ஆயிரத்தொரு கொக்குகள்
உதயசங்கர்
இன்று சரளாவுக்குப்
பிறந்த நாள். எப்போதும் போலக் காலையிலேயே எழுந்து விட்டாள். பல் தேய்த்துக் கொண்டே மொட்டை மாடிக்கு
வந்தாள். அவளுடைய வீட்டு மொட்டைமாடியில் நின்று சுற்றிலும் தெரியும்
மரங்களையும், வானத்தில் கூட்டமாய் குவிந்து கிடக்கும் வெண்மேகங்களையும்
பறவைகளின் சத்தத்தையும் கேட்டுக் கொண்டே பல் தேய்த்து வாய்க்கொப்பளித்துக் கொண்டிருந்தாள்.
“ தெனமும்
அப்படி மொட்டை மாடியில் பராக்கு பார்க்க என்ன இருக்கு? “ என்று
அம்மா கத்துவது காதில் விழுந்தது. அவள் அப்போது சிறகுகளை விரித்துப்
பறக்கும் ஒரு பறவை மேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த
மேகம் சிறிது சிறிதாகக் கரைந்து சிறு புள்ளியானது. சரளா கீழே
போவதற்காக படியிறங்கப் போனாள். அப்போது திடீரென வானத்தில் வெள்ளை
நிறத்தில் புள்ளிகள் தோன்றின. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரே நேரத்தில் இத்தனை புள்ளிகள் எப்படித் தோன்றின? இப்போது அந்தப் புள்ளிகள் இன்னும் அருகில் வந்தன. அருகில்
வர வர அந்தப் புள்ளிகள் கொக்குகளாக மாறின.
அட! கொக்குகள்.
ஒரு கொக்கு. இரண்டு கொக்குகளில்லை. நூற்றுக்கணக்கான
கொக்குகள் ஒன்றுபோலப் பறந்து வந்தன. சரளாவுக்கு ஆச்சரியத்தில்
வாய் திறந்தது. இவ்வளவு கொக்குகளை இப்போது தான் முதல்முறையாகப்
பார்க்கிறாள். ஒரு பெரும் கூட்டமே இடம் பெயர்ந்து போகிறது.
அவளுக்குக் கொக்குகளை அப்படிப் பிடிக்கும். அதன்
வெண்மை நிறம் அவ்வளவு அழகாக இருக்கும். அமைதியின் நிறம் வெண்மைதானே.
பள்ளிக்கூடம் போகும்வழியில் குளத்தின் ஓரத்தில் அசையாமல் ஒற்றைக் காலில்
நின்று கொண்டிருக்கும் கொக்குகளைப் பார்த்திருக்கிறாள். வீட்டிலும்
கூட விளையாட்டாக அப்படி ஒற்றைக்காலில் நின்று பார்ப்பாள். சில
நொடிகளுக்குப் பிறகு முடியாது. வானத்தில் கூட்டமாய் பறக்கும்போது
அதன் ஒழுங்கைப் பார்த்திருக்கிறாள். நேர்த்தியாக ’வி’ வடிவத்தில் பறப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறாள்.
இதை எல்லாம்
யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? இப்படி
நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கொக்குகள் எல்லாம் சரளாவின் மொட்டைமாடியை நோக்கியே
பறந்து வந்தன. முதலில் சரளாவுக்குப் பயமாக இருந்தது. கொக்குகளின் ’கர்ர்ர்க் கிர்ர்ரக்’ என்ற சத்தங்கள் பெரிதாகக் கேட்டன. அவ்வளவு கொக்குகளும்
மொட்டைமாடியில் இறங்கினால் என்ன ஆகும்? என்ன செய்வது என்று தெரியவில்லை.
அப்பாவிடம் சொல்லலாமா?
அவள் யோசிப்பதற்குள்
அந்தக் கொக்குகள் விரிந்த சிறகுகளை மடக்கி மொட்டை மாடியில் இறங்கின.
அட! என்ன ஆச்சரியம்! எல்லாம் காகிதக் கொக்குகள்.
திபு திபுவென காகிதக் கொக்குகள் குவிந்தன. சரளாவின்
கண்கள் இமைக்கவில்லை. காகிதக் கொக்குகள் வரிசையாக நின்றன.
கீழே இறங்கும்வரை கொக்குகளாக இருந்தன. இறங்கியதும்
காகிதங்களாக எப்படி மாறின? எல்லாக்கொக்குகளின் வாயிலும் அமைதியின்
அடையாளமான ஆலீவ் மரக்கிளை. சரளாவுக்குப் புரியவில்லை.
ஏதோ மாயாஜாலம் போல இருந்தது. அப்போது அந்தக் காகிதக்கொக்குகளில்
ஒரு கொக்கு பேசியது.
“ சரளா..
உனக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! நீடூழி வாழ்க!
“
என்றது. சரளா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“ எப்படி
என்னுடைய பிறந்த நாள் உனக்குத் தெரியும்? “
“ இந்த உலகத்திலுள்ள
அத்தனை குழந்தைகளின் பிறந்த நாளும் எங்களுக்குத் தெரியும். ஆனால்….”
என்று சொல்லிவிட்டு
அமைதியாக நின்றது.
“ ஆனால் என்ன
கொக்கே? “
“ உனக்குச்
சடாகோவைத் தெரியுமா? ”
சரளா உதட்டைப்
பிதுக்கினாள்.
“ நாங்கள்
ஜப்பானிலிலுள்ள ஹிரோஷிமா நகரிலிருந்து வருகிறோம்…இரண்டாம் உலகப்போரின்
போது அமெரிக்கா ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு விழுந்தபோது சடாகோவுக்கு இரண்டு வயது..
அவளுக்கு ஏராளமான கனவுகள் இருந்தன. நிறையப் படிக்க
வேண்டும். இந்த உலகத்திலுள்ள அத்தனை நாடுகளையும் சுற்றிவரவேண்டும்.
குழந்தைகளுக்கான கதைகள் எழுத வேண்டும். உலகக் குழந்தைகள்
மாநாடு நடத்த வேண்டும். ஆனால் பனிரெண்டு வயதிலேயே அவளுடைய கனவுகள்
கருகி விட்டன. இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா போட்ட அணுகுண்டுக்கதிர்வீச்சு
அவளைக் கொன்று விட்டது. ”
என்று சொல்லிவிட்டு
காகிதக்கொக்கு அஞ்சலி செலுத்துவதைப் போல அமைதியாக நின்றது. சரளாவும் சோகமாக நின்றாள்.
“ சடாகோ தான்
எங்களை உருவாக்கினாள். அவளுடைய தோழி சசுகோ, ஆயிரம் கொக்குகளைச் செய் சடாகோ.. கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்
என்று சொன்னதைக் கேட்டு ஆயிரம் காகிதக்கொக்குகளைச் செய்தாள். நம்பிக்கையுடன் செய்தாள். அவள் ஒவ்வொரு காகிதக் கொக்கைச்
செய்து முடிக்கும்போதும் கடவுளே நான் நீண்ட நாள் வாழவேண்டும்.. இந்த உலகில் போரே வரக்கூடாது.. குழந்தைகளுக்கு அமைதியான
உலகம் வேண்டும் என்று வேண்டிக் கொள்வாள். ஆனால் அவளுடைய எந்த
வேண்டுதல்களையும் கடவுள் கேட்கவில்லை. சடாகோவைக் கை விட்டு விட்டார்…
கடவுள் கை விட்டாலும் சடாகோவின் நம்பிக்கையை நாங்கள் சுமந்து கொண்டு
பறக்கிறோம்… “
“ கேட்பதற்கே
கஷ்டமாக இருக்கிறது.. இப்போதும் காசாவில், உக்ரைனில், போர் நடந்து கொண்டு தானே இருக்கிறது…
எல்லா இடங்களிலும் குழந்தைகள் தான் முதலில் இறந்து போகிறார்கள் ”
“ ஆமாம்..
நாங்கள் இப்போது அங்கே தான் போகிறோம்… எங்கு எல்லாம்
போர் நடக்கிறதோ அங்கே சடாகோவின் பொறுமை. அமைதி. நம்பிக்கை என்ற செய்தியைக் கொண்டு செல்கிறோம்.. போர்
இல்லாத அமைதியான உலகத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்…அதுதான் சடாகோவின் கனவு ” என்றது காகிதக்கொக்கு.
சரளாவின் கண்களில்
கண்ணீர் துளிர்த்தது.
“ இந்த பூமியில்
பிறக்கும் குழந்தைகள் நீண்ட காலம் வாழ்ந்து வயதாகி இயற்கையாக இறக்க வேண்டும்..”
என்று முணுமுணுத்தாள்
சரளா. அப்போது எங்கிருந்தோ ஒரு காகிதம் பறந்து வந்து சரளாவின் காலுக்குக்
கீழே விழுந்தது. சரளா அந்தக் காகிதத்தைக் கையில் எடுத்தாள்.
அந்தக் காகிதத்தில் குழந்தைகளின் சிரித்த முகங்கள் தெரிந்தன.
சரளாவின் கைகள்
தானாகவே மடிக்கத் தொடங்கின. சில நொடிகளில் அவள் கையில் ஒரு
காகிதக்கொக்கு.
சடாகோவின் காகிதக்
கொக்கு. இல்லை சரளாவின் காகிதக் கொக்கு.
சரளாவின் கையிலிருந்து
மெல்லச் சிறகுகள் விரித்துப் பறந்தது அந்தக் கொக்கு. அப்போது அதன் வாயிலும் ஆலீவ் மரக்கிளை.
கீழே தரையில்
காத்துக் கொண்டிருந்த ஆயிரம் கொக்குகளின் கூட்டத்தில் சேர்ந்தது சரளாவின் கொக்கு.
இப்போது ஆயிரத்தொரு
கொக்குகளும் மெல்ல எழும்பிக் காற்றில் பறக்க ஆரம்பித்தன. அப்போது தான் அந்த ஒலியைக் கவனித்தாள் சரளா.
” அமைதி அமைதி
அமைதி “
யுத்தமில்லாத
உலகம். மகிழ்ச்சியான குழந்தைகள் என்ற சடாகோவின் கனவும் மெல்லச் சிறகுகள்
விரித்துப் பறந்தது.
நன்றி - விஞ்ஞானத்துளிர்

No comments:
Post a Comment