Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Wednesday, 11 September 2013

மற்றொரு நூல் வெளியீடு

மகத்தான தியாகங்களால் ஆனது சாதாரணர்களின் வாழ்க்கை. அனுதினமும் தியாகம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தாங்கள் ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணராமலே. ஒரு புறம் சிலரிடம் குவியும் செல்வமும் மறுபுறம் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அவலமும் கொண்ட இந்த அசமத்துவ சமூகத்தை இந்தச் சாதாரண மக்களே இயக்குகிறார்கள். சமூகத்தின் சமத்துவத்திற்காகவும் அவர்களே போராடுகிறார்கள். அவர்கள் புகழுக்காக அல்ல. அவர்களுடைய வாழ்வின் நெருக்கடி அவர்களைப் போராடத் தூண்டுகிறது. அந்தப் போராட்டம் என்பது அவர்களுக்காக மட்டுமில்லாமல் மானுடம் முழுமைக்குமான விடிவுக்காக போராட்டமாக உருமாறுகிறதுDSC00192 அவர்கள் தான் இந்தப் பூமியில் கதாநாயகர்கள் வரலாற்றை இயக்குபவர்கள். வரலாற்றை உருவாக்குபவர்கள். நான் அவர்களின் பக்கம் நிற்பதையே விரும்புகிறேன்.

- முன்னுரையிலிருந்து…

நினைவு என்னும் நீள்நதி

( இன்னும் சில நண்பர்கள், எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் )

விலை – ரூ. 120/  

வெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சென்னை.DSC00134

Monday, 26 November 2012

கலாமோகினியின் கடைக்கண்பார்வை

Impressionism-Oil-Painting-001-  

உதயசங்கர்

 

80 களின் துவக்கத்தில் இலக்கியக்கோட்டி பிடித்து எழுத்தாளராவதைத் தவிர வேறு மார்க்கமேயில்லை என்று நாங்கள், நான், நாறும்பூநாதன், சாரதி, திடவைபொன்னுச்சாமி, அப்பணசாமி, கோவில்பட்டி காந்திமைதானத்து பொட்டல்வெயிலில் சத்தியம் செய்திருந்தோம். காணாததைக் கண்ட மாதிரி அவதி அவதியாய் புத்தகங்களைத் தின்று தீர்த்தோம். அதுவரை தெரிந்த உலகமே இப்போது வேறொன்றாய் தெரிந்தது. உலக, இந்திய, தமிழ், எழுத்தாளர்களோடு ஏற்பட்ட பரிச்சயம் எங்கள் நடையையே மாற்றி விட்டது. தரையில் கால் பாவியதாக நினைவில்லை. நாங்கள் வேறு பிறவிகள் என்ற நினைப்பு. பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி, கு.பரா., சுந்தரராமசாமி, கு.சி.பா, டி.செல்வராஜ், கி.ரா, வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, என்று வாசித்து வாசித்துத் தீரவில்லை. வாசிக்கும்போதும் வாசித்து முடித்தபிறகும் எங்களுக்கு தோன்றும் முதல் கேள்வி “ எப்படிரா எழுதறாங்க..? “ என்பது தான். அப்படியே அழுவதற்கும், சிரிப்பதற்கும், கோபப்படுவதற்கும், காதலிப்பதற்கும் வைக்கிறதே எழுத்து. எழுத்தாளர்கள் தான் இந்த உலகத்தை ஆளமுடியும் என்று அப்பாவியாய் நினைத்திருந்தோம். எங்கள் கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள்.எனவே எழுத்தாளர்களைச் சந்திப்பதில் பேராவல் கொண்டிருந்தோம். ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்துகளையும் படிக்கும்போது ஒரு சித்திரம் அந்த எழுத்தாளரைப் பற்றி உருவாகும். எழுத்தாளர்களை இந்த பூமியில் பிறந்த அதிசயப்பிறவிகளாக எண்ணி மணிக்கணக்காக அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்.

யாரையேனும் எழுத்தாளர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்களில் பக்தியுணர்வு தோன்றிவிடும். அவர்களுடைய நடையுடை பாவனைகளை, அவர்கள் பேசும் முறையை, அவர்கள் சிரிப்பதை, அவர்கள் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாகக் கவனிப்போம். அவர்களுடன் இருக்கும் நேரம் முழுவதும் ஒரு பணிவு எங்களிடம் இருக்கும். எல்லா எழுத்தாளர்களிடமும் தவறாமல் கேட்கிற கேள்வி “ நீங்க எப்ப சார் எழுதுவீங்க? ராத்திரியிலா காலையிலா எந்த நேரம் வேணும்னாலும் எழுத உட்கார்ந்திருவீங்களா? “ அவர்கள் சொல்கிற பதிலில் தான் எங்கள் எதிர்கால எழுத்துலகமே இருப்பதைப் போல அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்போம். மாக்சிம் கார்க்கியின் எப்படி எழுதுவது? அலக்ஸி டால்ஸ்டாயின் எழுதும் கலை என்று எழுதுவதைப் பற்றிய வியாக்கியானங்களை வேறு படித்திருந்தோமா. எங்களைப் பாடாய்ப்படுத்தியது சந்தேகங்கள். நாங்கள் சந்தித்த எழுத்தாளர்களையும் அந்தச் சந்தேகங்களின் கொடுக்குகளால் கொட்டிக் கொண்டிருந்தோம். அவர்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குத் திருப்தியில்லை. எதையோ மறைக்கிறார்கள். அந்த சூக்குமத்தைச் சொல்லிக் கொடுக்க மறுக்கிறார்கள் என்று பின்னர் பேசிக் கொண்டிருப்போம். ஏனெனில் நாங்கள் அப்போது வேலையின்றிச் சுற்றிக் கொண்டிருந்ததால் எப்போது வேண்டுமானாலும் எழுதிப்பார்க்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால் எழுதினால் எழுத்து தான் எழுத்து..எழுத்து.. வரவில்லை. அதனால் தான் எழுத்தாளர்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து ரகசியத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம்.

இடைசெவல் போய் கி.ரா.வைப் பார்த்தால் அப்படி ஒரு ஒழுங்கு. சுத்தம். நறுவிசு. குடிக்கிற செய்யது பீடியைக் கூட தேர்வு செய்து அதன் முனையை, அருகிலேயே வைத்திருக்கும் கத்தரிக்கோலை வைத்து கத்தரித்து பற்றவைப்பார். அவருடைய நடையுடை பாவனைகளில் இருக்கும் நேர்த்தி யாவரையும் கவர்ந்து விடும். பூமணியிடம் பேசிக் கொண்டிருந்தால் தினமும் அதிகாலை எழுந்து எழுதுவேன் என்று சொல்லுவார். சுந்தரராமசாமி டைப்ரைட்டரில் தான் கதை எழுதுவார் என்று கேள்விப்பட்டிருந்தோம். இப்படி ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் கேட்டாலும் எங்களுக்கு ஒரு கருத்து உருவாகிக் கொண்டிருந்தது. அது கோவில்பட்டி இலக்கியவட்டத்தின் கருத்து. அப்படியெல்லாம் தினசரியோ, காலையோ, மதியமோ, இரவோ, நள்ளிரவோ, எழுத முடியாது. கலைஎழுச்சி வரவேண்டும். அருள் வந்த மாதிரி, காய்ச்சல் வந்த மாதிரி உடம்பு சூடு ஏற வேண்டும். கைகளில் ஒரு நடுக்கம். இனி எழுதாமலிருக்க முடியாது என்கிற மாதிரி ஒரு வெறி, இடம், பொருள், காலம், பற்றிய பிரக்ஞை ( அப்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தாத இலக்கிய உரையாடல்களே கிடையாது. அதான் அந்த வார்த்தையே ஓடி ஒளிஞ்சிருச்சி போல ) இருக்கக் கூடாது. என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்போம். என்ன வேப்பிலையடிச்சாலும் எங்களுக்கு அருள் வரவில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் நாங்கள் விட்டுவிடுவோமா? தினசரி ஒரு கதை எழுதிக் கொண்டு வரவேண்டும் என்று எங்கள் சபையில் முடிவு செய்தோம். ஒரு பக்கமாக இருந்தாலும் சரி. எழுதவேண்டும். எப்படியாவது கலாமோகினியின் கடைக்கண்பார்வையை எங்கள் பக்கம் திருப்பி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டோம். கலைஎழுச்சி அல்லது கலைஅருள் வருவதற்கு வேறு வெளி உபகரணங்களைப் பயன்படுத்தவும் யோசித்தோம். மற்ற எழுத்தாளர்கள் என்னென்ன உபகரணங்களை பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ச்சி செய்தோம். நிறைய டீக்களைக் குடித்தோம். பீடி பிடித்துப் பார்த்தோம். காசு இருந்தால் அல்லது ஓசியென்றால் வில்ஸ்பில்டர் வாங்கிக் குடித்தோம். பாரதி கஞ்சா அடித்து விட்டுத்தான் கவிதை எழுதுவானாமே என்று ஒரு நண்பர் சொல்ல எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சாவைச் சம்பாதித்து அதை சிகரெட்டிலோ பீடியிலோ அடைக்கத் தெரியாததினால் சூடான டீயில் கலந்து குடித்துப் பார்த்தோம். சிரிசிரியென்று சிரித்து உருண்டதும், நடை நடையென்று ஒரே தெருவில் நடந்து கொண்டேயிருந்ததும் தான் மிச்சம். கலாமோகினி எங்கே போனாள் என்றே தெரியவில்லை. நாங்கள் இருந்த திசைப்பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

இதற்கிடையில் தினமும் எழுதிக் கொண்டுவரவேண்டும் என்ற எங்கள் முடிவு ஒரு வாரத்தில் காலமாகி விட்டது. மறுபடியும் “ எப்படிரா எழுதறாங்க..? “ என்ற முதல்கேள்வியில் வந்து நின்றோம். சிலசமயம் வண்ணதாசனின் கலைக்கமுடியாத ஒப்பனைகளைப் படித்து விட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும். வண்ணநிலவனின் எஸ்தர் படித்து விட்டு அதன் உணர்ச்சி வேகம் அடங்குமுன்னே கதை எழுதுவோம். அப்படியே வண்ணநிலவன் கதை மாதிரியே இருக்கும். ஒருவருக்கொருவர் வாசித்து விட்டு “ எலேய் வண்ணதாசன் இதை விட நல்லா எழுதியிருக்காருடா..” என்றோ “ டேய் காப்பியடிக்காதே வண்ணநிலவனைக் காப்பியடிக்காதே..” என்றோ திட்டிக் கொள்வோம். அப்புறம் என்ன கதையெழுதினாலும் இது கு.அழகிரிசாமி கதை மாதிரி இருக்கோ, பூமணி கதை மாதிரி இருக்கோ, மௌனி கதை மாதிரி இருக்கோ, ஜானகிராமன் கதை மாதிரி இருக்கோ என்ற பயம் வந்து விடும். பாதியில் எழுத்து நின்று விடும்.

பலசமயம் எழுதிக் கையெழுத்துப்பிரதியாக நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி அவர்கள் படித்து முடிக்கும்வரை இருக்குமே பாருங்க ஒரு அமைதி ஆளையேக் காலி பண்ணிரும். அதிலேயும் படித்து முடித்ததும் நண்பர் ஒரு பார்வை மேலும் கீழும் பார்ப்பார். பின்னர் திரும்ப ஒரு தடவை எழுதிய தாள்களை புரட்டுவார். ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு இடத்தைத் திரும்ப வாசிப்பதைப் போல அவர் பாவனை இருக்கும். பேச ஆரம்பிக்கப் போகிற மாதிரி லேசாக தொண்டையைச் செருமிக் கொள்வார். அவர் வயையே பார்த்துக் கொண்டிருக்கும்போது பொன்னம்போல மெல்ல உதடுகளை அசைப்பார். அவர் கதையைப் பத்தித்தான் ஏதோ சொல்லப் போறார் போல என்று ஆவலின் மீது “ ஒரு டீ சொல்லேன்..அப்படியே ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிரு..” என்ற வார்த்தைகளைச் சிந்தி அடக்குவார். எல்லாம் நேரம்டா நேரம்.. நீயும் கதை எழுதிட்டு வராமலா போயிரப்போறே பாத்துக்குகிறேன் என்று மனசுக்குள் கறுவிக் கொண்டே அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தபிறகும் நீண்ட புகைமேகங்களை அனுப்பிக் கொண்டே ஏராளமான வெளிநாட்டு உள்நாட்டு, தமிழ்நாட்டு, உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை யெல்லாம் வாசிப்பார். அதில் இல்லாதது பொல்லாததும் இருக்கும். மற்ற நேரமாக இருந்தால் வந்து பாருன்னு சொல்லிரலாம். ஆனால் இப்போது வாயைத் திறக்க முடியாதே. அவர்கிட்டே கதை இருக்கே. எனவே பல்லைக் கடித்துக் கொண்டு அவர் சொல்றதையெல்லாம் பொறுமையின் சிகரத்தில் ஏறியபடியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படியே ஒரு இரண்டுமணி நேரம் கழியும். பொறுமையின் உச்சியில் நின்று கொண்டு இனி பொறுக்க முடியாது தற்கொலை தான் வழி. விழும்போது அவரையும் சேர்த்துத் தள்ளிர வேண்டியதான் என்ற முடிவின் வாசல்கதவைத் திறக்கும்போது “ உன்னோட இந்தக் கதை..” என்று ஆரம்பித்து உலகச்சிறுகதைகளை ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து சுற்றி வளைத்து கடைசியில்” கதை சரியில்லை ” என்ற இரண்டு வார்த்தையைத் தான் இவ்வளவு நேரமாகச் சொல்லியிருப்பார்.

எப்படியிருக்கும்? ஏதோ இந்த ஒரு கதையிலதான் என்னோட உயிரே இருக்கிற மாதிரி துடிக்கிற துடிப்பு கடைசியில் அடங்கி விடும். முகம் தொங்கிப்போக சரி தான் நமக்கு எழுத வராது போல என்ற எண்ணம் தோன்றி விடும். இது வரை நான் எழுதி கையெழுத்துப் பிரதியில் படிக்கக் கொடுத்த கதைகளில் ஒரு கதையைக் கூட நல்லாருக்குன்னு ஒருத்தர் கூடச் சொன்னதில்லை. எல்லோருக்கும் அதுவும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு உள்ளுக்குள் ஒரு பொறாமை நதி ஓடிக் கொண்டிருக்கும் போல. மற்றவர்கள் பிரதிகளைப் படிக்கும்போது அந்த நதியில் முங்கி முங்கி எழுந்திரிப்பார்கள் போல. ஆனால் இப்படி பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. பல சமயம் இந்த மாதிரி விமர்சனங்கள் நம்மைப் புடம் போடவும் செய்யும். நம்மைச் செப்பனிட, செழுமைப்படுத்த, இன்னும் தீவிரமாய் எழுதத் தூண்டும். நான் அப்படியே எடுத்துக் கொண்டேன். கதை சரியில்லை என்று சொல்கிற சமயங்களில் வருத்தம் வந்தாலும் அந்த வருத்தத்தின் மீது இன்னும் நாலு கதைகளை எழுதிப் போட்டு அமுக்கிவிடுவேன்.

இப்பவும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களான வண்ணதாசன் , கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜாகிர்ராஜா, இன்னும் பலரிடமும் இப்பவும் கேட்க நினைக்கிற கேள்வி இது தான் “ எப்படி எழுதுறீங்க? “ “ இதென்ன கேள்வி பேனாட்டு தான்..” ( டேய் எந்தக் காலத்தில் இருக்கே எல்லாம் கணிணியில் தான் என்று நாறும்பூநாதன் சொல்கிறான்.) என்று சொல்லிவிடாதீர்கள். அருள் வந்தோ, கலாமோகினியின் கடைக்கண் பார்வை பட்டோ, தியானம் செய்தோ, பிரக்ஞை விழிப்பு நிலையினாலோ, பிறவித்திறமையாலோ, கடின உழைப்பாலோ, கடுமையான முயற்சியாலோ, தீவிரப்பயிற்சியாலோ எப்படியோ எழுத்தாளராகி விட வேண்டும் என்று நாங்கள் செய்த, யோசித்த, மேற்சொன்ன விஷயங்களால் நான் அல்லது நாங்கள் எழுத்தாளராகவில்லை, அது வேறு விஷயம். ஆனால் அந்த வேறு விஷயம் தான் என்னவென்று தெரியவில்லை. மறுபடியும் முதல்லருந்தா..ஐயோ சாமி ஆள விடுடா என்று நீங்கள் ஓடத் துவங்குவதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி- சொல்வனம் இணைய இதழ்

Sunday, 22 July 2012

என் மலையாள ஆசான் டி.என்.வி.

 

 

உதயசங்கர்

T.N.VENKITESWARAN_THRISSUR

1986-ஆம் ஆண்டு கோவில்பட்டியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட செடியாக நான் வேளானந்தல் ஸ்டேஷனில் போய் விழுந்து கிடந்தேன். வாடி வதங்கி ஒரு துளி உயிர்நீருக்காகத் தவித்துக் கொண்டிருந்தேன். மதுரையைத் தாண்டி வெகுதூரம் போனதில்லை. திருச்சிக்கே ஸ்டேஷன் மாஸ்டர் பயிற்சிக்காகப் போனது தான். அப்போதும் யாருடனும் சகஜமாகப் பழகவில்லை. காரணம் எனக்கு அவ்வளவு சகஜமாக யாருடனும் பழகத் தெரியாது என்பது தான். பயிற்சி முடிந்து மேலும் வடக்கே போஸ்டிங் போட்ட போது இன்னும் உள்ளுக்குள் சுருங்கிப் போனேன். எப்போதும் தனிமை என்னைச் சூழ்ந்து இருளெனக் கவிந்திருந்தது. புதிய ஊர், புதிய மக்கள், புதிய மொழி என்னை மேலும் கலவரப்படுத்தியது. தமிழ் தான் என்றாலும் அந்த மக்களின் மொழியே எனக்குப் புரியவில்லை. அதைப் புரிந்து கொள்ளவே கொஞ்ச நாட்களாகியது. எல்லோரும் முரட்டுத்தனமானவர்களாக தெரிந்தார்கள். அதெல்லாம் என் மனப்பிரமை தான். அது மட்டுமல்லாமல் அன்றாடம் இலக்கியம், அரசியல், தத்துவம் என்று பேசித் திரிந்து கொண்டிருந்த நாட்கள் என் கண்ணிலேயே நின்று கொண்டிருந்தது. ஆனால் ரயில்வே ஸ்டேஷன் என்பது வேறு ஒரு உலகமாக இருந்தது.

ரயில்வே சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எந்தப் பொது விஷயங்களையும் பேசுவதில்லை. நான் தாகத்தால் தவித்துப் போனேன். இப்படியே ஒரு மாதம் கழிந்து விட்டது. யாரோடும் ஒட்ட முடியாமல் நான் தனியாகவே இருந்தேன். உடன் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் என் மீது அநுதாபம் காட்டினர். அதற்கு மேல் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது தான் பக்கத்து ஸ்டேஷனான தண்டரையிலிருந்து வாராந்திர ஓய்வு தருவதற்காக டி.என்.வெங்கடேஸ்வரன் என்ற ஸ்டேஷன் மாஸ்டர் வந்தார். காலையில் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை செல்லும் வண்டி எண்.646 பாசஞ்சர் ரயிலில் வந்திறங்கி முகமன் கூறி அறிமுகப்படுத்தியவர் மேஜை மீது இருந்த கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலைக் கையில் எடுத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அதுவரை நான் எந்தப் புத்தகம் வைத்திருந்தாலும் யாரும் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. அவர் தொழிற்சங்கத் தலைவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். கேரளாவில் திருச்சூருக்கருகில் உள்ள முள்ளூர்க்கரையிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் ரயில்வே நிர்வாகத்தால் பழி வாங்கப்பட்டு பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபரில் தண்டரை வந்திருந்தார். அவருக்குத் தமிழ் தெரியும் என்பது மட்டுமில்லாமல் தமிழ் இலக்கியப்பரிச்சயமும் இருந்ததைக் கண்டு வியந்து போனேன்.

பிறகென்ன அவர் புதுமைப்பித்தனின் கதைகள், ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள், கு.சின்னப்பாரதியின் தாகம், டி.செல்வராஜின் மலரும் சருகும், மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் என்று பேச, நான் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்த பஷீரின் இளம் பருவத்தோழி, பாத்தும்மாவின் ஆடு, என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, நாவல்களையும், தகழியின் செம்மீனையும், கேசவதேவின் கண்ணாடியையும், அந்தச் சமயத்தில் வெளிவந்திருந்த நவீன மலையாளச் சிறுகதைத் தொகுப்பான சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் புத்தகத்தைப் பற்றிப் பேச அந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாளாக ஆகி விட்டது. அது மட்டுமல்லாமல் ஊர் ஊராக மக்களிடமிருந்து பணம் பெற்று ’ அம்ம அறியான் “ என்ற மக்கள் சினிமா எடுத்த மகத்தான திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரகாமுக்கு திருச்சூரில் பண உதவி செய்த தகவலையும் அவர் சொன்னார். தண்ணீரிலிருந்து எடுத்துப் போட்ட மீனாகத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு டி.என்.வி. பெருங்கடலாகத் தெரிந்தார். ஒவ்வொரு வாரமும் அவர் வேளானந்தல் வரும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினேன். அவர் வந்து விட்டால் அவரை விட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நகர்வதில்லை. அரசியல், தொழிற்சங்கம், இலக்கியம், எல்லாவற்றிலும் ஞானமுடையவராக இருந்தார் டி.என்.வி. அவருடைய அநுபவங்களைக் கேட்டாலே ஒருவன் விவேகமும் தைரியமும் உடையவனாக ஆகி விடுவான்.

எத்தனை டிரான்ஸ்ஃபர்கள்! எத்தனை சம்பள வெட்டுகள்! எத்தனை விசாரணைகள்! 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதனால் 1978-ஆம் ஆண்டு வரை பணி நீக்கம்! கோட்டம் விட்டு கோட்டம் டிரான்ஸ்ஃபர்கள்! இன்னொருவராக இருந்தால் இதற்குள் போராடியதின் எந்தச் சுவடும் இல்லாமல் முடங்கிப் போயிருப்பார்கள். ஆனால் டி.என்.வி. அயராத போராளியாக இருந்தார். அவரிடமிருந்த தீரத்தில் கொஞ்சமாவது எனக்கு இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன். அவர் என்னை விட பதினைந்து வருடங்களுக்கு மூத்தவர். ஆனால் தான் வயதிலோ, அநுபவத்திலோ, முதிர்ச்சியிலோ பெரியவன் என்று காட்டிக் கொள்ளாத அருங்குணம் கொண்டவர். என் வயதிலுள்ள இளைஞர்களுக்கு இணையாக கேலியும் கிண்டலுமாக பேசுவார். எனக்கு அவரை விட்டுப் பிரிய மனமேயில்லை. அதனால் எனக்கு ஓய்வாக இருக்கும் போது நான் தண்டரை போய் விடுவேன்.

அப்போது விழுப்புரம்- காட்பாடி செக்‌ஷனில் நிறைய மலையாளிகள் ஸ்டேஷன் மாஸ்டர்களாகப் பணி புரிந்தார்கள். அவரவர் ஓய்வு நாளில் தண்டரை ஸ்டேஷனைப் பார்த்து புற்றீசல் போல புறப்பட்டு விடுவார்கள். அன்று முழுவதும் கொண்டாட்டம் தான். குடம் நிறைய குடிக்கக் கள்ளு, வாத்துக்கறி, மீன் குழம்பு, மாட்டுக்கறி வறுவல், என்று விருந்து தயாராகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து கொண்டே மலையாளக் கவிதைகளைப் பாடுவார்கள். அதிலும் எமர்ஜென்சி காலத்தில் மலையாளக்கவி கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் எழுதிய “ நிங்ஙள் எண்ட கருத்த மக்கள கொன்னு தின்னல்லோ..” என்ற கவிதையை அவர்கள் கோரஸாகப் பாடும்போது ஆக்ரோஷம் பொங்கும். உண்மையில் அவர்கள் வாழ்க்கையை உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தார்கள். எனக்குப் பொறாமையாக இருந்தது. அவர்கள் யாரும் தீவிர இலக்கிய வாசகர்கள் கிடையாது. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் வள்ளத்தோல், தொடங்கி பஷீர், தகழி, கேசவதேவ், பொற்றேகாட்,மலையாற்றூர் ராமகிருஷ்ணன், உரூபு, கமலாதாஸ், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.என்.வி., முகுந்தன், காக்கநாடன், என்று அத்தனை எழுத்தாளர்களையும் சாதாரணமாக வாசித்திருந்தார்கள். அவர்களுக்கு அவர்களுடைய மொழியின் மீது உண்மையான பெருமை இருந்தது. தமிழை அரசியல் லாபத்துக்காக மட்டும் மொழியைப் பற்றிப் பேசுகிற தமிழக அரசியல்வாதிகளைப் போலவோ, மொழியைப் பற்றி எந்தப் பெருமிதமுமில்லாத தமிழ் மக்களைப் போலவோ அவர்கள் இல்லை. அநேகமாக தமிழ்மக்கள் சினிமாக்களால் மட்டுமே வளர்க்கப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது. கலை, இலக்கியம், அறிவியல் எல்லாம் இரண்டாம்பட்சம் தான். இங்கே சாதாரணமாக படித்தவர்களிடமே தமிழ் இலக்கியத்தைப் பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி அறிவியலாளர்களைப் பற்றி கேட்டால் என்ன தெரியும் என்பது கேள்விக்குறியே.

எனக்கு வந்த பொறாமையில் நான் மலையாளம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். என் ஆசையை டி.என்.வி.யிடம் சொன்ன போது உற்சாகமாக எனக்கு அட்சரம் எழுதிக் கொடுத்து உடனே என் ஆசானாகி விட்டார். மற்ற மலையாளத் தோழர்களும் அவரவருக்கு முடிந்த அளவில் எனக்குப் புத்தகங்கள் கொடுத்தும், விளக்கம் சொல்லியும், வாசிக்கச் சொல்லிக் கொடுத்தும் என்னை ஊக்குவித்தனர். அஜய்குமார், ரியாஸ் அலிகான், ராஜன் வர்கீஸ், கேசவ பணிக்கர், என்று எத்தனை நண்பர்கள்! நான் இப்போது ஒரு பத்து புத்தகங்களுக்கு மேல் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து நானும் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற தகுதியோடு இருப்பதற்கு என் ஆசான் தோழர் டி.என்.வி. தான் காரணம்.

மிகச் சிறந்த பேச்சாளரான டி.என்.வி. ரயில்வே தொழிலாளர்களின் விசாரணையில் டிஃபென்ஸ் கவுன்சிலராகவும் போவார். என்ன தான் அவர் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் அவரைக் கண்டால் அதிகாரிகளுக்குப் பயம் தான். ஏனெனில் அவரால் யாரையும் தன் வசப்படுத்தி விடமுடியும்.யார் சொன்னாலும் கேட்காத, மூக்கய்யர் என்று புகழ் பெற்ற பரமேஸ்வர அய்யரையே வசப்படுத்தியவர் என்ற கதை தெற்கு ரயில்வே முழுவதும் பேசப்படுகிற கதை.

1974- ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட டி.என்.வி. தன் குடும்பத்தைக் கொண்டு செலுத்த ஊட்டியிலிருந்து தேயிலைத்தூளை மொத்தமாக வாங்கி திருச்சூரில் வினியோகம் செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் போட்டோ ஸ்டுடியோக்களில் நெகடிவ் கழுவி முடித்த ரசாயனத்தை வாங்கி அதிலிருந்து சில்வர் நைட்ரைட்டைப் பிரித்து விற்பனை செய்திருக்கிறார். எப்படியோ ஜனதா ஆட்சிக் காலத்தில் மீண்டும் வேலையில் சேர்ந்த டி.என்.வி. ஒரு வருட காலத்துக்குள்ளே அடுத்த வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்டார். அப்போது முள்ளூர்க்கரை ஸ்டேஷனில் மூக்கய்யர் தான் ஸ்டேஷன் மாஸ்டர். மூக்கு நீண்டு முன்னாடி வளைந்திருந்ததால் அவர் பரமேஸ்வர அய்யர் மூக்கய்யர் ஆகி விட்டார். ஆனால் ஆளு டெர்ரர். அவருக்குக் கீழே பணி புரியும் அத்தனை பேருக்கும் அவர் ஒரு பார்வை பார்த்தாலே போதும் வயிறு கலங்க ஆரம்பித்து விடும். ஆபீசர்களையே பெயர் சொல்லித் தான் கூப்பிடுவார். அவர் ஆபீஸுக்குக் கடிதம் எழுதினார் என்றால் அதற்கு அப்பீலே கிடையாது. அதிகம் பேச மாட்டார். நிர்வாகத்தில் கில்லாடி. எப்போதும் மேலிடத்துக்குச் சாதகமாகவே நடந்து கொள்பவர் என்றெல்லாம் அவரைப் பற்றிப் பல ஒளிவட்டங்கள் சுழன்று கொண்டிருந்தன. அவருக்கு டி.என்.வி.யை பிடிக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. பிடித்திருந்தது என்றும் சொல்ல முடியாது. ஆனால் டி.என்.வி.யைப் பற்றி எல்லாம் விசாரித்து வைத்திருந்தார். அதனால் டி.என்.வி.யிடம் சற்று மரியாதையுடனும் நடந்து கொண்டார். 1978- ஆம் ஆண்டு ஸ்டேஷன் மாஸ்டர்களின் சங்கமான ஆல் இந்தியா ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் தங்களுடைய யூனிஃபார்ம், பணி உயர்வு, உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக கூட்ஸ் வண்டிகளை வாங்கவோ, அனுப்பவோ போவதில்லை என்று வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர். வேலை நிறுத்தத்துக்கான ஆயத்த வேலைகளை டி.என்.வி. செய்து கொண்டிருந்தார். பிரச்சாரப்பயணம், துண்டுப்பிரசுரம், போஸ்டர், என்று வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் அவ்வப்போது ஆபீஸுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார் மூக்கய்யர். அந்த மாதத்தில் அவர் பணி ஓய்வு பெறப் போகிறார். அதனால் இன்னும் அதிகமான விசுவாசத்தோடு நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நினைத்தார்.

வேலை நிறுத்தத்துக்கு முதல் நாள் டி.என்.வி. டூட்டி முடியும் போது மூக்கய்யர் தான் அவரை மாற்றி விட வந்திருக்கிறார். அவரிடம் நாளைக்கு வேலை நிறுத்தம் என்பதைச் சொல்லி ஸ்டேஷன் மாஸ்டர்களின் கோரிக்கைகளின் நியாயம் பற்றி ஒரு பத்து நிமிடம் பேசியிருக்கிறார். மூக்கய்யர் கேட்டாரா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் டி.என்.வி. சொல்லி விட்டு கடைசியாக அவரும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு விட்டு நம்பிக்கையில்லாமல் வீட்டுக்குப் போய் விட்டார்.

வேலை நிறுத்தநாளன்று காலையில் டூட்டிக்கு வந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே கூட்ஸ் வண்டியை அனுப்ப மறுத்திருக்கிறார் டி.என்.வி. ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்த நிர்வாகம் உடனே அவரை சஸ்பெண்ட் செய்து விட்டு மூக்கய்யரை டூட்டியில் சேர அழைப்பு விடுத்தது. நிர்வாகத்திலிருந்து இன்ஸ்பெக்டர்கள், மூக்கய்யர் வந்து டூட்டி எடுத்து கூட்ஸ் வண்டியை அனுப்பக் காத்திருந்தார்கள்.

குவாட்டர்ஸிலிருந்து ஃபுல் யூனிஃபார்மில் தலையில் தொப்பியுடன் ஸ்டேஷனுக்கு வந்தார் மூக்கய்யர். உள்ளே நுழைந்தவுடன் இன்ஸ்பெக்டர்களிடம் பேசி அலுவலக சஸ்பெண்ட் ஆணையை டி.என்.வி.க்கு கொடுத்து விட்டு அவரை டூட்டியிலிருந்து விடுவித்தார். அதற்குள் இன்ஸ்பெக்டர்கள் சார் முதல்ல கூட்ஸை அனுப்புங்க சார்.. என்று வற்புறுத்தினார்கள். மூக்கய்யர் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு டூட்டியில் ஜாயின் பண்ணுவதற்கான எல்லாஃபார்மாலிட்டிகளையும் முடித்து விட்டு, நாற்காலியில் உட்கார்ந்து தலையில் இருந்த தொப்பியை எடுத்து மேஜை மீது வைத்து விட்டு அந்த இன்ஸ்பெக்டர்களைப் பார்த்து நானும் கூட்ஸை அனுப்ப மாட்டேன் என்றாரே பார்க்கலாம். யாருமே மூக்கய்யரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. அந்த கூட்ஸ் வண்டியையே ரத்து செய்யவேண்டியதாயிற்று. அந்த வேலை நிறுத்தமும் வெற்றிகரமாக நடந்தது. ஆனால் டி.என்.வி.யை டிரான்ஸ்ஃபர் செய்து விட்டார்கள். அவ்வளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார் டி.என்.வி.

வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் டி.என்.வி. ஆனால் இப்போதும் தொழிலாளர்களுக்கு வகுப்புகள் எடுக்கவும், அவர்களுக்கு வருகிற சார்ஜ் மெமோக்களுக்குப் பதில் எழுதிக் கொடுக்கவும், விசாரணையில் தொழிலாளர் தரப்பில் ஆஜராகவுமாக இருக்கிறார். இன்னமும் இலக்கியம் வாசிக்கவும், எழுத்தாளர் வைசாகனோடு கள்ளு குடிக்கவும், கவிதைகள் பாடவும் செய்கிறார் டி.என்.வி. என் ஆசானே! என் தோழரே டி.என்.வி. உங்களோடு கழித்த அந்த நாட்களை என் நினைவிலிருந்து அழிக்கவே முடியாது. உங்களை என்றென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தோழரே!

நன்றி – மீடியா வாய்ஸ்

Wednesday, 20 June 2012

என் பெரியப்பா புதுமைப்பித்தன்

உதயசங்கர்

  puthumai pithan

எல்லோருக்கும் போலவே எனக்கும் ரோல் மாடல்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிராயத்துக்கும் ஏற்ப அவர்கள் இடம் மாறிக் கொண்டே

இருந்தார்கள். எனது சிறுபிராயத்தில் வசந்தன் மாமா எனது ரோல் மாடலாக இருந்தார். சிவந்த நிறமும், சுருள் சுருளான தலைமுடியும், சிரித்த

முகமும், ஏதோ ஒரு சாயலில் எம்.ஜி.ஆரைப் போல இருந்ததாக எல்லோரும் சொல்லிய பெருமையுடன் இருந்த வசந்தன் மாமா என்னுடைய

கனவுநாயகனாகவே இருந்தார். அது மட்டுமல்ல அடிக்கடி அவர் கோவில்பட்டியில் அப்போது மிகவும் பேமஸாக இருந்த மனோரமா

ஹோட்டலில் வாங்கிக் கொடுத்த தோசையும் சாம்பாரும் கூட ஒரு காரணம். அவர் மின்சாரத்துறையில் வயர்மேனாக வேலைபார்த்தார். அவர்

எங்கு போனாலும் மரியாதை தான். எல்லோரும் அவருக்கு ஏதோ ஒரு வகையில் சலுகை செய்தனர். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு

அதிசயமாக இருக்கும். நான் பெரியவனான பிறகு என் வசந்தன் மாமாவைப் போல வயர்மேனாகப் போக வேண்டும் என்று நினைத்தேன்.

ஏனெனில் அப்போது வேணுங்கிறபோதெல்லாம் சாம்பார் தோசை சாப்பிடலாமே.

 

ஆறாங்கிளாஸ் படிக்கிறபோது தமிழய்யா நாகராஜன். அவர் இனிமையான குரலில் தமிழ் செய்யுள்களை பாடும்போது வகுப்பே கட்டுண்டு

கிடக்கும். அவரைப் போலவே பாடவேண்டும் என்று நினைத்து சினிமா பாடல்களை தொண்டை கிழிய கத்தித் தீர்த்திருக்கிறேன். அப்போது

டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி, எஸ்.பி. பாலசுப்ரமணியன் மாதிரி பெரிய பாடகராக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அதற்காக

கோவில்பட்டியில் வெகுவிமரிசையாக வருடந்தோறும் நடந்து கொண்டிருந்த திருவாதிரை இசைவிழாவில் முன்னாடி போய் உட்கார்ந்து பெரிய

ஆட்கள் பாட்டின் சுதிக்கேற்ப விரல்களை ஆட்டுவதைப் போல நானும் எதுவும் தெரியாமலே ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்

. கடைசியில் எங்கள் கன்னிவிநாயகர் கோவில் தெருவில் என் வீட்டு முற்றத்திலிருந்து கொண்டு தீப்பெட்டிக்கட்டு ஒட்டிக்கொண்டோ,

தீப்பெட்டிக்கட்டை அடுக்கிக்கொண்டோ, நான் போடும் கூப்பாட்டை எல்லோரும் என் அம்மாவுக்காகச் சகித்துக் கொண்டார்கள் என்று

நினைக்கிறேன்.

 

ஒன்பதாம் வகுப்பு படிக்கிறபோதே என் சிந்தனையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் தமிழாசிரியர் குருசாமி. வழக்கமான

தமிழாசிரியர்களைப் போல அவர் செந்தமிழில் பேசுவதில்லை. சாதாரணமாகவே பாடம் நடத்தினார். ஆனால் அவர் எந்தப்பாடத்தை

நடத்தினாலும் அதனூடாக பகுத்தறிவு கருத்துகளை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். மூடநம்பிக்கைகளைக் கேலியும் கிண்டலும் செய்தார்.

என்னுடைய சிந்தனையில் மிக முக்கியமான திருப்புமுனையை அவர் தான் ஏற்படுத்தினார் என்றால் மிகையில்லை. அத்தனை சிறிய வயதில்

கடவுளைக் கிண்டல் செய்து வீட்டில் அடி வாங்கிய ஞாபகங்கள் இருக்கின்றன. காந்திமைதானத்தில் பெரியாரின் கூட்டத்தை முன் வரிசைப்

புழுதியில் உட்கார்ந்து கேட்டிருக்கிறேன். ஆனால் தமிழாசிரியர் குருசாமியைப் போல ஆக வேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. அப்போது

நான் படித்த ஆயிரவைசிய உயர்நிலைப்பள்ளியில் புதிதாக இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்திருந்தனர். ஸ்கூல் பையன்கள் எல்லோரின் கண்களும்

அவர்கள் மீது தான். அவ்வளவு ஸ்மார்ட்டாக, ஸ்டைலாக, இருந்தார்கள். அவர்கள் வகுப்பு எடுக்கும் விதமே அலாதியாக இருந்தது. யாரையும்

டேய்..டோய் என்று கூப்பிடுவதில்லை. எல்லோரையும் ஐயா என்ற விகுதியுடனே அழைத்தார்கள். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவர்

அறிவியல் பாடம் எடுத்த தவசிராஜ், இன்னொருவர் கணக்குப்பாடம் எடுத்த பழனிமுத்து. அவர்களை அண்ணாந்து பார்த்தபடியே அவர்கள்

வகுப்புப்பையன்களும், அந்தப் பையன்கள் சொன்னதைக் கேட்டு மற்ற பையன்களும் ஈக்களை மாதிரி அவர்களை மொய்த்தார்கள். எனக்கு

கணக்கு மூணாங்கிளாஸிலிருந்தே பிணக்கு. எனவே கணக்கில் எப்போதும் பார்டரைத் தாண்டி கொஞ்சம் மதிப்பெண்கள் வாங்கித் தப்பித்து

விடுவேன். எனவே பழனிமுத்து மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பில்லை. அறிவியலில் எனக்கு ஆர்வம் அதிகம். அதோடு சின்னப்பத்தில் எனக்கு

வகுப்பாசிரியராகவும் தவசிராஜ் இருந்ததால் அவரைப் பூஜித்தேன். அவரை மாதிரியே பேசவும். நடக்கவும், தலைப்பட்டேன். இது எது வரை

போனதென்றால் அவருடைய கையெழுத்தைப் போட்டுப் பழகி, அதைத் தவறுதலாக என்னுடைய ரிகார்டு நோட்டிலேயே போடுகிற அளவுக்கு

எனக்கு பைத்தியம் முற்றி விட்டது. என்னை ஆகர்சித்த ஆளுமைகளை அனுகணமும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

 

இப்படி ஹாக்கி விளையாடும்போது ஹாக்கி பிளேயர்கள் பின்னாலேயே சுற்றுவது, நேரங்காலம் தெரியாமல் அதிகாலை, உச்சிவெயில், மாலை,

இரவு என்று எந்த நேரமும் ஹாக்கி மட்டையோடு திரிவது என்று எதையெடுத்தாலும் அதே சிந்தனையாக இருப்பது என்று இருந்தேன். நான்

கிரிக்கெட் விளையாடப் பழகும்போது தொலைக்காட்சி கிடையாது. இந்தியாவில் விளையாடும்போது மட்டுமே ரேடியோ வர்ணனை. மற்றபடி

எல்லாம் செய்தித் தாள்கள் வழிதான். ஆனால் நான் டைப்ரைட்டிங் படித்துக்கொண்டிருந்த இன்ஸ்டிடியூட் ஆசிரியர் ஹிந்து பத்திரிகை

ஏஜெண்டாகவும் இருந்தார். அதனால் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிகை அங்கே வரும். அதை அவ்வப்போது சுட்டுக் கொண்டு வந்து அதிலுள்ள

கிரிக்கெட் வீரர்களின் வண்ணப்புகைப்படங்களை ஆல்பம் மாதிரி என்னுடைய பழைய நோட்டில் ஒட்டி வைத்து தினமும் ஒரு முறையாவது

அவர்களைப் பார்த்து விடுவேன். கவாஸ்கர், சௌகான், மொகிந்தர் அமர்நாத், சுரீந்தர் அமர்நாத், கிர்மானி, பிரசன்னா, சந்திரசேகர்,

வெங்கட்ராகவன், கெய்க்வாட், இளம் கபில்தேவ், என்று அத்தனை கிரிக்கெட் வீரர்களையும் தரிசனம் செய்து விடுவேன். இவர்களுக்கடுத்தது

எனக்கு மிகவும் பிடித்த வெளிநாட்டு வீரர்களான ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, தாம்ஸன், மேற்கிந்தியத் தீவுகளின் கேரி சோபர்ஸ்,

விவியன் ரிச்சர்ட்ஸ், ஹோல்டிங், என்று அவர்களின் படங்களை ஒட்டி வைப்பது அதைப்பார்ப்பதென்பது எனக்கு ஏதோ ஒரு வகையில்

உத்வேகம் தருவதாக ஒரு கற்பிதம் இன்னமும் இருக்கிறது.

 

கல்லூரிக்காலத்தில் இலக்கியம் அறிமுகமாயிற்று. கல்லூரியில் நாங்கள் சென்று வந்த சுற்றுலா பற்றிய கட்டுரையே பிரசுரமான என்னுடைய

முதல் படைப்பு என்று ஞாபகம். அப்போது எனக்கு தமிழ்ப்பேராசியர்களாக இருந்த அரங்கராசன், விஜயராகவன், இரண்டுபேருமே என்னை

அழைத்துப் பாராட்டினார்கள். அந்த உற்சாகத்தில் நான் கல்லூரி நூலகத்திலிருந்து நிறையப் புத்தகங்களை எடுத்துப் படித்தேன்.

எல்லாஇளைஞர்களைப் போல நானும் கவிதை எழுத ஆரம்பித்தேன். சிற்பி, அபி,தமிழன்பன், கங்கைகொண்டான், புவியரசு,இன்குலாப், என்று

வானம்பாடி கவிஞர்கள் என்னை ஈர்த்தனர். அவர்களைப் போலவே கவிதைகள் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின்பு தான்

கோவில்பட்டியில் இலக்கியகுழாம் ஒன்று இருப்பது தெரிய வந்தது. அதன்பின்பு என் உலகம் மாறி விட்டது.

 

புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்ற புத்தகம் தான் நான் முதன்முதலில் வாசித்த சிறுகதைப்புத்தகம் என்று நினைக்கிறேன். அதை வாசித்தவுடன்

அதுவரை ஏற்படாத ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நான் எனக்குள் உணர ஆரம்பித்தேன். நான் வாசித்திருந்த அத்தனையையும் புரட்டிப் போட்டு

விட்டார் புதுமைப்பித்தன். மொழியின் உக்கிரத்தை அவர் உச்சகதியில் உணரச் செய்தவர். உலகைப்பற்றி, மானுட அவலங்களைப் பற்றி,

மனிதமனவக்கிரங்களை, விகசிப்புகளை, துயரங்களை, அவரை விட வலிமையாகத் தமிழிலக்கியத்தில் யார் சொல்லியிருக்கிறார்கள். அவர் இந்த

உலகத்தையே எள்ளலோடு விமரிசித்தார். அந்த விமரிசனத்தின் ஆழத்தில் மானுடத்தின் மீதான பேரன்பு கவிந்திருந்தது. இதை உணராதவர்கள்

அவரை அவநம்பிக்கைவாதி என்று குற்றம் சாட்டினார்கள். அவர் இந்த உலகத்தின் மீது, மானிடவர்க்கத்தின் மீது, நம்பிக்கை கொள்ளவே

நினைத்தார். ஆனால் யதார்த்தம் அப்படியில்லையே. எனவே அதை விமரிசனம் செய்தார். அவருடைய புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்தேன்.

நம் காலத்தின் மகத்தான கலைஞனாக புதுமைப்பித்தன் திகழ்ந்தார்.

 

தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாற்றை வாசிக்கும்போது எனக்கு தமிழ்ச்சமூகத்தின் மீது ஆறாக்கோபம் வந்தது.

மானுடமேன்மைக்காக,இலக்கியத்தை வழியாகக் கொண்டு, அதற்காக தன் வாழ்வையே பணயம் வைத்த அந்த உன்னதக்கலைஞன் தன்

வாழ்நாள் முழுவதும் வறுமையின் முட்கிரீடம் சுமந்தே வாழ்ந்து தீர்த்தான். அவர் அவருடைய துணைவியாருக்கு எழுதிய கடிதங்களின்

தொகுப்பான கண்மணி கமலாவுக்கு.. என்ற கடிதத் தொகுப்பைப் படிக்கிற யாருக்கும் கண்ணீர் வராமல் இருக்காது. காலணாவுக்கும், ஒரு

ரூபாய்க்கும் அவர் பட்டபாடு …..அப்போதிருந்து சினிமாவின் மீது தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கும் மோகத்தில் ஒரு சதவீதமரியாதை

இலக்கியத்தின்மீது இருந்திருந்தால் நாம் புதுமைப்பித்தனை மட்டுமல்ல, பல எழுத்தாளர்களை இழந்திருக்கமாட்டோம். விதியே விதியே என்ன

செய்யப் போகிறாய் என் தமிழ்ச்சமூகத்தை?

 

புதுமைப்பித்தன் காலத்திய மற்ற எழுத்தாளர்களை விட இலக்கிய மேதையாக புதுமைப்பித்தன் ஏன் சித்தரிக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு

அவருடைய படைப்புகள் தான் பதில் சொல்லும். கலைஞன் தான் காலத்தைக் கேள்வி கேட்கிறான். கலைஞன் தான் காலத்தைக் கேலி

செய்கிறான். கலைஞன் தான் காலத்தை நிறுத்தி வைக்கிறான். கலைஞன் தான் காலத்தை அடைகாக்கிறான். கலைஞன் தான் காலத்தை

மாற்றுகிறான். தன் படைப்புகளின் மூலம் மனிதமனசாட்சியைத் தட்டியெழுப்புகிறான். மனிதகுலத்தை மேன்மையான வாழ்வை நோக்கி உந்தித்

தள்ளுகிறான். இதற்கான தவமாகவே இலக்கியவாழ்வை மேற்கொள்கிறான். வறுமையில் உழன்று, கண்ணீர் சிந்தி, புறக்கணிப்புகளைத் தாங்கிக்

கொண்டு, அவமானங்களைச் சகித்துக் கொண்டு சாதாரண லௌகீக வாழ்வின் சுகங்களை இழந்து, தனக்கும் தன் குடும்பத்துக்கும்

துயரங்களையே பரிசளித்து, கலையின் பலிபீடத்தில் தன்னையே பலி கொடுக்கிறான். பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா.

கரிச்சான்குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், தமிழ் ஒளி, தருமு சிவராம், ஜி.நாகராஜன், ஆத்மநாம்,…..என்று எத்தனையெத்தனை பேர்?

 

புதுமைப்பித்தனும் அப்படி தன்னைப் பலி கொடுத்தவன். அவனுடைய சாகாவரம் பெற்ற படைப்புகளான, சாபவிமோசனம், சிற்பியின் நரகம், ஒரு

நாள் கழிந்தது, அகல்யை, பிரம்மராஷஸ், கபாடபுரம், செல்லம்மாள், காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமிபிள்ளயும், துன்பக்கேணி, கல்யாணி,

மகாமசானம், இப்படி எத்தனை கதைகள்? காலச்சுவடு பதிப்பகம் செம்பதிப்பாக புதுமைப்பித்தனின் கதைகளை வெளியிட்டிருக்கிறது. ஆனால்

இன்னமும் தமிழ்ச்சமூகத்துக்கு உணர்வு வரவில்லையே. ஏனெனில் யாரிடமாவது புதுமைப்பித்தனைப் பற்றிப் பேசினால் “ யாரு சினிமாவில

பாட்டெழுதுவாரே அந்த புலமைப்பித்தனையா சொல்றீங்க? “ என்று கேட்கிறார்கள். நம்முடைய உண்மையான மதிப்பு மிக்க ஆளுமைகள்

யாரென்றே சமூகத்துக்குத் தெரியவில்லையே என்ற ஆழ்ந்த வருத்தம் உண்டாகிறது.

 

நான் என்னுடைய வழக்கம் மாறாமல், இலக்கியம் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் புதுமைப்பித்தனை என்னுடைய மானசீகக்குருவாக வரித்துக்

கொண்டிருந்தேன். புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றுப்புத்தகத்தில் இருந்த புதுமைப்பித்தனின் புகைப்படத்தை எடுத்து கண்ணாடிக்கடையில்

கொடுத்து பிரேம் போட்டு என் வீட்டில் மாட்டியிருந்தேன். தினமும் அந்தப்புகைப்படத்திலுள்ள புதுமைப்பித்தனோடு பேசுவதுமுண்டு. அப்போது

முருகேசன் என்ற கவிஞர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய கவிதைகள் ஒன்றோ இரண்டோ தினமலர், தினத்தந்தி வாரமலர்களில்

வெளிவந்திருந்தது. அவர் பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி கவிஞர்.முருகேசன் என்றே தன்னை அழைத்துக் கொள்வார். அவர் என்

வீட்டிற்கு வந்ததிலிருந்து புதுமைப்பித்தனின் புகைப்படத்தையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பேச்சினூடே அடிக்கடி அந்தப்

புகைப்படத்தைப் பார்த்த அவரிடம் நான்,

 

“ என்ன பாக்கிறீங்க “ என்று கேட்டேன்.

 

“ இல்ல போட்டோவில யாரு உங்க அப்பாவா? “

 

நான் ஒரு கணம் அமைதி காத்தேன். புதுமைப்பித்தனைத் திரும்பிப் பார்த்தேன். அந்த ஏறுநெற்றியும், ஒளிபொருந்திய கண்களும், சற்றே

உதடுகளைப் பிரித்துக் கொண்டு வெளித் தெரிந்த தெற்றுப்பற்களோடு என் புதுமைப்பித்தன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நான் திரும்பி

கவிஞர்.முருகேசனிடம் சொன்னேன்.

 

“ இல்லை.. என் பெரியப்பா..”

நன்றி- மீடியா வாய்ஸ்

Wednesday, 13 June 2012

என்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு

safdar உதயசங்கர்

ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கோவில்பட்டியில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான் இளம் மொட்டுகளாக நான், நாறும்பூநாதன், முத்துச்சாமி, சாரதி, மொட்டுகள் என்ற கையெழுத்துப் பத்திரிகை மூலமாக கோவில்பட்டி இலக்கிய அரங்கத்துக்குள் பிரவேசித்தோம். பெரிய வாசிப்பனுபவமோ, இலக்கிய அனுபவமோ, எங்களுக்குக் கிடையாது. அப்படி ஏதாவது கொஞ்சநஞ்சம் தெரிந்திருந்தது என்றால் அது நாறும்பூநாதனோடு சேர்ந்திருந்த வாசனையால் தான். நாறும்பூநாதனின் அண்ணன் ஆர்.எஸ். மணி வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருடைய அரசியல், தொழிற்சங்க ஈடுபாட்டினால் வாங்கிச் சேகரித்திருந்த சோவியத் புத்தகங்களை நாறும்பூநாதன் வாசித்துவிட்டு எங்களிடம் விடுகின்ற கதைகளை நாங்கள் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். அவனுடைய முயற்சியினாலேயே அந்தக் கையெழுத்துப்பத்திரிகை சாத்தியமாயிற்று. எங்களுடைய சிந்தனைத்துளிகளும் கவிதைப்பிரவாகங்களும், புரட்சிக்கட்டுரைகளும் அதில் கொட்டிக்கிடந்தன. அதைப் படிப்பதற்காகச் சுற்றுக்கு விட்டோம். அதிலிருந்து பிடித்தது இந்த இலக்கியக்கோட்டி.

ஊரில் இரண்டு இலக்கியக்கோஷ்டிகள் இருந்தது எங்களுக்குத் தெரியாது. ஒரு அணி பலமாக எங்களை வரவேற்க, இன்னொரு அணியோ எங்களை நசுக்கிவிடத் துடித்தது. அப்போது தான் எங்களுக்கு இலக்கியத்திலும் அரசியல் உண்டு என்பது தெரிந்தது. ஆனாலும் நாங்கள் அசரவில்லை. அதுவரை நாங்கள் அறிந்திராத புதியபிரதேசத்தின் கவர்ச்சியில் மயங்கிக் கிடந்தோம். யார் பேசினாலும் கேட்டோம். அவர்கள் சிந்திய ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே பத்திரமாகப் பொறுக்கியெடுத்தோம். அதைச் சுமந்து கொண்டு போய் இன்னொரு கோஷ்டியிடம் இறக்கினோம். அவர்கள் சிந்தியதை எதிர்கோஷ்டியிடம் கொண்டு சேர்த்தோம். இப்படியே எங்களை நாங்களே உரமேற்றிக் கொண்டோம். அப்போது சென்னை சோழமண்டலத்தில் மேற்கு வங்கத்திலிருந்து நாடகாசிரியர், மூன்றாவது அரங்கின் முன்னோடி, பாதல் சர்க்கார் பயிற்சி கொடுக்க ஒரு பயிற்சிப்பட்டறை நடந்தது. அதன் வீச்சில் தமிழகத்தில் பல இடங்களில் புதிய முறையிலான வீதி நாடகக் குழுக்கள் உருவாயின. கோவில்பட்டியிலும் தர்சனா என்ற பெயரில் ஒரு நாடகக்குழு உருவானது. எழுத்தாளர்கள், கௌரிஷங்கர், வித்யாஷங்கர், தேவதச்சன், மனோகர்( திரைக்கலைஞர் சார்லி), மாரீஸ், திடவைப்பொன்னுச்சாமி, உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, ராம், அப்பாஸ், என்று பெரிய கூட்டமே அதில் ஈடுபட்டோம். பேரா.ராமானுஜத்தின் நாடகங்கள், தேவதச்சனின் நாடகங்கள், நாங்களாகக் கூட்டு முயற்சியில் உருவாக்கிய நாடகங்கள் என்று பத்து நிமிடம், இருபது நிமிட நாடகங்களை உருவாக்கினோம்.

நாடகச்செயல்பாட்டில் கோவில்பட்டி பாணி ஒன்று தானாகவே உருவானது. அதாவது நாடக ஸ்கிரிப்டோ, வசனமனப்பாடங்களோ , மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் ஒத்திகைகளோ இன்றி, எல்லோரும் கூடிப் பேசுவதின் மூலம் நாடக ஸ்கிரிப்டை, வசனங்களை சிருஷ்டித்தோம். ஆனாலும் அது மாறிக் கொண்டே யிருக்கும். ஒவ்வொரு இடங்களில் போடப்படும்போது அடிப்படைச் சாராம்சம் மாறாமல் உருமாறி வேறொன்றாக மாறும். இதன் புதுமையில் எங்களுக்கு பெரிய ஈர்ப்பு வந்தது. கோவில்பட்டியைச் சுற்றி ஏராளமான கிராமங்களில் நாங்கள் நாடகம் போட்டோம். இந்திய சோவியத் நட்புறவுக்கழகத்தின் சார்பிலும், தொழிற்சங்கங்களின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களிலும் எங்கள் தர்சனா நாடகக்குழு இருந்தது. கௌரிஷங்கர், வித்யாஷங்கர், மனோகர், வேலை தேடி, வேலை கிடைத்து கோவில்பட்டியை விட்டு இடம் பெயர்ந்து விட்டனர். தர்சனாவின் ஆரக்கால்களில் முக்கியமான ஆரக்கால்கள் அவர்கள். தர்சனா முடங்கியது. இதற்குள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகள் பல்கிப் பெருகியது. இயல்பாகவே எங்கள் மனம் தமுஎச வில் இருந்தது. அங்கே ஒரு புதிய நாடகக்குழு தமிழ்ச்செல்வன் தலைமையில் துவங்கப் பட்டது. சிருஷ்டி என்ற அந்த நாடகக்குழுவில் தான் பால்ராமசுப்புவை நான் சந்தித்தேன்.

பால் என்ற அடைமொழி அவர் ஆவின் பால்பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் வந்து சேர்ந்து கொண்டது. கட்டையான உருவம், முன் வழுக்கை விழுந்த தலை, துறுதுறுவென்ற உடல்மொழி, கொஞ்சமும் யோசிக்காமல் கடகடவென வருகிற பேச்சு, எப்போதும் சிரிப்பு, இயல்பான நகைச்சுவையுணர்வு, எல்லோரிடமும் எந்த கௌரவமோ, வயது வித்தியாசமோ இல்லாமல் பழகுகிற தன்மை, யாருக்குத் தேவையென்றாலும், எந்த உதவியும் செய்கிற தோழமை, இவையெல்லாம் சேர்ந்து எங்கள் ஜமாவிலும், சிருஷ்டி நாடகக்குழுவிலும் முக்கியமான ஒரு ஆளுமையாகவும் எங்கள் அன்புக்குரிய அண்ணனாகவும் மாறி விட்டார் பால்ராமசுப்பு. நாங்கள், தத்துவம், அரசியல், இலக்கியம், என்று புத்தகங்களாகப் படித்து பெரிய அறிவுஜீவிகள் மாதிரி பாவனை செய்து கொண்டு திரிந்தோம். அதனால் நாங்கள் எங்கள் நாடகங்களுக்கு ஒத்திகை தேவையில்லை. ஏனெனில் நாடகநிகழ்வுகளில் எதிர்பாராமல் நேரும் எந்தச் சூழ்நிலையையும் நாங்கள் சமாளித்து விடுவோம் என்று இறுமாப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால் பால்ராமசுப்பு பெரிய படிப்பாளியில்லை. தேவைக்குக் கொறிக்கிறவர். நாடகங்களில் வெளிப்படும் அவருடைய உடல்மொழியும், டைமிங்கான வசனங்களும் மிகத் தேர்ந்த கலைஞன் என்று எங்களுக்கு உணர்த்தியது. அவருடைய லகுவான தொடர்புமொழியால் மிக விரைவில் சிருஷ்டி நாடகக்குழுவின் மேலாளராகவும் விட்டார். நாடக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிற வேலையையும் செய்தார். எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தமிழ்ச்செல்வனிடம் கேட்க முடியாததை அண்ணன் பால்ராமசுப்புவிடம் உரிமையுடன் கேட்போம். அவரும் எங்களுக்கு எந்தக் குறையும் – கேட்ட நேரத்தில் டீ, சிகரெட்,- இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

எப்போதும் போல, எல்லா விஷயங்களிலும் நடப்பது போல தமுஎச இந்த வீதி நாடகச் செயல்பாடுகளை உடனே அங்கீகரிக்க வில்லை. சந்தேகத்தின் கூர்வாளால் வீதி நாடகச்செயல்பாட்டாளர்களான அஸ்வகோஷ், தமிழ்ச்செல்வன், பிரளயன், போன்றோரிடம் சண்டையிட்டது. ஆனால் விடாப்பிடியான முயற்சிகளாலும், நாடகங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பினாலும், இந்த வீதி நாடகச்செயல்பாடுகளை ஏற்றுக் கொண்டது. ஆனாலும் திருப்தியில்லை. எங்களைச் சீர்படுத்த வேண்டும் என்று நினைத்தது. எனவே அப்போது நாடகவிற்பன்னர்களாக இருந்த எஸ்.வி.சகஸ்ரநாமம், கோமல்சுவாமிநாதன், போன்றோரின் தலைமையில் சென்னையில் ஒரு பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்தது. எப்போதும் நாடகங்களில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காகவெல்லாம் சிரமப்படமாட்டார் பால்ராமசுப்பு. அவர் அவராகவே வந்து அந்தக் கதாபாத்திரத்தை அவருக்கான கதாபாத்திரமாக மாற்றி விடுவார். அவருக்குப் பயிற்சி கொடுக்க மிகுந்த சிரமப்பட்டனர். பாரதியின் பாஞ்சாலி சபதத்தை நாடகப்பயிற்சிக்கு எடுத்தவர்கள், பால்ராமசுப்புவை துச்சாதனன் வேடத்துக்குத் தேர்வு செய்தனர். அஞ்சவில்லை பால்ராமசுப்பு. துச்சாதனனை கட்டுடைத்து விட்டார். கொடிய வில்லனான துச்சாதனனை விழுந்து விழுந்து சிரிக்கும்படியாகக் காமெடியனாக்கி விட்டார். அவர் மீது தவறில்லை. அவர் இயல்பு அது. நாடகம் வேறு ஒரு பரிமாணத்துக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அது உவப்பாகயில்லை. உடனே அவரைக் கண்டித்து அந்தக் கதாபாத்திரத்தை அவரிமிருந்து பிடுங்கி விட்டார்கள்.

பணம், புகழ், அங்கீகாரம், இப்படி எதையாவது எதிர்பார்த்துச் செயல்படும்போது தானே அவை கிடைக்காத போது ஏமாற்றமும் சோர்வும் ஏற்படும். நான் பல முறை அப்படி சோர்வும் விரக்தியும் அடைந்திருக்கிறேன். ஆனால் பால்ராமசுப்பு ஒரு நாளும் சோர்வடைந்தோ, உற்சாகமின்றியோ இருந்து பார்த்ததில்லை. எப்போதும் ஒரு இடத்தில் கட்டிப்போட முடியாதபடிக்குத் தன் வாழ்வை உற்சாகமாக வைத்திருந்தார். எல்லோருக்கும் அவர் ஏதோ ஒரு விஷயத்துக்காகத் தேவைப்பட்டார். தோழர் வீட்டு கலியாணங்களை அவரே முன் நின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். மரணவீடாக இருந்தாலும் அவரே எல்லாவற்றையும் சிரமேற்கொண்டு செய்து முடிப்பார். அவர் இருக்கும் இடமே உற்சாகமாகி விடும். நாங்கள் சிருஷ்டி நாடகக்குழுவில் இயங்கிக் கொண்டிருக்கும்போது அடிக்கடி பால்ராமசுப்புவின் வீட்டில் கோழிச்சோறு சாப்பிடுவோம்.அப்போது அவருடைய துணைவியார் கொஞ்சம் கூச்சத்துடனும், மிகுந்த அக்கறையுடனும் எங்களுக்கு உணவு பரிமாறுவதைப் பார்த்திருக்கிறேன்.

நான் வேலை கிடைத்து வெளியூர்களில் அலைந்து திரிந்து வந்தபோது அவருடைய துணைவியார் ஆர்.. மல்லிகா இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகுந்த தன்னம்பிக்கையும், கம்பீரமும் கொண்ட தலைவராக அவருடைய துணைவியார் மாறியிருந்தார். பின்னர் கோவில்பட்டி நகர் மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்தினார். அடிக்கடி அதைச் சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுவார் பால்ராமசுப்பு.

“ எல உங்க அக்காவுக்கு இவ்வளவு திறமை இருக்கும்னு உனக்கு தெரியுமால..”

என்று சொல்லுவார். எனக்கு மிக அபூர்வமான மனிதராகவே தெரிந்தார் பால்ராமசுப்பு.

கோவில்பட்டியை விட்டு போனபிறகு சில வருடங்களிலே நாடகங்களை மறந்து விட்டேன். பின்னர் நாடகங்களைப் பார்க்கிற பார்வையாளனாக மட்டுமே நான் மாறிப் போனேன். ஆனால் பால்ராமசுப்பு அப்படியில்லை. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்தனை நாடகக்குழுக்களோடும், கலைக்குழுக்களோடும் உயிரோட்டமுள்ள தொடர்பை வைத்திருக்கிறார். இப்போதும் எந்த நாடகக்குழுவிலும் நடிகராகி விடுகிறார். கலைக்குழுவினர் வந்தால் பின்பாட்டு பாடுகிறார், அல்லது ஹார்மோனியம் இசைக்கிறார். கலைஞர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்கிறார். இப்போது தான் இங்கே தான் பார்த்த மாதிரி இருக்கும், அங்கே இருப்பார். அறுபதைக் கடந்த பின்னரும் அவருடைய சுறுசுறுப்பின் வேகம் குறைய வில்லை. உற்சாகத்தின் எல்லை சுருங்கவில்லை.

அதோ ஒரு தோழரின் வீட்டுத் திருமண வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பால்ராமசுப்பு. மதியம் இனாம் மணியாச்சி பகுதியில் விவசாயிகள் சங்க உறுப்பினர் பதிவு போடவேண்டும். மாலையில் புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சியை நாலாட்டின்புத்தூரில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது. எப்போதும் பம்பரம் போல சுற்றிக் கொண்டேயிருக்கும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் பிரமிப்பாய் இருக்கும் தன்னலமற்ற இந்தத் தோழர்களின் உழைப்பால் புதிய மாற்றம் நிகழ்ந்திடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

இதோ கிடுகிடுவென என்னை நோக்கிச் சிரித்துக்கொண்டே வந்து கொண்டிருக்கிறார் என்றும் இளைஞன், எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு!

நன்றி- மீடியா வாய்ஸ்

Wednesday, 6 June 2012

என் தோழர் என் மாமா சக்தி பயில்வான்

communist-party-of-india-marxist உதயசங்கர்

சின்னஞ்சிறு பிராயத்திலிருந்து எனக்கு பிரமிப்பூட்டும் ஒரு ஆளுமையாக என் மாமா சக்தி பயில்வான் இருந்தார். விடியற்காலையிலேயே தோளில் சிவப்புத்துண்டு, கையில் சங்கிலியில் பிணைக்கப்பட்ட ஒரு நாயுடன் எங்கள் தெருவிலிருந்து அவருடைய உடற்பயிற்சிக் கழகத்துக்குக் கிளம்பி விடுவார். கட்டுமஸ்தான தசைகள் திரண்டு முறுக்கேறிய கட்டுகுட்டான தேகம். காலையில் எழுந்தவுடன் அம்மாவுக்கு வரும் தலைவலிக்கு முத்தையாபிள்ளை காபி கிளப்பின் காப்பியே மருந்தாக இருந்தது. எழுப்பிவிட்டு காப்பி வாங்கி வரச் சொல்லி அனுப்புகிற அம்மாவை தூக்கம் முறிந்த சடைவில் மனதுக்குள் வைது கொண்டே போகிற போதோ, காப்பி வாங்கிக் கொண்டு வருகிற போதோ மாமா சக்தி பயில்வானை எதிர்கொள்ள நேரிடும். என்னுடைய கூச்சமான சிரிப்பைப் பார்த்து அவரும் சிரித்துக் கொண்டே,

“ கம்பு விளையாட வர்றீயால..”

என்று கேட்டு கொண்டே போவார். நான் கொஞ்சம் பெரிய பையனான பிறகு என் மாமாவைப் போல உடற்பயிற்சி செய்து அனைத்து வீர விளையாட்டுகளையும் தற்காப்புக் கலைகளையும் கற்று பெரிய சாகசக்காரனாக ஆக வேண்டும் என்று மனதில் வரித்துக் கொண்டேன். சக்தி மாமாவுக்கு எல்லா விளையாட்டுகளும் தெரியும். சக்தி மாமாவும், என்னுடைய அப்பாவும் பள்ளிப்பருவ நண்பர்கள். இரண்டு பேருமே மூன்றாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. இரண்டு பேருமே ஒரே தெருவில் குடியிருந்தார்கள். என்னுடைய அப்பா மில் வேலையில் சேர்ந்தார். சக்தி மாமா தையல்காரரானார். என்னுடைய அப்பா சாந்த சுபாவி. சக்தி மாமா அதிர்வேட்டு. அவர் இருக்கும் இடம் ஓங்கி ஒலிக்கும் அவருடைய குரலால் அதிர்ந்து கொண்டேயிருக்கும். தெருப் பிரச்னை, ஊர்ப்பிரச்னை, என்று எல்லாப்பிரச்னைகளைப் பற்றியும் விலாவாரியாக அவருக்கு தெரிந்த நியாயங்களைச் சொல்லிக்கொண்டிருப்பார். அடிக்கடி இதைத் தான் காரல் மார்க்சும் லெனினும் அப்பவே சொன்னாங்க. முதலாளித்துவம் அழிந்து புரட்சி நடக்கிற வரை இப்படித்தான் உலகம் தலைகீழாகத் தான் இருக்கும், என்று சொல்லிக்கொள்வார். அவரும் என்னுடைய அப்பாவும் பேசிக்கொள்ளும் போது இப்படிச் சொல்வது சரியாக இருக்காது. சக்திமாமா பேசுவார். என்னுடைய அப்பா கேட்டுக் கொண்டிருப்பார். அவ்வப்போது மாமா ஏதாவது நகைச்சுவையாக ஏதாவது சொல்லி விட்டால் சத்தமில்லாமல் குனிந்து சிரித்துக் கொண்டே,

“ போடா கோட்டிக்காரப்பயலே..”

என்று சக்திமாமாவை செல்லமாக வைவார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவ்வளவு பெரிய பயில்வானை என் அப்பா ரெம்ப சாதாரணமாக வாடா போடா என்று பெசுகிறாரே என்று வியந்து போவேன். என்னுடைய அப்பாவை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கும். அப்போது என் அப்பாவின் மீது பிரியம் பொங்கி வழியும். பள்ளிக்கூடத்தில் யாரிடமாவது அடி வாங்கும்போது நான்,

“ இரில.. நான் எங்க சக்திமாமாட்ட சொல்லி ஒன்னய அடிக்கச் சொல்றேன்…”

என்று வீரம் பேசுவேன். பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் நாங்கள், சின்னப்பாண்டியுடன் சேர்ந்து ஓந்தான் அடிக்கப் போகும் போது அங்கே ஓடைக்கு ஓரமாக பி. சீனிவாசகராவ் உடற்பயிற்சிக்கழகம் என்ற பெயர்ப்பலகையுடன் சுற்றிலும் ஓலை வேய்ந்த, செம்மண் கொட்டிக்கிடக்கும் சிறிய மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு பக்கம் சிலம்பு விளையாட்டு, மணல் குவித்திருந்த இடத்தில் மல்யுத்தம், பார் விளையாட்டு, கர்லாக் கட்டை சுழற்றுதல், பளு தூக்குதல், என்று எப்போதும் விளையாட்டு மாணவர்களின் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். ஒன்றாகவிருந்த தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்டமக்களின் தன்னிகரில்லா தலைவராக விளங்கியவர் பி.சீனிவாசகராவ். சாணிப்பால், சவுக்கடி, வல்லாங்கு, பண்ணை முதலாளிகளால் நரகத்தை அநுபவித்துக் கொண்டிருந்த அந்த மக்களிடம் அடித்தால் திருப்பி அடி என்று முதல் முதலாகச் சொன்னவர். அந்த மக்களின் தீரத்தால் அங்கே செங்கொடி இயக்கம் வேரூன்றியது. அந்தத் தலைவரின் பெயரில் வைத்திருந்த உடற்பயிற்சி கழகத்தில் சக்திமாமா சொல்லிக் கொடுத்த முதல் பாடமே அநியாயத்தை, அநீதியை தோழர் பி.சீனிவாசகராவ் வழியில் எதிர்த்து நில் என்பது தான்.

கோவில்பட்டியில் எப்போதுமே மே தினம் கொண்டாட்டமாக இருக்கும். மே தினத்தன்று தொழிலாளர்களின் பேரணி பிரம்மாண்டமாக நடக்கும். அதன் முன்னால் எப்போதும் எங்கள் சக்தி மாமாவின் உடற்பயிற்சிக் கழகத்தின் தோழர்கள் வீர விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு வர நாங்கள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டே கூட நடப்போம். சிலம்பு, சுருள்வாள், புலி வேஷம், மான் கொம்புச் சண்டை, தீப்பந்தம் சுழற்றுதல், ஜிம்னாஸ்டிக்ஸ், என்று விதவிதமான விளையாட்டுகளோடு ஊர்வலத்தின் முன்னே சக்தி மாமா ஊர்வலத்தை நடத்திக் கொண்டு போவார். அப்போது அவர் வேறு ஒரு ஆளாகத் தெரிவார். அவரிமிருந்த உற்சாகம், அர்ப்பணிப்பு, உழைப்பு, தீவிரம், எல்லாம் ஒன்று சேர்ந்து ஜொலிக்கும். எனக்கு இப்போது தோன்றுகிறது, அவரைப் போன்ற ஆளுமைகளின் ஈர்ப்பு தான் எங்களையெல்லாம் இடதுசாரி அரசியல், தத்துவத்தை நோக்கி இழுத்திருக்கலாம் என்று.

1974 ஆம் ஆண்டு மிகப்பெரிய அரிசித்தட்டுப்பாடு தமிழகத்தில் வந்தது. ரேஷன் கடை அரிசியைக் கடத்திப் பதுக்கினார்கள். வெளிச்சந்தையிலும் அரிசி கிடைக்கவில்லை. அப்போது ஒரு அரிசி மில்லில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை தோழர்.சி.ராமசுப்பு, தோழர். சக்தி, தலைமையில் மக்கள் கைப்பற்றினார்கள். அதை மக்களிடம் அவரவர் ரேஷன் கார்டு அளவுக்கேற்ப அங்கேயே வினியோகம் செய்தனர். அத்தகைய தீரர் சக்தி மாமா. எமர்ஜென்சி என்ற கொடுங்கனவுக் காலத்தில் அவரும் தோழர்.சி.ராமசுப்புவும் ஓராண்டுக்கு மேல் சிறையிலும் இருந்தார்கள். அதே போல இன்னொரு சம்பவம், 1979 ஆம் ஆண்டு ஜனதா ஆட்சிக் காலம். இந்திராகாந்தி அம்மையாரைக் கைது செய்தது மத்திய அரசு. அதற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஊர் முழுவதும் கடையடைக்கச் சொல்லி ஊர்வலமாகச் சென்றனர். கோவில்பட்டி மெயின்ரோட்டில் ஜோதிபாசு சலூன் தோழர்களின் முக்கியமான சந்திப்பு மையம். அதற்கருகில் தோழர். மாரியப்பபிள்ளையின் இரவு உணவு விடுதி. முதல் முறையாக கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் போது தோழர். மாரியப்பபிள்ளையிடம் கடையடைக்கச் சொல்லி எச்சரித்து விட்டு போனார்கள். மீண்டும் திரும்பி அவர்கள் ஒரு நூறுபேர் இருக்கும் வந்தபோது தோழர். மாரியப்பபிள்ளையின் கடையில் தோழர்.சி.ராமசுப்புவும், தோழர்.சக்தியும் இருந்தார்கள். கும்பல் கடையை அடைக்கச் சொல்ல இவர்கள் அந்தக் கும்பலின் கையிலிருந்த கட்டை, கற்கள், ஆகியவற்றைக் கண்டும் அஞ்சாமல் கடையை அடைக்கமுடியாதென்று மறுத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கடையின் மேல் ஒரு கல் வந்து விழுந்தது. அவ்வளவு தான். தோழர்.சக்தி தன் இடுப்பில் கட்டியிருந்த சுருள் வாளை எடுத்துச் சுழற்ற, தோழர்.சி ராமசுப்புவும் தன் பெல்ட்டினால் கும்பலை விரட்ட, தோழர். மாரியப்பபிள்ளையும் தன் பங்குக்கு அடுப்பில் இருந்த கங்குகளை எடுத்து வீச கும்பல் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் சிதறி ஓடி விட்டது. எனக்கு இந்தக் கதைகளை என் அப்பா சொல்லும்போது அப்பாவின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது. எனக்குச் சாகசக் கதைகளின் நாயகனாகவே என் மாமா தெரிந்தார்.

கல்லூரி முடிந்து நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து கதைகள் எழுதி எழுத்தாளனாக முயற்சித்துக் கொண்டிருந்த போது என் மாமா என்னிடம் மார்க்சிய அரசியல் பேசினார். நாங்கள் அப்போதே அரசு, அரசும் புரட்சியும், மார்க்சிய மெய்ஞ்ஞானம், என்று வாசிக்க ஆரம்பித்திருந்தோம். நாங்கள் குழப்பமாகப் படித்து புரிந்து கொண்டிருந்ததை அவர் எளிமையான மக்கள் மொழியில் சொல்லியதைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. நானும் ஓரிரண்டு நாட்கள் சக்தி மாமாவின் உடற்பயிற்சிக் கழகத்துக்குப் போய் சிலம்பு விளையாடப் போனேன். பார்க்கும்போது அந்த சிலாவரிசையும், அடிமுறைகளும், சுலபமாக இருந்தது. ஆனால் கையில் கம்பைப் பிடித்த பிறகு தான் தெரிந்தது. அது எப்பேர்ப்பட்ட கெஜகர்ணவேலை என்று. முதல் நாள் இரண்டு முறை கம்பைச் சுத்தும்போது என் முழங்காலில் நானே அடித்துக் கொண்டேன். சரி அதுதான் பரவாயில்லை. அடுத்தநாள் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த ரெண்டு பேரைத் தட்டி விட்டேன். பல்லைக் கடித்துக் கொண்டு வந்தவர்களைப் பார்த்த என் சாகசக்கனவு தன் வாலைச் சுருட்டிக் கொண்டது. அதன் பிறகு அங்கே வேடிக்கை பார்க்க மட்டும் தான் போயிருக்கிறேன்.

ஒரு நாள் சக்தி மாமாவின் வீட்டுக்குப் போயிருந்தபோது சுவரில் ஒரு வாள் இருந்தது. நான் மாமாவிடம்,

“ ஏது மாமா இந்த வாள்? “

என்று கேட்டேன். அதற்கு அவருடைய தாத்தாவின் அப்பா எட்டையபுரம் மகாராஜாவின் படையில் இருந்ததாகவும், தாத்தா திசைகாவல் பணியில் இருந்ததாகவும் சொன்னார். நான் ஆவலுடன் அந்த வாளைத் தொட்டுப் பார்த்தேன். அதைப் பார்த்த சக்தி மாமா அந்த வாளை சுவரில் இருந்து எடுத்து என் கையில் கொடுத்தார். அவர் ஒரு கையில் எடுத்து கொடுத்ததை நான் இரண்டு கைகளிலும் சேர்த்துப் பிடித்தும் ஒருநிமிடத்துக்கு மேல் கையில் வைத்திருக்க முடியவில்லை. அந்த வாள் என் கையில் இருந்த அந்த ஒரு நிமிடத்தில் எட்டையபுரத்து வரலாற்றின் பக்கங்கள் வம்சமணி தீபிகா என்ற நூலிலிருந்து சடசடவென புரண்டன. உடலில் வரலாற்று உணர்வு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கையில் வாளுடன் நின்று கொண்டிருந்த சக்தி மாமா ஒரு வரலாற்றுவீரனாகவே எனக்குத் தெரிந்தார்.

அது 1983-ஆம் ஆண்டாக இருக்கலாம். நானே மாமாவின் சாகசத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. மே தின ஊர்வலத்தில் சக்தி மாமாவின் வீரவிளையாட்டுகள் முன்னால் செல்ல தொழிலாளர்களின் கோஷங்கள் விண்ணைப் பிளந்து கொண்டிருந்தன.

புரட்சி ஓங்குக!

வெல்லட்டும் வெல்லட்டும் பாட்டாளி வர்க்கம் வெல்லட்டும்!

வருகுது பார்! வருகுது பார்! செம்படைப் பேரணி வருகுது பார்!

செங்கொடிகளின் பதாகைகள் காற்றில் களிப்புற்று அசைய ஊர்வலம் முன்னேறிக் கொண்டிருந்தது. நாங்கள் சாலையின் ஓரத்தில் நின்று வீரவிளையாட்டுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் திடீரென ஊர்வலத்தின் நடுவே புகுந்து வீர விளையாட்டுகளை நிறுத்தச் சொன்னார். அவர் கத்தியதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே அவர் வந்ததிலிருந்து கோவில்பட்டி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரிய தொந்திரவாகவே இருந்தார். சாலை ஒரமாக நின்று கொண்டிருக்கும் சைக்கிள்களை காலால் உதைத்துத் தள்ளுவது. ஓரமாக நின்று பேசிக் கொண்டிருப்பவர்களைக் கூப்பிட்டு மிரட்டி விரட்டுவது, யாராவது பதில் பேசினால் அடிப்பது என்று அராஜகம் செய்து கொண்டிருந்தார். அதனால் அவர் வந்து தலையிட்டதைப் பார்த்ததும் எங்களுக்குப் பதட்டம் அதிகரித்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று பதைபதைப்புடன் நின்று கொண்டிருந்தோம். அப்போது சற்றும் எதிர்பாராவிதமாக அந்த இன்ஸ்பெக்டர் விளையாட்டு வீரர்களில் ஒருவர் வைத்திருந்த செங்கொடியைப் பிடுங்கிக் கீழே போட்டார். அவ்வளவு தான் சடசடவென அந்த இன்ஸ்பெக்டரைச் சுற்றி வளைத்து கம்புகள் இறங்கின. போட்ட கோஷங்களில் அவருடைய கூப்பாடு வெளியே கேட்கவில்லை. சக்தி மாமா தான் தன்னுடைய மாணவர்களைச் சத்தம் போட்டு அந்த இன்ஸ்பெக்டரைக் காப்பாற்றினார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த இன்ஸ்பெக்டருக்கு முதல் அடியைக் கொடுத்ததும் சக்தி மாமா தான்.அதை என் கண்ணால் கண்ட பிறகு சக்தி மாமாவைப் பார்க்கும்போது மிகுந்த மரியாதை தோன்றியது.

அதன் பிறகு நான் வடமாவட்டங்களில் வேலைக்குப் போய் விட்டேன். கிட்டத்தட்ட பதிநான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கோவில்பட்டி வந்தபோது ஊரின் முகமும் குணமும் வெகுவாக மாறியிருந்தது. சக்திமாமாவும் தளர்ந்திருந்தார். அவருடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் அவரைப் பாதித்திருந்தன. அது மட்டுமல்ல. கோவில்பட்டியின் சமூக அரசியல் செயல்பாட்டுக் களத்தில் அவர் செய்த சாகசங்களும், அவருடைய பங்களிப்புகளும் நவீன அரசியலைத் தன்னுடைய சுயமுன்னேற்றத்துக்காக மட்டும் பயன்படுத்துகிற. புதிய, படித்த, மத்தியதரவர்க்கத்தினர் அரசியலுக்கு வந்த பிறகு புரியவில்லை. அவர் முரட்டுத் தனமானவராகத் தெரிந்தார். அவருடைய பேச்சு பத்தாம்பசலித்தனமாகத் தெரிந்தது. அதன் பிறகு நான் சக்திமாமாவைப் பார்க்கும் போது பேச்சில் ஒரு விரக்தி தெரிந்தது. என்னையும் என் நண்பர்களைப் பார்க்கிறபோது ஒரு விரோதபாவம் ஒளிர்ந்தது. அது ஒரு காலத்தில் பெட்டிபூர்ஷ்வா என்று எங்களை நாங்களே கேலி செய்து சுயவிமர்சனம் செய்து கொண்டிருந்த மத்தியதர வர்க்கம் இப்போது அவரைப் போன்ற பாட்டாளிகளை சமகாலஅரசியலிலிருந்து விலக்கி வைக்கிற தந்திரத்தின் மீதான கோபமே என்று நான் உணர்ந்து கொண்டேன். இப்போது பி. சீனிவாசகராவ் உடற்பயிற்சிக் கழகம் மட்டுமே அவருடைய ஆர்வமாக இருந்தது. அதிகமான மாணவர்களும் இல்லை. ஆனாலும் காலையில் கையில் நாயுடன் அவர் போவது நிற்கவில்லை.

ஒரு நாள் காலை நான் கங்கைகொண்டான் ரயில்வே ஸ்டேசனில் பணியில் இருந்தபோது நண்பர் ரெங்கராஜ் அலைபேசியில் சொன்னார் அந்தத் தகவலை. எனக்கு ஒரு கணம் உடல் அதிர்ந்தது. பணி முடிந்து நான் சக்தி மாமாவின் வீட்டுக்குச் சென்றேன். வாசலில் தோழர்கள் கூட்டம். வீட்டுக்குள் நாற்காலியில் சக்தி மாமாவை உட்காரவைத்திருந்தார்கள். கழுத்தில் மாலைகளோடு, நாடிக்கட்டோடு, உட்காரவைக்கப் பட்டிருந்தார், என் சக்தி மாமா. விரிந்த மார்பும் திண் தோள்களும், திரண்டகைகளும் கொண்டிருந்த சக்தி மாமாவின் ஆகிருதி அந்த நாற்காலியில் ஒடுங்கி மெலிந்து அடையாளமே தெரியாமலிருந்தது. எனக்குப் பொங்கி வந்த அழுகையை அடக்கமுடியவில்லை. என்னுடைய சக்திமாமா இவரில்லை. இறுதி ஊர்வலத்தில் அவருடைய மாணவர்கள் சிலம்பு விளையாடி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பி.சீனிவாசகராவ் என்ற மகத்தான மக்கள் தலைவரின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட சக்தி மாமாவின் உடற்பயிற்சிக் கழகம் இப்போது தூர்ந்து போய்க் கிடக்கிறது. அந்தப் பலகையின் வண்ணம் தேய்ந்து உரிந்து தன் பழைய ஞாபகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. நான் அந்த வழியாகச் செல்லும்போது அங்கே ஒரு நிமிடம் நின்று பழைய காலத்தின் சுவடுகளைத் தேடுவேன். அதோ என் சக்தி மாமாவின் உற்சாகமான குரல் கேட்கிறது. எல்லோரையும் உற்சாகப்படுத்துகிற அந்த முரட்டுத்தனமான நாகரீகமில்லாத அந்தக் குரல்….என்னை எதுவோ செய்கிறது. சிலம்புக்கம்பின் வீச்சொலி விர்ர்ரென என் காதில் ஒலிக்கிறது. கண்கள் பொங்குகிறது. என் தோழரான என் சக்திமாமா உங்கள் தீரத்தை நாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்போம். எங்கள் அன்புக்குரிய தோழரே! என் அன்புக்குரிய சக்திமாமா..உங்களை வணங்குகிறேன். கோவில்பட்டியும் வணங்குகிறது.

நன்றி-மீடியா வாய்ஸ்

Wednesday, 30 May 2012

பரியும் நரியும்

உதயசங்கர்

அவர் கேட்டது நியாயமாகத் தான் தெரிந்தது. ஆனால் ரயில்வே பார்சல் கிளார்க் அநியாயத்துக்குச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். திருவண்ணாமலை ஸ்டேஷனில் எனக்கு அன்று இரவுப் பணி. அப்போது தான் மதுரை- திருப்பதி எக்ஸ்பிரஸ் வண்டி திருவண்ணாமலை ஸ்டேஷனை விட்டு போயிருந்தது. அதற்கப்புறம் தான் இந்தப் பிரச்னை. மதுரை-திருப்பதி வண்டியில் பொதுவாகவே நிறையப் பார்சல்கள் வந்திறங்கும். அன்று ஒரு விசித்திரமான ஒரு பார்சலும் வந்திருந்தது. பார்சலைப் பெற்றுக் கொண்டதற்காக கையெழுத்து போட்டு விட்டு வந்த பார்சல் கிளார்க் மயில்சாமி என்னைப் பார்த்து

“ பாருங்க சார் சொறி நாயையெல்லாம் புக் பண்ணி அனுப்புறாங்க.. காலக்கொடுமையைப் பார்த்தீங்களா..”

என்று சொல்லி அங்கலாய்த்தார். நானும் புன்னகைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் பார்சல் போர்ட்டர் சூசை ஒரு நாயைக் கரகரவென இழுத்துக் கொண்டு வந்தார். அது வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. இவரும் விடமாட்டேன் என்று இழுத்துக் கொண்டு வந்தார்.

“ வா சனியனே.. வா.. நாய்க்குக் கூடத் தெரியுது.. நா ஒரு இளிச்சவாய்ப் பையன்னு.. இந்த பாரு ஒழுங்கா மரியாதியா வந்தேன்னா ஆச்சி.. அப்பால என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..”.

என்று நாயுடன் பேசிக்கொண்டே வந்த சூசையின் சத்தம் கேட்டு நான் ஸ்டேஷன் அறையை விட்டு வெளியே வந்தேன். ஒரு செவலை நாய். மெலிந்து வாடிப்போயிருந்தது. முதல் பார்வையிலேயே சொல்லி விடலாம் அது ஒரு தெரு நாய் என்று, அப்படி ஒரு லட்சணம் பொங்கி வழிந்தது. அது பலிபீடத்தில் வெட்டப் போகிற கிடாயைப் போல நான்கு கால்களையும் தரையில் பிறாண்டிக் கொண்டே வந்தது. அதன் கழுத்தில் கட்டியிருந்த கயிறை அங்கிருந்த தூணில் கட்டி விட்டு மற்ற பார்சல்களை எடுக்க போனார் சூசை.

அப்போது தான் ஸ்டேஷன் அறைக்குள் அவர் நுழைந்தார். மிகவும் பெரிய மனிதத் தோரணையிலிருந்த அவர் பார்சல் கிளார்க்கிடம் அவர் கையிலிருந்த ரசீதைக் கொடுத்தார். பார்சல் கிளார்க் மயில்சாமியும் அவரை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு அவரிடம் இருந்து ரசீதை வாங்கிச் சரிபார்த்து பதிவேட்டில் பதிந்து அவரிடம் கையெழுத்து வாங்கினார். கையெழுத்து போட்டு விட்டு நிமிர்ந்த அவர்,

“ நாய் எங்கே? “

என்று கேட்டார். அதற்கு மயில்சாமி அலட்சியமாக,

” அதான் வெளிய இருக்குல்ல.. பிடிச்சிட்டுப் போங்க..”

என்று சொன்னார். அவர் வெளியே போய் பார்த்து விட்டு மறுபடியும் உள்ளே வந்தார். மயில்சாமியைப் பார்த்து,

“ எங்கே கெட்டிப் போட்டிருக்கீங்க..”

என்று கேட்டார். ஏற்கனவே ஒரு பார்சல் டேலி ஆகாதக் கவலையில் இருந்த மயில்சாமி எரிச்சலுடன்,

“ அந்தா தூணில கிடக்குல்ல..”

என்று சொல்ல அவர் திரும்பிப் பார்த்தார். அவருக்கு அவர் கண்களையே நம்ப முடியாததைப் போல சுற்றிச் சுற்றி எல்லாத் திசைகளிலும் பார்த்தார். பிளாட்பாரம் முழுவதும் தன் கண்களை மேய விட்டார். அங்கே அந்தத் தெரு நாயைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இப்போது அவர் எரிச்சலுடன்,

“ சார்.. நான் அனுப்புன நாய எங்கே?”

என்று கேட்க அதே மாதிரிக் குரலில் மயில்சாமி,

“ நீங்க அனுப்புன நாய் அங்க..”

என்று சொல்ல அந்தப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்து விட்டது.

“ ஹலோ நான் அனுப்புனது.. பொமரேனியன் வொயிட் டாக்.. இதென்ன தெரு நாயக் காட்டிறீங்க..”

“ நீங்க என்ன புக் பண்ணினீங்களோ எனக்குத் தெரியாது..இங்க வந்தது இது தான்..”

“ அதென்ன இப்படிப் பொறுப்பில்லாம பேசறீங்க.. ஐ வில் கம்பிளைண்ட் திஸ் மேட்டர் டு யுவர் ஜி.எம்.”

என்று கொதித்துப் போனார். நான் இது தலையிட வேண்டிய தருணம் என்று உணர்ந்தேன். உடனே அவரிடம் ,

” சார் கொஞ்சம் பொறுங்க..” என்று சொல்லி மயில்சாமி பக்கமாய்த் திரும்பி,

” சார் அந்த நாய்க்குப் பதிலா வேற நாயை இறக்கிட்டாரா சூசை..?”

என்று என்னுடைய சந்தேகத்தைக் கேட்டேன். உடனே மயில்சாமியும் சற்று அமைதியானார். எழுந்து வெளியே போய்,

“ சூசை.. சூசை..”

என்று கத்தினார். அப்போது தான் பார்சல்களை ஏற்றிக் கொண்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த சூசை,

“ தோ..வர்ரேன் சார்..”

என்றார். அருகில் வந்ததும் அவரிடம் நான்,

“ என்ன சூசை நாய மாத்திகீத்தி இறக்கிட்டீங்களா?”

என்று கேட்டேன். அதற்கு அவர்,

“ இல்லீங்க சார்.. அந்த டாக் பாக்ஸ்ல இந்த ஒரு நாய் தான் இருந்திச்சி.. ஏன் என்னவாம்..”

என்று பதில் சொல்ல மறுபடியும் குழப்பம். மயில்சாமி,

“ இவரு..பொமரேனியன் அதான் சடைசடையாமுடி இருக்குமே அத்த அனுப்புனாராமாம் என்னா இது இங்கே தெரு நாயா இரிக்கிதேங்கிறாரு சூசை..”

என்று சொன்னார். எனக்கும் ஒன்றும் புரிய வில்லை. மதுரையிலிருந்து புக் பண்ணின நாய் எப்படி இப்படி அவதாரம் எடுக்கும். கார்டு இருக்கிற பெட்டியிலேயே டாக் பாக்ஸ் இருக்கும். அவரை மீறி எதுவும் செய்யமுடியாது. அந்த பெட்டியில் அடைத்து அதை பூட்டு போட்டு பூட்டி விடுவார் கார்டு. எங்கே இறக்க வேண்டுமோ அங்கே தான் அந்தப் பெட்டியைத் திறப்பார். அப்படி இருக்கும் போது ..ஒரு வேளை அந்தப் பெரிய மனிதர் பொய் சொல்கிறாரோ.. அவரிடம் ரயில்வேயின் நடைமுறைகளை விவரித்தேன். அப்படி மாறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று விளக்கினேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அவர்,

“ நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா என்னோட ஜிம்மியைப் புக் பண்ணி டாக் பாக்ஸ்ல அடைச்சிட்டு அதைச் சமாதானப் படுத்துறதுக்காக பிஸ்கட் வாங்கி அந்தக் கார்டு கிட்ட கொடுத்துட்டு அதே டிரெய்ன்ல தானே நானும் வர்ரேன்..”

என்று சொன்னதைக் கேட்ட எங்களுக்குத் தலைசுற்றியது. பரி எப்படி நரியானது? என்று தெரியவில்லை. அவர் அந்தத் தெருநாயை ஸ்டேசனுக்கே அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார். அதோடு கம்பிளையண்ட் புத்தகத்தை வாங்கி புகாரும் எழுதிக்கொடுத்து விட்டுப் போனார். அந்தப் புகாருக்காக யார் யாரோ வந்தார்கள். விசாரித்தார்கள். ஆனால் அந்தப் புதிர் இன்று வரை விடுபடவேயில்லை.

இப்படித்தான் ஒரு நாள் கசங்கிய சட்டையும் பேண்டும் கலைந்த தலைமுடியுடன் மிகவும் பணிவுடன் வந்த ஒரு ஆள், மயில்சாமியிடம்,

“ சார் டிரெய்ன்ல புளி புக் பண்ணனும்..சார்.. எப்ப கொண்டு வரணும் சார்.”

என்று கேட்டான். மயில்சாமி அவனிடம்,

“ எத்தனை கிலோ இருக்கும்..”

என்று கேட்க அவன் சற்று யோசித்து,

“ ஒரு நூறு நூத்தம்பதுகிலோ இருக்கும் சார்..” என்று சொன்னான்.

உடனே மயில்சாமி முகத்தில் பிரகாசம் ஒளிர்விட,

“ எந்த ஊருக்கு? “10222447-the-hand-drawn-sketch-of-the-severe-tiger

என்று கேட்டார். அதற்கு அவன்,

“ தஞ்சாவூருக்கு..”

என்று சொன்னான். உடனே அவனிடம் மயில்சாமி எப்போது கொண்டுவரவேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்று விலாவாரியாகச் சொல்லிக் கொடுத்தார். அவன் அவர் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டினான். மறுநாள் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றான்.

மறுநாள் மயில்சாமி சொன்ன நேரத்துக்கு அவன் ஸ்டேஷனுக்கு வந்து விட்டான். மயில்சாமி ஏதோ ஒரு பதிவேட்டில் தலைகுனிந்திருந்தார். நான் அவன் உள்ளே நுழைந்ததுமே மேஜை மீது ஏறி விட்டேன்.என்னுடன் அப்போது பணியில் இருந்த கலியன் ஒரு வினோதமான ஊளையிட்டான். எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. இத்தனைக்கும் தலை நிமிராமலே இருந்தார் மயில்சாமி. வந்தவன்,

“ சார் புளி..கொண்டு வந்திருக்கேன்…”

என்றான். மயில்சாமி ஏறிட்டுப் பார்க்காமல்,

“ புளியை நல்லா பேக் பண்ணிட்டயா?

என்று கேட்டார். அவன் அமைதியாக, 

“ அதான் சார் எப்படி பேக் பண்ணனும்னு சொன்னிங்கன்னா செய்ஞ்சுடலாம்..சார்..”

என்று சொல்ல அப்போது தான் தலையை நிமிர்த்திக் கொண்டே,

“ என்னய்யா.. சாக்குமூட்டையில அடைக்கத் தெரியா….”

என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அப்படியே பாதி வார்த்தையில் நின்று, வாய் குழறி மொழியில்லாத குரலில் ஏதேதோ சத்தங்களை எழுப்பினார். முகம் பயத்தில் வெளிறி விட்டது.

அங்கே எங்களுக்கு முன்னால் ஒரு நிஜப்புலி நின்று கொண்டிருந்தது.

Thursday, 17 May 2012

அன்பின் பேராற்றில்………….

bava_chelladurai_thumb[6]karuna 

வேலை கிடைத்தும் நிம்மதியில்லை. கோவில்பட்டியின் ஞாபகங்கள் என்னைக் கொத்தித் தின்றன. கல்லூரி முடித்த நாளிலிருந்து வேலைக்கான ஆர்டர் வாங்கிய நாள்வரை கோவில்பட்டி நண்பர்களோடும், தமுஎச தோழர்களோடும், தான் வாழ்ந்து வந்தேன் என்று சொல்லலாம். வீடு உண்பதற்கும், உறங்குவதற்குமான தற்காலிக உறைவிடமாகவே இருந்தது. பல சமயங்களில் உண்பதும், உறங்குவதும் கூட நண்பர்களோடு வெளியே வெளியூரில் என்று ஆகி விட்டிருக்கிறது. அத்தனை நண்பர்களையும், தோழர்களையும் விட்டு விட்டு வேரோடு பிடுங்கி எறியப்பட்டு வெயிலில் எரிந்து கொண்டிருந்தேன்.அதுவும் நான் இது வரை கண்டிராத வட ஆற்காடு மாவட்டம். விசித்திரமான வட்டார மொழி. புதிய நிலப்பரப்பு. புதிய மனிதர்கள்.இவர்களுக்கு நடுவே திருவண்ணாமலை அருகில் திப்பக்காட்டுக்கு நடுவில் இருந்த வேளானந்தல் ரயில்வே ஸ்டேசனில் வேலை. அங்கே மனிதவாடையே இல்லை. மனிதர்கள் என்று ஸ்டேசனில் வேலை பார்த்த நாங்கள் மட்டும் தான் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு திரிந்தோம். மனிதர்களைத் தவிர வகைவகையான பாம்புகள், நட்டுவாக்காலி, ஜலகண்டச் சிலந்திகள், தேள்கள், இரவில் படையெடுக்கும் அத்தனை வகையான பூச்சியினங்கள், அவைகளின் விசித்திரமான சப்தங்கள், ஊளையிடும் நரிகள், பறவைகளின் விதம்விதமான குரரொலிகள் என்று எல்லாம் நிறைந்திருந்தது.

நான் அதிகபட்சம் எங்கள் ஓட்டுச்சாய்ப்பு வீட்டில் தேளைப் பார்த்திருக்கிறேன். அதைக் கூட நான் அடித்ததில்லை. அம்மாவோ, இல்லை அப்பாவோ,அடிப்பார்கள். ஏன் தம்பிகூட அடித்திருக்கிறான். நான் அருகிலேயே போக மாட்டேன். சின்ன வயதில் எனக்கிருந்த ஏராளமான பயங்களில் தேள் பயமும் ஒன்று. அது எங்கள் வீட்டுச் சுவரில் எங்கோ உயரத்தில் இருந்ததைப் பார்த்து போட்ட கூப்பாட்டில் தெருவே திரண்டு விட்டது. அப்பேர்க்கொண்ட தைரியசாலியான என்னை இப்பேர்க்கொண்ட ஸ்டேசனில் அப்பாயிண்ட்மெண்ட் செய்திருந்தார்கள். எனக்கு அங்கே இருந்த மரம், செடி, கொடி, எதைப்பார்த்தாலும் பயமாகவிருந்தது. எல்லாமே பாம்புகளாகத் தெரிந்தது. அது வரை நான் படித்திருந்த இலக்கியம், அரசியல், தத்துவம், எல்லாம் என்னைக் கைவிட்டன. அங்கேயிருந்த ரயில்வே தொழிலாளர்கள், சகநிலைய அதிகாரிகள் பேசிய மொழியே புரியவில்லை. அவர்கள் ரயில்வே சம்பந்தமில்லாமல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிகாரிகளைப்பற்றி, அன்றாடம் நடந்த ரயில்வேதுறை சார்ந்த நடவடிக்கைகள் பற்றி, தீரவே தீராமல் பேசிக்கொண்டிருந்தார்கள். பொழுது போவதற்காக முறைபிறழ் உறவுகளைப் பற்றிப் பேசினார்கள்.

எனக்கு இவை இரண்டும் ரசிக்கவில்லை. அப்போது தான் நான் கதகதப்பாய் இருந்த உலகம் வேறு. வெளியே இருக்கிற உலகம் வேறு என்று மண்டையில் உறைத்தது. எப்படியாவது மீண்டும் அந்த கதகதப்பான உலகத்துக்குள் போய்விட ஆசைப்பட்டேன். அதற்காக என் வேலையை விடவும் தயாரானேன். தனிமை என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்றது. யாரிடமும் வாயார பேச முடியவில்லை. மனதார பகிர்ந்து கொள்ள முடியவில்லை. கொண்டு போன புத்தகங்களையும் மீண்டும் மீண்டும் படித்தாயிற்று. தன்னந்தனியே உட்கார்ந்து கொண்டு சிசர் சிகரெட்டுகளாக ஊதித் தள்ளினேன். நண்பர்களுக்குக் கடிதம் எழுதினேன். தினமும் குறைந்தது நான்கு கடிதங்களாவது எழுதித் தள்ளினேன். அது வரை சரியாகக் கூடப் பேசியிராத நண்பர்களுக்குக் கூடக் கடிதம் எழுதினேன். என்னைத் தனிமையின் கொடூரச் சித்திரவதையிலிருந்து யாராவது காப்பாற்றி விட மாட்டார்களா என்று ஏங்கித் தவித்தேன். மூச்சு முட்டும் இந்தத் தனிமைச் சுழலிலிருந்து கை கொடுத்துக் காப்பாற்ற யாரும் இல்லையா? தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன் தலைக்கு மேலே கையைத் தூக்கி காப்பாற்றச் சொல்லும் உயிர்வாதையாய் அந்தக் கானகத்தின் நடுவிலிருந்து கதறிக் கொண்டிருந்தேன். ஆனால் யார் காதிலும் அது விழவில்லை. நான் நூறு கடிதம் போட்டால் பதிலுக்கு ஐந்து கடிதம் வந்தது. எல்லோரும் எரிச்சலும், சலிப்பும் அடைந்தார்கள். சில நண்பர்கள் கோணங்கி, பாரதி, சாரதி, முத்துச்சாமி, வேளானந்தல் ஸ்டேசனுக்கே வந்து ஆறுதல் சொன்னார்கள். ஒருநாள் திருவண்ணாமலையில் சும்மா சுற்றிக் கொண்டிருந்தபோது டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளிக்கூடம் இருந்த மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகம் தற்செயலாகக் கண்ணில் பட்டது. உள்ளே பெரிய மீசையுடன் தோழர் ஒருவர் இருந்தார். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பற்றி விசாரித்தேன். அவர் தான் அதே தெருவில் இருந்த பல்லவன் ஆர்ட்ஸில் மாலை நேரம் சென்று பார்க்கச் சொன்னார்.

அன்று நேரமாகி விட்டதால் ரயிலுக்கு ஓடி விட்டேன். மறுநாள் மாலை படபடக்கும் நெஞ்சோடு பல்லவன் ஆர்ட்ஸை நெருங்கினேன். அங்கே பளபளக்கும் முகத்தோடு மெல்லியமீசையோடு படம் வரைந்து கொண்டிருந்த இளைஞரிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் கூடவே என்னை விட கருப்பாய் ரெண்டு இளைஞர்கள் இருந்தார்கள். நான் பேசி முடித்ததும் படம் வரைந்து கொண்டிருந்த ஓவியர் பல்லவன் சிரித்துக் கொண்டே எழுந்து, பின்னாலிருந்த இளைஞர்களிடம்,

“ யெப்பா உங்க ஆளு வந்துட்டாருப்பா..”

என்று சொன்னார். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த அந்த இளைஞர்கள் தங்களை என்னிடம் அறிமுகம் செய்த போது அவர்கள் இருவரும் தமிழ்க்கலை இலக்கிய உலகத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவாகப் போகிறார்கள் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அவர்கள், எல்லாநாளும் கார்த்திகையாக வாழ்வைக் கொண்டாடுகிற, கலைஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற, தமிழின் மிகமுக்கியமான படைப்பாளியாக உருவாகியிருக்கிற பவா செல்லத்துரையும், மாற்றுத்திரைப்பட, குறும்பட, ஆவணப்பட,இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிற குறும்பட இயக்குநர், பண்பாட்டுப்போராளி, கருணாவும் தான்.

அன்றிலிருந்து நானும் அவர்களை விடவில்லை. அவர்களும் என்னை விடவில்லை. என் தனிமைத்துயர் நீங்க எனக்குக் கிடைத்த மாமருந்தாய் அவர்கள் இருந்தனர். எனவே அது வரை பேசாத பேச்செல்லாம் பேசினேன். எனக்குத் தெரிந்த அத்தனை விசயங்களையும் அவர்களிடம் கொட்டினேன். நவீன இலக்கியம் குறித்த முற்போக்கு இலக்கியம் குறித்த, அரசியல் குறித்த, தத்துவம் குறித்த, புரட்சி குறித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த, அத்தனை விசயங்களையும் சொல்லித் தீர்த்தேன். வேளானந்தல் ஸ்டேசனில் பணி முடிந்ததும் திருவண்ணாமலைக்கு ஆவலோடு ஓடி வந்து விடுவேன். அவர்களோடு அவர்கள் போகிற இடங்களுக்கெல்லாம் கூடவே அலைந்து திரிந்தேன். அங்கே பவாவின் வீட்டில் பெரும்பாலான சமயங்களில் சாப்பிட்டேன். பவாவின் அம்மாவைப் பார்க்கிற போதெல்லாம் ஒரு செவ்வியல் கதாபாத்திரத்தைச் சந்திக்கிற உணர்வு தோன்றும். அவர்களின் அன்பும் பரிவும், பவாவைப் பற்றி ஆதங்கத்தோடு சொல்கிற வார்த்தைகளும் ஓலைக்குடிசையும் அதன் சாணவாசமும் ஒரு வங்காள நாவலுக்குள் நானும் பங்கேற்கிற மாதிரியே உணர்வேன். பவாவின் அப்பா மத்திய அரசு ஊழியன், ஸ்டேசன் மாஸ்டர்,என்ற மரியாதையுடன் ஒரிரு வார்த்தைகள் என்னுடன் பேசி விட்டு அகன்று விடுவார். அந்தச் சிறு வயதிலேயே பவாவுக்கு ஊரிலுள்ள அத்தனை பேரைத் தெரிந்திருந்தது ஆச்சரியமாகவிருந்தது. எல்லோரிடமும் நின்று ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டுத் தான் வருவார் பவா. எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்திருப்பதும், செய்யவிருப்பதும் தெரியும். யாரையும் குறை சொல்லத் தெரியாத ஒரு பேராளுமையின் சாயலை அப்போதே நான் உணர்ந்தேன். அப்போது எனக்கு அது பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோவில்பட்டிக் குணம் எனக்கு இருந்தது. அதைச் சில சமயங்களில் சொல்லியுமிருக்கிறேன். பவா என்னுடைய வார்த்தைகளை ஒரு புன்னகையில் ஒதுக்கி விடுவார்.

பவாவின் எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் என்ற கவிதை நூல் அப்போது வெளியாகியிருந்தது. எனக்கு அது அவ்வளவு உவப்பாக இல்லை. ஆரம்பகால ரொமாண்டிக் தன்மையை அது தாண்டவில்லை என்று விமர்சனம் செய்த ஞாபகம் இருக்கிறது. பல சமயங்களில் பவாவும் கருணாவும் சைக்கிளில் வேளானந்தல் ஸ்டேஷனுக்கு வந்து விடுவார்கள். எனக்கு உற்சாகம் கரைபுரள பேசிக் கொண்டிருப்பேன். கருணா கேலியாக,

“ ரேடியோவை ஆன் பண்ணுங்க..”

என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். எல்லாத் துறைகளைப் பற்றிப் பேசுகிற ஒரு ஆளாக என்னை நானே கற்பிதம் செய்து கொண்ட காலம் அது. நிறைய நண்பர்கள், தோழர்கள், பவா, கருணா, மூலமாகக் கிடைத்தார்கள். பல்லவன், கவிஞர் வெண்மணி, உத்ரகுமார், பாஸ்கர், வெங்கடேசன், சந்துரு, பாலாஜி, சுகந்தன், போளூர்கோவிந்தன், ஃபீனிக்ஸ், என்று எத்தனை நண்பர்கள். திக்குத் தெரியாத காடாக இருந்த திருவண்ணாமலை இப்போது எனக்கு என் சொந்த ஊர் போல ஆயிற்று.

எல்லா நண்பர்கள் வீட்டிலும் ஒரு வேளையாவது சாப்பிட்டிருக்கிறேன். என் மீது அவர்கள் காட்டிய அன்புக்கு மாற்றாக என்ன செய்து விட முடியும் என்று தெரியவில்லை. பவாவும், கருணாவும், ஒரே கதாபாத்திரத்தின் வெவ்வேறு முகங்கள் என்று நான் நினைத்திருந்தேன். உணர்ச்சிமயமான, கருணைபொங்கும், வாழ்வைக் கவித்துவமாய் பார்க்கும் பவாவும், கறாரான, நடைமுறைவாதியான, உண்மையை நேருக்குநேராய் வெடிப்புற பேசுகிற,கருணாவும் இணைந்து அப்போது திருவண்ணாமலையைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கம் பல புதிய மாற்றங்களை நோக்கி நகரத் தொடங்கியிருந்தது. அதற்கு திருவண்ணாமலையும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. குறிப்பாக இன்று தமிழகமெங்கும் ஒரு மாற்றுக் கலாச்சாரக் கலைவிழாவாகக் கொண்டாடப்படும் கலை இரவு திருவண்ணாமலை கொடுத்த தமிழகத்துக்குக் கொடை.அந்தக் கொடை வழங்கிய காலத்தில் நானும் அங்கேயிருந்தது என் பாக்கியம். எல்லா நண்பர்களின் அயராத உழைப்பு இருந்ததென்றாலும் குறிப்பாக பவா, கருணாவின் பங்களிப்பு மகத்தானது.

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி யாவர் வீட்டிலும் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடினார்கள். என் சொந்த ஊரில் கூட அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவில்லை. நான் அந்த ஊரை விட்டு இனி வேறெங்கும் போகப்போவதில்லை என்று தான் நினைத்திருந்தேன். திருமணம் முடித்து வந்த பிறகு திருவண்ணாமலையில் எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்கள் வீட்டுக்கும், கட்சி அலுவலகத்துக்கும், தமுஎச கூட்டங்களுக்கும் என் மனைவிமல்லிகாவை அழைத்துச் சென்றேன். புதிதாக வந்த ஊரில் புதுப் பொண்டாட்டிகிட்ட என் பவுசைக் காட்டவேண்டும் என்ற ஆசை தான் காரணம். பவாவின் அம்மாவின் உபசரிப்பில் மல்லிகா நெகிழ்ந்து போனாள். பவாவின் அம்மாவும் எங்களுக்கென்றே தனியாக சோறு சமைத்து பவாவிடம் கொடுத்து வேளானந்தலுக்குக் கொடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. திருவண்ணாமலையில் நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று முடிவு செய்த பொழுதில் எனக்கு விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள பூவனூருக்கு பதவி உயர்வு உத்தரவு வந்தது.

முதல் முதலாய் வேளானந்தல் வரும்போது இருந்த உதயசங்கர் இப்போது மாறி விட்டான். தன்னம்பிக்கை மிக்கவனாக, எதையும் எதிர்கொள்ளும் தைரியமிக்கவனாக, புதிய சூழ்நிலைகளை வரவேற்பவனாக, மாறி விட்டான். இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் திருவண்ணாமலை நண்பர்கள், தோழர்கள். குறிப்பாக பவாவும், கருணாவும். அவர்களை என் உதாரணபுருஷர்களாக நான் மனதில் வரித்துக் கொண்டேன். இன்று தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஸ்தலமாக எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக, 19, டி.எம். சாரோன் உருவாகியிருக்கிறது. சொந்த அண்ணன் தம்பி வீட்டிலேயே போய்த் தங்க முடியாத நிலைமையில் உறவுகள் சிடுக்காகிப் போயிருக்கின்றன. அதிலும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். விருதாக்கோட்டிகள் என்று உறவுகள் ஏளனம் செய்யும் காலம். அவர்களைப் போற்றிக் கொண்டாடி போஷிப்பதற்கு மகத்தான அன்பு வேண்டும். அது பவாவிடம் பேராறாய் பிரவகித்து வெள்ளமென பாய்ந்தோடுகிறது. இன்று இருப்பது எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் எழுதிய பவா அல்ல. இன்று தமிழ்ச் சிறுகதையின் மிக முக்கியமான எழுத்தாளராகவும், தன்னுடைய எழுத்தின் வசீகரத்தால் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிற நூல்களின் படைப்பளியாகவும் திகழ்கிறவர் பவா.

இன்று பவா என்கிற அந்த அன்புப் பேராற்றில் எல்லோரும் ஒரு கை அன்பள்ளிப் பருகி நெகிழ்ந்து போகிறார்கள். ஆனால் அந்தப் பேராறு சுனையூற்றாய் இருக்கும்போதே தரிசித்திருக்கிறேன்.பேராற்றில் பலமுறை முங்கிக் குளித்திருக்கிறேன். குளித்துக் கொண்டுமிருக்கிறேன். ஈரம் சொட்ட சொட்ட..இப்போதும்…இன்னமும்

Monday, 7 May 2012

நாகுவின் கோல்

hockey

எங்கள் தெருவிலேயே நான் தான் முதன் முதலில் ஒரிஜினல் ஹாக்கி மட்டையுடன் விளையாடப் போனது. ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்று நினைக்கிறேன். என்னுடைய அப்பா வார்ப்பில் விட்டுப் போயிருந்த வேம்பயர் ஹாக்கி மட்டையோடு வீட்டுக்கு வந்தார். அது வரை நானும் எல்லோரையும் போல வளைந்த விறகுக்கட்டையோடு விளையாடப் போவேன். அநேகமாக ஊரிலுள்ள பெரும்பாலான பசங்க அப்படித்தான். விறகுக்கடைகளுக்குப் போய் முனையில் வளைந்த விறகுக் கட்டைகளைக் காசு கொடுத்து வாங்கவோ, வீட்டில் வாங்கும் விறகுகளில் அந்த மாதிரியான வளைவான விறகுக்கட்டையையோ தேடி எடுத்துக் கொண்டு காந்தி மைதானத்தில் கூடி விடுவோம். ஏகப்பட்ட அணிகள் அங்கே விளையாடிக் கொண்டிருக்கும். எப்போதும் விறகுக் கட்டைகளைச் சுழற்றிக் கொண்டு பசங்க அலையிறதைப் பார்க்கிறதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அப்படி விளையாடிக் கொண்டிருக்கிற விறகுக் கட்டைகளுக்கு மத்தியில் நான் உண்மையான ஹாக்கி மட்டையுடன் விளையாண்டால் எப்படி இருக்கும். பசங்க மத்தியில் பெரிய மரியாதை. எனக்கும் பெருமித உணர்வு. மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. என் அப்பாவை நான் நன்றியோடு நினைத்துக் கொண்டேன்.

என் அப்பாவின் அம்மா இறந்த பிறகு அப்பா திசை தெரியாமல் காடோசெடியோன்னு அலைந்து திரிந்திருக்கிறார். கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு திரிந்தவர் எப்படியோ டாக்டர்.துரைராஜ் வீட்டில் வேலைக்குச் சேர்ந்து அவருடைய நன்மதிப்பைப் பெற்றதினால் அவருடைய செல்லப் பிள்ளையாகவே இருந்திருக்கிறார். அவர் தான் அப்பாவுக்கு லட்சுமி மில்லில் வேலை வாங்கிக் கொடுத்து அவரை ஒரு ஆளாகியதாக அப்பா அடிக்கடி சொல்லுவார். டாக்டர் துரைராஜுக்கு ஹாக்கி விளையாட்டின் மீது அவ்வளவு வெறி. அவ்ர் குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஹாக்கி விளையாடுவார்கள். அவருடைய தம்பி எட்வெர்டு,அவருடைய மகன் ரவி, என்று எல்லோரும் அந்த விளையாட்டின் மீதுபிரியமாக இருந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்துதான் அப்பா உடைந்து கிடந்த ஹாக்கி மட்டையை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

நாகு ஹாக்கி மட்டையை ரிப்பேர் செய்வதில் விற்பன்னன். இத்தனைக்கும் அவனிடம் ஒரு ஹாக்கி மட்டை கூடக் கிடையாது. நானும் அவனும் போய் நாலணாவுக்கு வச்சிரமும் சுற்றிக்கெட்டுவதற்கு பாவாடை நாடாவும் வாங்கிக் கொண்டு வந்தோம். எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருந்த இருளப்பசாமி கோவில் ஒரு நந்தவனம் போல இருந்தது. அங்கே இருந்த ஒரு புளிய மரத்திற்குக் கீழே உடைந்த பானையின் பெரிய துண்டைச் சேகரித்து வந்து கற்களை வைத்து அடுப்பு மூட்டி உடைந்த பானைத் துண்டை வைத்து வச்சிரத்தை அதில் போட்டு காய்ச்சினோம். அடுப்பு எரிய குச்சிகள் பொறுக்கிக் கொடுப்பது என் வேலை. பதமாய் கிண்டிக் கிண்டிக் காய்ச்சவேண்டியது நாகுவின் வேலை. நாகு ஒவ்வொன்றையும் மிகுந்த பொறுப்புடனும் அக்கறையுடனும் செய்தான். ஏதோ ஒரு புனிதமான காரியத்தைச் செய்கிற தீவிரமான முகபாவம் அவனுக்கு இருந்தது.

வச்சிரம் கொதித்துப் பாகாய் வந்ததும் உடைந்த மண்பானைச் சட்டியை இறக்கி ஒரு குச்சியில் அந்த வச்சிரத்தை எடுத்து உடைந்த ஹாக்கி மட்டையின் இரண்டு பாகங்களிலும் தடவி ரெண்டையும் பிசகாமல் இறுக்கி ஒட்ட வைத்து வாங்கி வைத்திருந்த பாவாடை நாடாவினால் சுற்றிக் கட்டி இரண்டு நாட்களுக்கு அசங்காமல் வைத்து விட்டோம். மூன்றாவது நாள் உடைந்த ஹாக்கி மட்டையை ஒட்ட வைத்திருக்கிறோம் என்று சொன்னால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி செய்து கொடுத்திருந்தான் நாகு. அதற்காக ஹாக்கி மட்டையை நாகுவுக்கு இரண்டு நாட்கள் விளையாடக் கொடுத்தேன். இந்த ஹாக்கி மட்டையினால் விளையாட்டில் என்னுடைய மதிப்பு கூடி விட்டது. எல்லோரும் என்னைத் தன்னுடைய அணியில் சேர்ப்பதில் குறியாக இருந்தார்கள். அப்போது தான் என்னுடைய ஹாக்கி மட்டையை ஆளுக்குக் கொஞ்ச நேரம் வாங்கி விளையாடிக் கொள்ளலாம் என்ற நப்பாசைதான்.

நாகு நல்ல விளையாட்டுக்காரன்.அவன் எப்போதும் நடு முன்னணி வீரனாகத் தான் களமிறங்குவான். எப்போது எங்கே இருக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியாது. எதிரணியின் கண்களில் மண்ணைத் தூவுவதில் மன்னன். இங்கே இருக்கிற மாதிரி இருக்கும் பார்த்தால் கோல் போஸ்ட்டுக்கு அருகில் போய் நிற்பான். ஆள் கட்டையாக இருந்தாலும் அவனுடைய சுறுசுறுப்பு அவனை பெரிய விளையாட்டு வீரனாக்கியிருந்தது. அவன் இருக்கிற அணி எப்போதும் ஜெயித்து விடும். அதனால் எல்லோரும் அவன் இருக்கிற அணிக்குப் போவதற்கு ஆசைப்படுவார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தெருவுடன் போட்டி. பல போட்டிகள் சண்டையில் முடிந்து விடும். அதிலும் வடக்குத் தெரு பயல்கள் ரெம்ப முரட்டுத்தனமாக விளையாடுவார்கள். எப்போதும் கை கால்களில் சிராய்ப்புடன் அலைந்து கொண்டிருந்த நாட்கள் அவை. அப்படி இல்லாத பையன்கள் குறைவு தான்.

தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டு ஹாக்கி தான். அதுவும் குறிப்பாக கோவில்பட்டியில் ஹாக்கி விளையாடத்தெரியாத பையன்களே இருக்கமாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் ஒருவர் இருந்தாரென்றால் அவர் டாக்டர் துரைராஜ் தான். அவர் தான் கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர். அது மட்டுமல்ல. முதல் முதலாக கோவில்பட்டி ஹாக்கி கிளப் என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி அதைப் பலபோட்டிகளுக்கு அனுப்பி வைத்து ஊக்கப்படுத்தினார். அதோடு அவருடைய தொடர்ந்த முயற்சியினால் அரசும் மக்களும் சேர்ந்து நிலத்தை வாங்கி ஹாக்கி மைதானத்தை உருவாக்கினார்கள். தொடர்ந்து ஹாக்கி போட்டிகள் நடைபெற வேண்டுமென்பதற்காக அவரைக் குடும்பமருத்துவராக வைத்திருந்த கோவில்பட்டி மற்றும் கோயம்புத்தூர் லட்சுமி மில் முதலாளிகளிடம் பேசி குப்புசாமி நாயுடு அகில இந்திய ஹாக்கி மைதானமாக மாற்றினார். Dhyan_Chand_1936_semifinal

இந்த மைதானத்தில் விளையாடாத இந்திய அணிகளே கிடையாது. இந்திய ஹாக்கியின் தந்தை தயான்சந்த் விளையாடிய பெருமை இந்த மைதானத்துக்கு உண்டு. அது மட்டுமல்ல பல ஒலிம்பிக் வீரர்களுக்கு, தேசிய அணி வீரர்களுக்கு, மாநில அணி வீரர்களுக்கு, பயிற்சிக் களமாக இருந்தது. மே மாதம் வந்து விட்டால் போதும் ஊரே ஹாக்கி போட்டிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடும். போன ஆண்டு கோப்பையை யார் வாங்கினார்கள். அந்த அணிகளின் தராதரம் பற்றியெல்லாம் விமர்சனம் நடக்கும். போட்டிகள் குறித்த அறிவிப்பு வந்து விட்டால் அவ்வளவு தான். வேறு எந்த விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாலும் எல்லோரும் ஹாக்கி விளையாடத் தொடங்கி விடுவார்கள். ஒவ்வொரு நாளும் செய்திகள் காட்டுத்தீ போல பசங்க மத்தியில பரவும்.

“ டேய் ..எம்.இ.ஜி. பெங்களூர், வந்திருச்சாம்டா..”

“ ஏர்லைன்ஸோட செமிபைனல்ல தோத்தவங்க தானடா..”

“ ஒரு தடவையாச்சும் நம்ம கோவில்பட்டி டீம் ஜெயிக்கணும்டா..”

என்று பேச்சு பேச்சு எப்போதும் ஹாக்கி பற்றியே பேச்சு. வீடுகளில் அம்மாக்களில் வசவு நாறிப்போகும்.

“ வேனா வெயில்ல ஏண்டா விறகுக்கட்டையைத் தூக்கிகிட்டு அலையிற.. ஊருல அடிக்கிற வெயில்பூராம் ஒந்தலையில தான்.. மூஞ்சியும் முகரக்கட்டையும் பாரு..”

ஆனாலும் நாங்கள் கேட்பதில்லை. ஹாக்கி போட்டிகள் தொடங்கி விட்டால் திருவிழா போல ஆகிவிடும். ஊரிலுள்ள நண்டு நசுக்கான், இளவட்டங்கள், பெரிசுகள், என்று போட்டி நடக்கும் நேரங்களில் ஊர்வலம் போல மைதானத்துக்குப் போய் வந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு மேட்ச் முடிந்ததும் ஹாக்கி வீரர்களைச் சுற்றி பசங்க கூட்டம் மொய்த்து விடும். அவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டே அவர் பின்னாலேயே போவோம். சிலர் அவர் வைத்திருக்கும் ஹாக்கி மட்டையைத் தொட்டுப் பார்த்து மகிழ்வார்கள். சிலர் துணிச்சலாய் அவருடைய ஹாக்கி மட்டையைக் கேட்பார்கள். அந்த வீரர்கள் ஹிந்தியில் கேட்கும் கேள்விகளுக்கு ஹை ஹை.. என்றோ ரூப்பு தேரா மஸ்தானா என்றோ பாடிக்காட்டுவார்கள். வீரர்கள் சிரிப்பதைப் பார்த்து ஏகக் குஷியாகி விடும். வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் தங்கும் விடுதியிலோ, பயணிகள் விடுதியிலோ கொண்டு போய் விட்ட பிறகே அவரவர் வீடுகளுக்குப் போவோம். நான் பெரியவனாகி இந்த மாதிரி ஹாக்கி விளையாட்டு வீரனாகத் தான் போக வேண்டும் என்று மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டேன்.

ஆனால் இன்று நிலைமயே வேறு. கிரிக்கெட் என்ற பகாசூரன் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியைக் கபளீகரம் செய்து விட்டான். அது மட்டுமல்ல இன்று சமூகத்தைப் பிடித்துள்ள கொடிய நோயான ரியல் எஸ்டேட் பிஸினஸால் ஹாக்கி மைதானமே ஸ்வாகா செய்யப் படும் நிலைமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சினால் தற்காலிகமாகக் காப்பாற்றப் பட்டிருக்கிறது. என் இளம்பருவ நினைவுகளில் இந்த குப்புசாமி நாயுடு ஹாக்கி மைதானத்தை மறக்கமுடியாது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. எங்களுடைய சிறுவர் அணி, கோவில்பட்டி டவுண் ஹாக்கி கிளப் என்ற பெயரில் பெரியவர்களுக்கான ஹாக்கி போட்டிகளுக்கு முன்னால் நடைபெறும் சிறுவர்கள் ஹாக்கி போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அதில் கிடைத்த லட்சுமி மில்லின் வெள்ளைத்துணியில் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு ரெம்ப நாளைக்குப் பீத்திக் கொண்டு திரிந்தது வேறு விஷயம். அன்று நாங்கள் முதல் பரிசைப் பெறுவதற்கு முக்கியக் காரணம் நாகு போட்ட கடைசி நிமிடக் கோல். அந்தக் கணத்தை இப்போது நினைத்தாலும் மனம் கிளர்ச்சியடைகிறது.

சிறுவர்கள் ஹாக்கிபோட்டியில் இறுதிப் போட்டிக்கு எங்களுடைய கோவில்பட்டி டவுண் ஹாக்கி கிளப்பும், இலுப்பையூரணி ஸ்போர்ட்ஸ் கிளப்பும் வந்து சேர்ந்தோம். இலுப்பையூரணி வலுவான டீம். எல்லோரும் ஹாக்கி மட்டையிலேயே பிராக்டீஸ் செய்ஞ்சவங்க. காலில் பூட்ஸ், சாக்ஸ், யூனிபார்ம், என்று பக்கா டீமாக இருந்தார்கள். அது மட்டுமல்ல முரட்டுத்தனமான பசங்களாகவும் இருந்தனர். இதுவரை எந்த ஒரு டீமிடமும் தோற்றதில்லை என்பது மட்டுமில்லை ஜெயித்ததும் ஒன்பது கோல் பத்து கோல் போட்டுத் தான். எங்கள் அணியில் ஆளுக்கொரு நிறத்தில் உடை. யாருக்கும் பூட்ஸ் கிடையாது. நிறையப் பேர் இந்த மேட்சுக்கு வந்தபிறகு தான் ஹாக்கி மட்டையைக் கையில் பிடித்துப் பார்க்கிறார்கள். அது வரை விறகுக் கட்டை தான். அதே போல நாங்கள் தக்கிமுக்கி ஒன்றில் ஜெயித்து, ஒன்றில் தோற்று அப்படிஇப்படியாகத் தான் இறுதிப் போட்டிக்கு வந்தோம். ஏற்கனவே இலுப்பையூரணி அணியின் விளையாட்டைப் பார்த்திருக்கிறோம். எனவே நாங்கள் கவலைப் படவில்லை. எங்களைப் போலவே இலுப்பையூரணி அணியும் ஜெயிப்பது உறுதி என்பதால் அவர்களும் கவலைப் படவில்லை.

போட்டி ஆரம்பித்த பிறகு என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. எங்கள் அணியில் அது வரை உருப்படியாக விளையாடாதவன் எல்லாம் நன்றாக விளையாடினான். அது வரை ஓடாதவன் எல்லாம் உயிரைக் கொடுத்து ஓடினான். மொத்தத்தில் எங்கள் அணி மிகச் சிறப்பாக விளையாடியது. முதலில் இலுப்பையூரணி அணி கொஞ்சம் அசால்ட்டாக விளையாடியது. பிறகு சுதாரித்துக் கொண்டு விளையாடினாலும் அந்த அணியால் கோல் எதுவும் போடமுடிய வில்லை. நேரமாக ஆக அவர்கள் முரட்டுத்தனமாக விளையாட ஆரம்பித்தார்கள். ஆறுமுகத்தின் காலில் அடித்து விட்டார்கள். விளையாட்டின் இறுதி நிமிடங்களில் பந்து எங்கள் அணியின் கைவசமே இருந்தது. என்னிடம் வந்த பந்தை நான் நாகுவிடம் பாஸ் பண்ண முயற்சிக்கும் போது என்னைக் கீழே தள்ளினான் ஒருத்தன். நான் அப்ஜெக்சன் பவுல் என்று மட்டையை உயர்த்திக் காட்டும் போது அது என்னைக் கீழே தள்ளியவனின் தலையில் பட்டு விட்டது. அவ்வளவு தான் எல்லோரும் என்னை நோக்கி ஓடி வர யாருக்குமே தெரியாமல் எப்படித்தான்பந்தைக் கடத்தினானோ நாகு கோல் போஸ்டை நோக்கிப் பறந்து விட்டான். அவர்கள் சுதாரிப்பதற்குள் கோல்கீப்பரை ஏமாற்றுவதில் கில்லாடியான நாகு மிகச் சுலபமாகக் கோலைப் போட்டு விட்டான். கோல்ல்ல்ல். ஆம் நாங்கள் ஜெயித்து விட்டோம். அந்த வருடம் எங்கள் கால்கள் தரையில் படவில்லை. எங்கள் முதுகில் சிறகுகள் முளைத்திருந்தன.

நன்றி: மீடியா வாய்ஸ்

Monday, 30 April 2012

எம்.ஜி.ஆர் ராக்கையா

mgr

ராக்கையா எம்.ஜி.ஆரின். தீவிர ரசிகன். எம்.ஜி.ஆரின் படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரைக்கு முன்னால் வெகு அருகில் உட்கார்ந்து பார்ப்பான். கை தட்டி விசில் அடித்து ஒரு பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடி விடுவான். அதே போல எம்.ஜி.ஆர் படங்களைப் பலமுறை பார்த்து மனப்பாடம் செய்வதில் கில்லாடி. எம்.ஜி.ஆரின் உரிமைக்குரல் படத்தை மட்டும் இருபத்தியேழு தடவை பார்த்திருக்கிறான். பல நாட்கள் காலையில் பள்ளிக்கூடத்தை மட்டம் போட்டு விட்டு, பல நாட்கள் மதியம் பள்ளிக்கூடத்தை மட்டம் போட்டு விட்டுப் போய் பார்த்திருக்கிறான். திரைப்படத்தில் வருகிற எம்.ஜி.ஆர் மாதிரி எப்போதும் உற்சாகமாக இருப்பான் ராக்கையா.

எம்.ஜி.ஆர் படப்பாடல்களை வாய் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும். ஒரு வார்த்தை பிசகாமல் அப்படியே ஒப்பிக்கிற ராக்கையாவுக்கு பாடங்கள் எதுவும் மண்டையில் ஏறவில்லை. அவனில்லாமல் நாங்கள் எந்த முக்கியமான காரியத்துக்கும் போனதில்லை.
சிரித்த முகமும் துறு துறுவென துடிக்கும் உடல்மொழியும் கொண்ட ராக்கையா கூட இருந்தாலே போதும் யாருக்கும் உற்சாகம் தானாகத் தொற்றிக் கொள்ளும். அதே போல எந்த வேலைக்கும் அஞ்சாதவன் ராக்கையா. எப்படியோ அவனுக்கு எங்களைப் பிடித்து விட்டது. எப்போதும் எங்களுடனேயே சுற்றிக் கொண்டிருந்தான்.நாங்கள் எப்போதாவது போகிற திரைப்படங்களுக்கு அவனைக் கூட்டிக் கொண்டு போவோம். அவன் தான் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் கவுண்டரில் ஏறிக் குதித்து சண்டை போட்டு டிக்கெட் வாங்கி விடுவான். நான், நாதன், சாரதி, கந்தசாமி, எல்லோரும் போட்ட சட்டை கலையாமல் உள்ளே போய் திரைப்படம் பார்ப்போம்.


அப்படி ஒரு முறை வசந்தமாளிகை படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு போவதென்று முடிவு செய்து விட்டோம். டிக்கெட் எடுக்க வேண்டுமே. ராக்கையாவை விட்டால் எங்களுக்கு வேறு யாரையும் தெரியாது. ஆனால் சிவாஜி படத்திற்கு ராக்கையா வருவானா? என்று சாரதி சந்தேகப்பட்டான். நாதன் தான் அதெல்லாம் வருவாண்டே என்று சொன்னான். எனக்கு உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் அவன் வந்தால் இன்று போவோம். இல்லையென்றால் இன்னும் ஒரு வாரம் கழித்து கூட்டம் குறைந்த பிறகு போவோம் என்று கந்தசாமி சொன்னான்.

ராக்கையா வந்ததும் சாரதி தான்,“ டேய் ராக்கு.. நீ பிரண்ட்ஸுக்காக ஒரு காரியம் செய்யணும்னா செய்வியால..” என்று முக்கி முனகிக் கேட்டான். அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“ என்ன வசந்தமாளிகை டிக்கெட் எடுத்துக் கொடுக்கணுமாக்கும்..’
என்று சொன்னான். நாங்கள் அதிர்ந்து போனோம்.

அன்று சரியான கூட்டம். வழக்கம் போல கூட்டத்துக்குள் முண்டியடித்து கவுண்டருக்குள் ஏறிக் குதித்து வரிசையிலிருந்தவர்களுடன் மல்லுக் கட்டி டிக்கெட் எடுத்து விட்டான். எங்களுடைய டிக்கெட்டுகளுடன் கவுண்டருக்கு அருகில் காத்திருந்தான். நாங்கள் கூட்டம் குறைந்து வரிசையில் போனோம்.

அப்போது கந்தசாமி தான் ராக்கையாவைப் பார்த்து கேட்டான்,“ எல நீ சாரம் கட்டியிருந்தியே அதை எங்கல..” அப்போது தான் ராக்கையாவும் கவனித்தான். அவன் இடுப்பில் கட்டியிருந்த சாரத்தைக் காண வில்லை. வெறும் டவுசர் பனியனோட நின்று கொண்டிருந்தான். கவுண்டர் வழியெல்லாம் தேடிப் பார்த்தோம். சாரம் கிடைக்கவில்லை.

நாங்கள் விரும்பிப் பார்க்கிற திரைப்படங்கள் அவனுக்குப் பிடிக்காது. படம் ஆரம்பித்தவுடனேயே தூங்கி விடுவான். சரியாக இடைவேளை சமயத்தில் எழுந்து ஐஸ், முறுக்கு என்று தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுப்பான். அதேபோல என்ன வேலை சொன்னாலும் செய்வதற்குத் தயாராக இருந்தான். ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்று நாங்கள் தான் பயப்படுவோம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எம்.ஜி.ஆர். புன்னகை சிந்துவான். அவ்வளவு தான். உடனே சிட்டாய் பறந்துபோய் அந்த வேலையைச் செய்து விட்டுத் திரும்புவான். பெரும்பாலான நேரங்களில் எங்கள் நண்பர்கள் குழாமில் உள்ள யாருடைய வீட்டிலாவது கிடப்பான். அங்கேயே சாப்பிடவும் செய்வான். வீட்டிலுள்ள எல்லோரிடமும் மிகச் சுலபமாகப் பழகி விடுவான். பல நேரங்களில் வீட்டிலுள்ளவர்களே அவனைத் தேடுவார்கள்.

வீட்டில் மட்டும் தான் என்றில்லை யாரிடமும் மிகச் சுலபமாகப் பழகி விடுகிற இயல்பான குணம் ராக்கையாவுக்கு. பழகிய ஐந்தாவது நிமிடத்திலே பல வருடம் பழகியவன்போல அன்யோன்யமாகி விடுகிற வசீகரம் அவனிடம் இருந்தது. அதனால் யாரும் அவன் மீது கோபப் படவே மாட்டார்கள். அப்படியே கோபம் வந்தாலும் வந்த சில நிமிடங்களிலே அவனே சகஜமாக்கி விடுவான். அதனால் பள்ளிக்கூடத்தில் அவன் படிக்கவில்லையென்றால் கூட வாத்தியார்கள் அவனை அதிகம் அடித்ததையோ, திட்டியதையோ நாங்கள் பார்த்ததில்லை. எல்லா வாத்தியார்களும் அவனிடம் ஏதோ ஒரு விதத்தில் வேலை வாங்கியிருப்பார்கள். யாருக்கும் அஞ்சுவதோ, வெட்கப்படுவதோ, கிடையாது. நாங்கள் மிகுந்த யோசனைக்காரர்களாக இருந்ததால் எங்களுக்கு ராக்கையாவின் துணை பெரிய பலமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் அவன் கூட இருந்தானென்றால் எங்களைப் பிடிக்காத எதிரிகள் சற்று விலகியே போவார்கள். அப்படியே யாராவது எங்களிடம் வாலாட்டினால் ராக்கையா எம்.ஜி.ஆர். மாதிரியே சிரித்துக் கொண்டே சண்டைபோடுவான். திரைப்படத்தின் சவுண்ட் எபெக்ட்ஸை அவன் வாயினாலே கொடுத்துக் கொள்வான்.

நாங்கள் அவன் கூட துணை நடிகர்கள் மாதிரி நின்று கொண்டு அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருப்போம். அடி வாங்கிக் கொண்டு வந்தாலும் சரி, அடி கொடுத்து விட்டாலும் சரி, ஒரே சிரிப்புதான். தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டு ,” பயகள புரட்டி எடுத்திட்டேன்ல..” என்று சொல்லுவான். எங்களுக்குப் பெருமையாக இருக்கும்.

கோவில்பட்டியின் ஊர் விளையாட்டான ஆக்கியை ஊரிலுள்ள நண்டுநசுக்கான் தொடங்கி பெரியவர்கள் வரை தெருக்காடுகளிலும், மைதானங்களிலும், விளையாடிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? எங்களுடன் ராக்கையாவும் விளையாடுவான். ஒருபோதும் அவன் கோல் போட்டதே இல்லை. அவனிடம் பந்து கிடைத்தால் அதைக் கொண்டுட்டு ஓட மாட்டான். நாலு அடி ஓடுவதற்குள் பந்தை எதிரணியிடம் விட்டு விடுவான். எல்லோரும் திட்டுவார்கள். அவன் அதைப் பற்றிக் கவலைப் படமாட்டான். ஆனால் அதற்காக அவனை விளையாட்டில் சேர்க்காமல் இருந்ததில்லை.

பின்னர் கிரிக்கெட் விளையாட்டு பேமஸ் ஆனது. ரேடியோவில் நேர்முக வர்ணனை கேட்டு ” சார் ரன் கேலியே ” என்ற மூச்சு விடாத ஹிந்தி வர்ணனை எங்களைக் கவர்ந்தது. நாங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினோம். இரவு பகல் பாராமல் கிரிக்கெட் விளையாடினோம். காந்திமைதானமே எங்கள் கூப்பாட்டில் அரண்டு போனது. அதிலும் ராக்கையா ஒரு பந்தைக் கூட கேட்ச் பிடித்ததில்லை. ஒரு பந்துகூட பவுலிங் போட்டதில்லை. ஒரு ரன் கூட எடுத்ததில்லை. ஆனாலும் எங்களுடன் விளையாடினான். இப்படி எங்களுடன் இரண்டறக் கலந்து விட்டான் ராக்கையா. எங்கள் இளம் பருவ நினைவுகளை ராக்கையாவை விட்டு விட்டு யோசிக்க முடியுமா என்று தெரியவில்லை. நாங்கள் கல்லூரி போனபோது அவன் கல்லூரி வரவில்லை. ஐ.டி.ஐ. படிக்கப்போய் விட்டான். அப்போதும் தினமும் மாலையில் நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஐ.டி.ஐ. முடித்த அவன் கோயம்புத்தூர் லட்சுமி மில்லில் வேலைக்குப் போய் விட்டான்.

நாங்கள் கல்லூரிப் படிப்பு முடித்து இந்தியாவின் வேலை இல்லாப்பட்டதாரிகளாக உலகை வலம் வந்து கொண்டிருந்தோம். இலக்கியம், அரசியல், தத்துவம், என்று புத்தகங்களை வாசித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும், அலைந்து கொண்டிருந்தோம். மனசில்லா மனசோடு வேலை தேடுவதாகப் பாவனை செய்து கொண்டு கனவுகளின் கதகதப்பில் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தோம்.

எங்கள் செட்டில் முதலில் வேலைக்குப் போனது ராக்கையா தான். அடுத்து நாதன் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தான். அடுத்து நான் அல்லரைசில்லரையாகச் சில வேலைகளைப் பார்ப்பதும் விடுவதுமாய் இருந்தேன். சாரதி வருவாய்த்துறையில் சேர்ந்தான். கந்தசாமி அஞ்சல் அலுவலகத்தில் சேர்ந்தான். முதலில் வேலைக்குச் சேர்ந்த ராக்கையா தான் முதலில் கலியாணமும் முடித்தான். அவன் கலியாணம் முடித்தது அவனுடைய தாய்மாமன் மகளைத் தான். கலியாணத்தில் ராக்கையா வைத்த ஒரே கோரிக்கை கலியாண வீட்டில் எம்.ஜி.ஆர். பாட்டைத் தவிர வேறு யாருடைய பாட்டையும் போடக் கூடாது. ஏனெனில் அவனுடைய மாமா சிவாஜி ரசிகர். அவனுடைய கோரிக்கையைக் கேட்டு நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.

கலியாணம் முடிந்து ராக்கையா குடும்பத்தோடு கோயம்புத்தூர் சென்று விட்டான். அதன் பிறகு ஆறு மாதங்களாக அவனைப் பார்க்கவில்லை. ஆனால் கேள்விப் பட்ட செய்திகளும் நல்லதாக இல்லை. அவன் விரும்பிக் கலியாணம் முடித்த அவனுடைய மாமா மகள் அவனை மதிக்கிறதில்லை. எப்போதும் அவனை வைது கொண்டே இருக்கிறாள். எங்களுக்கு கேட்கச் சங்கடமாக இருந்தது. ஆனால் பெரிதாகக் கவலைப் படவில்லை. ராக்கையா எதையும் சமாளித்து விடுவான் என்று நினைத்தோம். அவனுடைய உற்சாகத்தின் அலையில் எல்லாம் கரை சேர்ந்து விடும் என்று பேசிக்கொண்டோம். அதற்கடுத்த சில வாரங்களில் ராக்கையா ஊருக்கு வந்தான். நாங்கள் ஆவலுடன் அவனைச் சந்திக்கப் போனோம். எங்களைப் பார்த்ததும் சிரித்தான். ஆனால் அதில் பழைய உற்சாகம் இல்லை. நண்பர்கள் சந்திக்கும்போது செய்கிற வழக்கமான ஏற்பாட்டைப் போல இரவு இரண்டாம் காட்சிக்கு போவதெனத் திட்டம் போட்டோம்.

நாங்கள் எல்லோரும் சரியான நேரத்தில் கூடி விட்டோம்.ஆனால் இன்னும் ராக்கையாவைக் காணவில்லை. ராக்கையாவுக்காகவே எம்.ஜி.ஆரின் பழைய படமான பணக்காரக்குடும்பம் திரைப்படத்துக்குப் போவதென்று முடிவு செய்திருந்தோம். தியேட்டரில் படம் போடுவதற்கான முதல் மணி அடித்து விட்டது. இன்னும் ராக்கையா வரவில்லை. தூரத்தில் சோர்ந்த நடையுடன் ராக்கையா வந்து கொண்டிருந்தான். கந்தசாமி கத்தினான்.

“ டேய் சீக்கிரம் வாடா படம் போடப் போறான்..இப்படி மெதுவா வாரே..”
அதற்கு இருளுக்குள்ளிருந்து பதில் வந்தது.

“ நொண்டிக்காலை இழுத்துகிட்டு வர வேண்டாமா..அவசரம்னா நீங்க போங்க..”

நாங்கள் முதல் முறையாக ராக்கையாவின் சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் சூம்பியிருந்த இடது காலையும், அவன் சோர்வுடன் கெந்திக் கெந்தி நடந்து வருவதையும் பார்த்தோம். எங்கள் கண்கள் கலங்கின.

Saturday, 28 April 2012

கலையாத ஒப்பனையுடன் காற்றில் கலந்தவர்

safther  
எங்கள் நால்வரில் நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி நான் ‡ முத்துச்சாமி தான் வயதில் இளையவர். அதே போல உருவிலும் சற்று குள்ளமானவர். அவர் நாறும்பூநாதனின் வீட்டுக்கு அருகில் இருந்தார். இன்னும் சொல்லப் போனால் நாறும்பூநாதனை விட்டு இணைபிரியாமல் இருந்தார். அவருடைய லட்சியக்கதாநாயகனாக அநேகமாக நாறும்பூநாதனே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நாறும்பூநாதன் என்ன செய்தாலும் அதை உடனே அவரும் செய்துபார்த்து விடுவார். இது இளம்பருவத்துக்குப் பின்னும் தொடர்ந்தது என்பது என் அனுமானம்.

எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் எங்களில் வயதில் இயைவரான முத்துச்சாமியுடன் நானும் சாரதியும் அதிகமாகச் சண்டை போடுவோம். எல்லாம் சில்லரைச் சண்டையாக சில்லரைக்கான சண்டையாக இருக்கும். முத்துச்சாமியிடம் சில குணவிசேஷங்கள் இருந்தன. மிகுந்த சிக்கனமும், கட்டுப்பாடும் உறுதியான மனமும் கொண்டவராக இருந்தார். எதனாலும் சபலம் கொள்ளாத சித்தம் அவருக்கு. நாங்கள் அப்படியல்ல எல்லாவிதமான அலைக்கழிப்புகளுக்கும் எங்களை ஆட்படுத்திக் கொண்டிருந்தோம். அதனால் சிலபல நன்மைகளும் தீமைகளும் நிகழ்ந்தன என்பது வேறுவிஷயம். ஆனால் முத்துச்சாமியின் அந்த உறுதி எங்களுக்குப் பொறாமையையும் சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தியது.

நண்பர்களுக்குள் கணக்கு வழக்குபார்க்கக் கூடாது என்பது எங்கள் கட்சி. நண்பர்களாயிருந்தாலும் கணக்குன்னா கணக்குத் தான் என்பது அவருடைய கட்சி. இதனால் அடிக்கடி சண்டை போட்டு பின் பேசிக்கொள்வோம். ஆனால் நான்குபேரும் சேர்ந்தே தான் சுற்றிக்கொண்டிருந்தோம் கையயழுத்துப் பிரதி நடத்தினோம். எழுத்தாளர்களிடமும் இலக்கியவாதிகளிடமும், தொழிற்சங்கத் தலைவர்களிடமும். பழகினோம். நிறைய்யப் பேசினோம். நிறைய்யக் கேள்விகள் கேட்டோம். நிறைய்ய வாசித்தோம். நிறைய்ய நிறைய்ய அவர்கள் பேசுவதைக் கேட்டோம். ஆனால் இவை எல்லாவற்றிலும் முத்துச்சாமி பார்வையாளராக மட்டுமே இருந்தார். ஊக்கத்துடன் பங்குபெற்றதாக என் ஞாபகத்தில் இல்லை.

தீடீரென ஒரு நாள் இரவில் காந்தி மைதானத்தில் எழுத்தாளர்கள் கெளரிஷங்கர், துரை, மனோகர் (திரைக்கலைஞர் சார்லி) தேவதச்சன், மாரீஸ், திடவைப்பொன்னுச்சாமி நான் நாறும்பூநாதன் முத்துச்சாமி, சாரதி, ராம், அப்பாஸ் எல்லோரும் கூடிப்பேசிக் கொண்டிருந்த போது திடீரென தர்சனா என்று நிஜநாடக இயக்கம் கருக்கொண்டது உடனே ஒரு வாரத்திற்குள் நாடகங்கள் தயாராகி நாடகம் நடத்துவதற்கு தர்சனா களமிறங்கியது. தேவதச்சனின் பத்துரூபாய் பேரா. ராமனுஜத்தின் வேலை, தலைவர் மரணம் என்று எல்லாம் பத்து அல்லது இருபது நிமிடநாடகங்கள். அப்போது தான் சென்னையில் பாதல்சர்க்கார் மூன்றாவது அரங்கம் பற்றியும் வீதிநாடகங்களைப் பற்றியும் பயிற்சிப்பட்டறை நடத்தி முடித்திருந்தார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் தர்சனா ஏறத்தாழ ஒரு வருடத்திற்குள் நூறு முறைகளுக்குமேல் நாடகங்களை நிகழ்த்தியது. கோவில்பட்டி வீதிகளிலும் தொழிற்சங்க அரங்குகளிலும், சுற்றிலுமுள்ள கிராமங்களிலும், இந்திய சோவியத் நட்புறவுக்கழகத்தின் சார்பாகவும் ஏராளமான இடங்களில் நாங்கள் இந்த நாடகங்களை நிகழ்த்தினோம்.

கிராமங்களில் எங்களை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் பேண்ட், சட்டையுடன் ஸ்டெப் கட்டிங் முடியுடன் நாங்கள் விவசாயியாக தொழிலாளியாக நடித்தது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. நாங்கள் நாங்களாகவே நடித்தோம். மக்களிடம் மிகுந்த வரவேற்பும் பெற்றோம். எங்கள் நாடகங்களில் நடிப்பதற்கான ஒத்திகை என்பது ஒரு கூட்டு விவாதம் மட்டுமே மற்றபடி நடித்து பார்ப்பதோ, வசன மனப்பாடமோ கிடையாது. நடிக்கும் போது புதிது புதிதாய் பேசுவோம். நாடகங்களும் புதிய புதிய பரிமாணங்களுக்கு மாறிக் கொண்டிருக்கும். நாடகக் குழுவின் முக்கிய நடிகர்களாக மனோகர், (திரைக்கலைஞர் சார்லி) கெளரிஷங்கர், துரை, திடவைபொன்னுச்சாமி, நான் நாறும்பூநாதன், இருந்தோம். எங்களுடன் முத்துச்சாமியும் இருந்தார், எல்லாவற்றிலும் பார்வையாளராக மட்டும் இருந்தவர் நாடகங்களில் நடிப்பதற்கு பேராவல் கொண்டிருந்தார். எந்தச் சிறிய வேடமாக இருந்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். வழக்கமாக நடிக்கிறவர்கள் யாரும் வரவில்லையென்றால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். சுருண்ட தன் தலைமுடியை அடிக்கடி வாரிக்கொண்டும் கருத்த தன்முகத்தை அடிக்கடிக் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டு நாடகம் தொடங்குமுன்னரே ஒரு பதட்டநிலைக்கு வந்து விடுவார். தர்சனா நாடகங்கள் துவக்குவதற்கு முன்னால் நாடகக்குழுவினர் மொத்தமாக மேடையேறி நாடகக் குழுவைப் பற்றி பிரகடனப்படுத்துவோம்.

தர்சனா ஒரு கண்ணாடி
தர்சனா ஒரு விதைக்கலயம்
தர்சனா ஒரு கருப்பை
தர்சனா ஒரு கிட்டதர்சனி
தர்சனா ........................................
தர்சனா ........................................
நாங்கள் இந்துக்களல்ல, முஸ்லீம்களல்ல... கிறித்தவர்களல்ல, நாங்கள் தாகூரின் கீதாஞ்சலிகள் ...
பாரதியின் குயில்பாட்டுக்கள் ...
பாடித்திரியும் வானம்பாடிகள் ...

இந்த விதமான ஒரு பிரகடனத்திற்குப் பின் எங்கள் நாடகங்கள் தொடங்கும். இதில் எப்போதும் வரிசையில் நின்று சொல்லும் போது யாராவது சொல்வதற்கு மறந்து போய் மேடைப்பதட்டத்தில் அப்படியே நின்று விடுவார். முத்துச்சாமி அப்படி மறந்து போனவருக்குச் சரியாக எடுத்துக்கொடுப்பார். தர்சனாவில் நடித்த மனோகர், துரை, கெளரிஷங்கர் வேலை காரணமாக ஊரை விட்டுப்பிரிந்து சென்றனர். அதற்குள் நாங்கள் தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தோம். எனவே புதிதாய் சிருஷ்டி என்றொரு நாடகக்குழு உருவானது. மற்றெல்லா விவாதக்களன்களிலும் ஒதுங்கியே இருந்த முத்துச்சாமி நாடகக்களத்தில் மட்டும் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குகொண்டார்.
நானும் வேலை கிடைத்து தமிழ்நாட்டின் வடபகுதிக்குச் சென்று விட்டேன். எப்போதும் கோவில்பட்டியை எனது தலையில் சுமந்து கொண்டே அலைந்தேன். ஊருக்கு வரும் பொழுதுகளை என் நண்பர்களுடனேயே கழிக்க விரும்பினேன். அப்போது முத்துச்சாமியும் போஸ்ட் ஆபீசில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். அவரைச் சந்தித்த போது, என்னைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி,

“என்னப்பா ... இப்படியாயிருச்சி ...” என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை.

ஒரு கணஇடை வெளிக்குப்பிறகு, சப்தர் ஹஸ்மியை... அநியாயமாக் கொன்னுட்டாங்களே...” என்றார் தீவிரமான குரலில். பேசிக்கொண்டிருந்த கொஞ்சநேரமும் சப்தர்ஹஸ்மியைப் பற்றியும் பழைய நாடக நினைவுகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

சப்தர் ஹஸ்மி மகத்தான மக்கள் நாடகக் கலைஞன் ஆட்சியாளர்களின் உயிர்நாடியை தன் கலையால் உலுக்கிய கலைஞன் இடதுசாரி இயக்கத்தின் கலைஞர்களில் தலைசிறந்தவன். வீதி நாடகங்களில் புதிய புதிய சோதனை முயற்சிகளை மேற்கொண்டு மக்களிடம் நேரடியாகச் சென்ற கலைஞன் அதிகாரத்திற்கெதிரான ஓங்கி ஓலித்த அந்தப்புரட்சிக்குரலை அடித்துக் கொலை செய்து கலையின் வரலாற்றுப்பக்கங்களில் தன் கறைபடியச் செய்துவிட்டது அன்றைய காங்கிரஸ் அரசு. ஆனால் சப்தர் மறையவில்லை நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான நாடகக்குழுக்களாக முளைத்தெழுத்தார். அதிகாரம் நடுநடுங்க இன்னும் இன்னும் உரத்து உரத்து முழங்கிக் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது ஊருக்கு வந்தால் போதும் என்று பதினான்கு வருடங்களுக்குப்பின் ஊர்வந்து சேர்ந்தேன் ஊரைப்பற்றிய என் பிம்பம், பிரமை ஊர்வந்து சேர்ந்ததும் சிதைந்து விட்டது. வந்த கொஞ்சநாட்களிலேயே நான் கண்ட கனவு கலைந்து விட்டது. ஆனால் இன்னமும் சில பழைய நண்பர்கள் பழைய ஞாபகத்தின் மெலிதான சாயலோடு இருந்தார்கள். முத்துச்சாமியும் இருந்தார். அவ்வப்போது சந்திக்கிற பொழுதுகளில் சிறு குசலவிசாரணை ஒரு தேநீர் என்று போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் முத்துச்சாமி என்னை தொலைபேசியில் அழைத்து பேச வேண்டும் என்று சொன்னார்.

எங்களுடைய பாலியகால நினைவுச் சின்னமான அதே டீக்கடை முக்கில் சந்தித்தோம். அப்போது தான் அந்த அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். தனக்கு கேன்சர் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், சோதனைச்சாலை முடிவுகளுக்காக சென்னை சென்றிருப்பதாகவும் சொன்னார். கேட்ட ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்வு தொடங்கிவிட்டது. சமாளிப்பதற்கு வெகுவாக முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் முத்துச்சாமியும் அவருடைய கலக்கத்தை வெளிக்காட்டாமல் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை கேன்சர் தான் என்றால் என்னென்ன வழிகளில் வைத்தியம் செய்யலாம் என்று நிதானமாகக் கேட்டார். நான் எனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் எனக்குத் தெரிந்த வழிமுறைகளை குறிப்பாக ஹோமியோபதி மருத்துவமுறைச்சிகிச்சை பற்றியும் அவரிடம் சொன்னேன். விடைபெறும் போது நம்பிக்கையுடன் சென்றார்.

அதற்கு சில நாட்களுக்குப்பிறகு நான் கேள்விப்பட்ட செய்தி நல்லதாயில்லை. சென்னையில் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. பின்னர் மூன்று மாதங்கள் கழிந்தபிறகே ஊர் வந்து சேர்ந்த அவரைப் பார்க்கப் போயிருந்தேன். புற்றுநோய்ச் சிகிச்சையினால் சுருண்டு அடர்ந்த அவருடைய முடி உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளித்தார். பொங்கி வந்த விம்மலை அடக்கிக்கொண்டேன். வலிந்து ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்தோடு அவரிடம் இனி எல்லாம் சரியாகிவிடும். சிகிச்சை அறிக்கைகளைப் பார்த்து விட்டு, குணமாகிவிட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது, என்று சொன்னேன். முத்துச்சாமி முன்பு நான் சொன்னதை நினைவில் வைத்திருந்ததாலோ என்னவோ இனிமேல் வராமலிருக்க ஹோமியோபதி சிகிச்சை எடுக்கலாமா யாரிடம் எடுக்கலாம் ? என்று கேட்டார் அதற்கான வழிவகைகளைச் சொன்னன். அவரும் கோட்டயம் சென்று ஹோமியோபதி டாக்டர். ஆர்.பி. பட்டேல் அவர்களைச் சென்று சந்தித்து மருந்து சாப்பிட்டுவந்தார்.

ஆனால் நாளுக்குநாள் உடல்நிலை நலிந்துகொண்டே வந்தது கண்கூடாகத் தெரிந்தது. இடையில் பல வருடங்களாக சந்திக்காமலே இருந்த நாங்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். வாரம் இரண்டு தடவையோ மூன்று தடவையோ அவர் வீட்டுக்குச் சென்று பழைய பாலியகால மகிழ்ச்சியான வேடிக்கையான நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டினேன். அதிலும் குறிப்பாக தர்சனா சிருஷ்டி நாடக நிகழ்வுகளைப் பற்றி அதன் நிகழ்வுகளில் நடந்த சம்பவங்களைப் பற்றியும் பேசும் போது நான் மறந்து போயிருந்த பல விஷயங்களை அவர் நினைவுபடுத்தினார். புற்றுநோய் சிகிச்சையினால் ஒளியிழந்த அவர் கண்கள், இந்தத் தருணங்களில் மட்டும் தன்னிடம் மீந்திருந்த ஒளியை பிரகாசிக்கச் செய்தன என்று நினைக்கிறேன் பளபளக்கும் அந்தக் கண்களின் கனவுப்பாதை வழியே அவர் பழைய நாட்களின் சந்தோஷ நிழலில் இளைப்பாறினார். புன்னகை சிந்தும் முகத்தோடு நான் பேசுவதையே கேட்டுக் கொண்டிருப்பார். நானும் அவரும் மட்டும் அந்த வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதான பிரமை அவ்வப்போது வரும். அவர் குடும்பத்து உறுப்பினர்கள் நிழலாக நடமாடிக்கொண்டிருப்பார்கள். அப்போது அவர் நினைவுபடுத்திச்சொன்னது தான் தர்சனா நாடகக் குழுவின் பிரகடனம். கொஞ்சநாட்களில் என் வருகை அவருக்கு அவசியமாகிவிட்டது. நான் பேசிவிட்டுசென்ற பிறகு கொஞ்சம் தெம்பாக இருக்கிறார் என்று அவர் குடும்ப உறுப்பினர்கள் சொன்னபோது நானும் எல்லாம் சரியாகி முத்துச்சாமி மீண்டும் நடமாடி விடுவார் என்று தான் நம்பியிருந்தேன்.

திடீரென ஒரு நாள் இரவு நான் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது முத்துச்சாமியின் வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு உடனே வீட்டுக்கு வரச் சொன்னார்கள். அப்போதே எனக்குள் ஒரு பதட்டம். அவர் வீட்டில் பலர் கூடியிருந்தார்கள். படுக்கையில் முத்துச்சாமி கிடந்தார். ஏற்கனவே சிறிய உருவம் இன்னும் சிறிதான மாதிரி ஒடுங்கிக் கிடந்தார். கண்கள் பாதி திறந்த நிலையில் கைகளில் நாடி ஒடுங்கிக்கொண்டிருந்தது. நான் எதுவும் பேசுகிற மனநிலையில் இல்லை. சுற்றிலும் அவர் மனைவி உறவினர்கள் என் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டார்கள். ஒரு ஓலம் கிளம்பியது. என் வயிற்றை பிசைந்த துக்கம் ஒரு பெரும் விம்மலாக வெளிப்பட கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நான் வெளியே வந்துவிட்டேன். முத்துச்சாமி எங்கள் பாலியகால நண்பர் தர்சனாவை தன் கனவாக அடைகாத்த அருமைத் தோழன் தன் கலையாத ஒப்பனையுடனேயே காற்றில் கலந்து விட்டார்.