Friday, 25 September 2026

தி.க.சி. எனும் இலக்கிய நாற்றங்காலின் கவிதைகளும் கடிதங்களும்

 

தி.க.சி. எனும் இலக்கிய நாற்றங்காலின் கவிதைகளும் கடிதங்களும்

உதயசங்கர்



முன்னுரை

தி.க.சி.என்ற மூன்றெழுத்தை உச்சரித்தாலே நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப்பாதையைச் செதுக்கிய முன்னோடிகளில் ஒருவர், புதிய எழுத்தாளர்களின் நாற்றங்காலாய் திகழ்ந்தவர், கடித இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர், இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், மார்க்சியத் திறனாய்வாளர், இலக்கியவிமரிசகர் என்று பன்முகசெயல்பாடுகளைக் கொண்ட ஆளுமையாக நம் கண்முன்னே விரிகிறார் திருநெல்வேலி கணபதி சிவசங்கரன்.

தன்னுடைய பதினாறாவது வயதில் வண்டிக்காரன் என்று சிறுகதையை பிரசண்டவிகடனில் வெளியிட்ட சிறுகதை எழுத்தாளராகவும், கிராம ஊழியனில் கவிதைகளை எழுதி கவிஞராகவும் தன்னை வெளிப்படுத்திய தி.க.சி.யின் நூற்றாண்டு விழா மிக முக்கியமான நிகழ்வெனக் கருதப்படவேண்டியது.

பதினாறு வயதில் 1941-ல் நெல்லை வாலிபர் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கிய காலம் தொட்டு 2014 ல் அவருடைய மறைவு வரை மார்க்சீயச்சித்தாந்தத்தில் பற்றுறுதி மிக்கவராகத் திகழ்ந்தவர் தி.க.சி. ஆனால் அதே நேரத்தில் மிகச்சிறந்த மனிதநேயராகவும் திகழ்ந்தவர். தமிழிலக்கியத்தின் அனைத்து இலக்கியப்பள்ளிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமரிசகர்களுடன் கருத்து ரீதியான மோதல்களைத் தீவிரமாக மேற்கொண்டாலும் தனிமனித நட்பையும் அன்பையும் பேணிய அருங்குணம் கொண்டவர் தி.க.சி. அதற்கு சாட்சியாக ஐம்பது ஆண்டுகாலம் கருத்து மோதல்களை மட்டுமே கொண்டிருந்த இலக்கிய விமரிசகர் வெங்கட் சுவாமி நாதனை நெல்லைக்குத் தன்னுடன் தங்கியிருந்து செல்லும்படி  மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வரவழைத்ததைப் பற்றி வெங்கட்சாமிநாதன் எழுதிய கட்டுரையே தி.க.சி.யின் உயர்தனிப்பண்பினைச் சொல்லும்.

19 ஆண்டுகளாய் பணிபுரிந்த வங்கியின் தொழிற்சங்கத்தலைவராக விளங்கிய தி.க.சி.யின் இன்னொரு முகம் பற்றி விரிவான தகவல்கள் இல்லை. தொடர்ந்து நிர்வாகம் அவரை பணியிட மாற்றங்களைச் செய்து அலைக்கழித்தாலும் அயராது எங்கு சென்றாலும் அங்கே வங்கிப்ப்பணியாளர் தொழிற்சங்கத்தைக் கட்டுவதில் முன்னணி வீர்ராக இருந்தார் தி.க.சி.

எனவே தி.க.சி.யின் வாழ்வையும், இலக்கியப்பணிகளையும் பற்றி ஆய்வுகளை நடத்துவதென்பது தமிழ்நாட்டின் கலை இலக்கியப்பண்பாட்டுச் செயல்பாடுகளையும், தொழிற்சங்கச்செயல்பாடுகளையும் வரலாற்று நோக்கில் பகுத்தாராய்வதற்கும் தற்காலச்சூழலுடன் பொருத்திப் பார்ப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

விடுதலைப் போராட்ட காலத்தில் தான் பொதுவுடமைச் சிந்தனை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வளரத்தொடங்கியது. புதிய சித்தாந்தம், புதிய சிந்தனைகள், புதிய பார்வைகள் இளைஞர்களை ஈர்த்தது. சோவியத்தின் வரலாற்றுப்புகழ் மிக்க புரட்சியின் விளைவாக இலக்கியத்திலும் புதிய கலைக்கோட்பாடுகள் உருவாயின. விமரிசன யதார்த்த வாதம், சோசலிச யதார்த்த வாதம் போன்ற கோட்பாடுகள் இங்கே பொதுவுடமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கின. மற்றொரு பக்கத்தில் முதலாளித்துவத்தின் விளைபொருளான நவீனத்துவம் சமூகத்தையும் தனி மனிதர்களையும் எதிரெதிராக நிறுத்தியது.  எனவே இயல்பாக இரண்டு இலக்கியப்போக்குகள் உருவாகிக் கொண்டிருந்தன. இவ்விரண்டு போக்குகளின் வழியேயும் மிகச் சிறந்த படைப்புகளைத் தமிழிலக்கியத்துக்குக் கொடையாக கொடுத்த மிகச் சிறந்த எழுத்தாளர்கள் இருந்தார்கள்.

ஆரம்பத்தில் வானமாமலை, தொ.மு.சி, வல்லிக்கண்ணன் ஆகியோருடன் இணைந்து முற்போக்கு இலக்கியத்தை வளர்ப்பதிலும், நெல்லை வாலிபர் சங்கம், நெல்லை கலைஞர் சங்கம், நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகளை உருவாக்குவதில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார் தி.க.சி. அந்தக் காலத்தில் புதுமைப்பித்தனின் படைப்புகளைக் குறித்து தனிமனிதவாதம், நம்பிக்கை வறட்சி போன்ற கருத்தியல் கொண்டவர் என்ற எதிர்மறையான விமரிசனத்தை வைத்திருந்தாலும் பின்னால் அதை மாற்றிக் கொண்டவர் தி.க.சி.

தாமரையின் ஆசிரியத்துவத்தில் வெளியான 100 தாமரை இதழ்களில் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கினார். அவருடைய மிகப்பெரும் சாதனையாகச் சொல்லலாம். முற்போக்கு சமூகப்பார்வையுடன் எழுத வந்த இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் அரவணைப்பதிலும் தன் வாழ்நாள் முழுவதும் தனிக்கவனம் கொண்டிருந்தார் தி.க.சி. மாற்றுச்சிந்தனையுடன் வெளிவந்த படைப்புகளை விமரிசனம் செய்தாலும் அதிலிருக்கும் முற்போக்கான கூறுகளையும், கலாப்பூர்வமான பகுதிகளையும் பாராட்டவும் தயங்கியதில்லை. கிட்டத்தட்ட நான்கு தலைமுறை எழுத்தாளர்களுடனும் இலக்கிய அமைப்புகளுடனும் தொடர்பு வைத்திருந்தவர். காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்த தகைசால் ஆளுமை தி.க.சி. என்றால் மிகையில்லை.

தி.க.சி.யின் கடிதங்கள்

வல்லிக்கண்ணனைத் தன்னுடைய இலக்கிய ஆசானாகக் கருதிய தி.க.சி.யின் கடிதங்கள் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லையென்றே கருதுகிறேன். ஏனெனில் தி.க.சி.யின் கடிதம் கிடைக்கப்பெறாத எழுத்தாளர்களே தமிழ்நாட்டில் இருக்கமாட்டார்கள். அஞ்சலட்டை விமரிசகரென்று ஏகடியம் பேசினாலும் கடிதங்களை எழுதுவதிலிருந்து அவர் ஒரு போதும் பின்வாங்கியதில்லை. ஆரம்ப காலத்தில் அவருடைய ஆப்த நண்பர்களுக்கு எழுதுகிற கடிதங்கள் விரிவாவானதாக இருந்தன. அவர் சோவியத் நாடு செய்தித்துறையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒரு அஞ்சலட்டைக்குள் தன்னுடைய கருத்துகளை, அபிப்ராயங்களை, விமரிசனங்களை முன்வைக்கும் கலையைக் கற்றுக் கொண்டார்.

கடித இலக்கியம் என்ற புதிய வகைமையைத் தமிழில் உருவாக்கியதில் முன்னோடி எழுத்தாளர்களின் கடிதங்களுக்கு பெரும்பங்குண்டு. கு.அழகிரிசாமியும் கி.ரா.வும் எழுதிய கடிதங்கள், தி.க.சி.யும் வல்லிக்கண்ணனும் எழுதிய கடிதங்கள், சுந்தரராமசாமியின் கடிதங்கள், வண்ணதாசனின் கடிதங்கள், என்று கடிதங்களே நூல்வடிவம் பெற்று வாசகர்களால் கொண்டாடப்பட்டது. தி.க.சி.யும் தன்னுடைய கடிதங்களில் வாசித்த படைப்புகளைப் பற்றிய விரிவான ஆய்வை முன்வைப்பதில்லை. ஆனால் சுருக்கமான, அதே நேரம் காத்திரமான விமரிசனங்களையும், தன்னுடைய கருத்துகளையும் தெளிவாக முன்வைக்க்க்கூடியவர். ,

   அஞ்சலட்டைக்குள் அவருடைய கடித அமைப்பு இப்படி இருக்கும்.

1.   எழுத்தாளரின் படைப்பு குறித்த பாராட்டு அல்லது விமரிசனம்.

2.   அந்தப் படைப்பில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் அல்லது விமரிசனத்துக்குரிய அம்சம்

3.   எழுத்தாளரை ஊக்கப்படுத்தும் வாழ்த்துகள்

4.   தொடர்ந்து எழுதத்தூண்டும் வாழ்த்துகள்

பெரும்பாலும் இத்தகைய அமைப்பே அவருடைய கடிதங்களில் இருக்கும். அஞ்சலட்டைக்குள் இத்தனை விஷயங்களையும் சொல்வதற்கு எத்தனை சிந்தனைத்தெளிவும், இலக்கியம் குறித்த பார்வையும் இருக்க வேண்டும்!. இத்தனைக்கும் யார் மனதையும் புண்படுத்தாத விதத்தில் எழுதுகிற கலையைக் கற்றவர் தி.க.சி. அவருடைய விமரிசனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் என்ற் நூலுக்கு 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது மிகப்பொருத்தமாகவே வழங்கப்பட்டது.

தி.க.சி.யின் கடிதங்களைத் தொகுக்கும் பணியை வே.முத்துக்குமார் போன்ற தி.க.சி.அன்பர்கள் முன்னெடுக்க வேண்டும். அப்போது தி.க.சி.யின் விமரிசனக்கோட்பாடுகளைக் குறித்து இன்றைய இளம் வாசகர்கள் எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.

தி.க.சி.யின் கவிதைகள்

1941-ல் நெல்லையில் இந்தியப் பொதுவுடமைக்கட்சியின் கிளையைத் தொடங்கிய சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சியின் தலைமையில் என்.டி.வானமாமலை, தொ.மு.சி. ஆகியோருடன் இணைந்து நெல்லை வாலிபர் சங்கத்தைத் தொடங்கிய போது அதன் செயலாளராக தி.க.சி. இருந்தார். நெல்லைக்கருகிலிருந்த இராஜவல்லிபுரத்தில் கையெழுத்துப்பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த வல்லிக்கண்ணனைச் சந்தித்தபிறகு இருவரும் சேர்ந்து இளந்தமிழன் என்ற கையெழுத்துப்பத்திரிகையைத் தொடங்கி நடத்தினர். அன்று தொடங்கிய அவர்களது நட்பின் பயணம் இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது. வல்லிக்கண்ணனும், தி.க.சி.யும் தென்காசியில் டி.கே.சிதம்பரமுதலியார் நடந்த வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் பல கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களுடைய இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டனர். அரசு வேலையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளராக சென்னை சென்ற வல்லிக்கண்ணனே தி.க.சி.யை எழுதத்தூண்டினார். அவர் வழியாகவே வண்டிக்காரன் என்ற சிறுகதை பிரசண்ட விகடனில் பிரசுரமானது. பிறகு கிராம ஊழியன், கவிக்குயில் ஆகிய பத்திரிகைகளில் தி.க.சி.யின் கவிதைகள் வெளியாயின.

அவருடைய கவிதைகளை வே.முத்துக்குமார் தொகுத்து தி.க.சி. கவிதைகள் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அந்தத் தொகுப்பில் பத்தொன்பது கவிதைகள் இருக்கின்றன.

தமிழில் புதுக்கவிதையின் தொடக்க காலமென்று சொல்லலாம். கிராம ஊழியனில் கௌரவ ஆசிரியராக கு.ப.ரா. இருந்த காலத்தில் தி.க.சி.யின் கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. பத்திரிகையில் பிரசுரமான தி.க.சி.யின் முதல் கவிதை வல்லிக்கண்ணனின் சகோதரர் முருகேசனின் மறைவையொட்டி எழுதப்பட்ட இரங்கற்பா. இந்தக் கவிதையைக் குறித்து தி.க.சி. கூறும்போது,

“ மிக இளவயதிலேயே எலும்புருக்கி நோயினால் மறைந்த முருகெசனின் நினைவு என்னை அலைக்கழித்தது. அந்தத் துயரத்திலிருந்து விடுபடும்பொருட்டு ஒரு இரங்கற்பா எழுதி கிராம ஊழியனுக்கு அனுப்பிவைத்தேன். அது உடனே பிரசுரமாயிற்று. என்னுடைய கவிதையிலேயே சிறந்த கவிதையாக்க் கருதுவது இதைத்தான். ‘ UNWEPT, UNSUNG, UNHONOURED “ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அந்த முறையில் இந்தக் கவிதையைப் படைத்தேன்..”

என்கிறார்.

தொகுக்கப்பட்டிருக்கும் பத்தொன்பது கவிதைகளில் பத்து கவிதைகள் கிராம ஊழியனிலும், ஆறு கவிதைகள் கவிக்குயில் மலரிலும் கண்ணதாசனில் ஒரு கவிதையும் சதங்கையில் இரண்டு கவிதைகளும் வெளிவந்திருக்கின்றன.

காலமே படைப்பாளிகளை உருவாக்குகிறது. அந்தந்தக் காலத்து விழுமியங்களே அந்தப் படைப்பாளியின் கருத்து நிலையைத் தீர்மானிப்பதாக இருக்கும். அப்படி தி.க.சி.யின் பெரும்பாலான கவிதைகளில் அந்தக் காலத்தில் நவநாகரீகமென்ற பெயரில் பசப்பித்திரியும் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

ஜம்பரும் ஜாக்கெட்டும்

ஜாலக்காய் அணிந்து கொண்டு

பம்மும் இரு மார்பும்

பாதிவரை திறந்துவிட்டு

பனிரெண்டு முழப்புடவை

பாதி உடல் வெளிச்சமிட

கன்னி என்று பேர் பெற்றாய்

கன்னுதடி என மனசு

என்று தொடங்கும் புதுமைப்பெண்ணுக்கு என்ற கவிதை

படித்த தினால் பயனென்ன

பழக்கத்தில் இல்லையெனில்?

புன்மைகளை ஒழியுங்கள்

போலிகளை அழியுங்கள்

புத்துலகம் வந்ததென்று

புறப்படுங்கள் பேரி கொட்டி!

என்று முடிக்கும்போது தி.க.சி. எத்தகைய பெண்களைப் பற்றிச் சொல்கிறாரென்று புரிந்து கொள்ளமுடியும். இந்தக் கவிதை எழுதப்பட்ட ஆண்டு 1944 என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மின்னலையும் பெண்ணாக உருவகித்துத் தன்னைச் சேர விரும்பும் கவிதை மின்னலுக்கு. தொடங்கும் வரிகள்,

மின்னற்குலமகளே

மேகத்தின் கண்மணியே

உன்

கன்னத்து முத்தமெலாம்

கவிதைக்கு வித்தன்றோ?

என்ற வரிகளில் கவித்துவத்தின் மலர் மலரத் தொடங்குகிறது. பல கவிதைகள் நேரடியாக உரையாடலாகவோ, வாசகரை அழைத்துப் பேசுவதாகவோ உரத்து முழங்குவதாகவோ இருப்பதை அந்தக் காலத்தின் பின்னணியில் பார்க்க வேண்டும். அன்றைய காலத்தில் முன்னோடி முற்போக்கு எழுத்தாளர்கள் புதுக்கவிதையென்ற வடிவத்தை ஏற்றுக் கொள்ளாமலிருந்த காலத்தில் புதுக்கவிதை வடிவத்தில் முற்போக்கான கருத்தியலைச் சொல்லமுடியுமென்று நிர்ப்பந்தம் இருந்ததையும் கணக்கில் கொண்டால் தி.க.சி.யின் கவிதைகளின் உள்ளார்ந்த தனமையை உணரமுடியும்.

அன்றைய காலத்தில் பத்திரிகையின் நிலைமையும் அதில் வேலை செய்யும் ஆசிரியரின் நிலைமையையும் கூட கர்ப்பத்தடை என்ற கவிதையில் சொல்லியிருப்பார்.

திருட்டுக்கு வந்தனைகள்

தீமைபுரிசோதர்ர்ருக்கு

பூமாலை

உருட்டிப்பிழைக்கும் ஒன்றறியாப் பேதையருக்கு

திருக்குலத்துப் பட்டம்

மற்றவர்கள் தீண்டாதார்

காதல் எனும் பேரில்

கருவாட்டு நாற்றமதை

கடைபரப்பிக்

கலை என்பார்

காந்திக்கு ஜே என்பார்

கருப்பு மார்க்கெட் வியாபாரம்

எதிர்க்கட்சி பேசினவன்

இருப்பிடத்தை

தீயுண்ணும்.

( கிராம ஊழியன் 1946 )

அங்கே என்ற கவிதையில்

சாக்கடைச் சோற்றை

யாம் உண்கிறோம்

அங்கு

சர்க்கரைப் பொங்கலை

ஜமாய்க்கிறார்

கந்தையால் மானத்தைக்

காக்கிறோம் வாடைக்காற்றிலே

நடுங்கித் துடிக்கிறோம்

சிந்தையிலே அருளிலாப்

பாதகர் – அங்கே

சீமைத்துணிக்கு

அலைகிறார்

என்று தொடங்கும் கவிதை

எங்கள் குறைகளை

இயம்பினேன்

அதற்கின்றே பரிகாரம்

தேடுவீர்

இல்லாத சாதி என்

றிகழ்ந்திடல் இனி

நில்லாது எங்கள்

கைச்சுத்தியல்.

என்று தன்னுடைய கொள்கைவழி நின்று எச்சரிக்கிறார் கவிஞர். அதே போல உலகப்புகழ்பெற்ற பாப்லோ நெருதாவின் கவிதைகளிரண்டை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அவருடைய கடைசிக்கவிதையும் அடங்கும்.

தொடர்ந்து கவிதைகள் எழுதாமல் போனதற்கு தி.க.சி.யே காரணம் சொல்கிறார்,

“ கிராம ஊழியனின் கௌரவ ஆசிரியராக கு.பா.ரா. இருந்த காலத்திலேயே என்னுடைய கவிதைகள் பல அதில் பிரசுரமாயின என்பதில் எனக்குப் பூரிப்பு தான். ஆனால் கலைவாணன் எனும் கவிஞனின் அற்புதக்கவிதைகளைக் கிராம ஊழியனில் தொடர்ந்து படித்த பிறகு கவிஞன் என்ற பட்டப்பெயரை இழக்க வேண்டிய முடிவை நானே மேற்கொண்டேன்..”

எத்தனை பேருக்கு இத்தகைய பெருந்தன்மையும் பாராட்டுணர்வும் வருமென்று யோசித்துப் பாருங்கள். அவர் தான் தி.க.சி. தொடர்ந்து அவர் தன் காலத்தின் படைப்பாளிகளை அங்கீகரித்த்தற்கு இத்தகைய பரிவுணர்வும், பெருந்தன்மையும் காரணம் என்று சொல்லலாம்.

முடிவுரை

தமிழிலக்கியத்துக்கு தி.க.சி. எனும் ஆளுமையின் பங்களிப்பு என்பது முற்போக்கு இலக்கிய மரபை உயர்த்திப் பிடித்து அதை வளர்த்தெடுத்தது, புதுக்கவிதை வரலாற்றில் முற்போக்கு இணை மரபை உருவாக்கியது, தாமரை பத்திரிகை வழியே புதிய படைப்பாளிகளின் வரவேற்று அவர்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தியது, இலக்கிய இசங்களின் உரையாடலையும், விவாதங்களை ஊக்குவித்தது. கருத்து வேறுபாடுகளிருந்தாலும் அனைத்து எழுத்தாளர்களிடமும் நட்பும் அன்பும் பேணியது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இறுதியாக தி.க.சி. ஒரு விமரிசகர் என்ற வகையிலும், ஒரு முற்போக்கு இலக்கியவாதி என்ற வகையிலும், புதிய எழுத்தாளர்களின் நாற்றங்கால் என்ற வகையிலும் தமிழ்ப்புனைவு மரபை மாற்றியதில் முக்கியப்பங்கு வகித்தவர் என்ற வகையிலும் தமிழிலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடம் தி.க.சி.க்கு உறுதியாக உண்டு.

நன்றி - புக் டே

 

No comments:

Post a Comment