இலக்கியமும் இயங்கியலும்
உதயசங்கர்
காலையில் பேப்பர் போடும் பையன்” சார்…பேப்பர் “ என்று சொல்லி ஒரு நாளைத் தட்டியெழுப்புகிறான். அப்படித் துவங்குகிற நாள் இரவில் வியாபாரம் முடித்து தூங்கியபடியே தள்ளாட்டத்துடன் வரும் மிக்சர் வண்டியின் தாலாட்டில் நாள் உறங்கப்போகும். இதற்கிடையில் எத்தனை நிகழ்வுகள்…எத்தனை கனவுகள்..எத்தனை மகிழ்ச்சிகள்..எத்தனை கோபதாபங்கள்.. எத்தனை குதூகலங்கள்.. எத்தனை சோகங்கள்…. இயற்கையின் காட்சிப்பரிமாணங்கள், விந்தையான வாழ்க்கையில் விந்தையான மனிதர்கள்.. அவர்களின் உறவுகள், உணர்ச்சிகள், ஏழ்மை, தாழ்மை, எல்லாவற்றுக்கும் சாட்சியாக இலக்கியம் தானே இருக்கிறது.
காலத்தைப் கண்ணாடியென கலைஞனே காட்டுகிறான். கலையின் வழியே காலம் மீண்டும் தன்னைப் புணருத்தாரணம் செய்து கொள்கிறது. அடிமுடியில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் காலப்பேராற்றில் கலைஞன் அள்ளும் கை நீரே அவன் படைப்புகள்.
அவன் படைப்பைப் படிக்கும்போது கண்முன்னே ஆடும் காட்சித்தோற்றங்கள் மானுடமனதில் அறவிழுமியங்களை, அதன் தார்மீகசமூகவுணர்வை, இழந்த சொர்க்கங்களைப் பற்றிய ஏக்கங்களை, மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளவைக்கிறது. அதன் மூலம் நாகரீகசமூகம் தன் அடிப்படை சமூக உணர்வை தக்க வைத்துக்கொள்ளவும், கனவுகள் காணவும், முடிகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருநிகழ்வுகள் மட்டும் தான் கலையாகும் என்றில்லை. அன்றாடத்தின் அனுகணமும் கூட கலையாகும்.
இலக்கியத்தின் அடிப்படை நம் வாழ்க்கை தானே. இடையறாது அலையடித்துக் கொண்டேயிருக்கும் கடலைப் போன்ற நம் வாழ்க்கையில் கரையைத்தொடும் அலையின் பொங்கும் நுரைக்குமிழில் கடல் தெரியும். நுண்மையான நுரைக்குள் தெரியும் கடலைத் தான் எழுத்தாளன் எழுத நினைக்கிறான்.
அனுபவச்சூரியனின் வெளிச்சத்தில் அதன் ஏழுவண்ணங்களைச் சித்திரமாகத்தீட்டுகிறான். அதன்மூலம்
இந்த வாழ்வின் அர்த்தத்தைப்
புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். சிடுக்குகளை
விடுவிக்க முயற்சிக்கிறான். மனிதமன
விகாரங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறான். மனதின் மேன்மையையும்
கீழ்மையையும் சொல்லிப் பார்க்கிறான். அதற்காகவே வாழ்க்கையின் ஒருதுளியைக்
கையிலேந்தி தன் கலைத்திறனால் பிரம்மாண்டமாக்கி வாசகருக்குக் கையளிக்கிறான்.
.
இலக்கியத்துக்காகத்தான் இலக்கணமும் பிறந்தது.
இலக்கியமின்றி இலக்கணமுமில்லை. இலக்கணத்துக்காக இலக்கியமுமில்லை. இன்னும்
சொல்லப்போனால் இலக்கணம் உருவாகும்போதே
அதை மீறுகின்ற இலக்கியங்களும் படைக்கப்பட்டு விடுகின்றன. மீறும்
இலக்கியத்துக்காக புதிய இலக்கணங்கள்
எழுதப்படும்போதே அதைத் தாண்டிக்குதிக்கும் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. படைப்புச்செயலென்பது ஒரு இயங்கியல் இயக்கம்.

No comments:
Post a Comment