனது அப்பாவுக்கு எழுதிய முதல் கடிதம். எனது வாழ்க்கையில் எனது அப்பாவுக்கு இரண்டே இரண்டு கடிதம்தான் எழுதியிருக்கிறேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. முதல் கடிதம் எழுதி சுமார் 25 வருசம் கழித்தே இரண்டாவது கடிதம் எழுத நேர்ந்தது. அக்கடிதத்துக்குப் பிறகு என் அப்பாவை நான் சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. 296354_223030614425623_100001560597711_608844_2065706084_n

நான் எனது ஏழாவது வகுப்பை ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அங்கேயே பள்ளியும். கிறித்துவ மிஷனரி நடத்திய தர்மப் பள்ளிக்கூடம். ஹாஸ்டலுக்கும் பீஸ் கிடையாது. எனது ஊரில் இருந்து சுமார் 20 மைல் தொலைவு. தப்பித்துக்கூட ஓட முடியாது. எந்தப் பக்கம் ஆனாலும் குறைந்தது 5 கி.மீ நடந்து கடக்க வேண்டும். அது சாத்தியமில்லை. பிடித்து விடுவார்கள். பிடித்துவிட்டால் காலில் சங்கிலி போட்டு பிணைத்து விடுவார்கள். எனக்கு அதற்கெல்லாம் தைரியம் இல்லை. இருந்தாலும் இந்த வருசம் எப்படியும் தொலையட்டும், அடுத்த வருசம் இங்கு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளிக்கூடத்துக்கே அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை; இங்கு மட்டும் இருக்கக்கூடாது என்பது எனது வைராக்கியம். கிட்டத்தட்ட அங்குதான் தனிமை நோய் அல்லது தனிமை சுகம் என்னைப் பீடித்து இருக்கலாம்.

எனது வைராக்கியத்தை அப்பாவிடம் எப்படித் தெரிவிப்பது என்ற ஆராய்ச்சியின் முடிவாகத்தான் கடிதம் எழுதும் யோசனை பிறந்தது. மூணு காசுக்கு போஸ்ட் கார்ட் வாங்கி நாலே நாலு வரி எழுதிப் போட்டேன். எழுதிப்போட்டேன் என்றால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. முதலில் எழுதுவதற்கு ஒரு ரகசியமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்புறம் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். கார்டு வெளியே தெரியாதபடி உடலுக்குள் மறைத்து வைக்க வேண்டும். சர்ச்சுக்கு எதிர் தெருவில் இருக்கும் போஸ்டாபிஸ் திண்ணையில் ஏறி அதில் தொங்கும் பெட்டியில் போட வேண்டும். அப்போது ஒரு சுடுகஞ்சிகூட பார்த்திருக்கக் கூடாது. அப்படியான சாதனையோடு அந்தக் கடிதத்தை எழுதிப் போட்டேன். எந்த வரிசையிலும் முதலாவது நிற்கும் அளவுக்குக் குள்ளம். இப்போது யோசிக்கும்போது பாதிரியாரின் பார்வையை மீறி எந்தக் கடிதமும் அந்த ஊரைவிட்டுப் போயிருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் அப்போதுஎனது எழுத்தில் மயங்கித்தான், என்னை அப்பா, அங்கிருந்து விடுவித்தார் என மிகவும் நம்பினேன். அதனால் என்னால் சிறப்பாக எழுத முடியும் என்ற நம்பிக்கை அப்போதே துளிர் விட்டிருந்தது.

தொடர்ந்து வகுப்புகளிலும் கேள்விக்கான பதில்களை எழுதும் போது நானே வாக்கியம் அமைத்து எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பதில்களின் நடுவே தந்திரமாக எனது சொந்த வாக்கியங்களைச் சேர்த்துவிடுவேன். தமிழ்க் கேள்வித்தாளில் எனக்குப் பிடித்த கேள்விப் பகுதி வியாசம் (கட்டுரை) எழுதுவதாகவே இருந்தது. அதற்கு எந்த ஆசிரியருக்கும் 10க்கு 6 மார்க்குமேல் போட மனசு வராது.

அப்புறம் வீட்டில் தீப்பட்டிப் பசை நாற்றத்துக்குப் பயந்து தப்பித்து எங்கள் தெரிவில் உள்ள நூலகத்தில் ஒளிந்து கொள்ளும் பழக்கமும் இருந்தது. அங்கு என்னை அறியாமல் வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், ராசு நல்லபெருமாள், கு. அழகர்சாமி ஆகியோரின் புத்தகங்களைப் புரட்டிய நினைவும் இருக்கிறது. அவற்றில் என்னை ஆச்சரியப்பட வைத்தது தாகூர் கதைகளின் மொழிப்பெயர்ப்புப் புத்தகம் ஒன்று. அதில் நமது வீடுகளில் நடக்கக்கூடிய சம்பவங்கள் போலவே கூறப்பட்டிருந்தது. வீட்டில நடப்பதை எழுதினால் அதுவும் கதைதான் என்பதை அக்கதைகள் புரியவைத்தன.

வெகுசீக்கிரத்தில் நான் கணக்குப் புலி ஆகி விட்டேன். கணக்குப் பாடம் தவிர எதுவும் ரசிப்பது இல்லை. கடைசி வரை கணித மாணவனாகவே கழித்து விட்டேன். அதனால் பள்ளிக்கூட நாள்களில் கவிஞனாகும் கனவெல்லாம் இல்லை. படிப்பெல்லாம் முடியும் நேரத்தில் நண்பர்களில் பலர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்தப் புத்தகத்தை நானும் வாசிக்க ஆரம்பித்தேன்.

தண்டவாளத்தைத் தாண்டிப்போனால் சில புத்தகங்களைக் கண்ணில் காண்பிப்பார்கள். அப்படி ஜெயந்தன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், நீல பத்மநாபன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வாசிக்கக் கிடைத்தது. ஒரு தொகுப்பின் தலைப்பு: சம்மதங்கள். பெரும்பாலும் நமது குடும்பங்களில் நடக்கும் சண்டை, சச்சரவுகளே கதைகளாக இருந்தன. எனக்கு ஒரே ஆச்சரியம். இதுதான் கதையா? அப்படின்னா ‘நம்ம கிட்ட எவ்வளவோ கதைகள் இருக்கே! என நினைத்தேன். ஏனென்றால் என் வீடு இது போன்ற சண்டைகளுக்கு ஜில்லாவிலேயே பிரபலமான வீடு. அப்போது நாமும் இதுபோல கதைகள் எழுத முடியும் என மீண்டும் நினைத்தேன். அதற்கேற்ற மாதிரி நான் ஏன் எழுதுகிறேன்? நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்? நான் பயின்ற பல்கலைக் கழகங்கள் என்பன போன்ற எழுத்து குறித்த மார்க்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய். அலெக்சி டால்ஸ்டாய், சோலோகவ், பிளாக்கனோவ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் (லியோ டால்ஸ்டாய், சோலகோவ். பிளாக்கனவ் எழுதிய கட்டுரை/புத்தகங்களின் தலைப்புகள் திடீர் என நினைவுக்கு வரவில்லை) படிக்கக் கிடைத்தன. அந்தப் புத்தகங்களில் எழுத்து என்பது ’பயிற்சிதான்; தொடர்து முயற்சி செய்தாக் யாரும் எழுத்தாளனாகிவிட முடியும் என்பதைத் திரும்ப, திரும்பக் கூறினர். இவ்வாறு எனக்குக் கிடைத்த தொடர் நம்பிக்கை எழுதாமல் முடியாது என்ற நிலையை உருவாக்கியது. எழுதத் தொடங்கினேன்.

மேலும் அது ரகசிய உலகமாக இருக்கிறது. பேசினால் சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது. ஆனால் எழுத்தில் திருத்தி எழுத முடிகிறது. எண்ண ஓட்டங்களுக்கும் அதை எழுதிமுடிப்பதற்கும் இடையேயான் இடைவெளி பாதுகாப்பானதாக இருக்கிறது. எழுதுவது ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனின் செயலாக இருக்கிறது. எழுத்து. கள்ளுக் குடித்தது போன்ற போதையைத் தருகிறது. அது பத்திரிகையில் பிரசுரமாகும்போது நான் உயரமானவனாக உணர்கிறேன். என் எழுத்தால் வாசக மனதைக் ககக்கிப்பிழிந்துவிட நினைக்கிறேன். அது அழியாது என நினைக்கிறேன்.

இவ்வளவும் தெரிந்தும் நான் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்பது மீதி புராணம்!

Monday, 21 May 2012

கூண்டுப் பறவை-- தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்.verity_harpy_aug07

செர்யோஷாவின் பிறந்த நாளைக்கு நிறையப் பரிசுகள் கிடைத்தன.பம்பரங்கள்,சாய்ஞ்சாடும் குதிரை, படங்கள் எல்லாம் கிடைத்தன.ஆனால் மிகச் சிறந்த பரிசு அவனுடைய மாமாவிடமிருந்து தான் கிடைத்தது. பறவைகளைப் பிடிப்பதற்கான கூண்டு. சிறிய மரச்சட்டகத்தில் வலை அடித்த கூண்டு.

கொஞ்சம் தானியங்களை உள்ளே போட்டு கூண்டை தோட்டத்தில் வைத்து விட்டால் போதும். தானியங்களை தின்பதற்கு ஏதாவது ஒரு பறவை உள்ளே வந்ததும் அதன் மரக் கதவு தானாக மூடிக்கொள்ளும்.செர்யோஷாவுக்கு ரொம்ப சந்தோசம். அவனுடைய அம்மாவிடம் காட்டுவதற்கு ஓடினான்.

அவள் அதைப் பார்த்துவிட்டு,”ரொம்ப மோசமான விளையாட்டு சாமான்,ஏன் பறவைகளைப் பிடித்து துன்பப் படுத்தணும்”.என்று சொன்னாள்.

அவன்,”நான் அவற்றைப் பிடித்துக் கூண்டில் அடைச்சு வைப்பேன்.அவை எனக்காகப் பாடும்.நான் அதுகளுக்கு சாப்பாடு கொடுப்பேன்” என்றான்.

செர்யோஷா கொஞ்சம் தானியங்களை அந்தக் கூண்டுக்குள் போட்டு, அதைக் கொண்டு போய் தோட்டத்தில் வைத்தான்.அவன் ரொம்ப நேரமாகக் காத்திருந்தான்.ஒரு பறவையும் வரவில்லை.

அவனைப் பார்த்து பறவைகள் பயந்தன.கூண்டின் அருகில் கூட பறக்கவில்லை.செர்யோஷா இரவு உணவுக்காகவீட்டிற்குள் போய் விட்டான்.கூண்டை தோட்டத்திலேயே விட்டு விட்டான். சாப்பிட்டு விட்டு வந்து பார்க்கும் போது கூண்டு அடைபட்டு இருந்தது. ஒரு சிறிய பறவை முட்டி மோதிக் கொண்டிருந்தது.பல்லை இளித்தபடியே செர்யோஷா கூண்டத்தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

“அம்மா, இங்கே பாருங்க! நான் ஒரு பறவையைப் பிடிச்சிட்டேன்.அநேகமாக அது நைட்டிங்கேலாகத் தான் இருக்கும்னு நினைக்கிறேன்.அதோட இதயம் எப்படி துடிக்குது பாருங்க..”என்று அவன் சொன்னான்.

அம்மா அவனிடம்,”இது பாடும் சிஸ்கின் பறவை அதை துன்பப் படுத்தாதே..கூண்டைத் திறந்து அதைப் போக விடு..” என்று சொன்னாள்.

”இல்லம்மா நான் அதுக்கு சப்பாடு கொடுப்பேன்.குடிக்கத் தண்ணீரும் கொடுப்பேன்..”என்றான் செர்யோஷா.

செர்யோஷா சிஸ்கினை கூண்டில் அடைத்து, அதற்குத் தானியங்களும் தண்ணீரும் வைத்தான். ஒரு இரண்டு நாட்களுக்குத் தினமும் கூண்டைச் சுத்தம் செய்தான்.ஆனால் மூன்றாவது நாள் அவன் அந்தச் சின்னப் பறவையை மறந்தே போனான். தண்ணீர் மாற்றவும் தீனி போடவும் மறந்து போனான்.

“பாத்தியா, நான் சொன்னேன்ல, நீ அந்தப் பறவையை மறந்துட்டீல்ல.அதை வெளியில விட்டிரு..” என்று அம்மா சொன்னாள்.

உடனே செர்யோஷா “இல்லை..நான் மறக்கலை.. இதோ..நான் உடனே கூண்டைச் சுத்தம் செய்து, தண்ணீர் மாத்தப் போறேன்..” என்று சொன்னான்.கூண்டுக்குள் கையை விட்டு அதைச் சுத்தம் செய்யத் தொடங்கினான்.பயந்து போன சிஸ்கின் கூண்டுக் கம்பிகளில் முட்டிமோதியது.செர்யோஷா கூண்டைச் செய்து முடித்து விட்டு தண்ணீர் எடுத்து வரப் போய்விட்டான்.அம்மா தான் அவன் கூண்டை மூடாமல் போய் விட்டதைக் கவனித்தாள்.

அவள்,அவனைக் கூப்பிட்டாள்,”செர்யோஷா! கூண்டை மூடிட்டுப் போ! இல்லேன்னா அந்தப் பறவை வெளில போய் காயப் படுத்திக்கப் போகுது..”

அவள் சொல்லி முடிக்குமுன்பே அந்த சிறிய சிஸ்கின் கூண்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டுபிடித்து விட்டது.அதன் வழியே சந்தோசமாக தன் சிறிய சிறகுகளை விரித்து பறந்தது. சன்னலைத் தேடி அறையெங்கும் அலைந்தது.சன்னலில் கண்ணாடி இருப்பது தெரியாமல் வேகமாக அதில் முட்டியது. அப்படியே சன்னலின் அடியில் பொத்தென்று விழுந்தது.

செர்யோஷா ஓடி வந்து அதைத் தூக்கி கூண்டுக்குள் வைத்தான்.சிஸ்கின் உயிருடன் இருந்தது.அது சிறகுகளை விரித்து மூச்சுத்திணறலோடு கிடந்தது.செர்யோஷாவுக்கு அதைப் பார்த்து பார்த்து கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அம்மா! நான் என்ன செய்ய?” என்று அழுதுகொண்டே கேட்டான்.

”இனி உன்னால ஒண்ணும் செய்ய முடியாது” என்று அம்மா சொன்னாள்.

செர்யோஷா நாள் முழுதும் அந்தக் கூண்டின் அருகிலேயே,சிஸ்கின் வேகவேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.இரவு அவன் படுக்கப் போகும்போது அது உயிருடனே இருந்தது.அவனுக்கு ரொம்ப நேரமாய் தூக்கம் வரவில்லை.கண்களை மூடும் போதெல்லாம் சிஸ்கின் மூச்சுத் திணறலோடு துடித்துக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது. காலையி எழுந்ததும் கூண்டை நோக்கி ஓடினான்.அங்கே சிஸ்கின் தன் சிறிய கால்கள் விரைத்திருக்க இறந்து கிடந்தது.

அதன் பிறகு செர்யோஷா பறவைகளை ஒரு போதும் பிடிக்கவில்லை

Monday, 9 April 2012

வெயில் மழையெனப் பொழியும்

 
வெயில் மstock-photo-5790293-arid-dry-desert-landscape-black-and-whiteழையெனப் பொழியும் நிலவெ ளியிலிருந்து...

ஒவ்வொரு ஊரும் பேசிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், யாரும் அதைக் கேட்பதில்லை. அவசரங்களின் சக்கரத்தை காலில் கட்டிக்கொண்டு, எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும்நமக்கு, யார் பேசுவதை கேட்கத்தான் நேரமிருக்கிறது? அல்லது பொறுமை இருக்கிறது? வீட்டில்மனைவி பேசிக்கொண்டிருக்கிறாள். குழந்தைகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாரும்கேட்பதில்லை. வெளியே ஊர் பேசிக்கொண்டிருக்கிறது. நம்முடைய தெரு பேசிக்கொண்டிருக்கிறது.நாம் பார்த்து, பார்த்து கட்டிய வீடு பேசிக் கொண்டிருக்கிறது. வாடகைக் குடியிருப்புகளும்கூடவாய் ஓயாது சலசலவென பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கேட்பதற்குத்தான் யாரும் இல்லை.
ஒட்டுமொத்த வாழ்க்கையையும்,அலைபேசிகளும், தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் சுருட்டி வைத்தக் கொண்டிருக்கின்றன. நம்முடைய பெரும்பாலான பொழுதுகளைஅங்குதான் சலவழிக்கிறோம். உயிருள்ள, ஜீவத் துடிப்புமிக்க வாழ்வின் நொடிகளை அங்கே இழந்த கொண்டிருக்கிறோம்.ஒரு ஊர் என்பது வெறும் பூகோள வரைபடமோ,வருவாய்த்துறை வரைபடமோதேர்தலுக்கான வார்டுகளோ, தெருக்கள லல. ஊர் என்பது உயிருள்ள ஒரு ஆன்மா.முதன்முதலாகஒரு இடத்தைத் தேர்ந்தெடத்து,அதில் குடியேறி, காட்டைத் திருத்தி கழனியாக்கிய மக்கள்கூட்டத்தின் ஆன்மா அதில் இருக்கிறது. நாம் குடியிருக்கும் ஊரின் ஒரு துளி மண் கூட வரலாற்றைப்பேசும். என்றாவது நாம் அதைக் கேட்டிருப்போமா. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம் இருக்கிறது.

சென்னையில் இறங்கியவுடன் சுண்டவைத்த பழைய கறியும், பேக்கரியின்புதிய சுவையும் கலந்த ஒரு நெடி வீசுவதைப் பார்க்கலாம். மதுரையின் எல்லையில் வரலாற்றின்பழைய வாசம் வீசும் மலர் மணத்தை நுகரலாம். பலசரக்குக் கடையின்மணம் விருதுநகரென்றால்,கரிமருந்தும் சாக்கடையும் கலந்து வீசும் சாத்தூர். கரிசல் விருவுகள் விட்ட வெப்ப மூச்சுஉடலில் வருட, வெயிலின் தீய்ந்த வாடை வீசும் கோவில்பட்டி.

திருநெல்வேலி எல்லை வந்ததும், வயக்காட்டிலிருந்து எழுந்து வரும்நீர்மையான குளிர்காற்றில் மனசு கரைந்துவிடும். தூத்துக்குடியில் உயிர்மீனின் கவிச்சிவீசும். கருவாட்டின் தீவிர வாசனை ராமேஸ்வரத்தில். இப்படிச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.ஒவ்வொரு ஊருக்கு ஒரு மணம் இருப்பதைப்போல, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு குணமும் இருக்கிறது.என்றாவது இதையெல்லாம் யோசித்திருப்போமா? ஆனால், எல்லாவற்றையும் சொல்வதற்கு ஊர் துடித்துக் கொண்டிருக்கிறது.
இப்படித்தான் ஒரு நாள் என்னுடைய சொந்த ஊரான கோவில்பட்டியிலுள்ளகதிரேசன் கோவில்மலையில் அந்திசாயும் பொழுதில் உட்கார்ந்திருந்தேன். சூரியனின் கடைசிக் கிரணம் அடிவானத்துக்குள் மறைந்து கொண்டிருப்பது தெரிகிறது. திடீரென ஒரு காற்று தரையிலிருந்துமலையை நோக்கி எழும்பி வருகிறது. கரிசல் வெளியின் விருவுகள், பகலில் வெயிலைத் தின்றுமுடித்து, பின் விட்ட ஏப்பம்தான் அது. காற்று, உடலெங்கும் வீசியடங்கியதும் பேரமைதிவந்து என்னருகில் உட்கார்ந்து கொண்டது.
எனக்கெதிரே கவிந்து வரும் இருளில், நகரம் ஒவ்வொரு கண்ணாய் இமைமூடி, திறந்தும் விழித்தும் பார்க்கிறது. எங்கும் நிசப்தம் தன் போர்வையை விரித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ கேட்கும் ஒரு பாடலோ, தேசிய நெடுஞ்சாலையில் விரைந்துசெல்லும் ஒரு வாகனத்தின் ஹாரன் சத்தமோ நிசப்தப் போர்வையின் ஓரங்களை உலைத்துக் கொண்டிருக்க,மனம் சலனமற்றிருந்தது.
அப்போதுதான் அந்த முணுமுணுப்பு கேட்டது. மெல்ல அங்கமிங்கும்திரும்பிப் பார்த்தேன். எந்த அரவமும் இல்லை. சில நொடிகள் அமைதி.மறுபடியும் அதே முணுமுணுப்பு.இப்போது இன்னும் தெளிவாய் பேசத் துடித்துக் கொண்டேயிருக்கிற என் ஊரின் குரல்.
‘‘இரவில் மட்டும் எப்படி நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய்?’’ எனக்குள்ளாக
அதனிடம் கேட்கிறேன்.
‘‘இரவில்தான் நான் பிறக்கிறேன். இரவில்தான் நான் வளர்கிறேன்..இரவில்தான் நான் பருவமடைகிறேன்.. இரவில்தான் நான் என் காயங்களை, வலியை, வேதனையை ஆற்றிக்கொள்கிறேன். என் வரலாற்றை திரும்பிப் பார்க்கிறேன். என் மக்களோடு ஆத்மார்த்தமாக உறவுகொள்கிறேன். இரவுதான் உயிர்களின் சூட்சுமம் பொதிந்த ரகசியவெளி...’’
நான் எதுவும் பேசவில்லை. அதன் குரலில், வெக்கையினால் ஏற்பட்டகமறல் குறைந்து, ஈரம் கூடியிருந்தது. அப்படியே அது எனக்குள்ளாக இறங்க, இப்போது நான் பாறையாகிவிட்டிருந்தேன். நான் கதிரேசன் மலையாகிவிட்டேன். நான் என் நகரமாகிவிட்டேன்.என் குரலே மாறிவிட்டது. என் உடல், என் ஊரின் மீது அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது.
மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில், மதுரையிலிருந்துதெற்கு நோக்கி போடப்பட்ட மண்சாலை, கோவில்பட்டி என்ற பெயரறியா கிராமத்தை ஊடறுத்துச்சென்றது. அன்றிலிருந்து வளரத் தொடங்கிய ஊர், இன்னும் இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.அருகிலிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எட்டையபுரம், கயத்தாறு, கங்கைகொண்டான்,கடம்பூர், இளையரசனேந்தல் போன்ற ஊர்களைத் தாண்டி வளரத் தொடங்கியது.
பிரிட்டிஷாரின் தண்டவாளங்கள், மேலும் முக்கியத்துவம் பெற வைத்தன.பருத்தி அமோகமாக விளையும் மானாவாரி விவசாயம் என்பதால், லாயல் மில்லும் லட்சுமி மில்லும்வந்தன. பொய்த்த மழை, உழைப்பை மலிவாக்கியது. சிவகாசியிலிருந்து சாத்தூர் வழியாக தீப்பெட்டியாபீஸ்மெல்ல மெல்ல நடந்து வருகிறது. கிராமம் நகரெமென அரிதாரம் பூசிக்கொள்கிறது.
மகாகவி போகும்போதும் வரும்போதும் இந்த ஊரில்தான் ரயிலேறுகிறான்.இது, ஞானச்செருக்கின் சுவடுகள் படிந்த பூமி. தியாகத் திருவுருவாம் வ.உ.சி.கூட இங்கு அமைந்திருந்த முன்சீப் கோர்ட்டில் வக்கீல் தொழில் பார்த்தவர்தான். அவரது சுவாசம் இந்தஊரில் கலந்திருக்கிறது. இசைமேதை விளாத்திகுளம் சாமிகளும், நாதஸ்வர இசையின் மகத்தானகலைஞன் காருக்குறிச்சி அருணாசலமும் இங்கே வாழ்ந்து, இசையின் ஸ்வரங்களை காற்றில் கலக்கச்செய்துள்ளனர். திருவாதிரை இசைவிழா மூலம், எண்ணற்ற சங்கீத மேதைகள் கோவில்பட்டிக்கு வந்துபோயுள்ளனர். ஓவிய மேதை கொண்டைய ராஜு வாழ்ந்த பெருமையும் கோவில்பட்டிக்கு உண்டு. அவருடையசீடர்களான டி.எஸ்.சுப்பையாவும், ராமலிங்கமும் புகழ்பெற்றது இந்த நகரத்தில்தான்.
ஒன்றா, இரண்டா? பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களையும், சுதேசிசர்க்காருக்கு எதிரான போராட்டங்களையும்ம் வளர்த்தெடுத்த இந்நகரம், வெயிலோடு பிறந்து, வெயிலோடு வளர்ந்து போராடும் மக்களின் போராட்ட குணத்தோடு வளர்ந்து கொண்டேயிருந்தது.மின் உயர்வுக்கு எதிரான விவசாயிகளின் மாட்டுவண்டி போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்குறிஞ்சாக்குளம் கந்தசாமி நாயக்கர் தியாகியானார். கூப்பிட்ட குரலுக்கு நடந்தோ, சைக்கிளிலோவரும் மக்கள் தொண்டன் சோ. அழகர்சாமியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஐந்து முறைசட்டமன்றத்துக்கு அனுப்பிய பெருமைமிகு நகரம் இந்நகரம்.
காலம் மாறுகிறது. புதிய தலைமுறைகளுடன், புதியனவும் வந்து சேர்ந்தன.தமிழ்ச் சிறுகதை மேதை கு.அழகிரிசாமி தமிழிலக்கியத்துக்கு பெருமை சேர்க்கிறார். கரிசல் இலக்கியப் பதாகை தாங்கி, கி.ராஜநாராயணன் புறப்படுகிறார். அவருக்குப் பின்னால் ஒரு பெரும்படையேகிளம்பிற்று. பூமணி, தேவதச்சன், கௌரிஷங்கர், தமிழ்ச்செல்வன், வித்யாஷங்கர், ஜோதிவிநாயகம்,சமயவேல், சொ.தர்மன், கோணங்கி, உதயசங்கர், அப்பாஸ், நாறும்பூநாதன், அப்பணசாமி, ஓவியர்மாரீஸ், நடிகர் சார்லி என பெரும் கூட்டமே தமிழ் கலை இலக்கிய வெளியை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள்.
இதன் விளைவு, நவீன ஓவியர் பிகாசோ கோவில்பட்டிக்கு வந்து சேர்கிறார்.தொடர்ந்து டால்ஸ்டாயும், தாஸ்தயேவ்ஸ்கியும், கார்க்கியும், எமிலிஜோலாவும், நட்ஹாம்சனும், மாப்பசானும், செல்மாலாகர்லவ்வும், தாமஸ்மானும், பால்சாக்கும் நகரத்துத் தெருக்களில்டீ குடித்துக் கொண்டு சிகரெட் புகைத்துக் கொண்டு திரிந்தனர். பாரீஸ் நகரத்து வீதிகளைப்போலகோவில்பட்டியெங்கும் கலையும், இலக்கியமும், காதலும் நிறைந்திருந்தது.
ஊர் என்பது கடைவீதிகளின் எண்ணிக்கையோ, சினிமா தியேட்டர்களின் எண்ணிக்கையோ, தெருக்களின் எண்ணிக்கையோ இல்லை. அதுவேறு. அதன் ஆன்மாவில் மண்ணின் சுவை,மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், உணவுமுறைகள், இசை, கலை இலக்கியம், விளையாட்டு, வியாபாரம்என்று எல்லாம் கலந்திருக்கிறது. இப்படியாக நாம் வாழும் மண்ணின் குணம்தான் நமக்கும்இருக்கும்.பிரயாணத்தின்போது, சொந்த ஊரின் எல்லையைத் தாண்டுகிறபோது ஏற்படும்பிரிவாற்றாமையும், திரும்பி வரும்போது சொந்த ஊரின் எல்லை கண்களில் படும்போது ஏற்படும்மகிழ்ச்சியையும் சொற்களில் அடக்க முடியுமா?
பேச்சின் லயம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.நான் மீண்டும் ஒருமுறை என் இனிய ஊரான கோவில்பட்டியைப் பார்க்கிறேன். அதன் இதயத்துடிப்பைஉணர்கிறேன். என் மனம் விம்முகிறது. அதுவரை என்னைச் சூழ்ந்திருந்த இருளும் உறங்க ஆரம்பிக்கிறது.என் இரண்டு கைகளையும் விரித்து, மானசீகமாக என் ஊரை அணைத்துக் கொள்கிறேன். கையை விரித்துஅணைப்பது ஊரை நேசிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும். மெல்ல நகரத்தை நோக்கி காலடிஎடுத்து வைக்கிறேன்.
அதோ, கேட்கிறதா? உங்கள் ஊரின் முணுமுணுப்பு. காதுகளுக்கருகில்கேட்கும் கிசுகிசுப்பு, உங்கள் ஊரின் இதயத்துடிப்பு.

Wednesday, 4 April 2012

பூனைக்குட்டி

cat
  பூனைக்குட்டி

லேவ் தால்ஸ்தோய்


ஒரு ஊரில் வாஸ்யா, காட்யா, என்ற சகோதர சகோதரிகள்ஒரு பூனை வளர்த்து
வந்தனர். வசந்த காலத்தில் அவர்களுடைய பூனை தொலைந்து போய் விட்டது.அந்த குழந்தைகள் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தனர். அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.ஒரு சமயம் அவர்கள் வீட்டிலிருந்த தானியக் களஞ்சியத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ’மியாவ்’, ’மியாவ்’ ’மியாவ்’ என்ற குட்டிச் சத்தங்கள் எங்கோ மேலிருந்து அவர்களுக்குக்கேட்டது. வாஸ்யா, உடனே ஏணி வழியாக களஞ்சியத்தின் மீது ஏறினான்.காட்யா கீழே நின்று கொண்டு“நீ அதைப் பார்த்தியா”என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஆனால் வாஸ்யா பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்துஅவன் தங்கையை கூப்பிட்டான்.
”நான் பாத்துட்டேன்..அது நம்ம பூனை தான்..குட்டிபோட்டிருக்கு..எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா..சீக்கிரம் மேல வாயேன்..” என்று சொன்னான்.உடனேகாட்யா வீட்டிற்கு ஓடினாள்.பூனைக்காக கொஞ்சம் பால் எடுத்துக் கொண்டு வந்தாள்.
அங்கே ஐந்து பூனைக்குட்டிகள் இருந்தன. அவைகள் கொஞ்சம்வளர்ந்ததும் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. அந்தக் குழந்தைகள் சாம்பலும் வெள்ளையும் கலந்தகுட்டியை வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.அவர்களுடைய அம்மா மற்ற குட்டிகளை கொடுத்து விட்டாள்.சாம்பல்குட்டியை மட்டும் குழந்தைகள் வளர்க்கட்டும் என்று விட்டு விட்டாள். குழந்தைகள் அதற்குஉணவு கொடுத்தனர்.அதோடு விளையாடினர். தூங்கப் போகும் போது தங்கள் படுக்கையிலேயே படுக்கவைத்துக் கொண்டனர்.
     ஒரு நாள் அந்த குழந்தைகள் சாலையோரமாக பூனைக்குட்டியோடுவிளையாடப் போனார்கள். சாலையெங்கும் வைக்கோல் காற்றில் பறந்து சிதறிக் கிடந்தது. பூனைக்குட்டிவிளையாடுவதை குழந்தைகள் மிகவும் ரசித்தனர்.அப்போது சாலையின் ஓரத்தில் சாரல் இலைகள்வளர்ந்திருப்பதைப் பார்த்தனர்.உடனே அதைப் பறிக்கத் தொடங்கினர்.பூனைக்குட்டியை அவர்கள்மறந்தே போய் விட்டனர்.
திடீரென யாரோ “இங்கே வா இங்கே வா!” என்று சத்தமிடும்குரல் அவர்களுக்குக் கேட்டது.அவர்கள் ஒரு வேட்டைக்காரன் குதிரை மீது வருவதைப் பார்த்தனர்.அவனுக்கு முன்னால் ஓடி வந்த அவனுடைய இரண்டு நாய்களும் பூனைக்குட்டியைப் பார்த்து விட்டன.உடனேஅதன் மீது பாய்வதற்குத் தயாராகின.என்ன நடந்தது தெரியுமா? ஓடிஒளிவதற்குப் பதிலாக அந்தப்பூனைக்குட்டிநாய்களை எதிர்த்து நின்று உறுமிக் கொண்டிருந்தது.நாய்களைப் பார்த்த காட்யா அலறியடித்துக்கொண்டுஓடி விட்டாள்.ஆனால் வாஸ்யா பூனைக்குட்டியை நோக்கி வேகவேகமாக ஓடினான்.நாய்கள் நெருங்கியஅதே சமயத்தில் அவனும் நெருங்கி விட்டான்.நாய்கள் பாய்ந்து பூனைக்குட்டியைக் கவ்வித்தூக்குகிற கணத்தில் வாஸ்யா பாய்ந்து பூனைக்குட்டியின் மீது விழுந்து தன் உடம்பால் அதைமூடிக் கொண்டான்.அதற்குள் விரைந்து வந்த வேட்டைக்காரன் நாய்களைத் தூர விரட்டினான்
வாஸ்யா பூனைக்குட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப்போனான் அதற்குப் பிறகு பூனைக்குட்டியை ஒருபோதும் சாலைப் பக்கம் கொண்டு வரவேயில்லை.