1. கலையும் அறிவியலும்
1.கலை என்பதே கட்டற்ற புனைவு தான். அது ஆராய்ந்து நிருபிக்கப்படுகிற உண்மையல்ல.
2. கலை மனதில் வினை புரிகிறது. அறிவில் அல்ல. எனவே கலையின் செயல்தளம் உணர்வுத்தளம் என்பதால் தான் கட்டற்ற புனைவுவெளியை உருவாக்க முடிகிறது.
3. நம்ப முடியாததையெல்லாம் நம்ப வைக்கிறது. நடக்க முடியாததையெல்லாம் நடக்க வைக்கிறது. அதீதத்தை யதார்த்தம் போலும் சித்தரிக்கிறது. ஆக கலை தனக்கான பிரபஞ்சத்தில் இந்த அண்டத்தையே கற்பனையாகவும் படைக்கிறது.
4. கலை யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டு புனைவாக படைப்பாளியின் நோக்கத்துக்காக கட்டமைக்கப்படுகிறது. எனவே தான் கலையில் உண்மை இருக்கலாம். ஆனால் கலையே உண்மை கிடையாது.
5. அப்படிப் பார்க்கும்போது சிறார் மனம் கட்டற்ற புனைவு வெளியில் சிறகடிப்பவை. பிறந்ததிலிருந்தே குழந்தைகளுக்கு இந்த உலகம் ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் தந்து கொண்டேயிருக்கிறது.
6. வளர வளரத்தான் அவர்கள் வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்கிறார்கள். உலகம் முழுவதும் சிறார் செவ்வியல் புனைவு நூல்களிலெல்லாம் விலங்குகள் மனித குணங்களுடனும், விசித்திர உருவங்களுடன் படைக்கப்பட்டிருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் படைப்புகளில் விலங்குகள் பேசுவதோ, மனிதர்களைப்போல குணபாவங்களைக் கொண்டிருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
7. ஆனால் விலங்குகளின் இயல்புகளிலிருந்து அவற்றை மாறுபடுத்திக் காட்டுவது உதாரணத்துக்கு பாம்பு ஞாபகம் வைத்திருந்து கொத்தும். பாம்புகளை வணங்கினால் அது நமக்கு ஆசீர்வாதம் தரும். வயதான பாம்புகள் நாகரத்தினம் தரும். என்பது போன்ற மூட நம்பிக்கைகளைச் சொல்வது குழந்தைகளிடம் பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
8. அத்துடன் கலையைத் தாண்டிய நடைமுறை அறிவுரைகளை உதாரணத்துக்கு முகமூடி அணியவேண்டும், ஹெல்மெட் போட வேண்டும், என்கிற மாதிரியான படைப்புகளும் குழந்தைகளுக்கானதில்லை
9.. எனவே புனைவுகளில் விலங்குகள் மனித குணங்களைப் பிரதிபலிக்கலாம். அதன் நோக்கங்கள் முக்கியமானவை என்று நினைக்கிறேன்.
10. ஒவ்வொரு விலங்கும் தன்னுடைய இருத்தலுக்காக தனித்துவமான நிறம், மணம்,குணம், ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இந்த தனித்துவமே அவற்றின் வாழ்வதற்கான போராட்டத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இதற்கு மனிதகுணங்களை ஏற்றிச்சொல்வது என்பது உடன்பாடானதில்லை.
11. உயிரியல் பற்றிய அறிவியல் வளர்வதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது பஞ்சதந்திரக்கதைகள் ( Fables ) தோன்றிய காலத்திலிருந்தே உலகம் முழுவதும் இப்படியான கதைகளும் கருத்துகளும் பொதுப்புத்தியில் உறைந்து விட்டன. இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் இத்தகைய கதைகளின் கருத்துத்தளம் கேள்விக்குரியது தான்.
12. ஆனால் விலங்குகளின் உண்மையான இயல்போடு புனைகதைகளில் எழுதுவது ஒரு சவாலாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். புனைவின் எல்லையிலிருந்து அறிவியலின் எல்லைக்குள் புகுந்துவிடும் சாத்தியங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது. அதனால் புனைவின் ரசனை குறைந்துவிடும் அபாயமும் ஏற்படும்.
13. அறிவியல் புனைகதைகளில் விலங்குகளைப்பற்றி இயல்பாக எழுதலாம். அதற்கு முன்னுதாரணங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
14. புதிய சவால்களை சிறார் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.
ஆம்! புனைவியல் குறைந்துள்ளது, உண்மை தான் ஐயா. சிறார்கள், சுயமாகச் சிந்திக்கும் திறனும் கற்பனைத் திறனும் வற்றிப் போகின்ற நிலைக்குத் தள்ளுகின்றன, இன்றைய ஊடகங்கள்!சிறார் எழுத்தாளர்களுக்குச் சவால் தான்!
ReplyDeleteசிறந்த பதிவு
ReplyDelete