Monday, 12 October 2026

உண்மையைத் தேடும் கலை

 

 ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 8

உண்மையைத் தேடும் கலை

உதயசங்கர்



பகுத்தறிவுள்ள மனிதன் தோன்றிய காலத்திலிருந்து உண்மையைத் தேடுகிறான். பிரபஞ்சம், இயற்கை, உயிர்கள், பிறப்பு, இறப்பு, காலம் என்று அனைத்தைப் பற்றிய உண்மையைத் தேடிக் கொண்டேயிருக்கிறான். அந்தப் பயணத்தில் தான் இத்தனை இத்தனை அறிவுத்துறைகள் தோன்றின. அதே போல ஆதிப்பொதுவுடமைக்காலத்தில் எளிமையாக இருந்த மனித வாழ்க்கை மனித நாகரீகம் அடைய அடைய மிகவும் சிக்கலான பின்னப்பட்டதாக மாறியதன் பின்னணியிலுள்ள உண்மையைக் கலைவழியே தேடுகிறான். மனதின் இண்டு இடுக்குகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறான். சமூக மாற்றங்களுக்கேற்ப மாறும் மனிதமனச் சிக்கல்களை விடுவிக்க கலையைப் பயன்படுத்துகிறான். அதன் புதிர்வழிகளையும் மர்மங்களையும் கண்டுபிடிக்க தானே ஈகியாகிறான். எளிய உணமையாக இருந்த நிலை மாறுகிறது. இப்போது உண்மையே சிக்கலான வடிவத்தையும் உள்ளட க்கத்தையும் பெற்றிருக்கிறது. எது உண்மை என்பதில் குழப்பம் நிலவுகிறது. அந்தக் குழப்பத்துக்கு படைப்பாளிகளும் ஆளாகிறார்கள். எனவே பகுதி உண்மைகளையோ, சிதைந்த உண்மைகளையோ, சிதறடிக்கப்பட்ட உண்மைகளையோ முழு உண்மை என்று கருதி படைக்கப்படும் படைப்புகளும் வெளிவருகின்றன. உலக இலக்கிய வரலாற்றில் அப்படியான எண்ணற்ற படைப்புகளைக் காணலாம்.

 கலையும் ஆதியிலிருந்த எளிமையிலிருந்து இன்னும் இன்னும் சிக்கலான வடிவங்களுக்கும் வெளிப்பாட்டு முறைகளுக்கும் உருமாறிக்கொண்டேயிருக்கிறது. கலையின் மாயாஜாலவித்தைகளும் தன்னுடைய முகத்தை மாற்றிக் கொண்டேயிருக்கிறது.

மனிதன் தோன்றியதிலிருந்தே மந்திரவாதியாக இருக்கிறான். உழைப்பு தான் அவனுடைய மந்திரச்சக்திக்கான அடிப்படை ஆதாரம். அதனால் பூமியில் பிறந்த அத்தனை உயிர்களும் சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும்போது மனிதன் மட்டும் தான் சூழலைத் தகவமைக்கிறான். மாயாஜாலங்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறான்.. அதே நேரம் அந்த மாயாஜாலங்கள் உருவாக்கும் பலன்களை தானே அனுபவிக்க வேண்டுமென்ற சுயநலவெறியும் வளர்கிறது. அந்த வெறியினால்  ஆதிக்கம், வன்முறை, அடக்குமுறை, சுரண்டல், ஆக்கிரமிப்பு, அடிமைத்தனம் யுத்தம் என்று அனைத்துவிதமான கொடூரங்களும் சமூகத்தில் பிரயோகப்படுத்தப்படுகின்றன. கலை இந்தக் கொடூரங்களின் பின்னாலுள்ள மனதின் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது. இந்தக் கொடூரங்களை முறியடிக்கும் மனித முயற்சிகளின் பின்னாலுள்ள மனதின் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது. இரண்டு நிலைகளுக்கும் அடிப்படையான சமூக யதார்த்தத்தைப் பதிவு செய்கிறது. அப்படிப் பதிவு செய்யும்போது உண்மையின் பக்கமே ஒரு படைப்பாளி நிற்பான். அவன் உணமையின் பக்கம் நிற்கவேண்டுமென்று கோருவதற்கு சமூகத்துக்கு உரிமை இருக்கிறது. அப்படி அவன் உண்மையின் பக்கம் நிற்கவில்லையென்றால் வரலாற்றுக்கும் சமூகத்துக்கும் துரோகம் செய்தவனாவான்.

அற்பமான சலுகைகளுக்காகவோ, ஆதிக்க மனோநிலையை நியாயப்படுத்துவதற்காகவோ, ஏற்றத்தாழ்வுகளை இயல்பெனக் கருதும் மனநிலையினாலோ, பணத்துக்காகவோ, புகழுக்காகவோ ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்புகளில் சமூகத்தின் உண்மையைப் பேசாமல் போனால் அந்தப் படைப்புகள் மிகவிரைவில் காலாவதியாகி விடுமென்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, வரலாற்றுச்சக்கரத்தைப் பின்னோக்கி சுழற்றும் தவறைச் செய்தவனாவான்.

எது முழு உண்மை? எந்த சமூக உண்மையின் பின்னால் பெருந்திரளான ஒடுக்கப்பட்ட மக்களும், பாட்டாளி மக்களும் விவசாயப்பெருங்குடிகளும்  அணிவகுத்து நிற்கிறார்களோ, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் போராடிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய உண்மையைச் சொல்லவேண்டும்., யாரும் யாரையும் சுரண்டாமல், ஆதிக்கம் செலுத்தாமல், அடக்குமுறை செய்யாமல் வாழவிரும்பும் பெரும்பான்மை மக்களின் உண்மையைச் சொல்லவேண்டும். சமூகத்தில் அன்பையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்ட விரும்பும் மக்களின் உண்மையைச் சொல்ல வேண்டும்.

அந்த மக்களுக்கு அவர்களின் உள்ளார்ந்த இலட்சியம் தெரியாமல் இருக்கலாம். அதை உணரமுடியாமல் ஆளும்வர்க்கத்தின் தத்துவத்தினால் பீடிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். அதன் ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி தங்களை இழந்தவர்களாக இருக்கலாம்.

அந்த மக்கள் திரளின் வாழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகப் படைப்புகள் வரவேண்டும். தாங்கள் வாழும் வாழ்க்கையின் அவலத்துக்கான காரணத்தை உணர்த்தும் விதமாகப் படைப்புகள் வரவேண்டும். அந்த வாழ்வின் சாராம்சத்தை அவர்கள் அறிந்து கொள்ளும்விதமாகப் படைப்புகள் வரவேண்டும். அவர்களுடைய தன்னுணர்வில் தலையீடு செய்யவேண்டும். சமூக யதார்த்தத்தை முழுமையாக உள்வாங்கி அதைக் கலையாக மாற்றுவதிலும் அந்த மாற்றத்தின் ரசவாதத்தில் தன் பகுத்தறிவைக் கொண்டு கட்டுப்படுத்தித் தான் விரும்பும் விளைவுகளை வாசகர்களிடம் ஏற்படுத்த வேண்டும். இதுவே ஒரு எழுத்தாளனின் உச்சபட்ச இலக்காக இருக்க வேண்டும்.

சமூகத்தில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் உண்மையைத் தேடும் இலக்கியத்தின் கச்சாப்பொருள் வாழ்க்கை தானென்பதை ஒருபோதும் எழுத்தாளன் மறந்து விடக் கூடாது.

நன்றி - புக் டே

No comments:

Post a Comment