கலையெனும் மாயாஜாலம்
1. கலை என்பதின் தனித்துவமான அடிப்படையான மற்றும் சாராம்சமான விடயம் அதன் மாயாஜாலம் எனலாம்
2. கலை தன்னை கலையாக வெளிப்படுத்துவதற்கான சாராம்சம் எதுவோ அதுவே அதனை கலையாக வெளிப்படுத்துகிறது.
3. அறிவுத்துறைகள் சார்ந்த ஆய்வுகள் கலையின் இடத்தை ஒருபோதும் பிடிக்க முடியவில்லை எனில் கலை மனிதனுடைய அடிப்படையான பண்புகளில் ஒன்றாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
4. கலை ஒன்றே மனிதனுடைய மனதில் ஊடாடுகிறது தன்னுடைய மாயத்தினால் கலை மனித மனதை பண்படுத்துகிறது இசைவுக்குள்ளாக்குகிறது வசப்படுத்துகிறது ஒருவகையில் அடிமைப்படுத்துகிறது மேலாண்மை செலுத்துகிறது அதனால் தான் கலை காலம் கடந்தும் மனித மனதை ஆட்கொள்கிறது
5. புராணங்களும் இதிகாசங்களும் கட்டுக்கதைகளும் புதிய புதிய அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கட்டமைக்கின்றன. மனித மனம் அடிப்படையில் உணர்வு நிலையிலையே இருப்பதினால் அவர்கள் இந்த கட்டுக் கதைகளை நம்ப விரும்புகிறார்கள், நம்புகிறார்கள். அந்தகலையின் பின்னால் இருக்கக்கூடிய ஆதிக்கத்தையோ ஏதேச்சதிகாரத்தையோ அதன் ஆபத்தான விளைவுகளையும் உணர்வதில்லை.
6. கலை பிரச்சாரத்திற்கான தொடர்பாடலுக்கான ஒரு கருவிதான். கலையில் அரசியல் இருக்கலாம் அறிவியல் இருக்கலாம் தத்துவம் இருக்கலாம் அறிவுரை இருக்கலாம் நன்னெறி இருக்கலாம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
7.ஆனால் வெறும் அரசியலோ தத்துவமோ அறிவியலோ அறிவுரைகளோ நன்னெறிகளோ கலையாகி விட முடியாது. அதாவது கலை பிரச்சாரம்தான் ஆனால் பிரச்சாரமெல்லாம் கலையாக முடியாது.
8.கலைக்கும் பிரச்சாரத்திற்கும் நடுவில் ஊடாடுகிற மாயாஜாலத்தையே மந்திர வித்தைகளையே, அறிவியல் பூர்வமான பயிற்சிகளின் மூலம் எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் .
9.கலை மற்றும் எந்தத் துறைகளுக்கும் இல்லாத அளவிற்கு தனக்கென தனித்துவமான கச்சா பொருட்களை கொண்டிருக்கிறது. மொழியின் சொற்களாக, நிறங்களாக
மரமாக கல்லாக தன் உடலாக பாவனையாக, மனிதனுடைய
அறிவின் எல்லைகள் விரிந்து கொண்டே இருப்பதைப் போல கலையை உருவாக்குகிற கச்சா பொருள்களின் பரப்பும் விரிந்து கொண்டே இருக்கின்றது.
10. அந்த கச்சாப்பொருட்கள் அனைவருக்கும் பொதுவானவை தான். ஆனால்
அவற்றை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்களுடைய படைப்பூக்கத்தின் வழியாக கலையாக மாற்றும் போது அது மானுட சமூகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
11. மனித மனதை தன் வசப்படுத்துவது என்பது அத்தனை எளிதானதில்லை. எனவே தான் கலையை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். எந்த
இடத்திலும் சுய திருப்தியோ நிறைவோ போதும் என்ற மனநிலையோ இன்றி தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு துறை கலை.
12. கலை படைப்புகளை காலம் கடந்தும் நிலை நிறுத்துவதற்கு எழுத்தாளர்களிடமிருந்து அவர்களுடைய அர்ப்பணிப்பை கோருகிறது பெரியவர்களுக்கான கலை இலக்கியமாக இருந்தாலும் சரி சிறார்களுக்கான கலை இலக்கியமாக இருந்தாலும் சரி அத்தகைய அர்ப்பணிப்பை தருவதற்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் முன் வர வேண்டும் அதற்காக அவர்கள் முழு மனதுடன் உழைக்க வேண்டும்.
13. அப்போதுதான் பழைய கட்டுக்கதைகளின் வழியாக மனித சமத்துவத்தை மறுக்கின்ற சமூகக்கட்டமைப்பை மாற்றுவதற்கு எதிர்க்கட்டுக்கதைகளை எழுத்தாளர்களாலும் கலைஞர்களாலும் உருவாக்க முடியும்.
14. உன்னதமான கலை எளிமையாக இருக்கும். ஆனால்
எளிமையானதெல்லாம் கலையாகி விடாது.
No comments:
Post a Comment