ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் – 2
படைப்பின் அங்ககக்கூறுகள்
உதயசங்கர்
ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதலென்பது அந்தப் படைப்பின் உள்ளார்ந்த சூட்சுமக்கூறுகளையும் புறவயமான யதார்த்தக் கூறுகளையும் அறிந்து கொள்ளுதலாகும். சூட்சுமக்கூறென்பது ஒரு படைப்பை எது கலையாக மாற்றுகிறதோ அந்த மாயாஜாலங்களை அறிந்து கொள்வது. அது அழகியல், மொழிநடை, உத்தி, பாணி ஒருமைத்தன்மை, ஒத்திசைவு கருப்பொருள் மிக முக்கியமாக உணர்ச்சிவேகம் இப்படி அனைத்தையும் உள்ளடக்கியது. புறவயமான யதார்த்தக் கூறுகளென்பது ஏலவே ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் – 1 கட்டுரையில் சொன்னதைப் போல ஒவ்வொரு படைப்பும் அது இயற்கையியல்வாதப்படைப்பாக இருந்தாலும் சரி, யதார்த்தப்படைப்பாக இருந்தாலும் சரி, விமரிசன யதார்த்தவாதப்படைப்பாக இருந்தாலும் சரி சோசலிச யதார்த்தவாதப் படைப்பாக இருந்தாலும் சரி, மேஜிகல் ரியலிசப்படைப்பாக இருந்தாலும் சரி ஆட்டோ பிக்ஷன் படைப்பாக இருந்தாலும் சரி, டாகுமெண்டல் ரியலிசப்படைப்பாக இருந்தாலும் சரி அது படைக்கப்பட்ட காலத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ பிரதிபலிக்கவே செய்யும். இது தான் அந்தப் படைப்பின் நிலமும் பொழுதும் என்று கூடச் சொல்லலாம். அதாவது எந்த இடத்தில் எந்தக் காலத்தில் அந்தப் படைப்பு உருவானதென்பதை வெளிப்படுத்துவதைக் குறிக்கும். அதுவே அதன் புறவயமான யதார்த்தக் கூறுகள் எனலாம். படைப்பின் உடல் என்றும் சொல்லலாம். அந்தப் படைப்பு வெளிப்படுத்தும் காலமும் களமும் தான் அதன் உடலென்று சொல்லலாம்.
. நாற்பதுகளில் எழுதப்பட்ட புதுமைப்பித்தன் கதைகளில் சென்னையில் டிராம் வண்டிகள் ஓடுகின்றன. சென்னையில் ஓடிய டிராம் வண்டிகளுக்காகக் கதை எழுதப்படவில்லை. ஆனால் சென்னையில் ஒரு காலத்தில் டிராம் வண்டிகள் ஓடின என்பது இன்றையத் தலைமுறைக்குப் புதிய செய்தி. அதேபோல கு.அழகிரிசாமியின் ஆகச்சிறந்த கதையான ராஜா வந்திருக்கிறார் கதையில் தீபாவளிக்கு முதல்நாள் வரும் அப்பாவைப் பற்றிச் சொல்லும்போது மணிமுத்தாறு அணைக்கட்டு வேலைக்குப் போய் வருவதாகச் சொல்லும்போது கரிசல் மண்ணில் விவசாயம் பொய்த்த காலங்களில் மக்கள் ஊர் ஊராய் போய் வேலை பார்த்திருக்கிறார்களென்பதும், மணிமுத்தாறு அணை கட்டப்பட்ட காலத்தையும் சொல்கிறது. அதேபோல திரிபுரம் கதையிலும் பஞ்சம் பிழைக்க மக்கள் தெற்கிலிருந்து வடக்குக்கும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் எங்காவது விடிந்து விடாதா என்று அலைந்த தைச் சொல்லும்போது ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கொருமுறை திட்டமிட்ட முறையில் பஞ்சம் வந்து வாழ்க்கையைச் சூறையாடிச் சென்றிருக்கிறதென்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இதே தான் கி.ரா.வின் கதைகளிலும் கதவு, வேட்டி, மாயமான் போன்ற கதைகளிலும் அந்தக் காலத்தில் கிராமங்களில் நிலவிய வறுமையை உணரமுடியும். அத்துடன் அறுபதுகளில் கிராமப்பொருளாதாரத்தின் நிலைமை எப்படியிருந்த தென்பதையும் ஒன்றிரண்டு வரிகளிலேயே சொல்லிச் செல்கிறது.
இப்படி கதைகள் எழுதப்பட்ட காலத்தின் முன்னும்பின்னுமாக பல விவரங்கள் ஆவணப்படுத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு கதைகளின் களத்துக்கேற்ப வட்டாரமொழி, உணவு தானியங்கள், உணவுப்பழக்கங்கள், பயிர்களின் வகைகள், களைகளின் வகைகள், விலங்குகள், பறவைகள், புழங்குபொருட்கள், உற்பத்தி உறவுகளுக்கிடையிலான உறவுமுறைகள், வாழ்க்கை வட்டச்சடங்குகள், தெய்வங்கள், நம்பிக்கைகள், பழமொழிகள், சொலவடைகள், விழுமியங்கள், அப்போதிருந்த சட்டங்கள், ( சைக்கிளில் லைட் இல்லையென்றால் அபராதம், சைக்கிள் பறிமுதல் ) ஆகியவை கூட பதிவு செய்யப்பட்டிருக்கும். இவற்றைச் சொல்வதற்காகக் கதை எழுதப்படுவதில்லை. ஆனால் கதை தனக்குத் தேவையான உயிர்ச்சத்தை இந்தப் புறவயமான சமூகத்திலிருந்தே எடுத்துக் கொள்ளும். அதன்வழியே தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கிக் கொள்ளும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்த ஊர், அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள், விழுமியங்களைத் தெரிந்து கொள்ள வரலாறு எழுதப்படுவதில்லை. ஆனால் அந்தக் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியத்தை வாசிக்கும்போது தெரிந்து கொள்ளலாம். இலக்கியத்தின் காலமும் களமும் வரலாறு எழுதப்படுவதற்கான ஆதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தொல்லியல் சான்றுகள், செப்பேடுகள், கல்வெட்டுகள், சாசனங்கள், அந்தக் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியப்பிரதிகள் இந்தச் சான்றாதாரங்களெல்லாம் ஒத்திசையும்போதே வரலாற்று ஆவணமாக மாறுகிறது. அந்த வகையில் சங்கப்பாடல்களை மட்டும் வைத்துக் கொண்டு தொல்தமிழர்களின் நாகரீகத்தை நம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றாதாரங்கள் சங்க காலத்தமிழர் வாழ்வியலை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தபோது வரலாறு மாற்றி எழுதப்படுகிறது.
ஒரு படைப்பில் இவையெல்லாம் திட்டமிட்டு எழுதப்படுவதில்லை. அந்தப் படைப்புக்கு அத்தியாவசியமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே ஒரு எழுத்தாளர் பதிவு செய்கிறார். அந்தத் தகவல்களெல்லாம் ஒரு படைப்பை முழுமையடையச் செய்வதற்காகவே கதைக்குள் வருகின்றன. இந்தத் தகவல்களுக்காக மட்டுமே ஒரு படைப்பு எழுதப்படும்போது அந்தப் படைப்பு தன்னுடைய கலையென்ற மாயாஜாலத்தை இழந்து விடும். படைப்பு முழுமையடைந்தபிறகு சுவாரசியத்துக்காகச் சொல்லப்படும் தகவல்கள் தேநீர் நிரம்பிய கோப்பையில் மேலும் மேலும் தேநீரை ஊற்றிக் கொண்டிருப்பதைப் போலாகி விடும். படைப்பின் இலக்குக்குத் தேவையில்லாத தகவல்களைச் சேர்க்கும்போது படைப்பு குப்பைக்கூளமாக
மாறிவிடும். எனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லுவேன் என்று நினைத்து எழுதும் போது கண்டதையும்
தின்று செரிக்காமல் கந்தலும் கதக்கலுமாக எடுக்கிற வாந்தியைப் போலப் படைப்பு மாறிவிடும்.
இப்படியெல்லாம் இல்லாமல் களத்தையும் காலத்தையும் பிரதிபலிக்காமல் அரூபமாகப் படைக்கப்படும் படைப்புகள் வெறும் டைரிக்குறிப்புகளாகவோ, அந்தரநிகழ்வுகளாகவோ, தன்னுணர்வுப்புலம்பல்களாகவோ, மனநிலை பிறழ்ச்சித்திரங்களாகவோ மாறிவிடும் ஆபத்தும் நிகழும்.
ஒரு படைப்பை எழுதும் எழுத்தாளர் தன்னுடைய பயிற்சியினாலும் ஈடுபாட்டினாலும் அந்தப் படைப்பின் சூட்சும உயிர் இருக்குமிடத்தைச் சரியாகக் கண்டுபிடித்து தன் கலையெனும் மாயத்தால் மெருகேற்றி வாசகர் முன்னால் படைப்பாக வைக்கும்போது வாசகர் உயிர்த்துடிப்புள்ள அந்தப் படைப்பின் ஒளிவீசும் தருணங்களை உணர்கிறான். அதன்வழியே தன்னையும் இந்த வாழ்க்கையையும் புரிந்து கொள்கிறான். அத்துடன் உலகத்தையும் மேன்மையடையச் செய்கிறான். அதற்கு ஒரு படைப்பு தன்னுடைய காலத்திலும் களத்திலுன் வலுவாகக் காலூன்றி நிற்க வேண்டும்.
அப்போது தான் ஒரு படைப்பு முழுமை பெறும். அந்த முழுமைக்காக ஒரு படைப்பாளி தீவிரமாக உழைக்க வேண்டும்.
நன்றி - புக் டே

No comments:
Post a Comment