Showing posts with label நாடோடிக்கதை. Show all posts
Showing posts with label நாடோடிக்கதை. Show all posts

Wednesday, 15 October 2025

சாச்சுலியும் மாயப்பெட்டியும்

 

முட்டாள் சாச்சுலியின் கதை

சாச்சுலியும் மாயப்பெட்டியும்



அம்மா மீண்டும் ஐந்து கொழுக்கட்டைகளைச் செய்து கொடுத்தார். சாச்சுலியும் மீண்டும் காட்டுக்குள் போனான். அங்கே அந்த ஐந்து தேவதைகளையும் சந்தித்தான். ஆனால் அவர்களைப் பார்க்காத மாதிரி,

நான் இப்போது முதலாவதைச் சாப்பிடுவேன்.. பிறகு இரண்டாவது, அப்புறம் மூன்றாவது, பிறகு நான்காவது, ஐந்தாவது என்று வரிசையாகச் சாப்பிடுவேன்.. “ என்று சொல்லிக் கொண்டே போனான். அவன் சொல்வதைக் கேட்ட தேவதைகள் பயந்து நடுங்கினர்.

இதோ மறுபடியும் அந்தப் பயங்கர மனிதன் வந்து விட்டான்..அவன் ஐந்து பேரையும் சாப்பிட்டு விடுவான்.. .. நாம் இப்போது என்ன செய்வது? ஏதாவது பரிசு கொடுத்துச் சமாளிப்போம்..” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டன. பிறகு சாச்சுலியிடம் சென்று,

இதோ மாயப்பெட்டி..உனக்கு எந்த ஆடைகள் வேண்டும் என்றாலும் இந்தப் பெட்டியிடம் கேட்டால் போதும்.. அது உனக்குக் கொடுக்கும்.. இதை எடுத்துக் கொள்.. தயவு செய்து எங்களைச் சாப்பிடாதே..” என்று கெஞ்சினார்கள்.

அவன் அந்த மாயப்பெட்டியை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் போனான். ஏற்கனவே போன உணவகத்துக்கு போய், சமையல்காரரிடம்

சிவப்பு பட்டாடையில் சட்டை, கருப்புப்பட்டில் முழுக்கால் டிராயர்கள், நீலப்பட்டில் தலைப்பாகை, சிவப்பு நிற காலணிகள் வேண்டும் என்று கேட்டான். அந்தச் சமையல்கார ர் சிரித்துக் கொண்டே, இவ்வளவு அழகான ஆடைகள் எப்படி உனக்குக் கிடைக்கும் என்று சொன்னார்.

அப்படியா? இதோ மாயப்பெட்டி.. இந்தப் பெட்டியிடம் எனக்கு சட்டை, டிராயர், தலைப்பாகை, காலணிகள் வேண்டும் என்று கேட்டால் உடனே எனக்குக் கிடைக்கும்என்று சொன்னான் சாச்சுலி. அதைக்கேட்ட சமையல்கார ர் மீண்டும் உரக்கச் சிரித்தான்.

இப்போது பாரு..மாயப்பெட்டியே.. எனக்கு சிவப்புப்பட்டாடையில் சட்டை, கருப்புப்பட்டாடையில் டிராயர்கள், நீலப்பட்டாடையில் தலைப்பாகை, சிவப்புநிறத்தில் காலணிகளைக் கொடு..”

என்று கேட்டவுடனேயே மாயப்பெட்டியில் அவன் கேட்ட அத்தனை ஆடைகளும் இருந்தன. அதைப்பார்த்த உணவக உரிமையாளர் இந்தப் பெட்டியை எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என்று நினைத்தான். சாச்சுலிக்கு சிறப்பான இரவு உணவும் தூக்கமருந்து கலந்த பானமும் கொடுத்தான். சாச்சுலி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அந்தச் சமையல்கார ர் மாயப்பெட்டியைத் திருடிக் கொண்டான். அந்த இடத்தில் சாதாரணப்பெட்டியை வைத்து விட்டான்.

காலையில் சாச்சுலி வீட்டுக்குப் போனான். அம்மாவிடம்,

அம்மா.. நான் ஒரு மாயப்பெட்டியைக் கொண்டு வந்திருக்கிறேன்.. நீ எந்த ஆடை கேட்டாலும் கொடுக்கும்.. நீ விரும்பியதைத் தரும் மாயப்பெட்டி..”

என்றான்.

அபத்தமாய் உளறாதேபொய் சொல்லாதேஎன்று அம்மா திட்டினாள்.

அம்மா நான் உண்மையைத் தான் சொல்றேன்..” என்று சொன்ன சாச்சுலி அந்தப்பெட்டியிடம் ,மேல் கோட்டு, மற்றும் விதவிதமான துணிகளைக் கேட்டான். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

அம்மாவுக்குப் பயங்கரக்கோபம் வந்தது.

பொய்யா! விளையாடுகிறாயா? இனி என் முகத்தில் விழிக்காதே.. உடனே இங்கிருந்து ஓடிப் போய் விடு..”

என்று சொன்னதோடு அந்தப் பெட்டியை உடைத்துத் தூள் தூளாக்கி தூர எறிந்தாள்.

அப்போதும் முட்டாள் சாச்சுலி அசரவில்லையே.

சரி அம்மா எனக்குக் கொஞ்சம் கொழுக்கட்டைகளைக் கொடு.. நான் போகிறேன்..” என்றான். வேறுவழியில்லாமல் அம்மாவும் கொழுக்கட்டைகளைச் செய்து கொடுத்தாள்.

கதை சொன்னவர் - டுங்க்னி டார்ஜிலிங் 1879 

 

Monday, 13 October 2025

பிரியாணியும் ஐந்து தேவதைகளும்

 

முட்டாள் சாச்சுலியின் கதை 4

பிரியாணியும் ஐந்து தேவதைகளும்



சாச்சுலி கேட்ட மாதிரியே இரண்டு கொழுக்கட்டை செய்து கொடுத்தார் அம்மா. அதை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் போனான் சாச்சுலி. இரவாகி விட்டது. அந்தக் காட்டில் ஐந்து தேவதைகள் வாழ்ந்து வந்தனர். சாச்சுலி போகும்போதே இரண்டு கொழுக்கட்டைகளை ஐந்து துண்டுகளாக உடைத்தான். பிறகு,

இப்போது முதலாவதைச் சாப்பிடுவேன்.. பிறகு இரண்டாவதைச் சாப்பிடுவேன்..அப்புறம் மூன்றாவதைச் சாப்பிடுவேன்.. பிறகு நான்காவது அப்புறம் ஐந்தாவது..” என்று சொல்லிக் கொண்டே நடந்தான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஐந்து தேவதைகளும் சாச்சுலி அவர்களைச் சாப்பிடுவதைப் பற்றித் தான் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டார்கள். நம்மையே சாப்பிடும் அளவுக்குப் பெரிய ஆளாக இருப்பான் போல என்று நினைத்துப் பயந்து விட்டார்கள்.

இப்போது நாம் என்ன செய்வது? அவன் நம்மைச் சாப்பிடப் போகிறான்.. நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளணுமே.. அவனுக்கு எதையாவது கொடுத்துச் சமாளிக்க முடியுமா என்று பார்ப்போம்..”

என்று பேசிக் கொண்டார்கள். உடனே திடீரென சாச்சுலியின் முன்னால் போய் நின்றார்கள். முதலில் சாச்சுலி பயந்து போனான்.

தயவு செய்து எங்களை நீ சாப்பிட்டுவிடாதே.. நீ சாப்பிட மாட்டேன் என்று உறுதி அளித்தால் நாங்கள் உனக்கு ஒரு பரிசு தருகிறோம்..” என்றார்கள். முதலில் சாச்சுலிக்குப் புரியவில்லை. பிறகு தான் பேசியதைத் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்த து.

நீங்கள் என்ன தருவீர்கள்? “ என்று கேட்டான் சாச்சுலி.

ஒரு சமையல் பானை தருகிறோம்..உனக்குப் பசிக்கும்போது உனக்கு என்ன உணவு வேண்டுமோ அதைப் பானையிடம் கேட்டால் போதும் உடனே கிடைத்து விடும்..” என்று ஐந்து தேவதைகளும் சொன்னார்கள்.

சாச்சுலி அந்தச் சமையல் பானையை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் போனான். ஒரு உணவகத்துக்குப் போனான்.

பிரியாணி இருக்கா? “ என்று கேட்டான்.

பிரியாணியா? பிரியாணியெல்லாம் இல்லை..” என்றார் கடைக்காரர்.

அப்படியா? நான் ஒரு பானை வைத்திருக்கிறேன்.. நான் என்ன உணவு கேட்டாலும் உடனே கொடுக்கும்…” என்றான் சாச்சுலி.

என்ன முட்டாள்தனம்! “ என்று சொன்னார் கடைக்காரர்.

இப்போது பாரு… “ என்று சொல்லிய சாச்சுலி பானையிடம்,

எனக்குப் பிரியாணி வேண்டும்..” என்றான். என்ன ஆச்சரியம்! உடனே பானை நிறைய சுடச் சுடப் பிரியாணி மணந்தது. உடனே கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்தப் பிரியாணியைப் பரிமாறினான். எல்லாரும் அதன் சுவையைப் பாராட்டினார்கள்.

கடைக்கார ர் மனதில் கபட எண்ணம் தோன்றியது. எப்படியாவது அந்தப் பானையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அவர் சாச்சுலிக்கு குடிப்பதற்கு குளிர்பானம் கொடுத்தார். அந்தக் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்திருந்தார். அதைக் குடித்த சாச்சுலி அப்படியே உறங்கிவிட்டான். அவன் உறங்கும்போது அவனிடமிருந்த மந்திரப்பானையை எடுத்துக் கொண்டார் கடைக்கார ர். அந்த இட த்தில் சாதாரணப்பனையை வைத்து விட்டார்.

மறுநாள் சாச்சுலி பானையுடன் வீட்டுக்குப் போனான்.

அம்மா.. நான் ஒரு மந்திரப்பானையைக் கொண்டு வந்திருக்கிறேன்.. நீ எந்த உணவைக் கேட்டாலும் உனக்குக் கிடைக்கும்..”

என்றான். சாச்சுலியின் அம்மா கங்குனி. அதை நம்பவில்லை.

என்ன முட்டாள்த்தனமாக உளறிக் கொண்டிருக்கிறாய்..பொய் சொன்னால் அவ்வளவு தான்..” என்று கோபமாய்க் கத்தினாள்.

இது முக்காலும் உண்மை அம்மா.. பாரேன்..” என்று சொல்லிய சாச்சுலி பானையிடம் ஏதேதோ உணவு வேண்டுமென்று கேட்டான். எதுவும் வரவில்லை. அது சாதாரணப்பானை தானே. அம்மாவுக்கு ஆத்திரம் வந்த து.

நீ ஏன் வீட்டுக்குத் திரும்பி வந்தே? பொய் சொல்றவன் இங்கே இருக்கக்கூடாது..”

என்றார்.

சரி நான் போறேன்.. எனக்கு ஐந்து கொழுக்கட்டை செய்ஞ்சு கொடு..” என்றான் முட்டாள் சாச்சுலி.

நன்றி - புக் டே

Saturday, 23 August 2025

நெய் ஜாடியைப் போட்டுடைத்தது ஏன்? - இந்திய நாடோடிக்கதை

 

 

இந்திய நாடோடிக்கதை 7

முட்டாள் சாச்சுலியின் கதை

3. நெய் ஜாடியைப் போட்டுடைத்தது ஏன்?



சாச்சுலி வீட்டை விட்டுக் கிளம்பினான். அகையில் கோடாரியும் சாப்பிட ரொட்டியும் எடுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான். போகும்போது,

எப்படி தற்கொலை செய்வது? “ என்று யோசித்துக் கொண்டே சென்றான். அங்கே உயரமான ஒரு மரத்தைப் பார்த்த தும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த மரத்தின் மீது ஏறி உச்சாணிக் கிளையின் நுனியில்  உட்கார்ந்து கொண்டான். கிளையின் அடிப்பகுதியை வெட்த் தொடங்கினான்.

அப்போது அந்த வழியே வந்த வழிப்போக்கன் சாச்சுலி செய்யும் காரியத்தைப் பார்த்தான்.

மேலே என்ன வேலை பார்த்துக்கிட்டிருக்கே..நீ அப்படி வெட்டினால் கீழே விழுந்து செத்து விடுவாய் முட்டாளே..” என்று கத்தினான். அதைக் கேட்ட தும் சாச்சுலியின் முகத்தில் மகிழ்ச்சி.

என்ன சொன்னீங்க? “ என்று கத்திக் கொண்டே கைப்பிடி நழுவி அந்த வழிப்போக்கன் மீதே விழுந்தான். வழிப்போக்கனின் கைகளைப் பிடித்துக் கொண்டு,

சொல்லுங்க.. எப்போது நான் சாவேன்? “ என்று கேட்டான். வழிப்போக்கன்,

எனக்கு எப்படி தெரியும்? நான் போகிறேன்..” என்று கைகளை உதறினான் வழிப்போக்கன்.

நீ அதை சொல்லவில்லையென்றால் நான் உன்னை விட மாட்டேன்.. “ என்று சொல்லி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.

இது என்னடா வம்பாப்போச்சு! “ என்று நினைத்த வழிப்போக்கன்,

எப்போது உன்னுடைய சட்டையில் ஒரு சிவப்பு நூலைப் பார்க்கிறாயோ அப்போது நீ செத்து விடுவாய்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனான்.

சாச்சுலி கடைத்தெருவுக்குப் போனான். தையல் கடைத்தெருவில் இருந்த தையல்கார்களின் கடைகளுக்கு முன்னால் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான். தையல்காரர்கள் தைத்து முடித்து துண்டுத்துணிகளையும் கழிவு நூல்களையும் தூரப்போட்டனர். ஒரு தையல்காரர் போட்ட சிவப்பு நூல் சாச்சுலியின் சட்டையில் வந்து ஒட்டிக் கொண்டது. அதைப் பார்த்த சாச்சுலி,

சரி இனி நான் செத்துப்போகலாம்..” என்று சொன்னான். உடனே அங்கேயிருந்த தையல்கார்கள்,

எப்படிச் சொல்றே? “ என்று கேட்டார்கள்.

என்னுடைய சட்டையில் சிவப்பு நிற நூல் விழுந்தால் நான் செத்து விடவேண்டும்..என்று வழிப்போக்கன் சொன்னார்..” என்றான் சாச்சுலி.

அதைக் கேட்ட தையல்கார்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் சாச்சுலி கவலைப்படவில்லை. காட்டுக்குள் சென்று ஒரு குழியை வெட்டினான். அந்தக் குழிக்குள் படுத்துக் கொண்டான். பசிக்கும்போது அம்மா கொடுத்துவிட்ட ரொட்டியைச் சாப்பிட்டான்.

அன்று இரவில் அந்த வழியாக தலையில் நெய் ஜாடியைச் சுமந்து கொண்டு அந்த வழியாக ஒரு சிப்பாய் போனான்.

எவ்வளவு கனமாக இருக்கு இந்த நெய்ஜாடி…? வீடு வரைத் தூக்கிக் கொண்டு போக யாராவது கூலிக்காரன் கிடைத்தால் நல்லாருக்கும்.. அந்த வேலைக்கு நான்கு பைசா கொடுப்பேன்.. “

என்று வாய்விட்டுச் சொன்னான். குழியில் படுத்திருந்த சாச்சுலி அதைக் கேட்டான். உடனே குழியிலிருந்து துள்ளியெழுந்தான். சிப்பாய் முன்னால் போய் நின்றான்.

நான் தூக்கிக் கொண்டு வருகிறேன்..” என்றான். திடீரென குழிக்குள்ளிருந்து குதித்து வந்த சாச்சுலியைப் பார்த்த சிப்பாய் பயந்து போனான்.

யார் நீ? “ என்று வாய் குழறிக் கேட்டான். அதற்கு சாச்சுலி,

நான் இறந்து போன மனிதன்.. குழிக்குள்ளேயே படுத்துக் கிடந்து போரடிக்குது.. இனிமேல் அங்கே படுத்திருக்க முடியாது..”

என்று சொன்னான். சிப்பாய்க்குப் பயம் தான். ஆனாலும் ,

சரி.. நீ நெய் ஜாடியைத் தூக்கிட்டு வா..” என்று சொல்லிவிட்டு சாச்சுலியின் தலையில் நெய் ஜாடியை வைத்தான். சாச்சுலியை முன்னால் போகச்சொல்லி விட்டு அவனுக்குப் பின்னாலேயே போனான் சிப்பாய்.

தலையில் நெய் ஜாடியுடன் சாச்சுலி நடந்து போகும்போது அவனுக்குப் பல புதிய திட்டங்கள் தோன்றின.

இப்போ கொஞ்ச நேரத்தில் நான்கு பைசா கிடைக்கும். நான் அந்தப் பணத்தில் ஒரு கோழி வாங்குவேன்..கோழி நிறைய முட்டைகள் இடும்.. அந்த முட்டைகளைச் சந்தையில் விற்பேன்.. அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு ஆடு வாங்குவேன்..அந்த ஆட்டை நன்றாக வளர்ப்பேன். ஆட்டின் பாலை விற்பேன். பிறகு ஆட்டையும் அதன் தோலையும் விற்பேன். அதில் வரும் பணத்தைக் கொண்டு ஒரு பசு மாட்டை வாங்குவேன். பசுவின் பாலை விற்பனை செய்வேன். பிறகு ஒரு பெண்ணை மணம் முடிப்பேன். எனக்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்கள் நன்றாகச் சாப்பிட்ட பிறகும் கூட நான் சாப்பிடும்போது என்னிடம் வந்து,

அப்பா அப்பா எனக்குச் சோறு கொடுங்கள்என்று கேட்பார்கள்.

சோறு இல்லை..” என்று சொல்வேன்

இப்படி அவன் சோறு இல்லை என்று தலையை ஆட்டிச் சொல்லும்போது சாச்சுலியின் தலையில் இருந்த நெய் ஜாடி தலையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து நொறுங்கியது. நெய் தரையில் கொட்டிவிட்டது. அதைப் பார்த்துப் பதறிய சிப்பாய்,

அடப்பாவி ஏண்டா நெய் ஜாடியைக் கீழே போட்டே? ஏன் தலையை ஆட்டினே? “ என்று கத்தினான்.

ஏன்னா என் பிள்ளைகள் என்னிடம் சோறு கேட்டார்கள்.. நான் இல்லைன்னு தலையாட்டினேன்..” என்றான் சாச்சுலி.

அந்தக் கோபத்திலும் சிப்பாய் கேட்டான்,

உனக்கு எத்தனை குழந்தைகள்? “

நீங்க கொடுக்கிற காசை வைச்சி கோழி வாங்கி, ஆடு வாங்கி, மாடு வாங்கி, கலியாணம் பண்ணி, குழந்தைகள் பெத்துக்கலாம்னு இருக்கேன்..” என்று பல்லைக் காட்டிக் கொண்டே சொன்னான்.

அதைக் கேட்ட சிப்பாய் தலையிலடித்துக் கொண்டே,

முட்டாள்.. முட்டாள்.. அடி முட்டாள்..” என்று திட்டி விரட்டினான்.

சாச்சுலி மீண்டும் வீட்டுக்கு வந்தான். அம்மா அவனைப் பார்த்ததும்,

ஏண்டா இங்கே வந்தே? “ என்று கோபமாகச் சொன்னாள். பல்லைக் காட்டிக் கொண்டே சாச்சுலி,

நான் தான் செத்துப்போய் பனிரெண்டு வருசமாயிச்சே.. “ என்று சொன்னான். அதைக்கேட்ட அம்மா,

ஏண்டா பொய்யா சொல்றே? வீட்டை விட்டுப் போய் பனிரெண்டு நாள் தானே ஆயிருக்கு..ஓடிப்போயிரு.. பொய் சொல்றவனுக்கு இங்க இடமில்லை..” என்று திட்டினாள்.

சாச்சுலி சிரித்துக் கொண்டே,

சரி சரி.. எனக்கு ஒரு நாலு கேக் செய்ஞ்சு கொடு.. நான் போறேன்..” என்றானே பார்க்கலாம்.

( சாச்சுலி தொடர்ந்து வருவான் )

நன்றி - புக் டே