Showing posts with label KarlMarx. Show all posts
Showing posts with label KarlMarx. Show all posts

Sunday, 10 May 2026

மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்

 

மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்

 

உதயசங்கர்



 

  ஐரோப்பிய நாடுகளில் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நிலவுடமைச் சமூகம் தனக்குள்ளேயே முற்றிக் கொண்டிருந்த முரண்பாடுகளால் தொழிற்புரட்சி நிகழ்ந்த து. தொடர்ந்து அறிவொளிப்புரட்சி, அறிவியல் புரட்சி நடந்தன. நிலவுடமைச் சமூகத்தின் பெரும்பாலான தளைகள் அறுத்தெறியப்பட்டன். குறிப்பாக மதங்களின் பழைய, பிற்போக்கான பிடியிலிருந்து அறிவுத்துறைகளனைத்தும் கலை, அறிவியல், மருத்துவம், உள்ளிட்ட அனைத்தும் மதங்களிலிலிருந்தும் ஆன்மீகத்திலிருந்தும் தங்களைத் துண்டித்துக் கொண்டு சுயேச்சையாக வளர்ந்தன.

 பேகன், ஹம்போல்ட், நியூட்டன், டார்வின், இம்மானுவல் காண்ட், மார்க்ஸ், போன்றவர்களின் பங்களிப்பு உலக சிந்தனையையும் உலக இயக்கத்தையும் மாற்றியது. உலகத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சின. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் போன்ற புதிய கோட்பாடுகள் எழுந்தபோது மதத்தின் ஒற்றைச் சர்வாதிகாரம் தகர்ந்து விட்டது. அதனால் அங்கே புதிய சிந்தனைகள், புதிய கலை இலக்கியப்படைப்புகள் தோன்றின.

முதலாளித்துவமும் அதன் அகோரப்பசிக்காக உலகநாடுகளை அடிமைப்படுத்த, சுரண்டலைப் பரவலாக்க போர்களை நட த்தினார்கள். நாடுகளை அடிமைப்படுத்தினார்கள். இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் சர்வாதிகாரிகள் தோன்றினார்கள்.

அதுவரை நிலவுடைமைச் சமூகத்தில் கிட்ட த்தட்ட அடிமைகளைப் போலிருந்த மக்கள் முதலாளித்துவ அமைப்பில் லேசாக மூச்சு விட்டனர். போலியானதாக இருந்தாலும் ஜனநாயகத்தின் சிலபல நன்மைகளை அனுபவத்தார்கள். புதிய கோட்பாடுகள், புதிய இலக்கியம், உருவாயின. முதலாளித்துவ சந்தைமுறையினால் அவை பரவலாகவும் செய்தன. சிறார் இலக்கியத்திலும் அதன் பாதிப்புகள் இருந்தன.

இங்கிலாந்து நிலவுடமைச் சமூகத்தின் அரச அதிகாரத்தை விமரிசனம் செய்து அற்புத உலகில் ஆலீஸை லூயி கரோல் எழுதினார். ஜெர்மனியின் பாசிச த்துக்கெதிராக களத்தில் உளவு விமானியாகவும் இலக்கியத்தில் குட்டி இளவரசனை எழுதியும் அந்து வான் எக்சுபரி பங்களிப்பு செய்தார்.

 ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் எழுதிய டாம் மாமாவின் குடிசை என்ற புகபெற்ற நாவல் ஒரு உள்நாட்டுப்போரையே உருவாக்கியது. அமெரிக்காவில் நிலவி வந்த நீக்ரோ அடிமை முறைக்கு எதிராக வெளிவந்த சிறார் நாவல். டாம் மாமாவின் வாழ்க்கைப் போராட்ட மாக விளக்கப்படும் நாவல் கொடூரமான அடிமைமுறை வாழ்க்கையை உலகத்துக்கே சொன்ன நாவலென்றும் சொல்லலாம். அடிமைகளைப் உயிரற்ற பொருட்களைப் போலப் பயன்படுத்தியதும் அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு எந்த மதிப்பளிக்காத குரூரத்தையும் பேசிய நாவல். பைபிளுக்கு அடுத்தபடியாக விற்பனையான நாவலென்ற புகழையும் பெற்றிருக்கிறது.

மார்க் ட்வைனின் தொடர் நாவல்களான டாம் சாயரின் சாகசங்களும், ஹக்கிள் பெரிஃபின்னின் சாகசங்களும் அமெரிக்க க் குழந்தை இலக்கியத்தின் போக் கையே மாற்றியதாகச் சொல்லப்படுகிறது.

 இத்தகைய மாற்றங்கள் மேற்கத்திய சிறார் இலக்கியத்தில் மட்டுமல்ல. பெரியவர்கள் இலக்கியத்திலும் நிகழ்ந்தன. அதாவது மதங்களின் கொடுங்கரத்திலிருந்து சிறார் இலக்கியம் உள்ளிட்ட அனைத்து அறிவுத்துறைகளும் விடுதலையடைந்தன.

ஆனால் அதேநேரம் இந்தியா எப்படி இருந்தது?


 
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மட்டுமே காலாகாலத்துக்கும் இருந்த தாகவும் அவை காற்றிலேயே பிறந்து வந்த தாகவும் அதாவது கடவுள் நேரே அருளியதாகவும் கட்டுக்கதைகள் சொல்லப்பட்டன. அதனால் அந்த வேதங்களைக் குறிப்பிட்ட சாதியினரைத் தவிர வேறு யாரும் படிக்க க் கூடாதென்று சட்டமும் தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன. இப்போதும் வேதகாலம் இந்தியாவின் பொற்காலம் என்ற கட்டுக்கதைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. குறிப்பாக வேதகாலத்துக்கு முன்பாகவும் சமகாலத்திலும் இந்தியாவில் வேறு மதங்களோ, கோட்பாடுகளோ இருந்ததாக எங்கும் சொல்லப்படவில்லை. ( ஆங்கிலேயர்கள் தான் பௌத்தம் சமணம் சாங்கீயம் போன்ற மதங்கள் இருந்த தையும் அசோகர் போன்ற அரசர்கள் வாழ்ந்த தையும் கண்டுபிடித்தனர் )

சரி அந்த நான்கு வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருந்தன?

 நான்கு வேதங்களிலும் சடங்குகள், யாகங்கள், வேள்விகள் குறித்தான பாடல்களே நிறைந்திருக்கின்றன. எந்தத் தத்துவமோ, கருத்தியலோ, வாழ்க்கை நெறிமுறைகளோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவை ஒரு இனக்குழுவின் சடங்குப்பாடல்கள். அனைவருக்கும் பொதுவானதில்லை.

இந்தச் சடங்குகள் மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டவும் அழிக்கவும் முற்பட்டபோது புதிய சமயங்கள் தோன்றின.

வேதகாலத்திலேயே  மக்களின் தேவையின் அடிப்படையில் உருவான பௌத்தமும் சமணமும்  சமூக வாழ்க்கை நெறிமுறைகளை, வாழ்க்கை குறித்த, தத்துவச் சிந்தனைகளை உருவாக்கியிருந்தன.  மக்களும் அரசுகளும் பௌத்த சமண சமயங்களின் பால் ஆர்வங்கொண்டனர். வேத சமயம் மக்களிடம் செல்வாக்கிழந்தபோது வேதங்களுக்குத் தத்துவச்சாயம் பூசவேண்டிய தேவை உருவானது. வேதங்களின் விளக்கமென்ற போர்வையில் உபநிடதங்கள் எழுதப்பட்டன.

 உபநிடதங்களில் சொல்லப்பட்ட கருத்துகளெல்லாம் பௌத்த சமண சாங்கீய சமயங்களின் தத்துவங்களிலிருந்து உருவியது, உல்டா செய்தவை. பிரம்மம், அத்வைதம் என்று உருட்டுகின்றவை. இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 வேதங்களோ, பௌத்தமோ, சமணமோ, உபநிடதமோ ஆரம்பகால மனித அறிவு வளர்ச்சியின் படிநிலைகளில் அந்தக் கால நிலவுடமைச் சமூகத்தின் தேவைகளுக்காகவும் சுரண்டலை நிலைநிறுத்தவும்  உருவானவை.

இப்படியே இந்தியா பழமைவாதச் சிந்தனைகளால், பிற்போக்கான கருத்துகளால், பெண்ணடிமைக்கொள்கைகளால், சாதி வேறுபாடுகளால் நிலவுடமை ஆட்சியின்  பொருளாதாரச்சுரண்டல்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பீடிக்கப்பட்டிருந்த காலத்தில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைகிறார்கள். அவர்கள் வரும்போது இங்கிருந்த பழைமைவாதச் சமூகத்துடன் சமரசம் செய்து கொண்டார்கள். அடிப்படையான சமூக மாற்றங்களைக் கொண்டு வராமல் அவர்கள் நிர்வாகம் செய்வதற்கும் ஆள்வதற்கும் சுரண்டுவதற்கும் தேவையான மாற்றங்களை மட்டும் கொண்டு வந்தார்கள்.

இந்திய விடுதலைப்போராட்டத்தின் தொடக்கப்புள்ளியே வர்ணாசிரம தர்மத்துக்கு சனாதனத்துக்கு எதிராக ஆங்கிலேயர்கள் செய்த சிறிய சீர்திருத்தங்களை எதிர்த்து உருவானது தான். அனைவருக்கும் கல்வி, பெண்கள் கல்வி, சதிக்கு எதிரான தடைச்சட்டம், விதவை மறுமணச்சட்டம், ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்தச் சீர்திருத்தங்களைத் தான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே இந்தியாவின் அறிவுத்துறைகள் மதங்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தன. இங்கேயிருந்த உயர்சாதி நிலவுடமைச் சமூகமும் அனைத்து மதங்களும் அறிவுத்துறைகளின் சுயேச்சையான வளர்ச்சியை இன்றுவரை விரும்புவதில்லை.

எந்த மாற்றமும் அவ்வளவு சுலபமாக நடந்து விடாது. ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதைப் போன்ற நிலைமை தான் இருக்கும். ஏனெனில் இங்கே நிலவுடமைச் சமூகத்திலிருந்து முதலாளித்துவசமூகம் இயல்பாக வெடித்துக் கிளம்பவில்லை. எந்தவொரு மாற்றமும் தானாக நிகழ்வதற்கும் மாற்றத்தைத் திணிப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. அதனால் தான் இங்கே புதிதாகத் தோன்றிய முதலாளித்துவம் பழைய நிலவுடமைச் சமூகத்துடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் அறிவியல் கண்டுபிடிப்பான ராக்கெட் ஏவுவதற்கு முன்னால் பூஜை செய்கிற அவலத்திலிருக்கிறோம்.

 கலை இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. அதில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது சிறார் இலக்கியம் தான். குழந்தைகளை அறுதப்பழசான மதங்களின் பண்பாட்டு விழுமியங்களின் மூலம் மட்டுமே பண்படுத்த முடியுமென்ற சிந்தனை சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிவாகியிருக்கிறது.

அதனால் தான்  இன்னமும் உபநிடதக்கதைகள்,  வேதகாலக்கதைகள், என்றெல்லாம் புத்தகங்கள் குழந்தை இலக்கியமென்று வருவதைப் பார்க்கமுடிகிறது.

நாம். ஜேம்ஸ்வெப் கேமிரா நம்முடைய பால்வெளி மண்டலத்தையே படம் பிடித்துக் காட்டுகிற அறிவியல் காலத்தில் வாழ்கிறோம். இன்னமும் அறுதப்பழசான சமூகமதிப்பீடுகளையே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டிருப்பது உவப்பானதல்ல.

சிறார் இலக்கிய விடுதலையடைய வெகுதூரம் செல்ல வேண்டும். இதை சிறார்களுக்காக எழுதுகிற எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில்

. எல்லாம் மாறும். மாற வேண்டும். நிலையானது என்றோ, நித்தியமானது என்றோ எதுவும் கிடையாது.

நன்றி - புக் டே

 

 

Sunday, 8 February 2026

மார்க்ஸ் என்பது வெறும் பெயரல்ல…

 மார்க்ஸ் என்பது வெறும் பெயரல்ல…

உதயசங்கர்



1 மார்க்சியம் என்பது ஒரு திட்டமல்ல. அது ஒரு சிந்தனை முறை. அறிவியல்பூர்வமான சிந்தனை முறை. அந்த சிந்தனைமுறையை உருவாக்கியவர் மார்க்ஸ்.
2. மற்ற எல்லா தத்துவச் சிந்தனைகள் தோன்றும் போது எப்படி இருந்த தோ அப்படியே இருக்கின்றன. ஆனால் மார்க்சியம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
3. ஏனெனில் மற்ற தத்துவங்கள் இந்த உலகத்தை மாற்றும் வழிவகைகளைப் பற்றிப் பேசவில்லை. அதற்குப் பதிலாக உலகத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தன. ஆனால் மார்க்சியம் மட்டுமே இந்த உலகத்தை மாற்றும் வழிவகைகளைச் சொன்ன முதல் தத்துவம்.
4. எல்லா தத்துவங்களும் தனிமனிதனின் அற, ஒழுக்க நெறிகளைப் பற்றி மட்டுமே பேசியபோது சமூகத்தின் அற, ஒழுக்க நெறிகளைப் பற்றிப் பேசியது. சமூகத்திற்கும் தனிமனிதனுக்குமிடையிலுள்ள இயக்கவியல் உறவைப் பேசியது. புறச்சூழலே தனிமனிதனின் கருத்தியலை உருவாக்குகிறது என்றது மார்க்சியம்.
5. அனைத்து மதங்களும் மானுட வாழ்க்கையின் நிலையாமை பற்றி பேசிய போது நாம் வாழும் இந்த வாழ்வின் யதார்த்தம் பற்றி பேசியது மார்க்சியம்.
6. மற்ற எல்லா தத்துவங்களும் வரலாற்றைத் தற்செயல் நிகழ்வுகளாக, சம்பவங்களாக பார்த்தபோது மார்க்சியம் மட்டுமே அதற்கு ஊடாகத் இயங்கும் தொடர்ந்த இயங்கியலைக் கண்டு பிடித்தது மார்க்சியம்.
7. வரலாற்று இயக்கமும் சமூக இயக்கமும் இயற்கையானதில்லையென்பதையும் அதை ஆளும்வர்க்கம் சுரண்டலுக்காக்க கட்டுப்படுத்துகிறபோது பாட்டாளி விவசாயி வர்க்கமும் கட்டுப்படுத்தவும் சோசலிசத்தைக் கொண்டுவரவும் முடியுமென்று சொன்னது மார்க்சியம்.
8. மற்ற எல்லா தத்துவங்களும் கடவுள், அப்பாலை, சொர்க்கம் நரகம், மரணத்திற்கு பின் பெருவாழ்வு, என்று ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்தபோது இழப்பதற்கு ஏதுமில்லை எதிரில் இருப்பதோ ஒரு பொன்னுலகம் என்று பாட்டாளி மக்களுக்கு ஒரு இலட்சியப் பேரொளியை காட்டியது மார்க்சியம்.
9.. மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரையிலான சமூக அசைவியக்கத்தை துல்லியமாக கணித்து சொல்வதற்கான அறிவியல் பூர்வமான விதிமுறைகளை உருவாக்கியது மார்க்சியம்.
10.. முதலாளித்துவம் விதவிதமான மாறு வேடங்களில் வந்தாலும் அந்த வேடங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கக் கூடிய வர்க்க நலன்களை தோலுரித்து காட்டுவது மார்க்சியம்.
11. மனித குலத்திற்கு எதிரானதெல்லாம் மார்க்சியத்திற்கும் எதிரானது மனித குலத்திற்கு ஆதரவானது எல்லாம் மார்க்சியத்திற்கும் ஆதரவானது என்று முழங்கியது மார்க்சியம்.
12. மற்ற எல்லா தத்துவங்களும் தோன்றிய பிறகு அப்படியே இறுகி உறை நிலைக்குச் சென்றதைப் போல மார்க்சியம் ஒருபோதும் உறையவில்லை. அது நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது புதிய தளிர் களையும் இலைகளையும் இலைகளையும் பூக்களையும் காய்களையும் கனிகளையும் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது.
13. அனைத்து துறைகளிலும் உள்ள அறிவியக்கத்தை உற்று கவனித்து அதற்கு ஏற்ப இயங்கியல் விதிகளை பயன்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆயுதங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது மார்க்சியம்.
14. சமூகப் புரட்சி என்பது வெறும் அதிகார கைமாற்றம் அல்ல அது ஒட்டுமொத்த சமூகத்தைத் தலைகீழாக புரட்டிப் போடுவது என்று நிரூபித்து காட்டி இருக்கிறது மார்க்சியம்.
15. சமத்துவமற்ற இந்த சமூகத்தை மாற்றி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி முழுமையான மனிதனாக மாற்றுவது தான் மார்க்சியம்.
16.. சீர்திருத்தங்கள் மார்க்சியத்தின் இறுதி இலட்சியமல்ல. சமூகநீதி மார்க்சியத்தின் இறுதி இலட்சியம் அல்ல. ஆனால் புரட்சிக்கான பாதையில் இவை எல்லாவற்றையும் கைக்கொள்ள வேண்டும் என்பதில் மார்க்சியத்திற்கு எவ்வித ஐயமும் இல்லை.
17.. ஏனெனில் மார்க்சியம் எந்த வர்க்கத்துடனும் சமரசம் செய்து கொள்வதில்லை அது வர்க்கங்களின் சமநிலையற்ற தன்மையை அழித்து வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகப் பிறந்த தத்துவம்.
18 . மார்க்சியம் ஒரு பிரபஞ்ச மனிதனை மலரச் செய்வதற்காக உருவான அறிவியல் பூர்வமான தத்துவம்
19. மார்க்ஸ் என்பது இன்னொரு பெயரல்ல. மார்க்ஸ் என்றால் மாற்றம்.
20. மார்க்ஸின் சிலை எழுக! புரட்சியை என்று நினைவு கூர்க!
.

Thursday, 25 September 2025

குழந்தைகளுக்குத் தத்துவமா? -6


 குழந்தைகளுக்குத் தத்துவமா? -6

உதயசங்கர்


N.R.A.

உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு ஒரே ஒரு ஊர் தான் சொந்த ஊர் தெரியுமா?

யார் சொன்னார்கள்?

அறிவியல் சொல்லுது.

இந்த உலகத்திலுள்ள அத்தனை நாட்டு மக்களும் ஒரே ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு வெவ்வேறு நிலப்பகுதிகளுக்குச் சென்றார்கள்.– இது என்ன புதுக்குழப்பம்?

குழப்பம் இல்லை. அறிவியல் பூரவமான உண்மை. ஆமாம். எத்தியோப்பியாவில் ஹோமினிட் வகை மனிதக்குரங்கு ஒன்று ஒரு குகையில் இரண்டு குழந்தைகள் பெற்றது. அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று தான் ஹோமோ சேப்பியன்ஸ். மற்றொன்று சிம்பன்சி வகை மனிதக்குரங்கு.

அந்த ஹோமோ சேப்பியன்ஸ் தான் கிட்ட த் தட்ட 70000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவை விட்டு புலம் பெயர்ந்தனர். அதனால் தான் அறிவியல் சொல்கிறது,

நாம் அனைவரும் Non Residential Africans

நம்பும்படி இல்லையே. ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்கள் வெள்ளை நிறத்தில் உயரமாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் கருப்பாக வலுவாக இருக்கிறார்கள். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருக்கும் மக்கள் மஞ்சள் நிறத்துடன் உயரம் குறைவானவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் பல நிறத்திலும் பல விதத்திலும் இருக்கிறார்கள்.

கொஞ்சமும் சம்பந்தமில்லையே.

சந்தேகம் சரிதான். ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டவர்கள் அவர்களுக்குப் பிடித்த இடங்களில் வாழத் தொடங்கினார்கள். அந்த இடத்தின் தட்பவெப்பநிலை, உணவு, அத்துடன் அங்கிருந்த மற்ற மனித குரங்கு இனங்களுடன் உருவான உறவு இவையெல்லாம் சேர்ந்து புதிய புதிய உருவம், நிறம், உயரம், பருமன், மொழி, இவற்றை உருவாக்கியது. அதனால் தான் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற ஒரே இனத்துக்குள் இவ்வளவு வேறுபாடுகள் தோன்றின.

ஆனால் உலகம் முழுவதும் உள்ள ஹோமோ சேப்பியன்ஸின் அடிப்படையான மரபணுக்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோசேப்பியன்ஸின் மரபணுவும் உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்களின் மரபணுவும் ஒன்றாகவே இருக்கிறது. இதைத்தான் மானுடவியல் என்ற அறிவியல் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது.

இப்போது இன்னும் குழப்பம் அதிகமாகிறதா?

ஆமாம். ஒரே மாதிரியான மரபணுக்களை, உடலமைப்பை, மூளையைக் கொண்ட மனிதர்கள் ஏன் வெவ்வேறு மொழி பேசுகிறார்கள்?. ஏன் வெவ்வேறு இனம் என்று சொல்கிறார்கள்?. ஏன் வெவ்வேறு கடவுளரை வணங்குகிறார்கள்?. ஏன் வெவ்வேறு மதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்?. ஏன் இந்தியா போன்ற நாடுகளில் ஏராளமான சாதிகளை உருவாக்கியிருக்கிறார்கள்?. ஏன் எண்ணற்ற தத்துவங்களைச் சொல்கிறார்கள்?

உண்மை தான். அறிவியலின்படி அனைத்து மனிதர்களின் மரபணு, மூளைச்செயல்பாடு, உடலமைப்பு எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும் எந்த  நாட்டைச்செர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த தத்துவத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும், சரி முற்றிலும் வேறானவர்களாக இருக்கிறார்கள். இல்லையா?

இது ஏன்?

சூழ்நிலை, வாழ்நிலையும் தேவைகளும் தான் மனிதர்களின் உடலிலும் சிந்தனையிலும் ஏராளமான மாற்றங்களை உருவாக்குகின்றன.

சூழ்நிலை என்பது புவியியல் சூழலைக் குறிக்கும். அதாவது வாழும் இடம், தட்பவெப்பம், உணவு, தண்ணீர், இவையே அங்கே இருக்கும் மனிதர்களின் வாழ்நிலையைத் தீர்மானிக்கும்.

உதாரணத்துக்கு காட்டில் வாழும் பழங்குடி மக்கள் காட்டில் கிடைக்கும் உணவு, நீர், அங்கேயுள்ள தட்பவெப்பம் இதற்கு ஏற்றவாறு தங்களுடைய  வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இயற்கையுடன் இயற்கையாக வாழும் அவர்கள் எதற்கும் பேராசைப்படுவதில்லை. அதனால் அவர்களுடைய தேவை என்பது மிகக் குறைவு. அவர்களுக்கு பணம் முக்கியமில்லை. ஆடம்பரம் என்றால் என்னவென்றே தெரியாது. இல்லையா?

அதேநேரம் நகரத்தில் வாழ்பவர்களின் தேவைகளை நினைத்துப்பாருங்கள். கார், பைக், மின்சார அடுப்பு, கேஸ் அடுப்பு, டி.வி. ஏ.சி. பெரிய பெரிய வீடுகள், விதவிதமான செயற்கை உணவுகள், உடைகள், ஆடம்பரம், என்று தேவைகள் அதிகமாக அதிகமாக ஆசைகளும் அதிகமாகின்றன. ஆசைகளைப் பூர்த்தி செய்ய பணம் சம்பாதிக்க வேண்டும். அதுவும் சுலபமாக கிடைக்க வேண்டும்.

அதற்கு ஒரே வழி.

தான் மட்டும் முன்னேற வேண்டும். திடீரென்று எப்படி முன்னேற முடியும்? அதற்கு நம்முடன் சேர்ந்து வாழ்கிற நம்முடைய சகோதரர்களை ஏமாற்ற வேண்டும். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும். என்பது போன்ற சிந்தனைகள் உருவாகின்றன.

இதையே காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர் சுருக்கமாகச் சொல்கிறார்.

‘ வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கும் ‘

வாழ்நிலையும் சூழ்நிலையும் சிந்தனையை மட்டுமல்ல. உடலமைப்பு, உருவம் நிறம், மொழி, இனம், தத்துவம், சாதி, மதம், கடவுள், என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.

சரி. இப்போ முதல்லருந்து ஆரம்பிப்போம்.

தத்துவம் எப்போது தோன்றியது?

 

( தத்துவம் அறிவோம் )

நன்றி - இயல் சிறார் மின்னிதழ்