Showing posts with label விலங்குகள். Show all posts
Showing posts with label விலங்குகள். Show all posts

Saturday, 16 May 2026

விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் சிந்திக்குமா?



 

குழந்தைகளுக்கான தத்துவம் 3 

விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் சிந்திக்குமா?

உதயசங்கர்


தாவரங்களும் சிந்திக்கின்றன. அதற்கும் ஒரு தத்துவம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். அதே மாதிரி தான் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் சிந்திக்கின்றன.

உயிர் வாழ்தல்

இனப்பெருக்கம்

உயிர் வாழ்தலுக்கு இரையை அடையாளம் காணுதல் அதாவது எதைச் சாப்பிடலாம். எதைச் சாப்பிடக்கூடாது என்று தேர்ந்தெடுத்தல். இரையைத் தேடுவது, அதாவது சாப்பிடும் இரை அதிகமாக இருக்கும் இடங்களில் தன்னுடைய வாழ்விடத்தை அமைத்துக் கொள்ளுதல்.

தன்னைப் பாதுகாத்தல். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, இயற்கைப் பேரிடரிலிருந்து பாதுகாப்பு இதற்கான தகவமைப்புடன் கூடிய உடலமைப்பை உருவாக்குதல்.

அடுத்தது இனப்பெருக்கம். இயற்கையில் தங்களுடைய இருப்பையும் தொடர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுச்சங்கிலியில் தன்னுடைய இருத்தலின் மூலம் தன்னைச் சார்ந்தோ அல்லது தான் சார்ந்தோ இருக்கக்கூடிய விலங்குகளுக்கு உதவி செய்வது, போன்றவற்றிற்கு இனப்பெருக்கம் அவசியம்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும். புற்கள் இல்லையென்றால் அவற்றை மேயும் விலங்குகள் மறைந்துவிடும்.

மேய்ச்சல் விலங்குகள் இல்லையென்றால் அவற்றை இரையாகச் சாப்பிடும் ஊனுண்ணி விலங்குகள் மறைந்து விடும்.

ஒரு மானைப் புலி வேட்டையாடுவதைப் பார்க்கும் நாம் பரிதாபப்படுகிறோம்.

ஆனால் மானைச் சாப்பிடும் விலங்குகள் இல்லையென்றால் என்ன ஆகும்?

மான்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். அவை பூமியில் பச்சையாக அனைத்துத் தாவரங்களையும் சாப்பிட்டுவிடும். அந்தத் தாவரங்களைச் சார்ந்து தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள பூச்சிகள், புழுக்கள் மறைந்து விடும். அந்தப் பூச்சிகளை புழுக்களைச் சாப்பிட்டு வாழும் பறவைகளும் சிறுவிலங்குகளும் மறைந்து விடும்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இயற்கை ஒரு வலைப்பின்னல் மாதிரி அனைத்து உயிர்களையும் பிணைத்து வைத்திருக்கிறது. எவ்வளவு சிறிய வைரஸாக இருந்தாலும் சரி உருவத்தில் பெரிய யானையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு தனித்தனியான குணம், உடல், பழக்கவழக்கங்கள், உணவுமுறை, இனப்பெருக்கம், இவற்றைக் கொடுத்திருக்கிறது. அல்லது ஒவ்வொரு உயிரும் இயற்கையில் தாங்கள் வாழ்வதகேற்ப சிறப்பு குணங்களை பரிணாமவளர்ச்சியில் பெற்றிருக்கின்றன.

ஒரு இலைவெட்டி எறும்பு கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்கிறது.  ஒரு கரப்பான்பூச்சி இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில் கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது. இப்படிச் சிறப்பான குணாதிசயங்கள் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது.

அதை நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் நாம் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது. அந்த உயிரினங்கள் அதற்கு முன்னால் எத்தனை லட்சம் ஆண்டுகளாய் மாற்றங்களைச் சந்தித்திருக்க வேண்டும். இல்லையா?

இந்த மாற்றங்கள் தானாக உருவானதா? அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா?

உண்மை என்ன?.

புலனுணர்விலும் அறிவிலும் கீழ்ப்படியில் இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தாங்கள் இப்படி மாறவேண்டும், இப்படி மாறக்கூடாது என்றெல்லாம் முடிவு செய்யும் அளவுக்கு சிந்திக்கத் தெரியாது.

அந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த உயிரின் உயிர்வாழும் உள்ளுணர்வு  ( Survival Instict ) அதன் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு.

அதே போல புதிய உயிர்கள் தோன்றுவதும் மரபணுக்களில் நிகழும் மாற்றம் அல்லது சிதைவு தான் காரணம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

ஹோமோ சேப்பியன்ஸ் என்ற அறிவியல் பெயர் சூட்டப்பட்ட நாம் தோன்றியது கூட மரபணுக்களில் ஏற்பட்ட சிதைவினால் தான் ( Chromosome Mutations ) என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

ஆக விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளுமே கூட தங்களுடைய வாழ்க்கையை இயற்கையைச் சார்ந்து தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அவை இயற்கையைப் பாதிப்பதில்லை. இயற்கையை ஒட்டிய சிந்தனையையும் தத்துவத்தையும் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாமா?

இவற்றிலிருந்து மனிதன் மட்டும் மாறுபடுகிறான்.

எப்படி?

( தத்துவம் அறிவோம் )

நன்றி - இயல் மின்னிதழ்

 

Wednesday, 22 January 2025

நடிப்புத்திலகம்

 

நடிப்புத்திலகம்

உதயசங்கர்



பழையனூர் காடு மிகவும் பழமையானது. எவ்வளவு பழமையானது என்றால் முதன் முதலில் தோன்றிய பெரணிச் செடிகள் முதல் ஓங்கி உயர்ந்து வளரும் தேவதாரு மரங்கள் வரை இருக்கின்ற காடு. அதே போல உலகத்தின் அத்தனை வகையான விலங்குகளும் பறவைகளும் வசிக்கும் காடு.

அங்கே ஒரு அதிசயம் ஆண்டுதோறும் நடக்கும்.

அது பழையனூர் காட்டின் பிறந்த நாள்விழா. அன்று அந்தக் காட்டிலுள்ள எல்லாவிலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும் பாம்புகளும் பல்லிகளும் எல்லாரும் ஒரு பெரிய மைதானத்தில் கூடி விடுவார்கள்.

பாட்டு, பேச்சு, நடனம், மாறுவேடம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி, கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, ஓடிப்பிடித்து விளையாடுதல் என்று போட்டிகள் நடந்தன.

பாட்டுப்போட்டியில் யாரும் எதிர்பார்க்கவில்லை.

காகம் வெற்றி பெற்றது.

நடனப்போட்டியில் மான் துள்ளிக்குதித்து வெற்றிபெற்றது.

பேச்சுப்போட்டியில் எல்லாரும் மைனா தான் வெற்றி பெறும் என்று நினைத்தார்கள். மைனா ஏழுகுரலில் பேசும். ஆனால் வெற்றி பெற்றது யார் தெரியுமா?

தவிட்டுக்குருவி. அது ரேடியோ ஜாக்கி மாதிரி கயமுய கயமுய என்று பேசி வெற்றி பெற்றது.

நீளம் தாண்டுதலில் ஆமை வெற்றி பெற்றது.

உயரம் தாண்டுதலில் வெள்ளெலி வெற்றி பெற்றது.

கபடியில் புலி டீமும் எலி டீமும் போட்டி போட்டன. எலி டீம் மிகச்சுலபமாக வெற்றி பெற்றது.

கண்ணாம்மூச்சியில் யானை ஒளிந்த இடத்தை யாராலும் கண்டே பிடிக்கமுடியவில்லை. யானையே வெற்றி பெற்றது.

இப்படி இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத விலங்குகளும் பறவைகளும் வெற்றி பெற்றன.

பழையனூர் காட்டில் வழக்கமான உற்சாகத்தை விட இன்று மிகுந்த கொண்டாட்டமாக இருந்தது.

கடைசியாக மாறுவேடப்போட்டி. மாறுவேடம் போட்டு வந்து நடிக்க வேண்டும்.

காட்டு ஆடு வந்தது. நீண்ட தாடியுடன் அறிவியலறிஞர் டார்வினைப் போல நடித்தது. ஒவ்வொரு உயிரினத்தையும் ஆராய்ந்து பரிணாமவளர்ச்சி பற்றிப் பேசியது.

சிட்டுக்குருவி வந்தது. பறவையியலாளர் சாலிம் அலி போல வேடம் போட்டிருந்தது. கழுத்தில் ஒரு பைனாக்குலர் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு பறவைகளைப் பற்றியும் பேசியது.

காற்றில் அங்கும் இங்கும் பறந்து கொண்டே தாத்தாபூ வந்தது. தாவரவியலாளர் ஹம்போல்ட் என்றது. ஒவ்வொரு தாவரத்தையும் ஆராய்ந்து தான் வைத்திருந்த குறிப்பேட்டில் பதிந்து கொண்டது.

பெண்புலி வந்தது. நான் தான் இடவேலத் கக்கத் ஜானகியம்மாள் தாவரங்களின் பூக்களின் மரபணுவை ஆராய்ந்து மாற்றங்களைச் செய்வேன் என்றது. கையில் வைத்திருந்த சிவப்பு நிறச் செம்பருத்திப் பூவின் நிறத்தை மஞ்சளாக மாற்றிக் காட்டியது.

யாருக்குப் பரிசு கொடுப்பது ?

நடுவர் குழு தடுமாறின.

அப்போது ஒரு குரல் கேட்டது.

அதுக்குள்ள தீர்ப்பைச் சொன்னா எப்படி? என்னோட நடிப்பைப் பாருங்க..

எல்லாரும் திரும்பிப்பார்த்தார்கள். எதுவும் தெரியவில்லை.

அப்போது மின்னு முயல் சொன்னது,

“ நடுவர்களே! . இங்கே ஒரு ஹாக்னோஸ் பாம்பு செத்துக்கிடக்கு.. செத்து பல நாள் ஆகியிருக்கும் போல.. நாத்தம் குடலைப் புடுங்குது..

பார்த்தால் அங்கே ஒரு பாம்பு மட்டமல்லாக்கப் படுத்துக் கிடந்தது. வாயைத் திறந்து நாக்கைத் தொங்கவிட்டபடி கிடந்தது. உடம்பு விரைத்து அசையாமல் கிடந்தது. மூச்சு விடவில்லை.

அதைப் பார்த்த மயிலானுக்கு ஆசை வந்தது. அருகில் போய் கொத்தித் திங்கலாம் என்று நினைத்தது.

ஐயே! பக்கத்தில் போக முடியவில்லை. அப்படி ஒரு துர்நாற்றம். அப்படியே பின்னால் போய் விட்டது.

நடுவர்களும் மற்ற விலங்குகளும் அந்த இடத்திலேயே இருக்கமுடியவில்லை. எல்லாரும் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

அந்த செத்த பாம்பு அப்படியே கிடந்தது.

போட்டிகள் முடிந்து பரிசுகள் எல்லாம் கொடுத்து எல்லாரும் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

இரவாகி விட்டது. அப்போது செத்தபாம்பு அசைந்தது.

.” எப்படி என் நடிப்பு நடுவர்களே! என்று கூவியது. உடலைத் திருப்பி கண்களைத் திறந்தது அந்தப் பாம்பு.

யாரும் இல்லை.

“ ஐயோ.. நான் எப்படி நடித்தேன்.. எனக்குத் தானே பரிசு கொடுக்க வெண்டும்.. இதை யாரும் கேட்கமாட்டீர்களா? “

என்று அழுதுகொண்டே மீண்டும் மல்லாக்க விழுந்து செத்தது போல நடிக்கத் தொடங்கியது அந்த நடிப்புத்திலகம் ஹாக்னோஸ் பாம்பு.

அப்போது மரத்தில் இருந்த ஆந்தை சொன்னது,

“ எதுவும் அளவோடு இருக்கணும்டா ஹாக்னோஸ்..

 

நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Saturday, 7 December 2024

. நான் யார்?

 

. நான் யார்?

உதயசங்கர்


ஒரு வித்தைக்காரனிடமிருந்து ஒரு கரடி தப்பித்து காட்டுக்குள் வந்து விட்டது. குட்டியிலிருந்தே அது அவனிடம் தான் இருந்தது. சைக்கிள் ஓட்டும் கயிற்றில் நடக்கும். குட்டிக்கரணம் அடிக்கும். வணக்கம் சொல்லும். அலுமினியத்தட்டைக் கையில் பிடித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பவர்களிடம் பிச்சை எடுக்கும். எப்போதும் சங்கிலியில் கட்டி வைத்திருப்பான் அந்த வித்தைக்காரன்.

 அன்று சங்கிலி கழன்று விட்டது.  ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று கரடி உலா போனது. இரவு நேரம். அதனால் ஆட்கள் யாரும் தெருக்களில் இல்லை. கீழே கிடந்த பாப்கார்னை எடுத்து வாயில் போட்டது. ஒரு பிஸ்கெட் துணடை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டுச் சாப்பிட்டது.

திடீரென தெருவில் ஒரு நாய் குரைக்க ஆரம்பித்தது. அது என்ன சொல்லியதோ தெரியவில்லை. மற்ற தெருக்களிலிருந்து நாலைந்து நாய்கள் குரைத்துக் கொண்டே பாய்ந்து வந்தன.

அவ்வளவு தான்.

கரடி கண்மண் தெரியாமல் ஓடியது. பின்னால் நாய்கள் துரத்தி வந்தன. ஓட்டம் என்றால் ஓட்டம் அப்படி ஒரு ஓட்டம். இந்தக் காட்டுக்குள் வந்து தான் நின்றது.

ஓடி வந்த களைப்பில் அப்படியே ஒரு மரத்தடியில் படுத்து உறங்கி விட்டது. காலையில் கண்விழிக்கும்போது வயிறு பசித்தது.

கரடி இதுவரை காட்டைப் பார்த்தது கிடையாது. அதற்கு வேடிக்கையாக இருந்தது. சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள், விதம் விதமான செடிகள், கொடிகள், பறவைகளின் பாடல், விலங்குகளின் உறுமல், செருமல், என்று வித்தியாசமாக இருந்தது.

நகரத்தில் கார், பைக்குகளின் டூர்ர்ர் புர்ர் சத்தம், வியாபாரிகளின் கூக்குரல், குழந்தைகளின் கூச்சல் கேட்கும். மனிதர்கள் எங்கே போகிறார்கள்? எங்கே வருகிறார்கள்? எதற்காக இப்படி மேலும் கீழும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கரடி யோசிக்கும்.

 இங்கே இந்த சத்தங்களே இனிமையாக இருந்தன. ஆனால் வயிறு பசிக்குதே. என்ன சாப்பிடக்கிடைக்கும் என்று தெரியவில்லை. கரடியை வைத்திருந்த வித்தைக்காரன் காலையில் இரண்டு பன் ரொட்டிகளையும் வழைப்பழங்களையும் கடையில் வாங்கிக் கொடுப்பான். இங்கே கடைகள் இல்லை. அப்படியே இருந்தாலும் யார் வாங்கிக் கொடுப்பார்கள்?

ச்சே நகரத்திலிருந்து இந்தக் காட்டுக்கு வந்திருக்கக் கூடாது. அப்படியே நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய அருவியும் குளமும் தெரிந்தது. அதைச் சுற்றி நிறைய விலங்குகளும் பறவைகளும் தண்ணீர் குடித்துக் கொண்டும் குளித்துக் கொண்டும் இருந்தன.

கரடியைப் பார்த்தவுடன் ஒரு நொடி எல்லாம் நிமிர்ந்து பார்த்தன. பிறகு மறுபடியும் தங்களுடைய வேலையைப் பார்த்தன. திடிரென்று கரடிக்கு ஒரு யோசனை தோன்றியது.

இந்த விலங்குகள் முன்னால் வித்தை காட்டினால் என்ன? அவை உணவு கொடுக்கமாட்டார்களா என்ன?

உடனே உற்சாகமாகக் கரடி அந்த விலங்குகளுக்கு முன்னால் குட்டிக்கரணம் போட்டது.

தாவிக்குதித்தது.

கைகளைக் குவித்து வணக்கம் சொன்னது.

 நடனம் ஆடியது.

கயிற்றில் நடப்பது போல ஒரே நேர்கோட்டில் நடந்து காண்பித்தது.

பிறகு சுற்றிச் சுற்றிப் பார்த்தது. அலுமினியத்தட்டு ஞாபகம் வந்து விட்டது. எதுவும் இல்லை என்றதும் அப்படியே இரண்டு கைகளையும் விரித்து ஏந்திய படி அந்தக் குளத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.

ஒன்றும் புரியாமல் எல்லாவிலங்குகளும் கரடியைப் பார்த்தன. கரடி பரிதாபமாகப் பார்த்தது.

வயிறு ரொம்பப் பசித்தது.

அப்போது ஒரு குரங்கு மரத்திலிருந்து ஒரு மாம்பழத்தைக் கீழே போட்டது. கரடி தயக்கத்துடன் அந்த மாம்பழத்தை எடுத்து ஒரு கடி கடித்தது. அந்த ருசி அபாரமாக இருந்தது. உடனே நிமிர்ந்து குரங்கைப் பார்த்தது.

குரங்கு தாவித் தாவிச் சென்றது. கீழே தரையில் அதன் பின்னாலேயே போன கரடிக்கு ஒரு பாறையின் பொந்தில் பெரிய தேன்கூடு தெரிந்தது. தேன் கூட்டைப் பார்த்ததும் அதற்கு தன்னுடைய இயற்கையான குணங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன

பாய்ந்து சென்று தேன்கூட்டைப் பிய்த்து கைகளிலும் வாயிலும் வடிய வடியக் குடித்தது.

அப்போது தான் அதற்குத் தெரிந்தது தான் ஒரு கரடி என்று. தான் இந்தக் காட்டிலுள்ளவன் என்று உணர்ந்தது.

உடனே மகிழ்ச்சியில் காடே அதிரும்படி கரடி குரல் எழுப்பியது.

காடும் மகிழ்ச்சியில் அதிர்ந்து எதிரொலித்தது.

நன்றி - மாயாபஜார்