Tuesday, 20 October 2026

கலை எனும் உயிரி

 ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 10

கலை எனும் உயிரி

உதயசங்கர்



கலை மனித மூளையின் ஒரு செயல்பாடு தானென்ற போதிலும் மற்ற செயல்பாடுகளை விட படைப்பாளியின் முழுமையான அர்ப்பணிப்பை கோருகிறச் செயல்பாடாக இருக்கிறது. இயந்திரங்களால் செய்யப்படும் கலைப்படைப்புகளைத் தவிர மனிதமுயற்சியில் உருவாகும் ஒவ்வொரு படைப்புக்கும் இது பொருந்தும். அது ஒரு நாற்காலி செய்வதாக இருக்கலாம். நகை செய்வதாக இருக்கலாம். ஒரு கதை எழுதுவதாக இருக்கலாம். ஒரு ஓவியம் வரைவதாக இருக்கலாம். ஒரு படைப்பாளி ஒரு படைப்பை யதார்த்தமாக உருவாக்குமுன்னர் அந்தப் படைப்பைத் தன் கற்பனையில் காண்கிறான். கற்பனையில் கண்ட படைப்பையே யதார்த்தத்தில் உருவாக்க முயற்சிக்கிறான். இது தான் மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்குமுள்ள வேறுபாடு. மற்ற உயிரினங்கள் தங்களுடைய மரபணுவில் பெற்ற உயிரியல் உள்ளுணர்வால் தன்னிச்சையாகச் செய்கின்றன. தேனீக்கள் கூடு கட்டுவதோ பறவைகள் விதவிதமாக க்கூடுகள் அமைப்பதோ விலங்குகளின் இருப்பிடங்களைத் தேர்வு செய்வதோ எல்லாமே உள்ளுணர்வில் பதிவு செய்யப் பட்டவை.

ஒருபோதும் அவை தாங்கள் உருவாக்கும் படைப்புகளைக் கற்பனை செய்து பார்ப்பதில்லை. கற்பனை என்பது மனிதமூளையின் சிறப்பம்சம். கற்பனைக்கு அடிப்படை யதார்த்த த்தையும் தன்னையும் பிரித்துப் பார்க்கும் உணர்வு. அப்படிப் பிரித்துப் பார்க்கும்போதே யதார்த்தம் பற்றிய அறிவு கிடைக்கிறது. யதார்த்தத்தைப் போலச் செய்ய முடிகிறது. யதார்த்தத்தை ஆராய்ந்து புதிதாய் படைக்க முடிகிறது. யதார்த்தத்தை வெவ்வேறு கோணங்களில் மாற்றி யோசிக்க முடிகிறது. அதனாலேயே மிக மலினமான, குறைபாடுடைய படைப்பாக இருந்தாலும் மனிதப் படைப்பு உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம் அதில் மனிதனின் தன்னுணர்வு மிக்கக் கற்பனை இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவினால் மிகச் சிறந்த ஓவியத்தைத் தரமுடியலாம். ஆனால் ஒரு குழந்தையின் ஒரு கிறுக்கலுக்கு முன்னால் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. ஒரு குழந்தை கிறுக்கும்போதே தன்னை வெளிப்படுத்துகிறது. தன்னிடமிருந்து விலகி தன்னை வெளிப்படுத்தும் நிலை வேறெந்த உயிர்களுக்கும் கிடையாது. அதனால் உயிரற்ற செயற்கை நுண்ணறிவை விட உயிருள்ள கிறுக்கலில் மனிதமாண்பு இருக்கிறதெனச் சொல்லலாம். 

ஒரு படைப்பு படைக்கப்பட்ட பிறகு அது தனித்துவமான உயிருள்ள பிறவியாக மாறிவிடுகிறது. அது வளர்கிறது. தேய்கிறது. முதுமையடைகிறது. பிறகு அதன் வேலை முடிந்த பிறகு அல்லது சமூகத்துக்குத் தேவையில்லாத போது மெல்ல மறைந்து போகிறது. இது தான் இயற்கையான செயல்பாடு.

ஏனெனில் கலையும் சமூகத்தில் ஒரு யதார்த்தம். சமூகம் தன்னுடைய தேவைக்காகவே கலைஞனை உருவாக்குகிறது. கலைஞனும் சமூகத்தின் தேவையைப் புரிந்து அதற்கேற்பவே படைப்புகளைப் படைக்கிறான். யோசித்துப் பாருங்கள். முப்பது வருடங்களாக மீண்டும் புத்துயிர் பெற்ற வலதுசாரிக்கருத்தியலின் சமூகச்செல்வாக்கே அதற்குத் தேவையான கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதிகாச புராணங்களின் நவீன எழுச்சி தொடங்கி ஜெயமோகன் வரை என்று கூடச் சொல்லலாம். வலதுசாரிக் கருத்தியல் நவீன கால வளர்ச்சிக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்கிறது. தன்னுடைய ஒப்பனைகளை மாற்றி பலவிதமாக அவதாரங்களை எடுக்கிறது. பழைய மூட நம்பிக்கைகளுக்குப் புதிய அறிவியல் விளக்கங்கள் கொடுக்கிறது. எலைட் ஆன்மீக வேடம் தரிக்கிறது. மதம் கடந்த ஆன்மீகமென்று நாமகரணம் சூட்டிக் கொள்கிறது. இலக்கிய அனுபூதியென விபூதியடிக்கிறது. மூடநம்பிக்கைகளைப் புதுப்பிக்கக் குறளிவித்தை காட்டுகிறது.

ஆனால் அனைத்து முகமூடிகளுக்கும் பின்னால் சுரண்டலின் கொடூரப்பற்கள் மறைந்திருப்பதைக் கூருணர்வுள்ள வாசகரால் கண்டுணர முடியும்.

காலத்தின் தேவையை நிறைவேற்ற சமூகத்துக்கு கலைஞன் என்ற மந்திரவாதி தேவைப்படுகிறான். அவன் தான் அந்தச் சமூகத்தின் மனசாட்சியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கிறான். அவன் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தன்னுடைய ஊனையும் உயிரையும் உருக்கி உருவாக்கும் படைப்பின் வலிமை அந்தச் சமூகத்தையே வசியப்படுத்தி விடும் ஆற்றல் படைத்தது.

“ ஒரு படைப்பின் மிகச் சிறந்த செயல் எதுவென்றால் அது உங்கள் மனதை  எடுத்துக் கொண்டு போய்விடுவது தான்.  “

என்று இந்த ஆண்டு நோபல் விருது பெற்ற எழுத்தாளர் ஆன்னி கார்சன் சொல்கிறார். அத்தகைய படைப்பு தனி உயிரியாக, ரத்தமும் சதையுமுள்ள வடிவப்பொலிவும் உயிர்த்துடிப்புமிக்கதாக தனித்துவமான குணாதிசயங்கள் கொண்டதாக, வாழத் தொடங்கும்.

கலைஞன் மட்டுமே சாதாரணத்திலிருக்கும் அசாதாரணத்தைக் கண்டுபிடிக்கிறான். மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாத உண்மைகளைக் கண்டு அதை ஆதாரபூர்வமாக தன் படைப்பில் முன்வைக்கிறான். சமூகத்தின் பொதுப்புத்தியில் தலையீடு செய்கிறான். அதன் முந்தைய மதிப்பீடுகளின் மீது கேள்விகளை எழுப்புகிறது. புதிய மதிப்பீடுகளை, லட்சிய முன்மாதிரிகளை உருவாக்குகிறான். சமூகத்தின் பழைய தோலை உரிக்கிறான். அதன் உடலில் இருக்கும் காயங்களுக்கு மருந்திடுகிறான். தேவைப்பட்டால் அறுவைச்சிகிச்சையும் செய்கிறான். இது சாதாரணமாகச் செய்து விட முடியாது. வழக்கமான அறநெறிக் கோட்பாடுகளையோ அரசியல் கோட்பாடுகளையோ படைப்புகளில் ஒப்பிப்பதால் நடக்காதென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகத்தைக் கற்றுக் கொண்டேயிருக்கவேண்டும். சமூகத்திடமிருந்து கற்றுக் கொண்டதைச் சமூகத்துக்குத் திருப்பியளிக்கும்போது புதிதாக இருக்கவேண்டும். ஒரு துரும்பளவாவது சமூகத்துக்கும் இலக்கியத்துக்கும் வளம் சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு படைப்பாளியும் கலையில் உழைக்க வேண்டும். அப்போது அவனுடைய படைப்புகளுக்குத் தனித்துவமான உயிரியல்புகள் தோன்றும்.   அந்தப் படைப்புகள் தனி உயிரிகளாக வாழும். .

 நன்றி - புக் டே.

No comments:

Post a Comment