Showing posts with label தாஸ்தயேவ்ஸ்கி. Show all posts
Showing posts with label தாஸ்தயேவ்ஸ்கி. Show all posts

Saturday, 22 February 2025

பெதோஸ்யா, எங்கள் மதிப்புக்குரியவரே,

 

 

பெதோஸ்யா, எங்கள் மதிப்புக்குரியவரே, இன்னும் கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரியுங்கள்!

உதயசங்கர்



இன்று அன்னாவிடம் தன்னுடைய காதலைத் தெரிவித்து விட்டார் எங்கள் பிரியத்துக்குரிய தாஸ்தயேவ்ஸ்கி.

பெதோஸ்யா! எங்கள் மதிப்புக்குரியவரே! சீக்கிரம்.. சமையலறைக்குச் சென்று தாஸ்தயேவ்ஸ்கிக்கு மிகவும் பிடித்த கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரியுங்கள்! நாம் எல்லோரும் அருந்துவோம்.

சற்றுப் பொறுங்கள்! என்று சைகை செய்வது புரிகிறது. அந்தக் காட்சியிலிருந்து இன்னும் நீங்கள் வெளியே வரவில்லை. உங்களுடைய சொந்த மகனின் வாழ்வில் போல கிடைத்த நற்பேறான கணங்களைத் தரிசிக்க விரும்பினீர்கள் இல்லையா? புரிந்து கொள்கிறேன்.

தாஸ்தயேவ்ஸ்கி எப்போதும் உட்கார்ந்து எழுதும் நாற்காலியில் அன்னா உட்கார்ந்திருந்தார். தாஸ்தயேவ்ஸ்கி அன்னாவின் முகத்தைப் பார்க்கவில்லை. முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் அன்னா அறைக்குள் வந்ததிலிருந்து புகைக்கும் ஐந்தாவது சிகரெட். அன்னா வருவதற்கு முன்பு அவர் புகைத்துப் போட்ட சிகரெட்டுத் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அறைக்குள் சிகரெட் புகையிலை நாற்றம். பொதுவாக தீவிர்மாக எழுதும்போது மட்டும் தான் தாஸ்தயேவ்ஸ்கி அவ்வளவு சிகரெட்டுகளைப் புகைப்பார். அவர் எழுதும் நாவலின் சம்பங்களிலும் கதாபாத்திரங்களிலும் ஆழ்ந்து போய் விடுவார். சில நேரம் கோபமாகப் பேசுவார். அழுவதைப் போல முகம் கோணும். உறுமுவார். யாரையோ திட்டித்தீர்ப்ப்பார். சிரிப்பார்.

1866 – ஆம் ஆண்டு எழுத்தாளர்களைச் சுரண்டிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் எல்லாப்பதிப்பாளர்களையும் போல டெல்லோவ்ஸ்கி என்ற வஞ்சகமான பதிப்பாளரும் தாஸ்தயேவ்ஸ்கியின் அவரசத்தைத் தெரிந்து கொண்டு அவருக்குப் பண உதவிச் செய்வது போல செய்து வேண்டுமென்றே சாதாரணமாகச் செய்யமுடியாத சில நிபந்தனைகளை விதித்தான். ஒரு மாத காலத்துக்குள் ஒரு நாவலை எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க முடியாவிட்டால் அந்த நாவலுக்கான உரிமை மட்டுமல்ல: அவருடைய மொத்தப்படைப்புகளின் உரிமையையும் அவனுக்கு எழுதித் தரவேண்டும்.

பாவம்! தாஸ்தயேவ்ஸ்கி.. என்ன செய்வார்? அந்த ஏற்பாட்டுக்கு சம்மதித்தார்.

நாவல் எழுதும்பணிக்காகத் தான் சுருக்கெழுத்து தெரிந்த அன்னாவை அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் முறையாகச் சந்திக்கிறார். அப்போதெல்லாம் அவருடைய மனதில் வேறெந்த சிந்தனைகளுமில்லை. நாவலை முடித்துக் கொடுத்து அவருடைய படைப்புகளைக் காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

அக் 4 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை இருபத்தியாறு நாட்களில் சூதாடி நாவல் முடிந்தது. அதன் பிறகு அன்னாவை நவம்பர் மூன்றாம் தேதி தான் சந்திக்கிறார். இப்போது அறை ஒழுங்கில்லாமல் கலைந்து கிடந்தது. படுக்கையிலுறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அடையாளங்கள் தெரிந்தன. தாஸ்தயேவ்ஸ்கியின் முகத்தைப் பார்க்க்க வேண்டுமே. நாற்பந்தைந்து வயது மனிதரைப் போலவா தெரிந்தார். வாழ்க்கையில் மரணத்தின் விளிம்புவரை சென்று, வாழ்வின் அனைத்துத் துயரங்களையும் அனுபவித்த, ஆன்மாவில் காயங்களினால் ஏற்பட்ட தளர்ந்த பலவீனமான இதயத்தைக் கொண்டவராகவா தெரிந்தார். இருபந்தைந்து வயதில் வாழ்வின் வசந்தத்தை அள்ளியள்ளைப் பருகத்துடிக்கும் ஒரு வலிமை மிக்க இளைஞனாக அல்லவா தெரிந்தார்.

அந்த அறையில் அவரையும் அன்னாவையும் தவிர வேறு யாரும் இல்லை என்று தாஸ்தயேவ்ஸ்கி நினைத்திருந்தாரில்லையா? காதலிக்கும் போது எல்லோருக்கும் அப்படித்தானே எண்ணத்தோன்றும். அவர்களிருவரையும் தவிர இந்த உலகத்தில் யாருமே இல்லை. ஏன் உலகமே இல்லை என்று கூடத் தொன்றும். அப்படித்தான் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் எத்தனையோ காதல்களைச் சந்தித்துக் கடந்திருந்தாலும், ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்வதென்பது லேசான காரியமா? அப்போது தோன்றும் உணர்ச்சிச்சுழிப்புகளை எந்த எழுத்தாளராலும் எழுதி விட முடியுமா? முகத்தில் ரத்தம் பாய்ந்து சிவந்து எதிர்கொள்ளப்போவது ஆனந்தத்தையா அவமானத்தையா என்று தெரியாமல் மரணத்தின் முன்னால் கையாலாகாமல் நிற்பதைப் போன்றல்லவா நின்று கொண்டிருந்தார் எங்கள் அருமை தாஸ்தயேவ்ஸ்கி.

 முகத்தில் வழியும் அசட்டுத்தனத்தை மறைக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியவில்லை. எத்தனையோ பெண்களைச் சந்தித்தவர் தான். சூதாடியில் வரும் பொலீனாவுக்காக சூதாட்டவெறியில் ஒரு போதும் மீளமுடியாதபடி வீழ்ந்தவர் தான். ஆனால் இப்போது அந்தச் சின்னஞ்சிறுபெண், அவரை விட இருபத்தைந்து வயது குறைந்த, வசந்தத்தின் வாசலில் நின்று கொண்ட ஒளிவீசும் எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் சொல்லும்போது ஏன் இந்தத் தடுமாற்றம்? ஏன் இந்தத் தயக்கம்? குரலில் ஏன் நடுக்கம்?

“ தைரியமாகச் சொல்லுங்கள் தாஸ்தயேவ்ஸ்கி! இது தான் சமயம்.. இவள் தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்ட உண்மையான காதல்.. தைரியமாகச் சொல்லுங்கள் தாஸ்தயேவ்ஸ்கி “ என்று அறையின் வாசலில் ஓரமாக இப்படித்தான் நடக்கும் என்று முன்னுணர்ந்தவராக தாஸ்தயேவ்ஸ்கியை உள்ளும்புறமும் அறிந்த பெதோஸ்யா நின்று மானசீகமாக வேண்டிக் கொண்டிருந்தார். அவர் அப்படி நின்று கொண்டிருப்பது தாஸ்தயேவ்ஸ்கிக்குத் தெரியாது. அன்னாவுக்கும் தெரியாது.

உங்களுக்கு மட்டும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். ஆமாம. பெதோஸ்யாவுக்குப் பின்னால் நிழலாய் ஒரு உருவத்தைப் பார்த்தீர்களா? இந்த அமர கணத்தை எதிர்காலத்தில் ஒரு சங்கீர்த்தனம் போல என்ற நாவலாக எழுதி மலையாள இலக்கியத்தில் சாதனை படைக்கப்போகும் பெரும்படவம் ஸ்ரீதரன் தான் அது.

ஏன் பெதோஸ்யாவின் கண்களில் கண்ணீர் கரை புரண்ட ஓடுகிறது? தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஏதாவது அற்புதம் நிகழ்ந்து விடாதா என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கும் பெதோஸ்யாவுக்கு இதை விட ஆனந்தம் இருக்கிறதா என்ன? எப்போதும் கெட்டியான தேநீர் தயாரித்துக் கொடுக்கும் வேலைக்காரி மட்டுமல்ல. சமையல்காரி மட்டுமல்ல. தாஸ்தயேவ்ஸ்கியின் ஒவ்வொரு அசைவுக்கும் தெரிந்தவர். அவருடைய இருமலுக்கும் செருமலுக்கும் கோபத்துக்கும், மகிழ்ச்சிக்கும், என்ன காரணம் என்று தெரியும்.

அவ்வளவு ஏன் ? சிறுவயது முதலே தாஸ்தயேவ்ஸ்கியைத் துன்புறுத்தும் அந்தப் பரவச வலிப்பு நோய் எப்போது வரும்? என்பதைக் கூட அறிந்தவர் தான் பெதோஸ்யா. தாஸ்தயேவ்ஸ்கி நேரிடையாகச் சொல்லவில்லை. அடுத்த நாவலுக்கான கதைச்சுருக்கத்தைச் சொல்வதைப் போலச் சொன்னார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் உள்ளுக்குள் அன்னாவின் இதயம் துடித்தது. உணர்ச்சியால் கொந்தளித்தது. உடலில் ஒரு பரவசம் தோன்றி மறைந்தது. ஆனாலும் அன்னா தாஸ்தயேவ்ஸ்கியைப் போல உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவரல்ல. அமைதியாக இருந்தார். இன்று இப்போது இந்த அறையில் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் அவருக்கு அர்த்தம் தெரிந்தாலும் தாஸ்தயேவ்ஸ்கியின் வாயினால் அதைச் சொல்லவேண்டுமென்று நினைத்தார். அந்த வார்த்தைகளுக்காகவே அமைதி காத்தார்.

தாஸ்தயேவ்ஸ்கி சொல்லியே விட்டார்.

“ அந்த ஓவியன் நான் தான் என்று நினைத்துக் கொள். நான் உன்னிடம் என் காதலைச் சொல்லவும் செய்கிறேன். நீ வாழ்வு முழுவதும் என்னுடன் இருப்பாயா? சொல். உன் பதில் என்னவாக இருக்கும்? “

“ என் பதில் இதுவாக இருக்கும். நான் உங்களை நேசிப்பேன். அந்த நேசம் வாழ்வின் முடிவு வரை நிலைத்திருக்கும்..”

அதன்பிறகு என்ன நடந்திருக்குமென்பதைச் சொல்ல முடியுமா? தாஸ்தயேவ்ஸ்கியின் கண்கள் கசிந்தன. அன்னா தன் மகிழ்ச்சியை மறைக்க முகத்தை மூடிக் கொண்டாள். அறை வாசலில் நின்ற பெதோஸ்யாவுக்குத் தன் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை. பின்னால் இலக்கியச்சாட்சியாக நின்ற பெரும்படவம் ஸ்ரீதரன்.

அட! அவர் கண்களிலும் கண்ணீர் ஒடுகிறது.

அந்தக் கணத்தில் ஒரு சங்கீர்த்தனம் போல என்ற நாவலின் களம் முடிவாகி விட்டது. மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுக் கொண்டிருக்கும் அந்தப் புகழ்பெற்ற நாவலை எழுத முடிவு செய்கிறார். அதற்கு அன்னா தன்னுடைய நாட்குறிப்புகளின் வழியே வழி நடத்துகிறார். இது தான் இலக்கியத்தின் அற்புதம்!

அன்னாவும் தாஸ்தயேவ்ஸ்கியும் சந்தித்த முதல்நாள் முதல் அவர்கள் தங்களுக்குள் காதலைப் பரிமாறிக் கொண்ட கடைசிநாள் வரையிலான கதையைச் சொல்வதென்று முடிவு செய்கிறார் பெரும்படவம். எழுதத்தொடங்கிய நாள் முதல் நாவல் முடியும்வரை ஏதோ தாஸ்தயேவ்ஸ்கியின் ஆவி உள்ளே புகுந்ததைப் போல எழுதுகிறார். தாஸ்தயேவ்ஸ்கியின் நடை, உடை, பாவனை, அவருடைய பழக்கவழக்கங்கள், அவருடைய கடந்தகால வாழ்க்கை, நிகழ்காலவாழ்க்கை, அவரது முரண்பட்ட சிந்தனைகள், முரண்பட்ட ஆளுமையின் உள்ளுரு, எல்லாவற்றையும் அப்படியே கலையாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 130 வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வை, அந்தக் காலச்சூழலை, கதாபாத்திரங்களை அப்படியே கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிற மகத்தான கலைஞனாகியிருக்கிறார் பெரும்படவம்.

பதினாறு அத்தியாயங்களில் ஒரு காதல் காவியத்தைப் படைத்திருக்கிறாரென்றால், அதுவும் தாஸ்தயேவ்ஸ்கி போன்ற உணர்ச்சிக்கொந்தளிப்பு மிகுந்த எழுத்தாளரின் வாழ்க்கையிலிருந்து முக்கியமான பகுதியை எழுதுவதென்பது எவ்வளவு பெரிய சவால்? தாஸ்தயேவ்ஸ்கியின் அனைத்து நூல்களையும் வாசித்து அவரைப் பற்றியே யோசித்து, அவரைப் பற்றியே சிந்தித்து, அவராகவே மாறியிருக்கிறார் என்று சொல்வது மிகையில்லை. பல அதிசயங்களைக் கொண்ட கேரளாவில் தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பகம் இருப்பதும் ஆச்சரியமில்லை.

கடவுள் கையொப்பமிட்ட இதயத்துக்குச் சொந்தக்காரரான தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையில் இந்த நாட்கள் மிக முக்கியமானவை. EVIL GENIUS என்று மாகிசிம் கார்க்கியால் அழைக்கப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி தன் படைப்புகளில் மனித மனதின் இருண்ட பகுதிகளை வெளிச்சமாக்கிக் காட்டியவர்.  தன்னையே வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் ஒப்புக் கொடுத்து பரிசோதனை செய்தவரென்று கூடச் சொல்லலாம். எப்போதும் அதீத உணர்ச்சிகளிலெயே உழன்று கொண்டிருந்த தாஸ்தயேவ்ஸ்கியை வறுமையும், துரோகங்களும், தோல்விகளும், உறவினர்களின் சுரண்டலும் சேர்ந்து உழட்டின. அத்தனைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்து மேதைமை தாஸ்தயேவ்ஸ்கிக்கு அன்னாவின் காதல் ஒன்று கடைசிவரை கிடைத்த ஒரே ஆறுதல். தாஸ்தயேவ்ஸ்கி நிலைதடுமாறி நிற்கும்போது தன்னுடைய கைப்பணத்தைக் கொடுத்து அவரைச் சூதாட அனுப்புகிற அந்தக் காட்சி உண்மையில் நெகிழவைப்பது. ஏனெனில் சூதாட்டம் அவரைச் சமநிலைப் படுத்துகிறதென்பதை மிகக்குறைந்த நாள் பழக்கத்திலேயே தெரிந்து கொண்டவர் அன்னா.

உண்மையில் அன்னா உலக இலக்கியத்தில் சித்தரிக்கப்பட்ட எந்தக் கதாபாத்திரத்தையும் விட அற்புதமான மனுஷி..

தன்னைவிட இரண்டு மடங்கு வயதுடைய எப்போதும் அதீதங்களிலியே வாழ்ந்து கொண்டிருக்கும் தாஸ்தயேவ்ஸ்கியைக் காதலித்து மணம்முடித்து அவரையும் அவரது படைப்பு மனதையும் காப்பாற்றிய அன்னாவுக்கு மிகச்சிறந்த இலக்கியவெகுமதியைக் கொடுத்திருக்கிறார் ஒரு சங்கீர்த்தனம் போல நாவலில் பெரும்படவம்..

இந்தப் புகழ்பெற்ற நாவலை அதன் உணர்ச்சிவெள்ளத்தைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே அழகாகத் தமிழில் தந்திருக்கிறார் கவிஞர் சிற்பி.

அதோ.. பாருங்கள்! தாஸ்தயேவ்ஸ்கியின் சமையலறையில் பெதோஸ்யா அவருடைய இளமையில் அவர் காதலித்த அந்த முரடனை நினைத்து ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரிக்கிறார். இனி தினமும் தாஸ்தயேவ்ஸ்கிக்கு மட்டுமல்ல, அன்னாவுக்க்கும் சேர்த்துத் தேநீர் தயாரிக்கவேண்டும். அதை நினைக்கும்போதே பெதோஸ்யாவுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது. ஏதோ ஒரு நிம்மதி. எப்போதும் கனவில் எதையோ தேடிக் கொண்டிருப்பார் தாஸ்தயேவ்ஸ்கி. ஆனால் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால் இப்போது அவர் தேடியது கிடைத்து விட்டது. அந்தச் சிறிய வைரம் தான் அன்னா.

இனி தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் வசந்தம் வீசும். அந்தப்பாவப்பட்ட ஆத்மா கொஞ்சமேனும் உண்மையான அன்பில் திளைக்குமென்று நினைத்த பெதோஸ்யாவுக்கு ஏனோ தன்னுடைய தாயின் நினைவுகள் பொங்கி வந்தன.

கெட்டியான கருப்புத்தேநீரைத் தயாரித்து முடித்து விட்டாள் பெதோஸ்யா. நான்கு கோப்பைகளில் ஊற்றினாள். இரண்டு கோப்பைகளை அன்புக்குரிய அன்னாவுக்கும், தாஸ்தயேவ்ஸ்கிக்கும் கொடுத்தாள்.

ஒரு கோப்பை கெட்டியான கருப்புத் தேநீரை நிழலாய் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பெரும்படவம் ஸ்ரீதரனிடம் கொடுத்தாள்.

மீதமிருக்கும் இன்னொரு கோப்பையை எடுத்து நீட்டுகிறாள் பெதோஸ்யா..

வாங்கி அருந்துங்கள்!

எங்கள் தாஸ்தயேவ்ஸ்கியையும் அன்னாவையும் வாழ்த்துங்கள்!

 

ஒரு சங்கீர்த்தனம் போல

மலையாளத்தில் – பெரும்படவம் ஸ்ரீதரன்

தமிழில் – சிற்பி

வெளியீடு – அருட்செல்வர்.நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்

தொடர்புக்கு – 9976144451

நன்றி - புக் டே

.

Thursday, 8 August 2024

எங்கள் தாஸ்தயேவ்ஸ்கியை ஏன் சூதாட வைத்தீர்கள் பலீனா ஸூஸ்லோவா அல்லது பலீனா அலெக்சாந்திரேவ்னா ?

 

எங்கள் தாஸ்தயேவ்ஸ்கியை ஏன் சூதாட வைத்தீர்கள் பலீனா ஸூஸ்லோவா அல்லது பலீனா அலெக்சாந்திரேவ்னா ?

உதயசங்கர்




மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய பலீனா ஸூஸ்லோவா அல்லது பலீனா அலெக்சாந்திரேவ்னா!

உங்கள் காதல் விளையாட்டுக்கு பாவம் எங்கள் தாஸ்த்யேவ்ஸ்கி தான் கிடைத்தாரா?  வாழ்நாள் முழுவதும் அதிதீவிர மனநிலைச் சிகரங்களுக்கிடையில் அலைபாய்ந்துகொண்டிருந்த தாஸ்தயேவ்ஸ்கி, மரணத்தின் எல்லைக்கோட்டைத் தொட்டுத் திரும்பிய தாஸ்தயேவ்ஸ்கி, ஸைபீரியாத் தணடனைக்காலத்தில்  மனித மனதின் இருள்பள்ளத்தாக்குகளை அறிந்த தாஸ்தயேவ்ஸ்கி, வாழ்நாள் முழுவதும்    வலிப்பு நோயாலும் வறுமையின் கொடுமையாலும் அவதிப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி, குற்ற மனங்களின் அனாடமி, பிசியாலஜி, பற்றி ஒரு மேதையாக மனிதகுலத்துக்குக்கொடையாகத் கதைகளெழுதிய தாஸ்தயேவ்ஸ்கி கிடைத்தாரா?

நீங்கள் அவருடைய வாழ்க்கையில் தலையிடாமலிருந்தால் ஒருவேளை உங்களைத் தேடிப் பாரீசுக்குப் போயிருக்க மாட்டார். அப்படிப் போயிருக்காவிட்டால் வழியில் எதிர்ப்பட்டவெஸ்பேடன் நகருக்குப் போயிருக்க மாட்டார். காஸினோவில் ரூலெட் என்ற சூதாட்டத்தை ஆடியிருக்க மாட்டார். காதலின் பித்து சூதாட்டத்தின் பித்தாக மாறியிருக்காது. பித்தின் வெறியில் கடைசி கூல்டின் வரை வைத்து ஆடியிருக்க மாட்டார். அவரைப் பாரீசுக்கு வரவழைத்து நீங்கள் இன்னொருவரைப் பிக் அப் செய்து கொண்டு போய் விட்டீர்கள்.

இது நியாயமா? சொல்லுங்கள் பலீனா.

ஆனால் அதனால் எங்களுக்கு சூதாடி என்ற நாவல் கிடைத்தது. எங்கள் அருமை தாஸ்தயேவ்ஸ்கிக்கு அவரை இறுதிவரை போற்றிப் பாதுகாத்த அன்னா கிரிகோவ்யேவ்னா கிடைத்தார். அதற்காக உங்களை மன்னிப்பது மட்டுமில்லை நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூதாடியை வாசித்த ஞாபகமே இல்லை. மனதில் அந்த நாவல் தாஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகளும் குறுநவல்களும் என்ற தொகுப்பில் இருப்பதாக ஒரு மனப்பதிவு இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் சூதாடியைப் பற்றிப் பேசியிருக்கிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கையில் கிடைத்த புத்தகங்களையெல்லாம் அதன் ருசியறியாமல் மூளைக்குள் திணித்துக் கொண்டிருந்த  இளமைக் காலத்தில் என்றோ எப்போதோ வாசித்த போது சூதாடியின் நுட்பமும் ஆழமும் தெரியவில்லை. அதன் பின்னணி தெரியவில்லை. தாஸ்தயேவ்ஸ்கி என்ற உன்னதமான இலக்கியமேதையைத் தெரியவில்லை.  

1881 – ஆம் ஆண்டு 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தாஸ்தயேவ்ஸ்கியின் வீட்டில் ஒரு விருந்து நடந்தது.விருந்துக்குப் பின் சகோதரியுடனான சச்சரவினால் உணர்ச்சிவயப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி தன் அறைக்குச் செனறார். சிறிது நேரத்தில் ரத்த வாந்தியெடுத்தார். ஏற்கனவே நோயுற்ற நுரையீரலின் ரத்தத்தமனி அறுந்து ரத்தம் வெளியேறியது. 27 ஆம் தேதி மருத்துவர் பார்த்துவிட்டு கைவிரித்து விட்டார். 28 ஆம் தேதி தன்னுடைய மரணத்தைத் தானே உணர்ந்து கொண்டவர் போல தாஸ்தயேவ்ஸ்கி அன்னாவிடம் விவிலியப்புத்தகத்தை வாசிக்கும்படி கூறினார். பாதிரியாரை வரவழைக்கச் சொன்னார். இறுதிப்பிரார்த்தனை செய்தார். இரவு 8.30 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.

ருஷ்யாவில் புஷ்கினின் மரணத்துக்குப் பிறகு மாபெரும் நிகழ்வாக தாஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிகழ்வேயிருந்தது. 30000 பேர் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் அந்த மகத்தான மேதை எப்படி ருஷ்ய மக்களின் மனங்களில் குடியிருந்தாரென்பதைக் காட்டியது.

பலீனா உங்களுக்குத் தெரியுமா? எப்பேர்ப்பட்ட இலக்கிய மேதை உங்களைக் காதலித்தாரென்றோ, உங்களுக்காக தன் மேல்கோட்டு உட்பட சூதாட்டத்தில் பணயம் வைத்தாரென்றோ உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவரை ஏமாற்றினீர்கள். அலைக்கழித்தீர்கள். ஆனால் அவரோ உங்களை அதாவது பலினா ஸூஸ்லோவா என்ற பலீனா அலெக்சாந்திரவ்னாவாக படைத்து நிரந்தரப்படுத்தி விட்டார். காலத்தின் இலக்கியச் சிற்பமாக நீங்கள் சூதாடியில் திகழ்கிறீர்கள். அதற்காகவும் உங்களுக்கு நன்றி

        உலக இலக்கியத்தின் உன்னத மேதையான எங்கள் பிரியத்துக்குரிய தாஸ்தயேவ்ஸ்கி, சூதாடி நாவலை கடுமையான நெருக்கடியில் எழுதத் தொடங்கினார். அவருடைய கடன்களை அடைப்பதற்காக 3000 ரூபிள் கடன் தருவதற்கு டெஸ்லோவ்ஸ்கி என்ற பதிப்பாளர் ஒத்துக் கொள்கிறார். அதற்கு அவர் வைக்கும் நிபந்தனை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் தாஸ்தயேவ்ஸ்கி ஒரு புதிய நாவலை எழுதிக் கொடுக்கவேண்டும். அப்படி ஒரு நாள் தாமதமானாலும் தாஸ்தயேவ்ஸ்கியின் மொத்தப்படைப்புகளின் பதிப்புரிமையும் தனக்குச் சொந்தம் என்ற நிபந்தனைக்காக அவசர அவசரமாக சூதாடியை எழுதினாரென்பதாவது உங்களுக்குத் தெரியுமா பலீனா?

பலீனா உங்கள் மீதான வெறித்தனமான காதலுக்காக அலெக்சேய் தன் உயிரையேத் தரத் தயாராகவிருக்கிறான். உங்களுக்காகத் தான் கேஸினோவுக்குள் சென்று ரூலெட் ஆட்டத்தில் கலந்து கொள்கிறான். சூதின் வெறி மெல்ல மெல்ல ஏறுவதையும், மனிதமனம் எப்படி சூதாட்டத்துக்கு அடிமையாவதையும் இவ்வளவு அற்புதமாக, உளவியல் ரீதியாக வேறு யாரேனும் சித்தரித்திருக்கிறார்களாவென்று தெரியவில்லை.

‘ சிலர் வெற்றி பெற்றுப் பணத்தை அள்ளிச் செல்வதையும், ஏனையோர் இழந்து விட்டு நிற்பதையும் பொறுத்தவரை இது ரூலெட் ஆட்டத்தில் மட்டும் தானா நடைபெறுகிறது எங்குபார்க்கினும் சிலர் வென்று கொண்டும்கொள்ளையடித்துக் கொண்டும் தானே இருக்கிறார்கள்! ‘

‘ எதனாலோ எனக்குத் தெரியாது. அவசியம் நான் வெற்றி பெற்றாக வேண்டும் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும். இதைவிட்டால் எனக்கு வேறுவழியே இல்லை.நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என்ற எனது உறுதிக்கு இதுவே காரணமாய் இருந்தாலும் இருக்கலாம்..

அலெக்சேய்க்கு என்ன ஒரு நம்பிக்கை. பலீனாவுக்காகத்தன்னுடைய உயிரை மட்டுமல்ல ஆன்மாவையே பலியிடத் தயாராக இருக்கிறான். ஆனால் பலீனா நீங்கள் அந்தப் பிரெஞ்சுக்காரரைன் தெ கிரி மீது மையல் கொண்டிருக்கிறீர்கள்.ஆங்கிலேயென் அஸ்ட்லேயிடம் பசப்புகிறீர்கள். ஆனால் உண்மையான காதல் கொண்ட அலெக்சேயை ஒரு வேலைக்காரனைப் போல நடத்துகிறீர்கள். நீங்கள் பட்ட கடனுக்காகவே அலெக்சேய் சூதாட்டவிடுதியில் கிடக்கிறான். ஆனால் அவன் வெற்றி பெற்ற பணத்தைக் கொடுத்தபோது அதை அவன் முகத்தில் வீசி, என்னை விலைக்கு வாங்க நினைக்கிறாயா என்று அவமானப்படுத்துகிறீர்கள். இறுதிவரை உங்கள் காதலுக்காக ஏங்கித் தவிக்கும் அலெக்சேய் உதாசீனம் செய்கிறீர்கள். காதலென்பதே உதாசீனம், நிராகரிப்பு,  அவமானம், இவற்றையெல்லாம் சேர்த்தழைத்துக் கொண்டே வருவது தான் காதலோ.

இறந்து போய் விடுவாரென்று எதிர்பார்த்திருந்த கோமகள் அன்தெனீனா பாட்டி திடீரென்று புயல் மாதிரி வந்து சூதாட்டத்தில் ஒரு லட்சம் ரூபிள்களை இழந்துவிட்டுப் போகிறாள். சூதின் இருள் எந்த வயதினரையும் பீடித்து தன்னுடைய கொடும் சிறைக்குள் தள்ளிவிடுமென்பதை தாஸ்தயேவ்ஸ்கி சொல்கிறார். அலெக்சேய், பலீனா, ஜெனரல், பிளான்ஷூ,  தெ கிரியெ, அஸ்ட்லே, என்று மிகச்சில கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு சிறு காவியத்தைப் படைத்திருக்கிறார் எங்கள் தாஸ்தயேவ்ஸ்கி.

“ காதலை எதிர்கொள்ளும்போது தாஸ்தயேவ்ஸ்கி நிராதரவானவர், ஒன்று மிருகத்தனமான காமம் இல்லையென்றால் ஒரு மாசோக்கிஸ்டின் அடிபணிதல், இதுவுமில்லையென்றால் இரக்கத்திலிருந்து உருப்பெறுகிற காதல்..இப்படித்தான் தாஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய படைப்புகளில் காதலைச் சித்தரிக்கிறார்.

சூதாடியை தாஸ்தயேவ்ஸ்கிச் சொல்லச் சொல்லச் சுருக்கெழுத்தில் எழுதிப் பின்னர் விரித்தெழுதிக் கொடுக்கும் வேலைக்காகச் சேர்ந்த அன்னா சொல்கிறார்,

“ தன் சம்பாத்தியம் முழுவதையும் சூதாடித் தொலைத்த பாட்டி தான் எனக்குச் சூதாடியில் மிகவும் அனுதாபத்தை ஏற்படுத்திய கதாபாத்திரம். நான் பலீனாவையும் முக்கியக் கதாபாத்திரமான அலெக்சேயையும் வெறுத்தேன். ஆனால் சூதாட்டப்பித்தையும், பலவீனங்களையும் நான் நேசித்தேன். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி முற்றிலும் சூதாட்டக்கரனின் பக்கமாகத் தான் நின்றார். சூதாட்டக்காரனின் பல உணர்ச்சிகளும் அனுபவங்களும் தன்னுடையது தான் என்று அவர் சொன்னார். “

என்று அன்னா தன் நினைவுக்குறிப்புகளில் எழுதியிருக்கிறார். கையிலிருக்கும் கடைசிக் காசையும் சூதாட்ட்த்தில் வைத்து தன்னுடைய அதிர்ஷ்டத்தைப் பரிசோதிக்கும் மனதின் பலவீனம் அல்லது பலம் தான் என்ன? நாவலின் இறுதியில் கூட அலெக்சேய் சூதாடுவதாகவே முடிகிறது.

ஆனால் பலீனா ஒன்று கவனீத்தீர்களா? நாவலின் கடைசிவரை அலெக்சேய் அதாவது தாஸ்தயேவ்ஸ்கி உங்களைப் பற்றி அலெக்சேய்க்கு இவ்வளவு செய்திருந்தும் ஒரு வார்த்தை கூடத் தவறாகச் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் அவரைக் காதலிப்பதாகவே முடித்திருப்பார். எத்தகைய உயர்ந்த காதல் உங்கள் மீது கொண்டிருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

இருண்டமனதின் ஷேக்ஸ்பியர் என்றும் டெவில் ஜீனியஸ் என்றும் அழைக்கப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய படைப்புகளின் வழியே உளவியல் என்ற புதிய கல்விப்புலம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறாரென்பது உங்களுக்குத் தெரியுமா? வாழ்நாள் முழுவதும் பிரத்யேகமான வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி அவருடைய பல கதாபாத்திரங்களையும்  வலிப்பு நோயினால் அவதிப்படுபவர்களாகச் சித்தரித்திருக்கிறார். அந்த நோய் இப்போது மருத்துவ அகராதியில்  தாஸ்தயேவ்ஸ்கிவலிப்புநோய் என்ற பெயருடன் நிலைத்து நின்று விட்டது. அவருக்கு வரும் வலிப்புநோயைப் பற்றி அவரேவிவரிக்கிறார்,

“ சொர்க்கம் பூமிக்கு இறங்கி வந்து என்னைக் கவர்ந்திழுப்பதாக என்க்குத் தோன்றியது. உண்மையைச் சொல்கிறேன். கடவுளைக் காணவும் அவரில் கலக்கவும் என்னால் முடிந்தது. வலிப்பின் நேரத்தில் நான் சொர்க்கத்திலிருந்தேன். இந்த உலகத்தின் மற்ற அனைத்து இன்பங்களையும் தருகிறேனென்று சொன்னாலும் இந்தச் சொர்க்கத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்…

பரவச வலிப்பு நோய் என்று புதிய நோய் வகைமையைக் கண்டுபிடிக்கவும் உதவியிருக்கிறார் தாஸ்தயேவ்ஸ்கி என்பது தெரியுமா பலீனா அவர்களே!

காதல் மர்மமானது. துன்பமானது. விந்தையானது. மனிதனைக் கடவுளாகவும் கடவுளைச் சாத்தானாகவும் மாற்றுகிற வல்லமை கொண்டது என்பதை சூதாடி மூலம் உணர்த்திய இலக்கியத்தின் சிகரமே தாஸ்தயேவ்ஸ்கி உங்களை வணங்குகிறேன்.

பலீனா!  நீங்கள் தாஸ்தயேவ்ஸ்கியைக் காதலித்த தருணங்களுக்காக நன்றிகள். அவரைக் கைவிட்ட தருணத்திற்காக கோடானு கோடி வணக்கங்கள்!

பலீனா ஸூஸ்லோவா அல்லது பலீனா அலெக்சாந்திரவ்னா உங்கள் கையில் முத்தமிட அனுமதியுங்கள்.

நன்றி.



Tuesday, 23 July 2024

எனதருமை நாஸ்தென்கா!

 

எனதருமை நாஸ்தென்கா!

உதயசங்கர்



 

மீண்டும் நாம் சந்தித்து விட்டோம். உங்கள்  கைகளைக் கொடுங்கள். உள்ளங்கையின் கதகதப்பை உணர்ந்து கொள்கிறேன்எத்தனையோ முறை சந்தித்திருந்தாலும் ஒவ்வொரு சந்திப்பும் முதல் சந்திப்பைப் போலவே என்னிடம் ஏக்கத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறதுநான் உணர்ச்சிவயப்பட்டவனாகவேயிருக்கிறேன். என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்பதற்காக உன்னிடம் மன்னிப்பைக் கோருகிறேன்

 

தனிமையின் புதைசேற்றில் விரக்தியுடன் புதைந்து கொண்டிருக்கும் தனியனான என்னிடம் இரக்கம் கொண்டு வந்திருக்கிறீர்களென்று நினைக்கிறேன்.

 

 அன்புக்குரியவரே நாஸ்தென்கா, சலிப்பாகிவிட்டது. நீண்ட நாட்கள் வாழ்ந்ததைப் போல மனம் சோர்வடைந்து விட்டது

 

ஆனால் உங்களைச் சந்தித்த இக்கணம் மீண்டும் நம்பிக்கை துளிர்விடுகிறது.

 

அப்படி என்ன மாயம் செய்கிறீர்கள்? சின்னஞ்சிறுபெண்ணே எனதருமை நாஸ்தென்கா

 

1848-ல் தாஸ்தயேவ்ஸ்கி என்ற மகத்தான படைப்பாளியெழுதிய வெண்ணிற இரவுகளில்  பீட்டர்ஸ்பர்க் நகரின் புறநகர்ப்பிரதேசத்தில் வாய்க்காலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த வடிவத்திலேயே  1981 ஆம் ஆண்டு உங்களைச் சந்தித்தேன்அந்தக் கதையின் பெயரில்லாத நாயகனைப் போல

 

உங்களைப் பற்றி எழுதுவதோ யோசிப்பதோ எப்போதுமே சலிப்பதில்லை. எத்தனை முறை எழுதி இருப்பேன் எத்தனை பேரிடம் உங்களைப் பற்றி பேசி இருப்பேனென்று எனக்கே தெரியாது.

 

காதல் பொங்கித்ததும்பும் என்னுடைய இளமைக் காலத்தில் 21-12-1981 அன்று பனிபொழியும் மார்கழி இரவில் உங்களைச் சந்தித்தேன் நாஸ்தென்கா. காதலனுக்காகக் காத்திருக்கும் இளம்பெண்ணாக அறிமுகமானீர்கள். இப்போதும் வெண்ணிற இரவுகளில் நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள்

 

ஆனால் நானோ அன்பின் துளிச் சாயை கூடத்தெரியாத நீண்ட பாலைவனத்தைக் கடக்கும் கிழட்டு ஒட்டகத்தைப் போல மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன் நாஸ்தென்கா

 

 உங்களுக்காவது உங்கள் மீது அன்பு கொண்ட ( அது போரடித்த போதும் ) ஒரு பாட்டி இருந்தாள். உங்களை ஏமாற்றிவிடுவாரோ என்று வாசகர்களை அச்சப்பட வைத்து கடைசியில் காதலின் பெறுமதியை உணர்த்திய காதலர் இருந்தார். ஆனால் நானோ

பெயரில்லாத அந்தக் கனவுலகவாசியைப் போலவே தனிமை இழைகளினால்  கற்பனைக் கோட்டைகளைக் கட்டி இடித்து கட்டி இடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அப்போதும் எனக்குப் பெண்களிடம் பேசிப் பழக்கமில்லை. முதல்முதலாக ஆத்மார்த்தமாகப் பேசியதே உங்களிடம் மட்டும் தான் நாஸ்தென்கா என் மதிப்பிற்குரியவரே

 

என்னுடைய அறியாமையினால் நான் உளறியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். தண்டனிட்டு கேட்டுக் கொள்கிறேன்

 

 உணர்ச்சிகரமான ஒரு சிறு குறுநாவலில் காலம் தாண்டிய கதாபாத்திரமாக நாஸ்தென்கா உங்களை என் அன்புக்குரிய தாஸ்தயேவ்ஸ்கி படைத்து விட்டார்கோவில்பட்டியில் நாங்கள் வெண்ணிற இரவுகளைப் போன்ற கதையை எழுதிவிட முயற்சித்தோமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ

 

அந்த அளவுக்கு நீங்கள் கோவில்பட்டியில் எல்லாருக்கும் பரிச்சயமானவராக இருந்தீர்கள். எல்லோருக்கும் ஒரு நாஸ்தென்கா இருந்தார். யாராலும் அடைய முடியாத நாஸ்தென்கா. ஆனால் எப்போதும் கண்களுக்கு முன்னால் லட்சியக்காதலியாக உலவிக் கொண்டிருக்கும் நாஸ்தென்கா

 

 நான்கு இரவுகளின் கதை. நான்கு கதாபாத்திரங்களின் கதை. நாடகப்பாங்கான மொழியில் கதை நாயகன் பேசுவது அவனுடைய கதாபாத்திரத்துக்கு அத்தனை பொருத்தமாக அமைந்து விட்டது. கதை முழுவதும் காதலின் சன்னதம் வந்ததைப் போல பேரன்பின் மழை பொழிந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு இரவிலும் குளிர்காலப் பனியும், காதலின் வெம்மையும் நம்மை மகிழ்ச்சியிலாழ்த்தும். மனம் நிலைகொள்ளாது தவிக்கும்

 

. ஆணோ பெண்ணோ வாசிக்கும் போது இதயத்தின் ரகசிய அறையில் யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருக்கும் முதல்காதல் ஞாபகத்துக்கு வந்து துயருறும் இன்பமளிக்கும்.

 

ஒரு கஞ்சனைப் போல செலவழிக்காமல் அழுகிக் கொண்டிருக்கும் நம் அன்பு பொங்கிப் பிரவகிக்கும். அது நாஸ்தென்காவின் மீது மட்டுமல்ல, கண்தெரியாத பாட்டியின் மீது மட்டுல்ல, கனவுலக வாசியின் மீது மட்டுமல்ல, நாஸ்தென்காவின் காதலர் மீது மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்தையே  தழுவிக்கொள்ளும்

 

ஆமாம். நாமெல்லோரும் ஒரு நாஸ்தென்காவுக்காகவோ, ஒரு கனவுலக வாசிக்காகவோ வாழ்நாள் முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறோமில்லையா!

 

ஒரு கணமேனும் உன்னதத்தைத் தரிசிக்கத்தான் வாழ்நாள் முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறேன்..

 

அன்புக்குரிய நாஸ்தென்கா என் தனிமையிருளை உன் சுடர் ஒளி வீசும் தூய அன்பினால் போக்கினீர்கள்

 

 அதற்கு என் உயிர்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

 

உங்களுக்கும் என் பேரன்பின் தாஸ்தயேவ்ஸ்கிக்கும் ..

 

நாஸ்தென்கா.. என் இனிய நாஸ்தென்கா...

 

மொழிபெயர்ப்பு - ரா.கிருஷ்ணையா

 

வெளியீடு - நூல்வனம்

தொடர்புக்கு - +91 97515 49992