ஏகலைவர்களின் விடுதலைக் குரல்
வி. லெட்சுமி
முதுகலைத் தமிழாசிரியர்

விற்பயிற்சி கொடுக்க மறுத்தாலும், ஒரு துரோணரின் சிலையை வைத்துத் தானாக பயிற்சி எடுத்து மிகச்சிறந்த வில்லாளியான ஏகலைவனின் அர்ப்பணிப்பையும், குருவுக்கு காணிக்கையாக கேட்டார் என்பதற்காக கொஞ்சமும் தயங்காமல் தன் கட்டை விரலையே வெட்டி கொடுத்த ஏகலைவனின் குரு பக்தியையும் இதுவரை குருபக்திக்கு உதாரணமாக பேசிக் கொண்டிருந்த நம்மை அது உண்மைதானா? என்று சிந்திக்க தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூலை வாசித்த பின் வனத்தின் குடிமகனான வேடர்குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் பிறந்ததிலிருந்து வில்லையும் அம்பையும் பயன்படுத்தி அதில் விற்பனனாக இருந்தவன், துரோணரிடம் வில்வித்தை கற்றான் என்பதே பொய் என்னும் கருத்து பல்வேறு நூல்களில் காணப்படும் ஆதாரம் மூலம் இக்கதையில் ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது, நம்மைச் சிந்திக்கத் தூண்டும் சிந்தனைதான்.
தேன் அம்பு, புலன் மயக்கி அம்பு, நெருப்பு கொளுத்தி அம்பு, பிரி அம்பு, விரி அம்பு, சிறகம்பு, ஆண் அம்பு,மழை மேகத்தை நோக்கி எய்தால் மழை பொழியும் எரியம்பு என பல்வேறு அம்புகளின் வகைகளை நன்கு அறிந்தவன் ஏகலைவன். வனத்தில் அர்ஜுனன் வேட்டைக்குச் செல்லும் பொழுது அர்ஜுனனின் நாய்க்கு வாய்ப்பூட்டு அம்பு எய்கின்றான் ஏகலைவன். அப்போது அவனை முதன்முறை பார்க்கும் அர்ஜுனன், நம்மை விட சிறந்த ஒரு வில்லாளி இருப்பதை உணர்ந்து, துரோணாச்சாரியார் மீது சந்தேகம் கொண்டு, நமக்கு அவர் வில்வித்தை சரிவர கற்றுத் தரவில்லையோ? என்று எண்ணியதுடன் வேதனையில் தற்கொலைக்கு முயலும் நேரத்தில், குரு துரோணாச்சாரியார் அர்ஜுனனிடம் உன்னைச் சிறந்த வில்லாளியாக ஆக்குகிறேன் என்று வாக்கு கொடுத்து வனப்பகுதிக்குள் படையுடன் ஏகலைவனைத் தேடி சென்று ஏகலைவனிடம் வார்த்தை ஜாலத்தால் பேசி அவனின் மலையினக் குடிகளை அழித்து விடுவதாக மிரட்டி தன்னிடம் தான் ஏகலைவன் வில்வத்தை கற்றுக் கொண்டான் என அவரின் புகழ் பரப்பிகளான சூதர்கள் மூலமாக வரலாற்றைத் திரித்து பரப்பச் செய்கின்றார். துரோணரின் போரில் இருந்து தங்கள் மக்களைக் காப்பாற்றவும், மலையின் இயற்கை அழிவிலிருந்து காக்கப்படவும், மலைவாழ் உயிரினங்களைக் காப்பாற்றுவதற்காக தன் கட்டைவிரலைக் காணிக்கையாக அளிக்கின்றானே அன்றி துரோணாச்சாரியார் அவனுக்கு வில்வித்தைக் கற்றுக் கொடுத்த மானசிய குரு இல்லை என்பதை இந்நூலின் கதை ஆணித்தரமாக நிரூபிக்கின்றது. கதைகளின் ஊடே வன உயிரினங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் மிக த் தெளிவாகத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகின்றது. குறிப்பாக பாம்புகளைப் பற்றி, அவை அருகில் வந்தால் எவ்வாறு அறிவது என்பதைப் பற்றியும் கொடுத்திருக்கும் குறிப்புகளான, நல்ல பாம்பு அருகில் இருந்தால் வறுத்தப்பயிறு வாசனையடிக்கும், மலைப்பாம்பு இருந்தால் தண்ணீர் கவிச்சி வாசனை அடிக்கும், கட்டுவிரியன் இருந்தால் மண்வாசனை அடிக்கும், பச்சை பாம்பு இருந்தால் பச்சிலை வாசனை அடிக்கும் என்றும், பாம்புகளின் சீற்றத்தை வைத்து அது கோபமாக இருக்கிறதா? தாக்கப் போகிறதா? பயமுறுத்துகிறதா? என்பதை மலையில் வாழும் மக்கள் வழி நம்மை அறிய வைக்கின்றார் நூலாசிரியர்.
சிங்கத்தின் வேகமும் யானையின் பலமும் கொண்ட யாளிகளை கோயில்களில் சிற்பமாகத்தான் பார்த்திருப்போம். அந்த யாளியை மலைப்பிரதேசம் முழுவதும் தன் கதையில் உலவவிட்டுள்ளது சிறப்பு.
சூதர்களால் வரலாறு எவ்வாறு திரிக்கப்படுகிறது என்பதை கதை முழுவதிலும் காண முடிகின்றது. அக்காலத்தில் பிராமணர்கள் ஊன் உணவு உட்கொண்டதகவலை வேள்வியில் பலியிடும் விலங்குகளைப் பங்கிடுவதன் மூலம் அறிய முடிகிறது.
காலணிகள் மீது தீராத விருப்பம் கொண்டவரான துரோணாச்சாரியாருக்கு தினமும் புதிய காலணிகள் செய்து தரும் சேதா எனும் தொழிலாளி அவரால் வதைக்கு உட்பட்டு பக்தசேதாவாக மாறும் இடம் சூதர்களால் வரலாறு திரித்து எழுதப்படுவதை பறை சாற்றுகின்றது. ரிக் வேதத்தில் இந்திர கடவுளுக்கு பிடித்த பசுவின் ஈரல் முதன்மை புரோகிதருக்குப் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறிய பரத்வாஜ முனிவர், அதை திருடியதால் வனத்திற்கு அனுப்பப்படுகிறார். அவர் அங்கு மலைப்பெண்ணான துரோணியை மயக்கி மோசப்படுத்துகின்றார். அவர் மூலமாக பிறக்கும் மகன் துரோணாச்சாரியார் என்று அவரின் பிறப்பும், அவர் நற்குணங்கள் நிறைந்த நேர்மையான வழியில் ஒரு குருவாக நடக்கவில்லை என்பதும் படிப்பவர் சிந்தனைகளைத் தட்டி எழுப்பும். ஏகலைவனின் மேல் நல் மதிப்பும், தன் இனத்தின் மேல் அவன் கொண்டிருந்த பற்றும் அம்புக்கலையில் அவன் அர்ஜுனனை விட சிறந்தவனாய் இருந்ததும், துரோணாச்சாரியார் மகாபாரதப் போரில் இறந்த மறுநாள் நடைபெற்ற யுத்தத்தில் ஏகலைவர்களின் அன்பு பாண்டவர் படையைச் சிதறடித்துக் கொண்டிருந்தது என்றும், கட்டைவிரல் இல்லையென்றால் வில்லைத் தொட முடியாதா என்ன? மீதி நான்கு விரல்கள் இருக்கின்றனவே? ஏகலைவர்களின் விடுதலை குரல் அம்புகள் விரைந்த ஓசையில் கேட்டு கொண்டே இருக்கின்றது என்ற கதையின் நிறைவுப் பகுதியும், கட்டைவிரலை இழந்த ஏகலைவர்களுக்கு சமர்ப்பணம்.
நூல்: கட்டை விரலின் கதை
ஆசிரியர்: உதயசங்கர்
பதிப்பகம்: வானம் பதிப்பகம்
பக்கம்: 96
விலை: ரூபாய் 100.
நன்றி - புக் டே
No comments:
Post a Comment