Saturday, 3 October 2026

பறம்பு மலைப் பயணத்துக்குத் தயாரா?

 

பறம்பு மலைப் பயணத்துக்குத் தயாரா?


பறம்பின் பாரி” இளையோர் நாவல் –  நூல் அறிமுகம்

வி. லெட்சுமி

முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
செட்டிகுளம்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கடையேழு வள்ளல்களில் முதன்மையான பாரி பரம்பு மலையை ஆட்சி செய்த வேளிர் குலத் தலைவன். பாரி வீரத்தின் தலைசின்னமாக, ஈகையின் சிகரமாக இருந்தான். கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கு தன் தேரைக் கொடுத்தான். தானம் கேட்பவர்களுக்கு இல்லை என்று கூறாது எதையும் கொடுக்கும் வளளல் தன்மை கொண்டவன் பாரி. அதையே சதிச் செயலாக்கி சேர ,சோழ, பாண்டியர்கள் சேர்ந்து பாரியை வஞ்சித்துக் கொன்றார்கள்.

 பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியின் பெண் மக்களான அங்குவை, சங்கவை இருவரையும் திருமணம் முடித்துக் கொடுக்க அலைந்து திரிந்தார். சேர ,சோழ, பாண்டியருக்கு அஞ்சி யாரும் மணம் முடிக்க முன்வரவில்லை. கடைசியில் கடை ஏழு வள்ளல்களில் மற்றொருவர் ஆன காரி தன் மகன்களுக்கு அவர்களை மணம்முடிக்க சம்மதித்தார். ஆனால் அவருடைய இரண்டு மகன்களில் ஒருவரான திரு கண்ணன் மட்டுமே சம்மதிக்க, மற்றொரு மகனான தெய்வீகன் சம்மதிக்கவில்லை. மனம் வெதும்பி பாரியின் மக்களை அவ்வையார் வசம் ஒப்படைத்து விட்டு தீ பாய்ந்து உயிர் நீத்தார்.

ஔவையார் மற்றொரு மகனையும் சம்மதிக்க வைத்து மூவேந்தர்களையும் அழைத்து அந்த திருமணத்தை நடத்தி வைத்தார் என்பது நாம் அறிந்த பாரியின் கதை.

இப்புத்தகத்தில் பாரியின் அறநெறிகளை அவனது காலத்தின் சுவடுகளைக் கொண்டு புனைவாக தருகிறது இந்நாவல். பாரியின் பதின் பருவம் எப்படி இருந்திருக்கும், அவன் வேள்பாரியாக உருமாறுவதற்கு முன்னால் அவனுடைய குணாதிசயங்கள் எப்படி வளர்ந்திருக்கும், அவன் எப்படி தமிழின், கொடையின், அறத்தின், நட்பின், வீரத்தின் அடையாளமாக திகழ்ந்தான் என்பதை பற்றிப் பேசுகிறது

இந்த நாவல். சங்க பாடல்களை அடிப்படையாகக் கொண்டும், குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், வீரயுக நாயகன் வேள்பாரி, நிலம் பூத்து மலர்ந்த நாள், சிந்து சமவெளி பண்பாட்டில் திராவிட அடித்தளம் ஆகிய நூல்களின் உத்வேகத்திலும்  இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

கால சக்கரத்திற்குள் நுழையும் கேப்டன் பாலு பாரியின் நண்பன் திரையனாகவும் பாலுவின் காதலி மதுமிதா ஆதிரையின் தோழியான கோதையாகவும் கதையில் வலம் வருகின்றனர்.

பாரின் பறம்பு மலையில் பழுத்த வேரில் பழுத்த பலா பழத்தைப் பிரித்து போட்டியிட்டு உண்டல், காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், மரங்களை வெட்ட வரும் மனிதர்களை மறைந்திருந்து வளரி வீசி வென்று மலையின் ஒரு பகுதியில் தினை விளைவிக்க செய்யும் பண்பாளனாக பாரி, பாரி பறம்பு மலை முழுவதையும் அறிந்தவனாக இக்கதையில் வருகின்றான். தன் தாத்தாவிடம் கொண்ட உறவும், தன் தந்தை பனையனோடு பாரி தான் சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே தந்தையின் முதுகில் அமர்ந்து பனைமரம் ஏற பயணிப்பதும், கொற்றவை குறிகூறுதலும் ,காட்டின் வளங்களான வள்ளி கொடியிலிருந்து நீரை பருகுதல், காட்டு திராட்சைப் பழங்களைத் தின்பது, மரத்திலிருந்து விழும் நெல்லிக்கனிகளை உணவாக உண்டல், மலைவாழ் மக்களின் இசை கருவிகள், வாழும் பறவைகள், மலரும் பூக்கள்,இசைக்கருவிகள் முதலியவற்றை இந்நூல்வழி அறிய முடிகிறது.

செங்காந்தள் படர்ந்த காடு தீப்பற்றி எரிவது போலவும், வெண்காந்தள் மலர்ந்த காடு பனிமூட்டம் சூழ்ந்தது போலவும் காணப்படுவது. காட்டின் 99 வகை மலர்கள் இப்படி காட்டின் பல்வேறு நிகழ்வுகள் நம்மையும் பறம்பில் அழைத்து செல்கிறது. சாத்தன் மலையில் உடும்புகளைக் கட்டி மலைப்பொந்தில் இருக்கும் தேனை எடுத்து வருதல், களரி வீசுதல் போன்ற ஒரு முறைகள் நம்மை ஒரு பாரியின் போர் திறனோடு நம்மையும் ஒரு போர்க்களத்தில் இன்று போர் செய்யும் வீர நிலையில் இருந்து பாரி வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நம்மிடையே தூண்டுகிறது.

கதையின் ஒரு பகுதியில் பாரியின் பதின்பருவம் குறித்தான அனுபவமென்றால் மறுபாதி சிந்து சமவெளி புலம்பெயர்ந்த வாழ்வின் எச்சங்களைக் கூறுகிறது.

இடை இடையே கேப்டன் பாலுவின் நிகழ்கால வாழ்க்கையோடு திரையன் வாழ்க்கையும் மாறி மாறி வருவது சற்று கதையின் வேகத்தைக் குறைப்பதாக அமைந்துள்ளது. பாலுவின் காதலியாக வரும் மதுமிதாவின் சமயோசித புத்தி அருமை. கோதையாக அவள் திரையனைக் காப்பாற்றுவது போன்றவை கதையில் சுவாரசியம் மிகுந்ததாக உள்ளது.

சோழனை ஒற்றை ஆளாக நின்று கவணால் களமாடும் சாத்தனின் வீரம், திரையனைக் காப்பாற்றும் பாரியின் களரி வீசும் வீரமும், பாண்டியர்களை ஆநிரை கவர்தல், மீட்டல் ஆகிய வெட்சி, கரந்தை போர், ஆநிரை பிடிக்க வந்த பாண்டியரை அங்கிருந்து துரத்தும் பாரியின் போர் வெற்றியுடன் நாவல் நிறைவு பெறுகின்றது.

பாரியின் பறம்பு மலையோடு பாலு என்ற திரையன் மட்டும் அல்ல;  வாசிக்கும் நம்மையும் அங்கேயே இருந்துவிடச் சொல்கிறது. அது தான் நூலின் வெற்றி.

நம்முடைய பதின்பருவக்குழந்தைகள் வாசிக்க வேண்டிய நூல்.

வெளியீடு - வானம் பதிப்பகம்/97515 49992

நன்றி - புக் டே


 

Friday, 2 October 2026

படைப்பின் விதை

 

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் – 3

படைப்பின் விதை

உதயசங்கர்



ஒரு எழுத்தாளர் தன்னுடைய படைப்பின் விதையை எங்கே கண்டுபிடிக்கிறார்? அந்த விதையை எப்படி கண்டுபிடிக்கிறார்? அந்த விதையிலிருந்து முளைவிடும் படைப்பை  பிரம்மாண்டமான விருட்சமாக தன்னுடைய கலையெனும் ரசவாதத்தால் மாற்றுகிறார்? ஒவ்வொரு எழுத்தாளரும் படைப்பிற்கான விதைகள் கலைஞன் தன்னுடைய வாழ்வில் எதிர் கொள்ள நேரிடும் அனுபவநிகழ்வுகளில் சில அநுபவப்பொறிகள்  மின்னலெனப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தப் பாதிப்பை யாரும் அனுமானிக்கமுடியாது. ஒரே மாதிரியான அனுபவங்கள் பாதிக்குமென்றோ, பாதிக்க வேண்டுமென்றோ கருதமுடியாது. ஏனெனில் எழுத்தாளரென்ற சமூக ஜீவியின் சூழல், வர்க்கம், கூருணர்வு, வாழ்நிலை, அப்போதைய மனநிலை இப்படிப் பல்வேறு வகையான நுண்கூறுகளே அதைத் தீர்மானிக்கிறது.

பாதித்த அனுபவப்பொறிகள் ஆழமாக மனதில் கருக்கொள்கின்றன. கருக் கொண்ட அனுபவப்பொறியின் வளர்ச்சியின் வேகமும், ஆழமும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வேறுபடும். படைப்பாளிக்குப்  படைப்பாற்றலில் உள்ள தீவிர வேட்கை, வாசிப்பு அநுபவம், அவனுடைய அழகியல் கோட்பாடு, இவற்றைப் பொறுத்தே அமையும். மனதில் உத்தேசமான வடிவம் பெற்ற அந்தக் கருப்பொருள் அதன் வெளிப்பாட்டுக்குத் தேவையான உத்வேகம் புறவயமாகவோ, அகவயமாகவோ, கிடைக்கும் போது எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் நிகழலாம். அப்படி மனதில் முழுமையாக உருக்கொள்ளும் முன்போ, எழுதுவதற்கான உத்வேகம் கிடைக்காமல் இயந்திரகதியாகவோ படைப்பை எழுத முயற்சித்தால் அது அரைகுறைப் பிரசவமாகவோ, பிரசவமாகாமலோ போய்விடும் ஆபத்தும் நிகழும். முழுமையான உத்வேகமே காகிதத்திலோ, கணிணியிலோ பதிவு செய்யும் செயலுக்கு உந்தித் தள்ளுகிறது. இந்தப் புறவயமான வெளிப்பாட்டுக்கு முன்னரே மனசுக்குள் பலமுறை வீரியமிக்க மொழியலகுகளை மாற்றி, மாற்றிப் போட்டு எழுதிப் பார்த்தபிறகே காகிதத்தில் எழுதும் துணிவு பிறக்கிறதென்பதை மறந்து விடக் கூடாது.

கலைஞன் சுய அநுபங்களிருந்தோ, கேள்விப்பட்ட விஷயங்களிலிருந்தோ, அறிவனுபவங்களிலிருந்தோ, புராணிக, சரித்திர, தொல்கதை வாசிப்பனுபவங்களிலிருந்தோ, நாட்டார் கதைகளிலிருந்தோ, தத்துவார்த்த அனுபவங்களிலிருந்தோ, தன் படைப்புக்கான உத்வேகத்தைப் பெறலாம். ஆசியாவின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்.சாதத் ஹசன் மண்ட்டோ அவருடைய பல கதைகளுக்கான உத்வேகத்தைக் கேள்வியனுபங்களிலிருந்தும், பத்திரிகைச் செய்திகளிலுருந்தும் பெற்றிருக்கிறார். ஆனால் அந்த உத்வேகம், படைப்பின் சிறு பொறியை ஊதி வளர்த்துப் பற்றியெரியச் செய்யும்வரை எழுத்தாளர் காத்திருக்கவேண்டும்.

ஒரு முட்டையை அடைகாக்கும் கோழியின் பொறுமையும் அர்ப்பணிப்பும் ஒரு எழுத்தாளருக்கு அவசியம். அப்போது உயிர்த்துடிப்பும் அழகும் மிளிரும் படைப்பாக வெளிவரும். அவசரப்பட்டோ, வேறு காரணங்களுக்காகவோ படைப்பை வெளிப்படுத்தினால் போலியான படைப்பாகவோ அல்லது படைப்பல்லாத படைப்பாகவோ இருக்கும். அந்தப் படைப்பு தரும் அனுபவத்திலிருந்தே முழுமையான படைப்பாக வெளிவந்திருக்கிறதா? அல்லது அரைகுறையாக வெளிவந்திருக்கிறதா என்பதை எந்த எளிய வாசகனாலும் கண்டுபிடித்து விட முடியும். இதற்கு ஒரளவு வாசிப்பனுபவமும், நுண்ணுணர்வும் இருந்தாலே போதுமானது.

அதனால் எழுத்தாளர் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் தங்களுடைய படைப்பின் மீதான மரியாதையுடனும் படைப்பை உருவாக்க வேண்டும். படைப்பின் விதைக்கலம் நாம் வாழும் வாழ்க்கை தான். சமூகமே படைப்புக்கான உத்வேகத்தைத் தருகிறது. ஆனால் படைப்பை உருவாக்குகிற சமூகப்பொறுப்பு தனிமனிதரான எழுத்தாளரிடம் இருக்கிறது. ருஷ்யாவில் நிகழ்ந்து கொண்டிருந்த கொந்தளிப்பானச் சூழ்நிலையே கார்க்கியின் தாய் நாவல் வெளிவர ஏதுவாக இருந்தது. அந்த நாவல் அப்படியே கொந்தளிப்பான சூழ்நிலையைத் த தரூபமாகப் பிரதிபலித்ததாலேயே அதற்கு பௌதீக சக்தி கிடைத்தது. எனவே தான் படைப்பாளி தன் காலத்தை உற்று நோக்குபவனாக இருக்க வேண்டும். அத்துடன் சமூக இயக்கவியலைத் தெரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். சமூகத்தின் பல்வேறு தத்துவ நோக்குகள் நிலவினாலும் தான் யார் பக்கம் நிற்கிறோம். யாருக்காக எழுதுகிறோம். யாராக இருந்து எழுதுகிறோம். இந்தக் கேள்விகளை ஒவ்வொரு படைப்பிலும் கேட்டுக் கொள்ள வேண்டும். எழுத்தாளரே அறியாமல் பிற்போக்குத்தனமான கருத்தியலுக்கு ஆதரவாகவோ, ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவோ, ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாகவோ, தன்னுடைய படைப்பை எழுதிவிடும் ஆபத்து உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லாவெளிப்பாடும் அடிப்படையில் கருத்துப்பகிர்தல் அல்லது உணர்வுப்பகிர்தல் தான். கருத்தையோ உணர்வையோ பரப்புரை செய்வது தான். ஆனால் அந்த வெளிப்பாட்டுமுறையின் அடிப்படைத் தர்க்கநியதிகள் ஒவ்வொரு வடிவத்துக்கும் மாறுபடும். அதுவே அந்த வெளிப்பாட்டை செய்தி எனவும், பேச்சு எனவும், கவிதை எனவும், கதை எனவும், இன்ன பிற கலைவடிவங்கள் எனவும் வகை பிரிக்கிறது. அப்படியென்றால் கலைப்படைப்பில் கலைவிதிகள் தொழிற்பட்டிருத்தல் வேண்டும்.

அப்போது தான் அது கலைப்படைப்பாக உணரப்படும். படைப்பு எளிமையானதாக இருக்க வேண்டும். ஆனால் இது அனைத்துப் படைப்புகளுக்குமான அடிப்படை விதியாகக் கொள்ள முடியாது. ஏனெனில் எழுத்தாளர் இரண்டு தண்டவாளங்களில் தன்னுடைய கலைரயிலைத் தடம் புரளாமல் ஓட்ட வேண்டியவராக இருக்கிறார். பரவலான வாசகர்களின் வாசிப்பு எனும் ஒரு தண்டவாளமும், தன்னுடைய கலையின் புதிய முயற்சிகளும் பாய்ச்சல்களையும் கொண்ட இன்னொரு தண்டவாளமும் தான் அவை. இந்த த் தண்டவாளங்களின் மீது தன்னுடையத் தனித்துவமான கலைவிதிகளைக் கொண்ட ரயில்பெட்டிகளை இணைத்து கலைக்கோட்பாடென்னும் ரயில் இஞ்சினாக இருக்க வேண்டியவராகிறார் எழுத்தாளர்.

மொழியின் மீதும், தன் கலைச்சிந்தனைகளின் மீதும் ஆளுமையும் தெளிவும் சித்திக்கும்போது படைப்பில் எளிமை உருவாகும். கலையில் எளிமை என்பது ஒரு கலைச்சிந்தனைப்பள்ளி தானென்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எளிமையாக எழுதப்படுவதெல்லாம் கலைப் படைப்பாகி விடாது என்ற எச்சரிக்கையுணர்வும் தேவைப்படுகிறது.

ஒரு படைப்பு படைக்கப்படும்போது தன்னுணர்வுப்பூர்வமானது. அறிவும் உணர்வும் ஊடாடி நெசவு செய்கிற காரியமாக படைப்பு திகழ்கிறது. அனுபவப்பொறி பற்றித் தீயாய் எரியும்வரை வேண்டுமானால் தன்னுணர்வும், தன்னுணர்வுமற்ற நிலையில் படைப்பு தன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதுவுமே முன்னனுபவங்களின், வாசிப்பனுபபவங்களின் சாரம் ஊறிக் கிடக்கும் ஊற்றின் கண் தான். மற்றபடி, கலையென்பதே ஒரு அநுபூதிநிலை, தெய்வீக உணர்வு, ஞானவெளிச்சம் என்பதெல்லாம் மூட நம்பிக்கைகளே.

எல்லா அறிவுத்துறைகளையும் போலவே படைப்பிலக்கிய அறிவுத்துறையிலும் படைப்பின் நுட்பங்கள் குறித்தான ஆய்வும், அடிப்படை அலகுகள் குறித்த உரையாடலும் அவசியம். அப்போது தான்  ஒரு படைப்பாளி படைப்பின் சூட்சுமங்களை விளங்கிக் கொள்ளமுடியும்.

நன்றி - புக் டே