நடிப்புத்திலகம்
உதயசங்கர்
பழையனூர் காடு மிகவும்
பழமையானது. எவ்வளவு பழமையானது என்றால் முதன் முதலில் தோன்றிய பெரணிச் செடிகள் முதல்
ஓங்கி உயர்ந்து வளரும் தேவதாரு மரங்கள் வரை இருக்கின்ற காடு. அதே போல உலகத்தின் அத்தனை
வகையான விலங்குகளும் பறவைகளும் வசிக்கும் காடு.
அங்கே ஒரு அதிசயம் ஆண்டுதோறும்
நடக்கும்.
அது பழையனூர் காட்டின்
பிறந்த நாள்விழா. அன்று அந்தக் காட்டிலுள்ள எல்லாவிலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும்
புழுக்களும் பாம்புகளும் பல்லிகளும் எல்லாரும் ஒரு பெரிய மைதானத்தில் கூடி விடுவார்கள்.
பாட்டு, பேச்சு, நடனம்,
மாறுவேடம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி, கல்லா மண்ணா, கண்ணாமூச்சி,
ஓடிப்பிடித்து விளையாடுதல் என்று போட்டிகள் நடந்தன.
பாட்டுப்போட்டியில் யாரும்
எதிர்பார்க்கவில்லை.
காகம் வெற்றி பெற்றது.
நடனப்போட்டியில் மான் துள்ளிக்குதித்து
வெற்றிபெற்றது.
பேச்சுப்போட்டியில் எல்லாரும்
மைனா தான் வெற்றி பெறும் என்று நினைத்தார்கள். மைனா ஏழுகுரலில் பேசும். ஆனால் வெற்றி
பெற்றது யார் தெரியுமா?
தவிட்டுக்குருவி. அது ரேடியோ
ஜாக்கி மாதிரி கயமுய கயமுய என்று பேசி வெற்றி பெற்றது.
நீளம் தாண்டுதலில் ஆமை
வெற்றி பெற்றது.
உயரம் தாண்டுதலில் வெள்ளெலி
வெற்றி பெற்றது.
கபடியில் புலி டீமும் எலி
டீமும் போட்டி போட்டன. எலி டீம் மிகச்சுலபமாக வெற்றி பெற்றது.
கண்ணாம்மூச்சியில் யானை
ஒளிந்த இடத்தை யாராலும் கண்டே பிடிக்கமுடியவில்லை. யானையே வெற்றி பெற்றது.
இப்படி இந்த ஆண்டு யாரும்
எதிர்பார்க்காத விலங்குகளும் பறவைகளும் வெற்றி பெற்றன.
பழையனூர் காட்டில் வழக்கமான
உற்சாகத்தை விட இன்று மிகுந்த கொண்டாட்டமாக இருந்தது.
கடைசியாக மாறுவேடப்போட்டி.
மாறுவேடம் போட்டு வந்து நடிக்க வேண்டும்.
காட்டு ஆடு வந்தது. நீண்ட
தாடியுடன் அறிவியலறிஞர் டார்வினைப் போல நடித்தது. ஒவ்வொரு உயிரினத்தையும் ஆராய்ந்து
பரிணாமவளர்ச்சி பற்றிப் பேசியது.
சிட்டுக்குருவி வந்தது.
பறவையியலாளர் சாலிம் அலி போல வேடம் போட்டிருந்தது. கழுத்தில் ஒரு பைனாக்குலர் மாட்டிக்கொண்டு
ஒவ்வொரு பறவைகளைப் பற்றியும் பேசியது.
காற்றில் அங்கும் இங்கும்
பறந்து கொண்டே தாத்தாபூ வந்தது. தாவரவியலாளர் ஹம்போல்ட் என்றது. ஒவ்வொரு தாவரத்தையும்
ஆராய்ந்து தான் வைத்திருந்த குறிப்பேட்டில் பதிந்து கொண்டது.
பெண்புலி வந்தது. நான்
தான் இடவேலத் கக்கத் ஜானகியம்மாள் தாவரங்களின் பூக்களின் மரபணுவை ஆராய்ந்து மாற்றங்களைச்
செய்வேன் என்றது. கையில் வைத்திருந்த சிவப்பு நிறச் செம்பருத்திப் பூவின் நிறத்தை மஞ்சளாக
மாற்றிக் காட்டியது.
யாருக்குப் பரிசு கொடுப்பது
?
நடுவர் குழு தடுமாறின.
அப்போது ஒரு குரல் கேட்டது.
” அதுக்குள்ள
தீர்ப்பைச் சொன்னா எப்படி? என்னோட நடிப்பைப் பாருங்க..”
எல்லாரும் திரும்பிப்பார்த்தார்கள்.
எதுவும் தெரியவில்லை.
அப்போது மின்னு முயல் சொன்னது,
“ நடுவர்களே! . இங்கே ஒரு
ஹாக்னோஸ் பாம்பு செத்துக்கிடக்கு.. செத்து பல நாள் ஆகியிருக்கும் போல.. நாத்தம் குடலைப்
புடுங்குது..”
பார்த்தால் அங்கே ஒரு பாம்பு
மட்டமல்லாக்கப் படுத்துக் கிடந்தது. வாயைத் திறந்து நாக்கைத் தொங்கவிட்டபடி கிடந்தது.
உடம்பு விரைத்து அசையாமல் கிடந்தது. மூச்சு விடவில்லை.
அதைப் பார்த்த மயிலானுக்கு
ஆசை வந்தது. அருகில் போய் கொத்தித் திங்கலாம் என்று நினைத்தது.
ஐயே! பக்கத்தில் போக முடியவில்லை.
அப்படி ஒரு துர்நாற்றம். அப்படியே பின்னால் போய் விட்டது.
நடுவர்களும் மற்ற விலங்குகளும்
அந்த இடத்திலேயே இருக்கமுடியவில்லை. எல்லாரும் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
அந்த செத்த பாம்பு அப்படியே
கிடந்தது.
போட்டிகள் முடிந்து பரிசுகள்
எல்லாம் கொடுத்து எல்லாரும் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.
இரவாகி விட்டது. அப்போது
செத்தபாம்பு அசைந்தது.
.”
எப்படி
என் நடிப்பு நடுவர்களே! ” என்று கூவியது. உடலைத் திருப்பி கண்களைத்
திறந்தது அந்தப் பாம்பு.
யாரும்
இல்லை.
“
ஐயோ.. நான் எப்படி நடித்தேன்.. எனக்குத் தானே பரிசு கொடுக்க வெண்டும்.. இதை யாரும்
கேட்கமாட்டீர்களா? “
என்று
அழுதுகொண்டே மீண்டும் மல்லாக்க விழுந்து செத்தது போல நடிக்கத் தொடங்கியது அந்த நடிப்புத்திலகம்
ஹாக்னோஸ் பாம்பு.
அப்போது
மரத்தில் இருந்த ஆந்தை சொன்னது,
“
எதுவும் அளவோடு இருக்கணும்டா ஹாக்னோஸ்..”
நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
No comments:
Post a Comment