நவீன தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் புதிய சிறகுகள்
உதயசங்கர்
நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தன்னுடைய சிறகுகளை விரித்து புதிய புதிய எல்லைகளைத் தாண்டி நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது. புதிய சாதனைகளைப் படைக்கத் தொடங்கியிருக்கிறது. கிட்த்தட்ட ஐம்பது குழந்தைப்படைப்பாளிகள் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்கள் சிறார் இலக்கியத்தின் களம் காண்கிறார்கள். நவீன காலத்துக்கேற்ற நவீன விழுமியங்களைக் கொண்ட நவீனப்படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கல்விப்புலமும் மூத்த எழுத்தாளர்களும் சிறார் இலக்கியத்தைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக பெருவெள்ளமாய் பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள். அரசும் கல்வித்துறையும் சிறார் இலக்கியம் குறித்து அக்கறையுடன் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.
குழந்தைகளே எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கிறன. தற்காலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் சிறார் எழுத்தாளர்களின் கதைகள் தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது. நூறு எழுத்தாளர்களின் நூறு கதைகளைக் கொண்ட தொகுப்பு நூல் வெளிவந்திருக்கிறது. இப்போது முதல்முறையாக பெண் எழுத்தாளர்களின் சிறார் கதைகளின் தொகுப்பு நூல் வெளியாகிறது. மிகச் சரியான திசையில் சிறார் இலக்கியம் சென்று கொண்டிருக்கிறதென்று சொல்வதற்கு இதுவே சாட்சி. இந்தத் தொகுப்பில் 26 பெண் படைப்பாளிகளின் 26 கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பு இதுவரை வெளிவந்துள்ள சிறார் கதைத்தொகுப்புகளிலிருந்து பல வகைகளில் மாறுபட்டது. தொகுப்பு நூல்.
இலக்கியத்தின் அடிப்படையே கலையின்பம் தான். வெறுமனே கருத்து சொல்வதல்ல. ஆனால் அந்த கலையின்பத்தை உருவாக்குவதென்பது ஒரு இசைக்கோர்வையை உருவாக்கி பரவசமூட்டுவது போன்றது. அதற்கு அர்ப்பணிப்பும், கடுமையான உழைப்பும் சமூகப்பார்வையும் வேண்டும். அப்போது தான் படைப்புகள் வாசிக்கும் வாசகர்களின் மனதில் பரவசத்தையும் புதிய அறிதலையும் கொடுக்கும். அவர்கள் இதுவரை அனுபவித்திராத உணர்வுகளைத் தரும். அந்த உணர்வுகளின் வழி வாழ்வின் அனுபவங்களைச் செறிவூட்டும். விளங்கச்செய்யும். மேன்மைப்படுத்தும். அப்படிப்பட்ட மாயஜாலம் செய்யும் இலக்கியப்படைப்புகளை எழுதும் படைப்பாளிகளின் உருவாகவேண்டும். சிறார் இலக்கியம் எழுதுவதற்கு இந்த அர்ப்பணிப்பும் உழைப்பும் கூடுதலாக பொறுப்புணர்ச்சியும் வேண்டும்.
இந்த தொகுப்புநூலிலுள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கும் எழுத்தாளர்.ஞா.கலையரசி அவர்களின் பரந்த வாசிப்பும் சமூகப்பார்வையும், எந்தக் கதைகளை குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டுமென்ற தெளிவும் தொகுப்பு நூலை வாசிக்கும் போது உணர முடிகிறது. அது மட்டுமல்ல அப்பாவி அரசர்களோ, ஏமாற்றும் அல்லது மதியூகி மந்திரிகளோ இல்லை. முனிவர்களோ சாமியார்களோ இல்லை. வரமோ சாபமோ, சாபவிமோசனமோ இல்லை. வயதுக்கொவ்வாத இதிகாசபுராணக்கதைகள் இல்லை. மூடநம்பிக்கைகளைச் சொல்லும் கதைகள் இல்லை. பேய் பிசாசுக் கதைகள் இல்லை.
அப்படியென்றால் எப்படிப்பட்ட கதைகள் இருக்கின்றன?
சமகாலப்பிரச்னைகளான சாதிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கெதிரான கதைகள் இருக்கின்றன. இயற்கை அறிவியலை ஆர்வமூட்டும் வித்தில் சொல்லும் கதைகள் இருக்கின்றன. அறிவியல் புனைவுக்கதைகள் இருக்கின்றன. குழந்தைகளின் உளவியலைச் சொல்லும் கதைகள் இருக்கின்றன. மதம் கடந்த தோழமை பேசும் கதைகள் இருக்கின்றன. மூடநம்பிக்கைக்கெதிரான விழிப்புணர்வுக்கதைகள் இருக்கின்றன. மாதவிடாயைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லும் கதை இருக்கிறது. பறவையியல் கதைகள் இருக்கின்றன. கடலியல் கதைகள் இருக்கின்றன. பேண்டசிக் கதைகள் இருக்கின்றன. மனிதர்களுக்கிடையிலான பரஸ்பர அன்பு, நட்பு, தோழமை விலங்குகளுடனான புரிதலைச் சொல்லும் கதைகள் இருக்கின்றன. நம்முடைய கிராமப்புறச் சித்திரங்களைச் சொல்லும் கதைகள், தாத்தா, பாட்டிகள் வரும் கதைகள் இருக்கின்றன.
இப்படி இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் குழந்தைகள் வாசிக்கும்போது அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமல்ல பல புதிய நவீன விழுமியங்களைக் கற்றுக் கொடுப்பதாகவும், இருக்கின்றன. மற்றுமொரு வகையில் சிறார் இலக்கியம் எத்திசை செல்லவேண்டும்? எப்படிப்பட்ட கதைகளை எழுத வேண்டும்? என்று புதிய எழுத்தாளர்களுக்கும் ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கும் ஆண்/பெண் இருபால் எழுத்தாளர்களுக்கும் அறிவிக்கும் விதமாக இருக்கின்றன என்று சொல்வது மிகையாகாது. எனவே குழந்தைகளுக்கும் மட்டுமல்ல பெரியவர்களுக்குமான நூலாக உருவாகியிருக்கிறது. இந்தக் காலகட்டத்தின் சிறார் இலக்கியத்தை ஆய்வு செய்யவும் இந்த நூல் உதவும்.
தனித்துவமான கதைகளைக் கொண்ட தனித்துவமான இந்தச் சிறார் கதைத்தொகுப்பு நூல் நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்குத் தொகுப்பாசிரியரும் மிகச்சிறந்த எழுத்தாளருமான ஞா.கலையரசி கொடுத்திருக்கும் கொடை.
இந்த நூலில் தமிழிலக்கியத்தின் மூத்த எழுத்தாளர்கள் அம்பை, தேவிநாச்சியப்பன், சாலைசெல்வம், ஞா.கலையரசி, தொடங்கி இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் சரிதா ஜோ, பிரியசகி, ஈரோடு சர்மிளா, ராஜிலா ரிஜ்வான், பூங்கொடி பாலமுருகன், இளம் குழந்தை எழுத்தாளர்கள் ரமணி, பிரவந்திகா, அனுகிரஹா, மிருதுளா வரை அனைத்து படைப்பாளிகளும் இடம் பெற்றிருப்பது பன்மைத்துவமும், தனித்துவமும் ஒருங்கே சிறந்து விளங்கும் தொகுப்புநூலாக மலர்ந்திருக்கிறது.
அனைத்துப் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்!
வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

No comments:
Post a Comment