Thursday, 22 October 2026

ஏன் கலையைப் படைக்க வேண்டும்?

 ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 11

ஏன் கலையைப் படைக்க வேண்டும்?

உதயசங்கர்



மனிதர்கள் ஏன் கலையைப் படைக்க வேண்டும்? கலையைப் படைப்பதற்கான அடிப்படை உந்துதல் ஏன் ஒருவருக்கு வருகிறது? கலை மனிதனின் உயிரியல்பு. பகுத்தறிவின் செயல்பாடுகளில் ஒன்று. அதனாலேயே கலை மனிதனுக்கு முக்கியமானதாகிறது. கலைஞன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தின், உயிரினங்களின், பொருட்களின், தொடர்பாலும் புற நடவடிக்கைகளாலும் தன்னுடைய அகநிலையில் பாதிப்புகளுக்கு உள்ளாவான். இந்தப் பாதிப்பு தன்னுணர்வின்றியும் தன்னுணர்வுடனும் நடக்க வாய்ப்புகளுண்டு. பெரும்பாலும் மனிதர்கள் தனக்கும் புற உலகத்துக்குமிடையில் உறவு சுமூகமாக மேம்பட்டதாக இருக்கவேண்டுமென்று விரும்புவார்கள்.  அவர்களில் கலைஞன் தன்னைச் சுற்றியுள்ள உலகம் மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். மனித உறவுகள் மேன்மையானதாக இருக்க வேண்டும். மனிதர்களுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது. ஏற்ற தாழ்வுகள் இருக்கக்கூடாது என்று ஆசைப்படுவான். எனவே தான் தனக்கும் உலகத்துக்குமிடையிலுள்ள உறவுகளில் உன்னத நிலையை அடைய கலையை ஒரு வழியாகப் பயன்படுத்துகிறான்.

கலையைப் படைக்கும்போது அவன் இந்த உலகத்தின் போதாமையைச் சுட்டிக்காட்டுகிறான். சுரண்டலை அம்பலப்படுத்துகிறான். சமத்துவமின்மையைச் சாடுகிறான். அனைவருக்குமானது உலகமென்று கூவுகிறான். முன்மாதிரியான உலகை, மனிதர்களைப் படைக்கிறான். புற உலகில் சுதந்திரமில்லாதபோது கலையில் சுதந்திரமான உலகைப் படைக்கிறான். சாதாரணமான சம்பவங்களை அசாதாரணமான உண்மைகளைச் சொல்வதற்குப் பயன்படுத்துகிறான். சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளுக்கான காரண காரியங்களை ஆராய்கிறான். ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? ஏன் அப்படி நடந்து கொள்கிறார்களென்பதை பகுத்துச் சொல்கிறான். ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் நுண்ணோக்கியால் பெருக்கிக் காட்டிச் சமூகத்தின் கவனத்தைக் கோருகிறான். மனிதமனதின் விசித்திரமான போக்குகளை அறியாமல் சக மனிதர்களுடனான உறவுகளைச் சீர் செய்ய முடியாது. எனவே தான் கலைஞன் மனித உளவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான்.

ஒவ்வொருவரும் கலையைப் படைத்தே ஆக வேண்டுமா?

 உலகம் முழுவதும் கலை என்றால் என்னவென்று தெரியாமலேயே கலையைப் படைக்கும் கோடிக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப தங்கள் கலையை அந்தச் சமூகத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ படைக்கிறார்கள். அதாவது சுரண்டலுக்கு, ஏற்றத் தாழ்வுகளுக்கு, ஆதரவாகவோ எதிராகவோ படைக்கிறார்கள். நாட்டார் இலக்கியத்தில் இத்தகைய முன்னும் பின்னுமான படைப்புகளைக் காணலாம். அந்த மக்கள் தங்கள் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் அந்தப் படைப்புகளைப் படைக்கிறார்கள்.

எனவே கலையும் இலக்கியமும் மனிதனுடன் கூடவே பிறந்தவை எனலாம். எழுத்துரு உருவாவதற்கு முன்பும் கதைகளிருந்தன. இன்னும் சொல்லப்போனால் மனிதன் கதைகளால் உருவானவன். அவனுடைய ரத்தமும் சதையும் கதைகளால் நிரம்பியவை. ஏனெனில் பிறந்ததிலிருந்து அவனைச் சுற்றிலுமுள்ள உலகத்தை அவன் குறியீடாகவோ அல்லது படிமமாகவோ உள்வாங்குகிறான். உணர்வுத்தளத்தில் உள்வாங்கப்படுகிற இந்தப் படிமங்களே அவனுடைய உள்ளார்ந்த ஆளுமையில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

சமூகம், அதன் இயக்கம், நெறிமுறைகள், உறவுகள், சனநாயகம், சட்டம், தனிநபர் உறவுகள் அனைத்துமே ஒரு புனைவானக் கருத்தியலின் செயல்வடிவம்தானென்று யுவால் நோவா ஹராரி சொல்கிறார்.

அந்த செயல்வடிவத்தில் மனிதனின் சுயநலமும் பேராசையும் சக மனிதர்களைக் கொடூரமாகச் சுரண்டும் நிலைக்குத் தள்ளுவதும் நடக்கிறது. ஏற்றதாழ்வுகள் மிக்க சமூகச்செயல்வடிவங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள வைப்பதிலும் அதற்கு ஒத்துழைக்க வைப்பதிலும் கலை இலக்கியத்துக்கு மிகப் பெரும் பங்கிருக்கிறது.

கலை இலக்கியமே புனைவு தானென்றாலும் ஏற்கனவே யதார்த்தத்தலிருக்கும் ஒரு புனைவானச் சமூகச் செயல்பாட்டை நியாயப்படுத்தவும் செய்கிறது. அதை எதிர்க்கவும் செய்கிறது.  சமூகப்பிறவியான மனிதன் இத்தகைய இருவேறுபட்ட நிலைகளுக்கிடையில் பிறக்கிறான். எனவே தான் ஆளும்வர்க்கத்துக்கு ஆதரவான எழுத்தாளர்களும், கலைஞர்களும் உருவாகிறார்கள். எதிரான எழுத்தாளர்களும் கலைஞர்களும் உருவாகிறார்கள்.

இத்தகைய சூழலில் ஒருவன் ஏன் கலையைப் படைக்கவேண்டுமென்ற கேள்வியின் தீவிரம் கூடி விடுகிறது. சமூகத்தில் உழைக்கும் வர்க்கம் சுரண்டும் வர்க்கம் என்ற இரண்டு வர்க்கங்கள் இருக்கும்போது உழைக்கும் வர்க்கம் தாங்கள் சுரண்டப்படுகிறோமென்ற விழிப்புணர்வு பெறாத போது, சுரண்டும் வர்க்கம் மேலும் மேலும் சுரண்டலைத் தீவிரப்படுத்தும்போது, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்களை சாதி, மதம், இனம், மொழி என்ற பேதங்களால் பிரித்து மோதவிட்டு வேடிக்கை பார்க்கும்போது, கலை இலக்கியத்தின் அவசியம் கூடி விடுகிறது. உழைக்கும் மக்களின் வரலாற்றை எழுதுவதற்குத் தேவைப்படுகிறது. உழைக்கும் மக்களின் தன்னிலையை உணர வைக்கத் தேவைப்படுகிறது.

தியோடர் அடோர்னோ சொல்வதைப் போல ஆளும் வர்க்கம் மக்களின் மனதை வசப்படுத்த, அடிமைப்படுத்த, பண்பாட்டை, கலை இலக்கியத்தை தொழிற்சாலையில் உற்பத்தி செய்கிறது. அதற்கான ஊழியர்களை எப்படி உருவாக்குகிறது? உழைப்புச் சுரண்டலுக்குப் பிறகும் உழைக்கும் மக்களின் ஓய்வு நேரத்திலும் எப்படி இந்தப் பண்பாட்டுத் தொழிற்சாலை அவர்களின் மனதையும் பணத்தையும் சுரண்டுகிறது என்பதைச் சொல்ல வேண்டிய தேவையிருக்கிறது. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருமே இந்தப் பண்பாட்டுத் தொழிற்சாலைக்கெதிராக தங்கள் படைப்புகளைப் படைக்க வேண்டுமென்று சொல்ல வேண்டியதிருக்கிறது. வரலாறு நெடுக மக்கள் எப்படி இத்தகைய சூழ்ச்சிகளை முறியடித்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் படைப்புகளை உருவாக்க வேண்டியதிருக்கிறது. புதிய சமத்துவச் சமூகத்தைப் பற்றிய கனவுகளைச் சொல்லும் படைப்புகளை உருவாக்க வேண்டியதிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கும் சமூகத்துக்குமான முரண்பாடுகளைக் களைய கலை இலக்கியத்தைப் படைக்க வேண்டியதிருக்கிறது.

ஆக ஒவ்வொரு மனிதனும் சக மனிதருடனும் சமூகத்துடனும் தன்னுடைய உறவுகளை மேன்மையடையச் செய்வதன் மூலம் மொத்த மனித குலத்தையே மேன்மையடையச் செய்ய ஒவ்வொருவரும் கலையைப் படைக்க வேண்டும்.

நன்றி – புக் டே

No comments:

Post a Comment