முட்டாள் சாச்சுலியின்
கதை
சாச்சுலியும் மாயப்பெட்டியும்
அம்மா மீண்டும் ஐந்து கொழுக்கட்டைகளைச் செய்து கொடுத்தார். சாச்சுலியும் மீண்டும் காட்டுக்குள் போனான். அங்கே அந்த ஐந்து தேவதைகளையும் சந்தித்தான். ஆனால் அவர்களைப் பார்க்காத மாதிரி,
“ நான் இப்போது
முதலாவதைச் சாப்பிடுவேன்.. பிறகு இரண்டாவது, அப்புறம் மூன்றாவது, பிறகு நான்காவது, ஐந்தாவது என்று வரிசையாகச் சாப்பிடுவேன்.. “ என்று சொல்லிக்
கொண்டே போனான். அவன் சொல்வதைக் கேட்ட தேவதைகள் பயந்து நடுங்கினர்.
“ இதோ மறுபடியும்
அந்தப் பயங்கர மனிதன் வந்து விட்டான்..அவன் ஐந்து பேரையும் சாப்பிட்டு
விடுவான்.. ஓ.. நாம் இப்போது என்ன செய்வது?
ஏதாவது பரிசு கொடுத்துச் சமாளிப்போம்..” என்று
தங்களுக்குள் பேசிக் கொண்டன. பிறகு சாச்சுலியிடம் சென்று,
“ இதோ மாயப்பெட்டி..உனக்கு எந்த ஆடைகள் வேண்டும் என்றாலும் இந்தப் பெட்டியிடம் கேட்டால் போதும்..
அது உனக்குக் கொடுக்கும்.. இதை எடுத்துக் கொள்..
தயவு செய்து எங்களைச் சாப்பிடாதே..” என்று கெஞ்சினார்கள்.
அவன் அந்த மாயப்பெட்டியை
எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் போனான். ஏற்கனவே
போன உணவகத்துக்கு போய், சமையல்காரரிடம்
சிவப்பு பட்டாடையில்
சட்டை, கருப்புப்பட்டில் முழுக்கால் டிராயர்கள், நீலப்பட்டில் தலைப்பாகை, சிவப்பு நிற காலணிகள் வேண்டும்
என்று கேட்டான். அந்தச் சமையல்கார ர் சிரித்துக் கொண்டே,
இவ்வளவு அழகான ஆடைகள் எப்படி உனக்குக் கிடைக்கும் என்று சொன்னார்.
“ அப்படியா?
இதோ மாயப்பெட்டி.. இந்தப் பெட்டியிடம் எனக்கு சட்டை,
டிராயர், தலைப்பாகை, காலணிகள்
வேண்டும் என்று கேட்டால் உடனே எனக்குக் கிடைக்கும் ” என்று சொன்னான்
சாச்சுலி. அதைக்கேட்ட சமையல்கார ர் மீண்டும் உரக்கச் சிரித்தான்.
“ இப்போது
பாரு..மாயப்பெட்டியே.. எனக்கு சிவப்புப்பட்டாடையில்
சட்டை, கருப்புப்பட்டாடையில் டிராயர்கள், நீலப்பட்டாடையில் தலைப்பாகை, சிவப்புநிறத்தில் காலணிகளைக்
கொடு..”
என்று கேட்டவுடனேயே
மாயப்பெட்டியில் அவன் கேட்ட அத்தனை ஆடைகளும் இருந்தன. அதைப்பார்த்த உணவக உரிமையாளர் இந்தப் பெட்டியை எப்படியாவது
கவர்ந்து விட வேண்டும் என்று நினைத்தான். சாச்சுலிக்கு சிறப்பான
இரவு உணவும் தூக்கமருந்து கலந்த பானமும் கொடுத்தான். சாச்சுலி
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அந்தச் சமையல்கார ர் மாயப்பெட்டியைத் திருடிக் கொண்டான்.
அந்த இடத்தில் சாதாரணப்பெட்டியை வைத்து விட்டான்.
காலையில் சாச்சுலி
வீட்டுக்குப் போனான். அம்மாவிடம்,
“ அம்மா..
நான் ஒரு மாயப்பெட்டியைக் கொண்டு வந்திருக்கிறேன்.. நீ எந்த ஆடை கேட்டாலும் கொடுக்கும்.. நீ விரும்பியதைத்
தரும் மாயப்பெட்டி..”
என்றான்.
“ அபத்தமாய்
உளறாதே…பொய் சொல்லாதே ” என்று அம்மா திட்டினாள்.
“ அம்மா நான்
உண்மையைத் தான் சொல்றேன்..” என்று சொன்ன சாச்சுலி அந்தப்பெட்டியிடம்
,மேல் கோட்டு, மற்றும் விதவிதமான துணிகளைக்
கேட்டான். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
அம்மாவுக்குப்
பயங்கரக்கோபம் வந்தது.
“ பொய்யா!
விளையாடுகிறாயா? இனி என் முகத்தில் விழிக்காதே..
உடனே இங்கிருந்து ஓடிப் போய் விடு..”
என்று சொன்னதோடு
அந்தப் பெட்டியை உடைத்துத் தூள் தூளாக்கி தூர எறிந்தாள்.
அப்போதும் முட்டாள்
சாச்சுலி அசரவில்லையே.
“ சரி அம்மா
எனக்குக் கொஞ்சம் கொழுக்கட்டைகளைக் கொடு.. நான் போகிறேன்..”
என்றான். வேறுவழியில்லாமல் அம்மாவும் கொழுக்கட்டைகளைச்
செய்து கொடுத்தாள்.
கதை சொன்னவர் - டுங்க்னி டார்ஜிலிங் 1879
No comments:
Post a Comment