Sunday, 8 February 2026

மார்க்ஸ் என்பது வெறும் பெயரல்ல…

 மார்க்ஸ் என்பது வெறும் பெயரல்ல…

உதயசங்கர்



1 மார்க்சியம் என்பது ஒரு திட்டமல்ல. அது ஒரு சிந்தனை முறை. அறிவியல்பூர்வமான சிந்தனை முறை. அந்த சிந்தனைமுறையை உருவாக்கியவர் மார்க்ஸ்.
2. மற்ற எல்லா தத்துவச் சிந்தனைகள் தோன்றும் போது எப்படி இருந்த தோ அப்படியே இருக்கின்றன. ஆனால் மார்க்சியம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
3. ஏனெனில் மற்ற தத்துவங்கள் இந்த உலகத்தை மாற்றும் வழிவகைகளைப் பற்றிப் பேசவில்லை. அதற்குப் பதிலாக உலகத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தன. ஆனால் மார்க்சியம் மட்டுமே இந்த உலகத்தை மாற்றும் வழிவகைகளைச் சொன்ன முதல் தத்துவம்.
4. எல்லா தத்துவங்களும் தனிமனிதனின் அற, ஒழுக்க நெறிகளைப் பற்றி மட்டுமே பேசியபோது சமூகத்தின் அற, ஒழுக்க நெறிகளைப் பற்றிப் பேசியது. சமூகத்திற்கும் தனிமனிதனுக்குமிடையிலுள்ள இயக்கவியல் உறவைப் பேசியது. புறச்சூழலே தனிமனிதனின் கருத்தியலை உருவாக்குகிறது என்றது மார்க்சியம்.
5. அனைத்து மதங்களும் மானுட வாழ்க்கையின் நிலையாமை பற்றி பேசிய போது நாம் வாழும் இந்த வாழ்வின் யதார்த்தம் பற்றி பேசியது மார்க்சியம்.
6. மற்ற எல்லா தத்துவங்களும் வரலாற்றைத் தற்செயல் நிகழ்வுகளாக, சம்பவங்களாக பார்த்தபோது மார்க்சியம் மட்டுமே அதற்கு ஊடாகத் இயங்கும் தொடர்ந்த இயங்கியலைக் கண்டு பிடித்தது மார்க்சியம்.
7. வரலாற்று இயக்கமும் சமூக இயக்கமும் இயற்கையானதில்லையென்பதையும் அதை ஆளும்வர்க்கம் சுரண்டலுக்காக்க கட்டுப்படுத்துகிறபோது பாட்டாளி விவசாயி வர்க்கமும் கட்டுப்படுத்தவும் சோசலிசத்தைக் கொண்டுவரவும் முடியுமென்று சொன்னது மார்க்சியம்.
8. மற்ற எல்லா தத்துவங்களும் கடவுள், அப்பாலை, சொர்க்கம் நரகம், மரணத்திற்கு பின் பெருவாழ்வு, என்று ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்தபோது இழப்பதற்கு ஏதுமில்லை எதிரில் இருப்பதோ ஒரு பொன்னுலகம் என்று பாட்டாளி மக்களுக்கு ஒரு இலட்சியப் பேரொளியை காட்டியது மார்க்சியம்.
9.. மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரையிலான சமூக அசைவியக்கத்தை துல்லியமாக கணித்து சொல்வதற்கான அறிவியல் பூர்வமான விதிமுறைகளை உருவாக்கியது மார்க்சியம்.
10.. முதலாளித்துவம் விதவிதமான மாறு வேடங்களில் வந்தாலும் அந்த வேடங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கக் கூடிய வர்க்க நலன்களை தோலுரித்து காட்டுவது மார்க்சியம்.
11. மனித குலத்திற்கு எதிரானதெல்லாம் மார்க்சியத்திற்கும் எதிரானது மனித குலத்திற்கு ஆதரவானது எல்லாம் மார்க்சியத்திற்கும் ஆதரவானது என்று முழங்கியது மார்க்சியம்.
12. மற்ற எல்லா தத்துவங்களும் தோன்றிய பிறகு அப்படியே இறுகி உறை நிலைக்குச் சென்றதைப் போல மார்க்சியம் ஒருபோதும் உறையவில்லை. அது நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது புதிய தளிர் களையும் இலைகளையும் இலைகளையும் பூக்களையும் காய்களையும் கனிகளையும் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது.
13. அனைத்து துறைகளிலும் உள்ள அறிவியக்கத்தை உற்று கவனித்து அதற்கு ஏற்ப இயங்கியல் விதிகளை பயன்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆயுதங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது மார்க்சியம்.
14. சமூகப் புரட்சி என்பது வெறும் அதிகார கைமாற்றம் அல்ல அது ஒட்டுமொத்த சமூகத்தைத் தலைகீழாக புரட்டிப் போடுவது என்று நிரூபித்து காட்டி இருக்கிறது மார்க்சியம்.
15. சமத்துவமற்ற இந்த சமூகத்தை மாற்றி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி முழுமையான மனிதனாக மாற்றுவது தான் மார்க்சியம்.
16.. சீர்திருத்தங்கள் மார்க்சியத்தின் இறுதி இலட்சியமல்ல. சமூகநீதி மார்க்சியத்தின் இறுதி இலட்சியம் அல்ல. ஆனால் புரட்சிக்கான பாதையில் இவை எல்லாவற்றையும் கைக்கொள்ள வேண்டும் என்பதில் மார்க்சியத்திற்கு எவ்வித ஐயமும் இல்லை.
17.. ஏனெனில் மார்க்சியம் எந்த வர்க்கத்துடனும் சமரசம் செய்து கொள்வதில்லை அது வர்க்கங்களின் சமநிலையற்ற தன்மையை அழித்து வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகப் பிறந்த தத்துவம்.
18 . மார்க்சியம் ஒரு பிரபஞ்ச மனிதனை மலரச் செய்வதற்காக உருவான அறிவியல் பூர்வமான தத்துவம்
19. மார்க்ஸ் என்பது இன்னொரு பெயரல்ல. மார்க்ஸ் என்றால் மாற்றம்.
20. மார்க்ஸின் சிலை எழுக! புரட்சியை என்று நினைவு கூர்க!
.

No comments:

Post a Comment