Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Tuesday, 21 April 2026

கலையும் யதார்த்தமும்

 கலையும் யதார்த்தமும்

உதயசங்கர்




 
குழந்தைகள் பேசத்தொடங்குமுன் பாடுகிறார்கள். குழந்தைகள் எழுதத்தொடங்குமுன் ஓவியம் வரைகிறார்கள். குழந்தைகள் நடக்கத் தொடங்குமுன் ஆடுகிறார்கள். மனித உணர்வுகளின் அடிப்படையே கலை தான். “

------ பிலிசியா ரஸாத்

கலையே மனித இனத்தின் ஆதாரமாக இருக்கிறது. யதார்த்த உலகினை உள்வாங்கி யந்திரமயமாக அல்லாமல் தன்னுடைய தனித்துவமான படைப்பூக்கத்துடன் பிரதிபலிக்கிறான். இந்தப் படைப்பூக்கம் தான் மனித அறிவு வளர்ச்சியில் மிக முக்கியமான திருப்புமுனை என்று சொல்ல லாம். படைப்பூக்கம் மனிதர்களின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு, உழைப்பு, பயிற்சி, முயற்சி ஆகியவற்றைப் பொறுத்து மிகத் தீவிரமாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. அறிவியல், வரலாறு, என்று எந்த த்துறையை எடுத்துக் கொண்டாலும் கற்பனை தான் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது.

படைப்பூக்கத்தின் வேறு பெயர்களான கற்பனை அல்லது புனைவு தான் இன்றுவரை வேறு வேறு பெயர்களில் மனிதர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறதென்றால் ஆச்சரியமாக இருக்கும். யதார்த்த உலகைப் புரிந்து கொள்ள, அதன் மீது வினையாற்ற, சமூகத்தை முன்னேற்ற, அதை மாற்றியமைக்கத் தூண்டுகிற கிரியாவூக்கியாக படைப்பூக்கமே இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் மனித குல வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால்

ஹோமோ சேப்பியன்ஸின் கற்பனை மீதான அசைக்க முடியாத நம்பிக்கை தான் அவனை மற்ற மனித குரங்கினங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. இந்தக் கற்பனை அவனுடைய மரபணுவில் கல்வெட்டாய் பதிந்து விட்ட து. கற்பனை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள்

  மற்ற விலங்குகள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து கொண்டிருந்தன. இயற்கை மாற்றங்களுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டன. அப்படி மாற்றிக் கொள்ள முடியாதபோது அழிந்து விட்டன. ஆனால் மனிதன் மட்டும் தான் இயற்கையைத் தனக்காகத் தகவமைத்தான். இயற்கையின் மீது வினைபுரிந்து தான் வாழ இயற்கையை மாற்றினான்.

இந்த த் தூண்டுதலுக்குக் காரணமாக அமைந்த து மனிதனின் படைப்பூக்கம் அல்லது கற்பனை தான். அது தான் யதார்த்த உலகத்தையும் தன்னையும் பிரித்து உணரும் அதிசயத்தை நிகழ்த்தியது. அது தான் கேள்விகளை உருவாக்கியது. அந்தக் கேள்விகள் தான் அவனைப் பகுத்தறிவுள்ளவனாகவும் நாகரீகமுள்ளவனாகவும் மாற்றியது.

 இயற்கையாகக் கிடைத்த கல்லைக் கூர் தீட்டினால் வேட்டை இன்னும் சுலபமாகுமென்பதைத் தற்செயல் நிகழ்வில் கண்டுபிடித்த தைப் பிறகு கற்பனை செய்யத் தொடங்குகிறான். அந்தக் கற்பனையே அவனைச் செயலூக்கம் மிக்கவனாக மாற்றுகிறது. அந்தச் செயலூக்கம் தான் அவனுக்கு இந்த உலகத்தை மாற்ற முடியுமென்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது.

. இங்கே தான் கலை இலக்கியத்தின் அடிப்படைப்பண்புகளா மாற்றி யோசித்தல், உற்றுநோக்கல், உணர்ச்சிகளை உருவாக்குதல், உணர்ச்சிகளை மிகைப்படுத்துதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மாய யதார்த்தத்தை படைப்பூக்கம் அல்லது கற்பனை உருவாக்குகிறது.

. இந்த மாய யதார்த்தம் மனிதனுக்கு இந்த உலகத்தைப் பர்றிய, இயற்கையைப் பற்றிய அறிவைக் கொடுக்கும்போதே உணர்வுத்தளத்தில் இந்த மாய யதார்த்தம் மனிதர்களை ஒன்றிணைக்கிறது. ஒற்றுமைப்படுத்துகிறது. பாதுகாப்பு தருகிறது. ஆற்றுப்படுத்துகிறது. எழுச்சி கொள்ள வைக்கிறது. மாய யதார்த்த த்துக்காக உயிரையே மாய்த்துக் கொள்ள வைக்கிறது. வர்க்க உணர்வு, இன உணர்வு, மொழியுணர்வு, சாதியுணர்வு, மதவுணர்வு, தேசபக்தி, போன்ற கற்பனையான யதார்த்தங்களை உருவாக்குகிறது. இந்த மாய யதார்த்தம் மனிதர்கள் ஒரு சமூகமாக சேர்ந்து வாழ, தங்களுடைய இருத்தலைக் காப்பாற்ற, நியாயப்படுத்த உணர்வுரீதியாக ஒன்றுபட பேருதவி புரிகிறது.

கலையும் இலக்கியமும் தனிமனிதனின் உணர்வுத்தளத்தில் ஒரு வெளிப்பாடாகத் தோன்றினாலும் குழுச்செயல்பாட்டில் அது சமயச்செயல்பாட்டின் வழியே தான் வேரூன்றியது. தொல்சமயச்செயல்பாடுகள் அந்தக் குழுவின் உணர்வுநிலைகளைக் கட்டுப்படுத்தவும், வளர்த்தெடுக்கவும், நம்பிக்கை கொள்ள வைக்கவும் உளவியல் மருந்துகளாகவும் செயல்பட்டன. இப்போது வரை கலையும் இலக்கியமும் அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து கொண்டே வருகின்றன.

எப்போது உபரி தோன்றியதோ, எப்போது தனியுடமைச் சிந்தனை தோன்றியதோ அப்போதிருந்து இந்த மாய யதார்த்த த்தைத் திட்டமிட்டு ஆளும் வர்க்கம் உருவாக்கத் தொடங்கிவிட்ட து. அதை மக்களிடம் பரப்பி அவர்களைத் தன்வசப்படுத்தி பொருளாதாரச் சுரண்டலைத் தொடர்கிறது.

 

இந்தச் சுரண்டும் மாய யதார்த்தத்துக்கு எதிராக விமரிசனக்கண்ணோட்ட த்தை வளர்ப்பதும், புதிய எதிர் மாய யதார்த்தத்தை உருவாக்கி அதை மக்களிடம் பரப்புவதும் தான் இப்போது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இதை சிறார் இலக்கியத்திலிருந்தே தொடங்க வேண்டும்.

நன்றி - புக் டே

 

Sunday, 26 October 2025

இலக்கியமும் இயங்கியலும்

   

இலக்கியமும் இயங்கியலும்

உதயசங்கர்





     காலையில் பேப்பர் போடும் பையன்சார்பேப்பர்என்று சொல்லி ஒரு நாளைத் தட்டியெழுப்புகிறான். அப்படித் துவங்குகிற நாள் இரவில் வியாபாரம் முடித்து தூங்கியபடியே தள்ளாட்டத்துடன் வரும் மிக்சர் வண்டியின் தாலாட்டில் நாள் உறங்கப்போகும். இதற்கிடையில் எத்தனை நிகழ்வுகள்எத்தனை கனவுகள்..எத்தனை மகிழ்ச்சிகள்..எத்தனை கோபதாபங்கள்.. எத்தனை குதூகலங்கள்.. எத்தனை சோகங்கள்…. இயற்கையின் காட்சிப்பரிமாணங்கள், விந்தையான வாழ்க்கையில் விந்தையான மனிதர்கள்.. அவர்களின் உறவுகள், உணர்ச்சிகள், ஏழ்மை, தாழ்மைஎல்லாவற்றுக்கும் சாட்சியாக இலக்கியம் தானே இருக்கிறது.

    காலத்தைப் கண்ணாடியென கலைஞனே காட்டுகிறான். கலையின் வழியே காலம் மீண்டும் தன்னைப் புணருத்தாரணம் செய்து கொள்கிறது. அடிமுடியில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் காலப்பேராற்றில் கலைஞன் அள்ளும் கை நீரே அவன் படைப்புகள்

    அவன் படைப்பைப் படிக்கும்போது கண்முன்னே ஆடும் காட்சித்தோற்றங்கள் மானுடமனதில் அறவிழுமியங்களை, அதன் தார்மீகசமூகவுணர்வை, இழந்த சொர்க்கங்களைப் பற்றிய ஏக்கங்களை, மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளவைக்கிறது. அதன் மூலம் நாகரீகசமூகம் தன் அடிப்படை சமூக உணர்வை தக்க வைத்துக்கொள்ளவும், கனவுகள் காணவும், முடிகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருநிகழ்வுகள் மட்டும் தான் கலையாகும் என்றில்லை. அன்றாடத்தின் அனுகணமும் கூட கலையாகும். 

    இலக்கியத்தின் அடிப்படை நம் வாழ்க்கை தானே. இடையறாது அலையடித்துக் கொண்டேயிருக்கும் கடலைப் போன்ற நம் வாழ்க்கையில் கரையைத்தொடும்  அலையின் பொங்கும் நுரைக்குமிழில் கடல் தெரியும். நுண்மையான நுரைக்குள் தெரியும் கடலைத் தான் எழுத்தாளன் எழுத நினைக்கிறான்

    அனுபவச்சூரியனின் வெளிச்சத்தில் அதன் ஏழுவண்ணங்களைச் சித்திரமாகத்தீட்டுகிறான். அதன்மூலம் இந்த வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். சிடுக்குகளை விடுவிக்க முயற்சிக்கிறான். மனிதமன விகாரங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறான். மனதின் மேன்மையையும் கீழ்மையையும் சொல்லிப் பார்க்கிறான். அதற்காகவே வாழ்க்கையின் ஒருதுளியைக் கையிலேந்தி தன் கலைத்திறனால் பிரம்மாண்டமாக்கி வாசகருக்குக் கையளிக்கிறான்.

. இலக்கியத்துக்காகத்தான் இலக்கணமும் பிறந்தது. இலக்கியமின்றி இலக்கணமுமில்லை. இலக்கணத்துக்காக இலக்கியமுமில்லை. இன்னும் சொல்லப்போனால் இலக்கணம் உருவாகும்போதே அதை மீறுகின்ற இலக்கியங்களும் படைக்கப்பட்டு விடுகின்றன. மீறும் இலக்கியத்துக்காக புதிய இலக்கணங்கள் எழுதப்படும்போதே அதைத் தாண்டிக்குதிக்கும் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. படைப்புச்செயலென்பது ஒரு இயங்கியல் இயக்கம்.

Monday, 9 November 2020

1. கலையும் அறிவியலும் - சிறார் இலக்கியக்குறிப்புகள்

 

1.   கலையும் அறிவியலும்

                 



1.
கலை என்பதே கட்டற்ற புனைவு தான். அது ஆராய்ந்து நிருபிக்கப்படுகிற உண்மையல்ல.

2.
கலை மனதில் வினை புரிகிறது. அறிவில் அல்ல. எனவே கலையின் செயல்தளம் உணர்வுத்தளம் என்பதால் தான் கட்டற்ற புனைவுவெளியை உருவாக்க முடிகிறது.

3.
நம்ப முடியாததையெல்லாம் நம்ப வைக்கிறது. நடக்க முடியாததையெல்லாம் நடக்க வைக்கிறது. அதீதத்தை யதார்த்தம் போலும் சித்தரிக்கிறது. ஆக கலை தனக்கான பிரபஞ்சத்தில் இந்த அண்டத்தையே கற்பனையாகவும் படைக்கிறது.

4.
கலை யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டு புனைவாக படைப்பாளியின் நோக்கத்துக்காக கட்டமைக்கப்படுகிறது. எனவே தான் கலையில் உண்மை இருக்கலாம். ஆனால் கலையே உண்மை கிடையாது.
5.
அப்படிப் பார்க்கும்போது சிறார் மனம் கட்டற்ற புனைவு வெளியில் சிறகடிப்பவை. பிறந்ததிலிருந்தே குழந்தைகளுக்கு இந்த உலகம் ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் தந்து கொண்டேயிருக்கிறது.

6.
வளர வளரத்தான் அவர்கள் வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்கிறார்கள். உலகம் முழுவதும் சிறார் செவ்வியல் புனைவு நூல்களிலெல்லாம் விலங்குகள் மனித குணங்களுடனும், விசித்திர உருவங்களுடன் படைக்கப்பட்டிருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் படைப்புகளில் விலங்குகள் பேசுவதோ, மனிதர்களைப்போல குணபாவங்களைக் கொண்டிருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

7.
ஆனால் விலங்குகளின் இயல்புகளிலிருந்து அவற்றை மாறுபடுத்திக் காட்டுவது உதாரணத்துக்கு பாம்பு ஞாபகம் வைத்திருந்து கொத்தும். பாம்புகளை வணங்கினால் அது நமக்கு ஆசீர்வாதம் தரும். வயதான பாம்புகள் நாகரத்தினம் தரும். என்பது போன்ற மூட நம்பிக்கைகளைச் சொல்வது குழந்தைகளிடம் பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

8. 
அத்துடன் கலையைத் தாண்டிய நடைமுறை அறிவுரைகளை உதாரணத்துக்கு முகமூடி அணியவேண்டும், ஹெல்மெட் போட வேண்டும், என்கிற மாதிரியான படைப்புகளும் குழந்தைகளுக்கானதில்லை

9..
எனவே புனைவுகளில் விலங்குகள் மனித குணங்களைப் பிரதிபலிக்கலாம். அதன் நோக்கங்கள் முக்கியமானவை என்று நினைக்கிறேன்.

10.
ஒவ்வொரு விலங்கும் தன்னுடைய இருத்தலுக்காக தனித்துவமான நிறம், மணம்,குணம், ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இந்த தனித்துவமே அவற்றின் வாழ்வதற்கான போராட்டத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இதற்கு மனிதகுணங்களை ஏற்றிச்சொல்வது என்பது உடன்பாடானதில்லை.

11.
உயிரியல் பற்றிய அறிவியல் வளர்வதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது பஞ்சதந்திரக்கதைகள் ( Fables ) தோன்றிய காலத்திலிருந்தே உலகம் முழுவதும் இப்படியான கதைகளும் கருத்துகளும் பொதுப்புத்தியில் உறைந்து விட்டன. இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் இத்தகைய கதைகளின் கருத்துத்தளம் கேள்விக்குரியது தான்.
12.
ஆனால் விலங்குகளின் உண்மையான இயல்போடு புனைகதைகளில் எழுதுவது ஒரு சவாலாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். புனைவின் எல்லையிலிருந்து அறிவியலின் எல்லைக்குள் புகுந்துவிடும் சாத்தியங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது. அதனால் புனைவின் ரசனை குறைந்துவிடும் அபாயமும் ஏற்படும்.
13.
அறிவியல் புனைகதைகளில் விலங்குகளைப்பற்றி இயல்பாக எழுதலாம். அதற்கு முன்னுதாரணங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
14.
புதிய சவால்களை சிறார் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.