Saturday, 10 October 2026

கலையும் யதார்த்தமும்

 

 

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 7

கலையும் யதார்த்தமும்

உதயசங்கர்



கலை யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும் அல்லது யதார்த்த்தைப் பிரதிபலிப்பதே கலை என்று கோட்பாட்டு ரீதியாகச் சொல்லப்படுவதுண்டு. யதார்த்தம் என்றால் என்ன? வெறும் புறவயமான உலகைப் பற்றிய சித்தரிப்புகளா? நடைமுறை வாழ்க்கையில் நடைமுறை அனுபவங்களை அப்படியே சொல்வதா? உள்ளதை உள்ளபடியே சொல்வதா? ஜெராக்ஸ் எடுப்பதைப் போல பதிவு செய்வதா? புகைப்படக்காட்சியாக மாற்றுவதா? எது யதார்த்தம்?

சாதாரணப்பொருளில் யதார்த்தம் என்ற வார்த்தைக்கு அப்படியே சொல்வது, புற உலகை அச்சாகப் பதிவு செய்வது என்று சொல்லலாம். ஆனால் கலையில் யதார்த்தம் என்ற வார்த்தை இன்னும் ஆழமான பொருளில் தொழில்படும். யதார்த்தம் என்பது சமூகத்தின் வெளிப்புறத் தோற்றமல்ல. அதன் உள்ளார்ந்த இயக்கம். சமூகத்தின் இயக்கவியல். என்பது ஒரு சமூகம் என்னென்ன சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுக்காரணிகளில் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அவற்றின் பிரதிபலிப்பு என்று சொல்லலாம். கலையின் வளர்ச்சியும் அந்த ந்தக் காலகட்ட த்தின் சமூகப்பொருளாதாரச் சூழலை அடிப்படையாகக் கொண்டது..

ஆதிப்பொதுவுடமைக்காலத்திற்குப் பிறகு இன்று வரை மனிதகுல வரலாற்றில் சமநிலையற்ற சமூக இயக்கமே நிலவிவருகிறது. சமநிலையற்ற இந்த இயக்கத்துக்கு  அதன் பொருளாதாரக்காரணிகளே காரணமாகவும் இருக்கின்றன. அதனால் தான் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமிடையில் சமநிலை இருப்பதில்லை. சமநிலையற்ற சமூகத்தின் சமநிலையைப் பேணுகிற பணியைக் கலை செய்கிறது. ஏற்றத்தாழ்வுகளின் உண்மையான நிலையைக் கலை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. ஏற்றத்தாழ்வுகளுக்கெதிராக உணர்வூட்டுகிறது. சில சமயம் ஒரு லட்சியச்சமநிலையை முன்மாதிரியாகக் கலைப்படைப்பில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.  எனவே தான் கலை மனித சமூகத்திற்கு என்றென்றும் தேவைப்படுகிறது.

அப்படியென்றால் வெறுமனே நடந்ததையெல்லாம் சொல்வதல்ல கலை அல்லது நடப்பதையெல்லாம் சொல்வதல்ல கலை. யதார்த்திலிருந்து காத்திரமான அனுபவத்தைத் தேர்ந்தெடுக்கும் ஞானம் கலைஞனுக்குத் தேவைப்படுகிறது. அந்த அனுபவத்தை வெளிப்படுத்தும்போது தன்னுடைய சமூக அறிவினால் பகுத்தாராய்ந்து அதைக் கட்டமைக்கும் பெரும்பணி கலைஞனுக்கு இருக்கிறது. செகாவின் பச்சோந்தி கதையில் வரும் சம்பவம் வெறும் சம்பவமல்ல. அதன்வழியே அன்றைய ருஷ்ய சமூகத்தில் நிலவிய அதிகார வர்க்கத்தைத் தோலுரித்துக் காட்டுகிற கதை. கலைஞன் எப்போதுமோ அல்லது ஒவ்வொரு கதையிலுமோ தான் யார் என்பதையோ, யார் பக்கம் நிற்கிறேனென்பதையோ உரத்துச் சொல்லவேண்டியதில்லை.

ஏங்கெல்ஸ் மார்க்ரெட் ஹர்க்னஸ் என்ற எழுத்தாளருக்கு எழுதிய கடிதத்தில்,

“ ஒரு கலைப்படைப்பு என்பது எழுத்தாளரின் அரசியல் அல்லது தனிப்பட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யும் கருவியாக மட்டும் இருக்கக் கூடாது. அது சமூகத்தின் எதார்த்த நிலையைப் பிரதிபலிக்கவேண்டும். ஆசிரியரின் சொந்தக் கருத்துகள் எவ்வளவுக்கெவ்வளவு மறைந்திருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறந்த கலைப்படைப்பாக மாறும் “ என்று சொல்வதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு கலைஞனும் அவன் காலத்தில் நிலவுகிற சமூக யதார்த்த த்தை ஆழமாக க் கற்றுத் தேற வேண்டும். பிரெஞ்சு எழுத்தாளர். பால்சாக் அவருடைய சொந்தக் கொள்கைகளுக்கெதிராகவே அக்காலத்தில் நிலவிய பிரபுத்துவச் சீரழிவுகளைத் தன்னுடைய படைப்புகளில் சித்தரித்தார். மாயமான் நாவலில் பாரீஸ் நகரத்துப் பிரபுக்களின் சீரழிந்த வாழ்க்கையை விவரிப்பதின் மூலம் கலையின் இலட்சியமான உண்மையைத் தேடி கண்டடைந்தார்.

புதுமைப்பித்தன், பொன்னகரம் கதையில் சமூக அவலத்தை உரத்த குரலில் பேசுகிறபோதே, கல்யாணி கதையில் வேறு ஒரு லட்சியமாதிரியை முன்வைக்கிறார். சாபவிமோசனம் கதையில் அகலிகையின் பார்வையில் முதலில் தெய்வப்பிறவியாகப் பிரசன்னமாகும் ராமர் அகலிகை சீதையுடன் உரையாடிய பிறகு சாதாரண ராமனாக மாறுவதின் மூலம் அகலிகையின் பார்வை மாற்றத்தை நுட்பமாக ஒரு எழுத்து மாற்றத்தில் முன்வைக்கிறார் புதுமைப்பித்தன். அது அகலிகையின் பார்வை மட்டுமல்லயென்பதை கூர்ந்த வாசகர் புரிந்து கொள்வார்.

தான் மிகப்பெரும் நிழக்கிழாராக இருந்தபோதும் தன் பண்ணைகளில் வேலை செய்யும் விவசாயிகளின் துயரவாழ்க்கையை உள்ளார்ந்து உணர்ந்து தன்னுடைய புத்துயிர்ப்பு நாவலில் எழுதினார் டால்ஸ்டாய். அதனால் தான் லெனின் ருஷ்ய விவசாயிகளின் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பை வாசிக்கவேண்டுமென்றார்.

கார்க்கியின் தாய் நாவல் அப்போது நிலவிய ஜார் மன்னரின் கொடுங்கோலாட்சிக்கெதிராக தொழிலாளி வர்க்கமும் விவசாயி வர்க்கமும் தீவிரமானப் போராட்டங்களை நட த்திக் கொண்டிருந்த சமூக யதார்த்த த்தைத் துல்லியமாகப் படம் பிடித்ததாலே தாய் என்ற இலக்கியப்பிரதி ஒரு பௌதீக சக்தியாக மாறியது. ருஷ்ய தேசிய உணர்வைப் பிரதிபலிக்கும் படைப்புகளினால் தாஸ்தயேவ்ஸ்கி அவர் காலத்திலும் பின்னர் இரண்டாம் உலக யுத்த காலத்திலும் திரும்பத் திரும்ப  வாசிக்கப்பட்டார். முதலாளித்துவ சமூக யதார்த்தமான படைப்புக்கும் படைப்பாளிக்குமிடையில், உழைப்புக்கும் உழைப்பாளிகளுக்குமிடையில் உருவாக்கப்பட்ட அந்நியமாதலை ஆழமாக உணர்த்தியதாலேயே காஃப்காவின் உருமாற்றம் இன்றும் வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இன்னும் அந்துவான் எக்ஸுபரியின் குட்டி இளவரசன் நாவலில் இரண்டாம் உலக யுத்தகாலத்தில் நிலவிய சமூக யதார்த்தத்தை குறியீடுகளாகச் சொல்லியிருப்பதாலேயே இன்னமும் வாசிக்கும்போது புத்தம் புதிதாக இருக்கிறது.

உலகின் செவ்வியல் படைப்புகளில் யதார்த்தமென்பது சமூகத்தை ஊடறுத்து அதன் அடுக்குகளில் அனைத்து வர்க்கத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகப் படைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். கலையில் யதார்த்தம் என்பது யதார்த்த உலகின் சாராம்சத்தைக் கலாப்பூர்வமாகச் சொல்வதெனப் புரிந்து கொள்ளலாம்.  

 

 நன்றி - புக் டே

No comments:

Post a Comment